சனி, ஜனவரி 17, 2015

ஒரு பார்வை


நான் வடசென்னைக்காரன் பாக்கியம் சங்கர்
பாவைமதி வெளியீடு

வாழ்க்கை நூற்றுக்கு எழுபத்தி ஐந்து சதம் பேருக்கு இயந்திர வாழ்க்கையாய் அமைந்து விடுவது தான் கண்கூடு! தன் குடும்பம், தன் குழந்தைகள் என்று வாழப்பழகி இயந்திர வாழ்க்கையில் அவர்கள் இருப்பது அவர்களுக்கே தெரியாது! பாக்கியம் சங்கர் இந்த இயந்திரமனிதர்களைப் பற்றி இந்த புத்தகத்தில் பேசவில்லை! மீதமிருக்கும் 25 சதம் மனிதர்கள் வாழ்வை கொண்டாடி இழப்பதையும், காதலுக்காக வாழ்வதையும் இன்னபிற என்று தன் குறிப்புகள் வழி சொல்லிக் கடக்கிறார்.

பாக்கியம் சங்கர் முதலாக ஒரு கவிஞர்! அவரின் பார்வை இந்த சமூகத்தை வேறு கண்கொண்டு தான் பார்க்கும். மெரினாவில் ஊமையாய் கடலை வெறித்து அமர்ந்திருக்கும் காதலர்களை பார்த்த இவர் கண்கள் அருகில் வாய் பேசமுடியாத இருவரின் தீரா சைகைப் பேச்சுகளை கவனிக்கையில் கதகளி ஆடுவது போன்றே தோன்றுகிறது. நிச்சயமாக வாய் பேச முடியாதவர்களுக்கு பேச ஆயிரம் வார்த்தைகள் இருக்கத்தான் செய்கிறது. பேசமுடிந்த காதலர்கள் மணலில் கிறுக்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்!

டவுசர் பாக்கெட்டுக்குள் தேன்மிட்டாய்களை பதுக்கி வைத்து யாருக்கும் தெரியாமல் உண்ணும் பால்யம் எல்லோருக்கும் உண்டு தான் என்றாலும் பாக்கியம் சொல்கையில் எனக்குள் பழைய நியாபகங்கள் சுழன்று வந்தன! என் பையன் அப்படி எதையும் தன் பாக்கெட்டில் பதுக்குவதில்லை! பதுக்குதல் தனித்து ருசித்தல் என்ற பழக்கங்கள் இல்லாமலேயே இன்றைய குழந்தைகள் வளர்கின்றன! கேட்டவைகள் உடனே கிடைக்கும் வாழ்வில் ஒளித்து வைத்து தின்னும் ருசி அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை தான்!

பிச்சைக்காரன் சினிமா நடிகன் போன்று பிச்சைக்காக ஜும்மா நேரத்தில் குல்லாவுடன் மசூதி முன்பும், பிரதோஷங்களில் பட்டையடித்தும் சங்கர், சலீம் சைமனாக மாறுவதை அதிர்ச்சியோடு பார்க்கும் பாக்கியத்திற்கு பிச்சைக்காரரே பதி;லையும் சொல்கிறார். “ உங்களுக்கு தான்யா சாதி, மதம் எல்லாம்! எங்களுக்கு எல்லாமே ஒரு சாண் வயிறுதான்

காற்றிலிருந்து மிதந்து வந்த பூஞ்சிறகென கடையில் ஒதுங்கினாள் இல்லாமல்லி! மழையில் நனைந்த குட்டிப்பூனையின் அழகை ஒத்திருந்தது இல்லாமல்லியின் நடுக்கம்! கவிஞர்கள் மழையில் நனைந்த பெண்ணை உரைநடையில் சொல்ல வருகையில் தமிழ் அழகாகிறது! இல்லாமல்லிக்கு பிடித்த நடிகர் அர்ஜுன். அவர் தான் தீவிரவாதிகளிடமிருந்து தேசத்தை காப்பாற்றுவதாக இல்லாமல்லி கூறுகிறாள்.

பாக்கியம் சினிமா துறையில் வாழ்வதால் தான் விரும்பி ரசித்த பாடல்களை தொகுப்பு முழுக்க படர விட்டிருக்கிறார். இவர் சொல்லும் பலரும் பாடல்களின் காதலர்களாய் இருக்கிறார்கள் சோகங்களை மனதில் சுமந்தபடி!

ஜோசப் மனம் பிறந்தவன். கய..மய.. கய.. மய! அவன் எப்போதும் உச்சரிக்கும் வார்த்தை! பாக்கியம் அவனோடு மதுவருந்தி தன் சோகங்களை சொல்லி அழுகிறார். அவன் பதிலும் சொல்கிறான்.. கய..மய, கய.. மய! அவன் பதில் பாக்கியத்திற்கு புரியும்! ரஜினி ரசிகனாக வரும் பஜார்பிட் கால்சராயும் சைனா சில்க் சட்டையும் அணிபவன்! குடிபோதையில் மாடியிலிருந்து விழுந்து நடக்க இயலாதவனாக வீட்டில் கிடக்கிறான்! அவனுக்கு பாக்கியம் செய்யும் உதவி…. புத்தகத்தில் நீங்கள் கண்டிப்பாக வாசித்து கண்ணீர் சிந்தும் பகுதி!

தற்கொலையை வெறுப்பவராக பாக்கியம் ஒரு பக்கம் இருக்கையில் தற்கொலை செய்து கொண்ட யாராக இருந்தாலும் அவர்களின் சாவுக்கு கூட நான் செல்வதில்லை என்பதில் பிடிவாதமாய் இருப்பவன் நான்! தான் காதலித்த காதலியின் சாவுக்கு பிறகு அவளுக்கென சுடிதார் வாங்கி அதை அணிந்து சாவதென்பதுஎன்னை இப்படியான வாழ்க்கை ஏன் இப்படி கனக்கச் செய்கிறது. பாக்கியம் தான் பார்த்த நல்ல உள்ளங்களின் வாழ்க்கை முறைகளையும் அவர்களின் இறப்புகளையும் வேதனையான வலிகளோடு சொல்கிறார். பிணம் எரிப்பவனின் காதல் காலாவதியான பாவத்தை சொல்கிறார்!

படிப்பவர்களுக்கு இப்படியான வாழ்க்கையும் அவர்களின் வாழ்வியல் முறைகளும் சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கும்! இருந்தும் இவைகளும் வாழ்க்கை தான்! இவர்களும் மனிதர்கள் தான்!


உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே!”

Post Comment

கருத்துகள் இல்லை: