புதன், ஜனவரி 28, 2015

கவிதைக்காரரின் சிறுகதைகள்


ஜுலி யட்சி (சிறுகதைகள்) -நிலாரசிகன்

மொத்தம் பத்து கதைகளோடு வந்திருக்கும் இத்தொகுப்பை அதீதங்களின் மீது ஈர்ப்புள்ளவர்களுக்கும், கனவுலகில் எப்போதும் கிட்டாத வாழ்வைப் பற்றி சிந்திப்பவர்களுக்கும், இறுதியாக நவீன கவிதைகளின் பரிச்சியம் உள்ளவர்களுக்குமான சிறு தொகுப்பாக வந்திருக்கிறது. கனவுலகை பதிவு செய்பவர்களாக இதுவரை கவிஞர்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள். நிலாரசிகனும் கவிஞர் தான். இத் தொகுப்பில் இருக்கும் கதைகள் அனைத்துமே கதைகள் என்ற வடிவத்தை நோக்கி ஏங்கி ஏங்கிப் பயணிக்கின்றன. நவீனம் எல்லாவற்றையும் கலைத்துப் பார்க்கும், கலைத்துப் போடும் தன்மையை உள்ளடக்கியது தான். கதைகளை எப்படியிருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பழக்கத்திற்கு கடந்த இருபது ஆண்டு காலமாகவே தீவிர வாசகர்கள் வந்து விட்டார்கள். ஆரம்ப நிலை வாசகனும் கூட இவரது கதைகளுக்குள் நுழைந்து வாசித்து இன்புறலாம். அதற்கு கொஞ்சம் கவிதைகளின் பரிச்சியம் இருந்தால் போதுமானது.

கதைகள் எல்லாவற்றிலும் ஜன்னலில் நின்றோ, மொட்டை மாடியில் நின்றோ  மரங்களையும், இயற்கையையும், நிலாவையும், கடலையும், ஏரியையும் உருவங்கள் ரசித்துப் பார்த்தபடியே இருக்கின்றன. வனக்காவலராக வரும் தந்தை வனப்பூக்களின் அரசியின் காலில் உள்ள காயத்திற்கு சிகிச்சை செய்கிறார்அவளுக்கு தர்ஷிணிப்பூ என்று பெயரிட்டு அழைக்கிறார் ஆசிரியர். தர்ஷிணிப்பூ  என்று அவர் இட்ட பெயர் வனத்தில் வாழும் எந்த விலங்கினதுமாகக் கூட இருக்கலாம். இயற்கை விலங்குகளின் காப்பாளர்கள் இருக்கும் உலகில் அவற்றை தேவைக்காகவும் உணவின் ருசிக்காகவும் கொல்லும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது! யானை டாக்டர் என்றொரு சிறந்த சிறுகதையை  ஜெயமோகன் முன்பாக எழுதினார். மீண்டும் ஒருமுறை அதை ஞாபகத்துக்கு கொண்டு வரச் செய்த கதை இது. கத்தியில் குத்தினால் ரத்தம் வரும் வலிக்கும் என்பது மாதிரி உடனே நிகழ்ந்த  கதையிது.

தொகுப்பில் ஏராளமான கதைகள் பெண் பார்வையில் நகருகின்றன. எழுதியது பெண் தானோ என்ற ஐயம் அடிக்கடி வந்து போனது எனக்கு. சந்தேகத்திற்கு ஒருமுறை நிலாரசிகையோ என்று அட்டைப்படத்தை பார்த்தேன். பெண்ணின் மனவுணர்வுகள் மிகநுட்பமாக பதிவாகியிருக்கின்றனகதைகளில் வரும் எல்லாப் பெண்களும்  மனதில் பெரும் பாரங்களாக தங்களின் துக்கங்களை சுமக்கிறார்கள். அவற்றுக்கான தீர்வுகளை அவர்கள் கோரமாக நிகழ்த்தவும் தயங்குவதில்லை. தன்னை கூப்பிட்டுக் கொண்டே இருக்கும் ஆடவனை கொலை செய்யும் யட்சியாக பெண் உருக்கொள்கிறாள். அழகற்ற பெண் அழகான வடிவம் பெற்று காதலிக்க வலிய அவந்து பேசும் ஆண்களை ஒதுக்குபவளாக மாறுகிறாள். சம்பளப்பணத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்கு செலவிடுவதில் வாழத்துவங்குகிறாள். தனிமை ஒவ்வொரு பெண்ணையும் சிந்திக்கவும் வைத்து விடுகிறது சில நேரங்களில்.

தொகுப்பில் கேவல் என்ற கதை வாசிப்பவர்கள் எல்லோருக்குமான கதையாக இருக்கிறது. ஆசிரியர் முன்பொரு காலத்தில் எழுதியிருக்கலாமோ என்னவோயாருக்கும் அனுமதி தராத தன் சுயத்தினால் பெயரை மறந்த பெண்ணின் கதை படிப்போரை என்ன தான் இவொ பேரு? என்று அறிந்து கொள்ளும் ஆவலை தூண்டிய கதை பிரியம்வதாவின் பகல்!நகரம் தாறுமாறான ஒரு கலாச்சாரத்தை அங்கு பணிபுரியும் பெண்ணிடத்தில் திணித்திருப்பது பெருநகர சர்ப்பம் கதையில் இயல்பாக வந்திருக்கிறது. சொல்லப்பட்ட வடிவ நேர்த்தியில் வேறு ஒரு தளத்திற்கு நிலாரசிகனை பயணிக்க வைக்கும் கதையிது.

சிறுகதைகளுக்கு என்று வடிவ நேர்த்திகள் பலவுண்டுநவீனத்தின் பாதையில் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் என்பதையெல்லாம் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஒரு விசயத்தையும் சொல்ல முற்படாத கதை கூட நேர்கோட்டில் சிறுகதைக்குண்டான வடிவ நேர்த்தியுடன் சொல்லப்பட்டிருந்தாலே போதும் அது சிறந்த கதை தான்சினிமாவில் சின்னச் சின்ன கட் ஷாட்டுகள் வருவது போல இரண்டு பாராகிராப் தாண்டியதும் பெட்டி வைத்து வேறு இடத்திற்கு தாவுவது வாசிக்க ஏதுவாக அமையவில்லை! இந்த இடத்தில் கவிஞனாக இருந்து சிறுகதைக்கு வந்த பாலைநிலவனின் கதைகளின் சொல்முறை அழகு ஞாபகம் வருகிறது எனக்கு.

நிலாரசிகன் கதைகளில் டைனோசர்களும், தேவதைகளும், கன்னிகளும் தொடர்ந்து வரட்டும். நிதானமாகச் சொல்ல வேண்டிய கதைகளை ஏனோ மிக விரைவாக முடித்து விடுகிறார் சொல்ல அவ்வளவு தான் என்று. எழுத எழுதத் தான் அது கைவரும் என்பது போல நிலாரசிகனின் சிறுகதை முயற்சிகளை வரவேற்போம்!


 விலை : 80 - பொள்ளாச்சி இலக்கிய வட்டம் - பேச : 90955 07547, 98422 75662.

Post Comment

கருத்துகள் இல்லை: