திங்கள், பிப்ரவரி 02, 2015

கண்ணாடி நகரம்- கவிதை தொகுப்பு பற்றி


கவிதைத் தொகுப்புகளின் படையெடுப்பு தமிழில் புற்றீசல் போல எப்போதும் கிளம்பி வந்து கொண்டேயிருக்கும் நிகழ்வுதான். மழைக்காலங்களில் தான் கிராமங்களில் ஈசலை நாம் புற்றுக்களில் பிடிக்க முடியும். அதற்கொரு லாந்தர் விளக்கே போதுமானது! ஆனால் கவிதைகள் என்று கிளம்பும் ஈசலை நாம் பிடிக்க நட்பு என்ற விளக்கை பயன்படுத்துகிறோம் என்றே நினைக்கிறேன்எழுதத் துவங்கும் யாரும் முதலில் செய்வது கவித் தொகுப்பு தான். முன்பெல்லாம் தொழில் நிறுவனம் வைத்திருப்பவர்கள் தான் சின்ன அட்டை வடிவில் கார்டு கொடுப்பார்கள். அவர் என்ன தொழில் செய்கிறார்? என்ன எண்ணில் இருக்கிறார்? போன்ற விவரங்கள் அதில் இருக்கும். இன்று புத்தக வடிவில் கவிதைகளை தங்களுக்கான அறிமுக விசயங்களாய்  கவிஞர்கள் என்ற போர்வையில் இருப்பவர்கள் நண்பர்களுக்கு கொடுத்து மகிழ்கிறார்கள். சினிமாத்துறையில் நுழைய முயற்சிக்கிறேன் என்பவர் தன் தொகுப்பொன்றைத்தான் அடையாளமாக தருகிறார். கவிதை தொகுப்புகளை இப்படி அறிமுக கார்டுகளாய் எல்லோருக்கும் வழஞ்கிய கவிநெஞ்சுடையவர்கள் பிற்பாடு அதிலிருந்து நழுவி நல்ல வேலையில் செட்டிலான பிற்பாடு திருமணம் முடித்து பிள்ளைகுட்டி பெற்று என்று வாழ்வில் செட்டிலாகிறார்கள். ‘அந்தக்காலத்தில் நாங்கள் எழுதாத கவிதையாடா இன்னிக்கி எழுதிட்டு இருக்கீங்க நீங்கெல்லாம்?’ வசனங்களோடு ஒரு அற்புத வாழ்வு நிறைவடைகிறது!

கவிதை தொகுப்புகள் பலகாலமாகவே வாசகர்களுக்கு இலவயமாகவே கிடைத்துக் கொண்டிருக்கின்றன. பதிப்பகங்கள் கவிதை தொகுப்புகளை வெளியிடுவதில் தயக்கம் காட்டுகின்றன. அதற்கு கவிஞர்களே காரணிகளாகி விட்டார்கள்! காசு இருப்பவர்கள் இன்று ஒரு தொகையை தொகுப்புக்கு கொட்டி பிரதிகளை அச்சடித்து வீட்டில் வைத்துக் கொண்டு எல்லோருக்கும் இலவயமாக தருகிறார்கள். அதுவும் நண்பர்கள் கூட்டம் முடிந்தபிறகு வீட்டின் பரணில் தூங்குகின்றன. ஒவ்வொரு ஐந்து வருட காலத்திற்கு ஒருமுறை கவிதைகளின் வடிவங்கள் வேறு மாறி விடுகின்றன. குயில், நிலா, மரம், காந்தி தாத்தா, கடல், என்று தலைப்பிட்டு அதற்கு மெனக்கெட்டு பாடிய கவிப்புத்தகங்கள் புதைக்கப்பட்டு விட்டன. காதலனின் வரவை எதிர்நோக்கி தினமும் தேய்கிறாயோடி நீ? என்று நிலாவுக்கு கவிதை எழுதினால் இன்று திரும்பி நின்று சிரிப்பார்கள். பின்பாகசிவப்பு மலர்கள் பூக்கட்டுமென்றுகவிதைகளின் கடைசி வரிகள் அரங்கேறின. சிவப்பு சிந்தனை தாங்கிய கவிதைகளை தவிர்த்து எதை எழுதினாலும் வேடிக்கைப்பொருளாகின. அதற்கும் அதே நிலைமை சில காலம் கழித்து வந்தது.

எப்படியிருப்பினும் கவிஞர்கள் நிதான மனமுடையவர்களாகவும், சில சமயங்களில் கோபக்காரர்களாகவும் இங்கு வெளிப்பட்டு தங்கள் முகத்தை காட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். இன்று முகநூலில் எல்லோருமே கவிஞர்கள் தான். பத்து கவிதைகளுக்கு இடையே ஒரு நல்ல கவிதையை அவர்கள் தந்து விடுகிறார்கள். நான்கு தொகுப்புகளை வாசித்த ஒருவன் தானும் எழுத முற்படுகிறான். அந்த வடிவம் அவனுக்கு இலகுவாக இருக்கிறது. கவிதைகளை சாகடிப்போம் என்று கிளம்பியவர்கள் வரிசையிலும் சிலர் இருந்தார்கள். அவர்களின் தொகுப்புகளும் இங்கு பல கவிஞர்களின் பார்வைக்கு கிட்டத்தான் செய்தன. வரிகளை மடித்துப்போட்டு எழுதுவது கவிதை என்று பலரும் நம்பி வேலை செய்கிறார்கள். நகரப் பேருந்தில் அருகிலிருப்பவன் கவிஞனாய் இருக்கிறான். நகரத்தில் தெரியாமல் மோதி சாரி கேட்பவன் கவிஞனாய் இருக்கிறான். கழிவறையின் வரிசையில் தாங்க முடியாத வயிற்று வலியில் நிற்பவன் கவிஞனாய் இருக்கிறான். மதுபானக்கடையில் சகமனிதனால் அடிபடுவன் மூன்று தொகுப்புகள் போட்டவனாக இருக்கிறான். கவிஞர்களை மதிக்கும் தேசம் இதுவல்ல! என்று கொந்தளிக்கிறான்.

போக தான் வேலை செய்யும் கம்பெனியில் எஜமான் நூறு பிரதிகள் வாங்கிக்கொள்வார். போக வேலையாட்கள் இரநூறு பேரும் வாங்கிக் கொள்வார்கள் என்பதற்காக கவிஞராய் அவதாரமெடுக்கும் பாரதிகளும் இங்குண்டு!

நீண்டகாலமாக கவிதை எழுதி வரும் ஜெயதேவனின் ஐந்தாவது தொகுப்புகண்ணாடி நகரம்’.  காலமாற்றத்தில் கவிஞர் தன் சட்டையை உரித்து புதிய அரிதாரம் பூசி வந்திருக்கிறார். கவிதைகள் நவீன சாயலை கொஞ்சம் கைப்பற்றி வந்திருக்கின்றன. இழந்து கொண்டு வந்திருக்கும் வாழ்வும், புதிதாய் பெற்றிருக்கும் வாழ்வும் அவரது பாடு பொருள்களாக இருக்கின்றன. இன்றைய நவீன வாழ்க்கை அவரை சித்தம் கலங்கச் செய்யவில்லை. கிராமிய வாழ்வியல் மீதான ஏக்கங்கள் ஒவ்வொரு கவிதையிலும் வெளிப்படுகிறது. வண்ணத்துப்பூச்சிகள் காணாமல் போவது பற்றி இனி கவிஞர்கள் தான் வருத்தப்பட வேண்டுமோ! என்ற அச்சமும் பிறக்கிறது! எது எப்படியிருப்பினும் முந்தைய தலைமுறைக்கும் இன்றைய தலைமுறைக்குமான  விசயங்களை சொல்லி முடிக்கும் ஒரு தொகுப்பாக இந்த தொகுதி அமைந்திருக்கிறது. நவீனத்துவ கவிதைகள் பல இப்படிச் சொன்னவை என்றாலும் அனைவருக்கும் புரியும் விதத்தில் எளிய வடிவில் கவிதைக்கான குணங்களோடு பேசும் சொல்முறையில் ஜெயதேவன் வெற்றி பெற்றிருக்கிறார். படித்தவுடன் புரியவும், வாழ்க்கையை திரும்பிப் பார்க்கவும் வைக்கும் கவிதைகள் இவைகள்!

ஜெயதேவன் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது முக்கியமான விசயமாகப் படுகிறது எனக்கு! ஏனெனில் கவிதை இன்னும் சாகவில்லை என்பதை இப்படியான தொகுதிகளும் சிலசமயம் நிருபணம் செய்து கொண்டேயிருக்கின்றன!


கண்ணாடி நகரம் (கவிதைகள்) ஜெயதேவன் -அன்னை ராஜேஷ்வரி பதிப்பகம். விலை -70. கவிஞரோடு பேச : 94869 26886

000000000

Post Comment

கருத்துகள் இல்லை: