செவ்வாய், பிப்ரவரி 10, 2015

நாங்க பாத்துக்கறோம்!


எழுத்தாளர்களை என் காதுபட திட்டாதீர்! நாங்களே

பார்த்துக் கொள்கிறோம்!

தமிழில் புத்தகங்கள் வாசிப்போரின் எண்ணிக்கை குறைவுதான் என்று எழுதும் அனைத்து புதின எழுத்தாளர்களுக்கும் தெரியும். பதிப்பகம் அச்சடித்த பிரதிகள் விற்று முடிய மூன்று வருட காலங்கள் ஆகலாம். அப்படி உடனே விற்றுத் தீர்ந்து போக வேண்டுமென்றால் எழுத்தாளன் கோமாளித்தனம் ஏதாவது செய்ய வேண்டும். எழுத்தாளன் செத்து விட்டான் என்று அறிவிக்க வேண்டும். இது நன்றாக வேலை செய்ததை எல்லோரும் கண்முன்னே கண்டார்கள். பிடிஎப் ஃபைல் வடிவில் இதுவரை 2000 வாசகர்களுக்கும் மேலாக வாசித்திருக்கிறார்கள். தேடல் இன்னமும் இருக்கிறது.

எங்கிருந்தார்கள் இத்தனை வாசகர்கள்? இதுவரை என்ன படித்துக் கொண்டிருந்தார்கள்? அதில் என்ன இருக்கிறது? என்று தெரிந்து கொள்ள இப்படி பைத்திய நிலையில் போன் மேல் போன் போடுகிறார்களே! ஐயோ! படிக்காவிடில் மண்டை சுக்கு நூறாகி விடுமோ? என்ற தவிப்புடன் விசாரித்துக் கொண்டே இருக்கிறார்கள் இன்னமும் ! அடுத்ததாக எழுத்தாளன் தூக்குப் போட்டு செத்தால் தான் இது போல நடக்கும் இங்கு. முகநூலை சரியாகப் பயன்படுத்திக்கொண்டவர்கள் பட்டியலில் பலர் இருக்கிறார்கள். ஆனால் இது உச்சம்.

தமிழில் முதலாக வந்த சமையல் குறிப்பு புத்தகம் இன்று வரை விற்றுக்கொண்டே இருப்பதாக நண்பர் ஒருவர் சொன்னார். வேடிக்கையோ என்று விசாரிக்கையில் அது உண்மைதான் என்றார் மற்றொரு நண்பர்இப்போது சமையல் குறிப்புகளில் வீட்டில் செய்யவே முடியாத ஐட்டங்கள் பற்றியெல்லாம் எழுதி விட்டார்கள். களிமண்ணால் செய்யப்பட்ட சட்டியை நாம் இன்று டிவி சேனல்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

முதலில் அடுப்பு மூட்ட மூன்று பெரிய கற்களை எடுத்து போட்டுக்கொண்டு அதில் காட்டில் கைக்கு கிடைக்கும் குச்சிகளை வைத்து அடுப்பை மூட்ட வேண்டும். பின்பாக வடைச்சட்டியை எடுத்து திடீர் அடுப்பு மீது வைத்து சூடேற்ற வேண்டும். பின்பாக காட்டில் எண்ணெய்க்கு நீங்கள் தவிக்காமல் கையோடு பறித்து வந்த துக்குடி இலைகளை அதனுள் போட வேண்டும். (துக்குடி இலைகள் அமேசான் காடுகளில் மட்டும் கிடைக்கின்றன என்பது வெறும் வதந்தி தான். நம்மூர் காடுகளில் இசிபட்டுக் கிடக்கின்றன) இப்படி சொல்லிக் கொண்டு போகலாம். தலைப்பு மட்டும் புதுவித காட்டுச் சமையல் என்று போட்டு விட வேண்டும். இம்மாதிரி புத்தகங்களுக்கு விளம்பரம் மற்றும் விமர்சனக் கூட்டம் போட வேண்டியது அவசியமில்லை.

தமிழில் ரொம்பகாலமாக நான் எழுத ஆசைப்படும் புத்தகம்சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்வது எப்படி?’ எப்போது வேண்டுமானாலும் இதை எழுதி விடுவேனோ என்று பயமாய் இருக்கிறது என் மீதே! ஒரு வார்த்தை எமது நடுகல் சுரேஷிடம் சொன்னால் போதும்.. ‘எழுதுங்க நீங்க, அங்கங்க கோட்டுப்படம் டிசைன் பண்ணி கொண்டு வந்துடலாம்என்பார்.

இங்கு நான் சொல்லவரும் எழுத்தாளர்  நீண்ட நெடுங்காலமாக தான் வசித்து நகரம் மாசுபடுவது பற்றியும், நொய்யல் நாசமானது பற்றியும், சுற்றுச்சூழல் கண்டமானிக்கி பாதிக்கப்படுவதையும், வல்லுறவு செய்யப்பட்ட பெண் போல ஒரு போர்வை கிடப்பதையும், புட்டம் பெருத்த பெண் காபி கொடுக்க தன்னிடம் வருவது பற்றியும், மாதவிடாய் பெண் சிறுநீர் கழித்ததால் தான் அணை வற்றிவிட்டது என்றும்  தகவல்களை தன் புத்தகங்களில் நிரப்பி சமூக ஆர்வலர் என்ற பெயரை பெற்றவர். அவரது முகத்தின் புன்னகை என்னை எழுத விடாமல் தடுக்கிறது என்றாலும் ஒரு கவனத்திற்கு அவர் எப்போது வருவார்? என்ற ஆதங்கம் என்னுள் இருக்கிறது. பரிசுகள் ஒரு எழுத்தாளனை  ஊக்குவிக்கும் வேலை செய்து விடுமா? என்றால் ஆமாம் என்று சொல்லிவிடலாம் போலிருக்கிறது. எனக்கு எங்கெங்கே என்னவென்ன பரிசுகள்  கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே தெரியாது. சிலர் பரிசுகளை மனதில் வைத்து திட்டம் போட்டே எழுதி அனுப்பி பரிசு பெற்று மகிழ்கிறார்கள். 89ல் கோவையில் பரிசுக்கதை என்று 15 ரூபாய் கொடுத்து மாலைமுரசு என்னை ஊக்குவிக்கும் வேலையை செய்தது. திருப்பூர் ஓடி வந்து விட்டேன்.

கண்காட்சியில் என் நண்பர்கள் இருவர் கண்டபடி ஒரு எழுத்தாளரை திட்டியபடி வந்தனர். யார்? என்ன? என்று நான் விச்சாரிக்க முடியாதபடி வேறு நண்பருடன் உரையாடியபடி முன்னால் சென்று கொண்டிருந்தேன். அதாவது வெளியே பேருந்து நிறுத்தம் நோக்கி! பெல்! பெல்! என்ற சப்தம் இடையிடையே அவர்கள் பேச்சில் கேட்கவே என்னவென விசாரித்தேன்.

 ”20% தள்ளுபடின்னு என் கையில ஸ்டால்ல வேற புக்கு எடுக்குறப்ப திணிச்சு உட்டுட்டாருங்க! சரி பெரிய மனுசன் திணிக்கிறாரேன்னு ஒன்னும் சொல்லாம வாங்கிட்டேன்! இதையெல்லாம் என்னால படிக்க முடியாதுங்க! இப்பத்தான் இவரு சொல்றாரு.. பெல் பெரிய எழுத்தாளராம். இவரு கையிலயும் திணிச்சிருக்காரு அதே புத்தகத்தைஇப்பத்தான் என் நண்பர்கள் மதுரையில இருந்து  கண்காட்சிக்கி வந்தாங்க உள்ளார போறப்பவே சொல்லிட்டேன்.. அந்த ஸ்டால் பக்கம் போயிடாதீங்கன்னு!”

சரி நீங்க எனக்கு வேண்டாமுன்னு சொல்லிட வேண்டியது தானே அவர்ட்ட!”

பழக்கமில்லீங்களே.. ஆசிரியரா வேற போயிட்டேன் நானு

அப்ப ஆசிரியர் தண்ணி போட மட்டும் டாஸ்மார்க் போலாமா?”

இந்தூர்ல என்னை யாருக்குங்க தெரியும்? அதான் கொஞ்சம் ஜாலியா இருக்கேன்!

அந்த புக்கை எனக்கும் தான் குடுத்தாரு! கழிவெல்லாம் என்கிட்ட சொல்லுல! பழக்கத்துக்கு மொத்த கழிவுல எனக்கு குடுத்திருக்கணும் அவர். ரெம்ப நாள் ஆச்சு அவரு கதை படிச்சுன்னு கொஞ்சம் உள்ள போனேன். சிரமம் தான். பேப்பர் கட்டிங்கெல்லாம் வெட்டி வச்சதை உள்ளார எழுதியிருக்காரு அவரு!”

ஐய்யோ அப்படிங்களா? என் வீட்டுக்கு தந்தி, தினகரன் டெய்லியும் வந்திருமுங்க. பேப்பர் செய்திகள் எல்லாம் என்னிக்குமே நாவலாகாதுன்னு யாரும் சொல்றதில்லியா?

‘’அப்ப நீங்க படிக்க வேண்டிதே இல்லியே! நைஜீரியாக்காரர்கள் திருப்பூர்ல வந்து வாடகை வீடெடுத்து தங்குற விசயம் யாருக்குமே தெரியாதுங்கற போக்குல சொல்லியிருக்காருங்க! சிக்கல் என்னன்னா அவருக்கு நைஜீரியகாரங்களை ரொம்ப பிடிச்சிருக்குது போல! அந்த ஒடம்பு அவர்ட்ட இருந்திருந்தா பொடிப்பய நானெல்லாம் இப்படி சொல்லுவனா? சி.ஆர்.ரவீந்திரன் ரொம்ப சிறப்பா தன்னோட நாவல்ல திருப்பூர் வாழ்க்கையை பதிவு பண்ணியிருக்காரு. சுமங்கலி திட்டம் அப்படிங்கறதை ரொம்ப விரிவா சொல்லியிருக்காரு. ஆனா யாருக்கும் தெரியாது. சரி யார் யாரோ எழுதுறாங்க. அதுல இதுவும் ஒன்னு. என்ன இருந்தாலும் அவரு எங்க ஊர்காரரு. இல்லீங்க என்னால படிக்க முடியாதுன்னு சொல்லிட்டு வந்திருக்கணும் நீங்க! அதை உட்டுட்டு இங்க வந்து அவரை பெயர் சொல்லி திட்டக்கூடாது. அவரு தன்னோட எழுத்தை அனைவரும் வாசிச்சு திருப்பூரு இப்படி குப்பைக்காடா போகுதேன்னு வருத்தப்பட்டு எல்லா மக்களும் போராட திருப்பூர் வரணும்னு நினைச்சி குடுத்திருப்பாரு!’’ என்றதும் நண்பர் திரு திருவென விழித்தார். போராட நாளைக்கே பெல் தலைமையில் இறங்கி விடுவேனோ? என்ற பார்வை தான் அது! அப்போது கூட வந்த நண்பர் களம் இறங்கினார்.

நீங்க கூட திருப்பூர்ல பனியன் கம்பெனிக்கி வர்ற பெண்கள் அனைவரும் தவறான பாதையில போறாங்கன்னு எழுதி எழுதி வச்சுடறதா அவரு வருத்தப்பட்டு பேசினாரே அன்னிக்கி மீட்டிங்குல!”

அவரு எம் பேரை சொல்லலியே! எழுதுறாங்க சிலரு அப்படின்னு பொதுவா தான சொன்னாரு! அப்புறம் அவர்ட்ட நான் சொல்லிட்டேன். நீங்க என்னை திட்டுங்க! நான் உங்களை திட்டுறேன். அப்பத்தான் ரெண்டு பேர்த்தையும் தமிழ் வாசக உலகம் என்னடாதுன்னு திரும்பி பாக்கும்! நான் ஆரம்பிக்க போறேன்னு சொல்லிட்டேன். இனி அவரு என்னை படறப் புடிப்பாரு பாத்துக்கங்க! அப்புறம் அடுத்த மீட்டிங்குல நாங்க கட்டுமாரு கட்டிக்குவோம். முகநூல்ல போயி நான் எழுதுவேன். அவரு என்னை அடிச்சி வச்சிட்டாரு. நான் குத்திட்டேன்னு! எப்டி ஐடியா!”

திருப்பூருகாரவுக எல்லாம் லூசுகளா இருப்பீக போல!”

ஸ்டோரி ரைட் பண்ணுற எல்லாருமே மெண்டலுக தான். இது தெரியாம வாத்தியாரா இருந்து என்னத்த பிள்ளைங்களுக்கு நீங்க  சொல்லிக் குடுப்பீங்களோ? எனக்கு தெரிஞ்சு ஒரு எழுத்தாளரு இருக்காருங்க! அவரு இங்க திருப்பூரு வரலை. ஒரு பதிப்பகத்துல புத்தகம் ஒன்னு கொண்டாந்தாரு. வரே புக்ஸ்டால்ல போயி போட்ட 20 புத்தகத்தையும் வாங்கி கொண்டி வீட்டுல போட்டுட்டாரு. மறுக்கா எனக்கு அந்த புத்தகம் தேவைப்படுதுன்னு வந்தேன். ஸ்டால்ல புக்கு இருக்கான்னு கேட்டேன். பெரிய பிரச்சனைங்க இந்த பதிப்பகத்துகாரங்களோட! என்றவர் பதிப்பக உரிமையாளருக்கு ஸ்டாலில் இருந்தே போன் போட்டாரு, இங்க ஸ்டால்ல என் புக்கு ஒன்னுமே இல்லீங்கன்னு! அவரு போன ஒடனே ஸ்டால்ல இருந்த பையன் சொல்றான் என்கிட்ட, ‘நேத்து இவரே எல்லாத்தையும் வாங்கிட்டு போயிட்டு இப்ப பந்தா காட்டுறாரு பாருங்கன்னு

வரு கூட புது எழுத்தாளர். ஒரு ஆர்வத்துல பாஞ்சுட்டாருன்னு சொல்லலாம். இங்க எழுதிட்டு இருக்குற எல்லா இலக்கியவாதிகளுக்கும் மூத்தவர் நம்ம ஆள். ஆனா இலக்கியத்துல எப்படி சுஜாதாவை இன்னிவரைக்கும் சேர்த்திக்க மாட்டீங்கறாங்ளோ அப்படி இவரையும் இலக்கியத்துல சேத்திக்க மாட்டிங்கறாங்க! இலக்கியம்ங்கறது வேறன்னு இன்னமும் இவருக்கு தெரிய மாட்டேங்குது! புலியப்பாத்து பூனை சூடு போட்டுக்கிட்ட வேலையும் பண்ணி பாத்தாரு. யாரும் கண்டுக்கலை! தன்னை முன்னிருத்தி பேப்பர்ல செய்தி வரணுங்கறதுக்கு தானே, பெல் பேசினார்னு எழுதி காசு கொடுத்து பட்டாஸ் கிளப்புவாரு. எதுக்கு இந்த விளம்பரம்? எனக்கு புரியவே இல்லீங்க! ஒருவேளை அகாடமி விருது நோக்கி நகரும் நகர்வாக இதை பார்க்கலாம்! அகாடமி விருதுக்கு தேவைப்படும் ஒரே சொல் அமைதி! அமைதியாக தானுண்டு தன் படைப்புலகம் உண்டென இருந்தால் நாலு பேர் சிபாரிசு கிட்டும். நான் சிபாரிசு செய்கிறேன் நம் ஆளை. சீக்கிரம் அதையும் குடுத்துடுங்க! ஏனெனில் பூராம் சொந்தக்காசு போட்டு செலவழிக்கும் விசயம்.

அப்பப்ப நான் பெல்லை மறந்துட்டாலும் எங்கள்  படைப்புலகம் வேறு வேறானவைகள் தான்நண்பர்களே! யாரையும் திட்டுவதென்றால் ஓரம் பாரம் போய் வாய் வலிக்க தனிமையில் நின்று திட்டுங்கள். பக்கத்திலிருப்பவன் காது பட எழுத்தாளனை திட்டாதீர்கள்அதை இன்னொரு எழுத்தாளன் கேட்பது சங்கடமாக இருக்கிறது. ஆகவே நாங்களே இந்த விசயத்தை பார்த்துக் கொள்கிறோம்.

என்னை திட்ட சில டிப்ஸ் :

என்னாரமும் பாலியல் எழுதுகிறான், அல்லது பியர் குடிக்கிறான். இவனது கதைகளில் பெண்கள் எந்த நேரமும் அதற்கு தயாராக நிற்கிறார்கள். பெண்களில் நல்லவர்களே இல்லியா? ஆண்கள் ஏன் எந்த நேரமும் நீட்டிக்கொண்டே செல்கிறார்கள், செல்போனை இப்படியா பயன்படுத்துவார்கள்?

000


Post Comment

கருத்துகள் இல்லை: