புதன், பிப்ரவரி 11, 2015

காப்காவின் உருமாற்றம் -ஒரு பார்வை


ப்ரென்ஸ் காப்கா-வின் உருமாற்றம்

மொழிபெயர்ப்பு சுயமாக எழுதுவதை விடவும் ஒரு வகையில் கடினமானது. அதி ஜாக்கிரதையாக, இம்மி பிசகாத துல்லியத்துடன் செய்யப்பட வேண்டியது. மொழிபெயர்ப்பாளர் கதை சொல்லியாக உருமாறினாலொழிய மூலத்திற்கு நியாயம் செய்ய முடியாது. குறிப்பிட்ட அரசியல்-கலாச்சார சூழல், மனநிலை, மொழி இவற்றின் புரிதல் அவருக்கு எந்த அளவுக்கு சாத்தியமாகிறதோ அந்த அளவுக்குத்தான் மொழிபெயர்ப்பின் சிறப்பு இருக்கும்-அமரந்தா.

தமிழ் நாவல்களில் இருக்கும் போதாமைகளை எப்போதும் மொழிபெயர்ப்பு நாவல்களே பூர்த்தி செய்து வருகின்றன. இப்படி இருக்க  தமிழ் உரைநடையில் பெரும் மாற்றங்கள்  சமீபகாலங்களில் நடந்தேறி வருகின்றன. வித்தியாசமான கதைக் களன்களில் எழுத்தாளர்கள் எழுதி வருகின்றனர். இலக்கியம் பல வடிவ மாற்றங்களுக்கு உட்பட்டு வருகிறது. இதுவெல்லாம் மொழிபெயர்ப்பு புத்தகங்களின் வருகையால் நடந்தேறியவைகள் தான்.

தமிழ் இலக்கியம் தேக்கமில்லாத இந்த சமயத்தில் மொழிபெயர்ப்பு புத்தகங்களின் வருகையும் அதிகப்பட்டிருக்கிறது. பல பதிப்பகங்கள் மொழிபெயர்ப்பு புத்தகங்களை கொண்டு வருவதில் ஆர்வமாய் இருக்கிறார்கள். சிறந்த மொழிபெயர்ப்பாளர்களும் புதிதாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். மொழிபெயர்ப்புகளை தேடியெடுத்து வாசிக்கும் வாசிப்பாளர்களும் பெருகியிருக்கிறார்கள். தமிழ் மொழிக்கு இது  பட்டாடை உடுத்திய அலங்காரம் தான்.

காப்காவை வாசித்தல் என்பது வாசிப்பாளனுக்கு சவாலான வேலையாக இருக்கிறதுஎன்னிடம் 1992-ல் க்ரியாவில் வெளிவந்தவிசாரணைஇன்னமும் படித்து முடிக்கப்படாமல் இருக்கிறதுகாரணம் அந்த அளவு வாசிப்புத் திறன் என்னிடம் இல்லாமல் போனதால் தான். போக மொழிபெயர்ப்பு சரியில்லை என்ற வார்த்தையை எளிதாக என்னால் வாசிக்க இயலாத புத்தகங்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தேன். அது அப்படியல்ல! என்பதை சமீபத்தில்நிழல்களின் உரையாடல்’  மார்த்தா த்ராபா வின் புத்தகம் அமரந்தா மொழிபெயர்ப்பில் 1997ல் வந்த புத்தகத்தை சமீபத்தில் தான் முழுதாக வாசிக்க முடிந்தது. இத்தனை காலம் நான் வாசிக்க கொடுத்தனுப்பிய நண்பர்களாலும் வாசிக்க இயலாத புத்தகம் அது. போக தமிழில் வெளிவந்த முதல் லத்தீன் அமெரிக்க நாவல் அது.

80களின் இறுதியில் கெளதம சித்தார்த்தன் தன் உன்னதம் முதல் இதழைக் கொண்டு வந்த போது அதில் காப்காவின் உருமாற்றம் கதையின் ஒரு பகுதியை கொண்டு வந்தார். மீதம் அடுத்த இதழில்  என்ற அறிவிப்பை பார்த்து எனக்கு ஏமாற்றம் தான். இருந்தும் அது  புத்தகமாக வருகையில்  தேர்ந்த வாசகர் ஒருவர் என்னிடம், கரப்பான் பூச்சியா மாறிடறான்டா இதுல ஒரு மனுசன்! என்றே அறிமுகம் செய்தார். என் அப்போதைய வாசிப்பில் கரப்பான் பூச்சி தான் மனதில் இருந்தது.

யாரும் இந்த சிறுகதையில் (இது சிறுகதை தான்! குறுநாவலும் அல்ல) கரப்பானாகவோ, வண்டாகவோ மாறவேயில்லை என்பது தான் இப்போது நான் புரிந்து கொண்டதுபோக எதிர்வெளியீடு தற்போது கொண்டு வந்திருக்கும் உருமாற்றம் புத்தகம் காப்காவை முன்னுரையில் மொத்தமாக, சுத்தமாக அறிமுகப்படுத்தியிருக்கிறது. இத்தொகுதியில் ஆறு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.

வளை என்கிற சிறுகதை இத்தொகுதியின் உச்சம். படிப்போர் வளைக்குள் ஓடிக்கொண்டே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் விலங்காகவே மாறி விடுகிறார்கள். கதை செல்லச் செல்ல இது என்ன விலங்காக இருக்கக் கூடும் என்ற கேள்வி வாசகனை நெருக்கிக் கொண்டேயிருக்கிறது. அவரவர் மனதில் இதுவாக இருக்க கூடுமோ? என்று யோசிக்கையில் அந்த விலங்கும் அல்ல என்பதை விலங்கின் நடவடிகைகள் சொல்லிச் சென்று கொண்டே இருக்கிறது. உடும்பாகத்தான் இருக்க வேண்டுமென நினைத்துப் படித்துக் கொண்டிருக்கையில் அதுவும் மாறுகிறது.

வளை என்றால் பெரும்பாலும் எலியைத் தான் யோசிப்போம்எலியை வாயில் ஒருமுறை கவ்வியிருப்பதாகவும், ஏற்கனவே எலி பயன் படுத்திய பழைய வளை என்றும் வருகிறது. இறுதியாக எதிரியை நேருக்கு நேர் சந்திகையில் பற்களைக் காட்டி, என்று வருகையில் எல்லாமும் மாறுகிறது. காப்கா, பிரச்சனைகளை சந்திப்பவை அனைத்தும் விலங்குகளாக வைத்து விலங்குகளின் பார்வையில் இந்த உலகம் எப்படி இயங்குகிறது? எத்தனை சீரழிவுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதை சொல்ல முயல்கிறார். ஆனால் அவரின் விலங்குகள் யாவையும் விலங்குகளே அல்ல! எல்லாமே உருவகப்படுத்தப்பட்ட விலங்குகள் தான். எல்லாமே தான் தங்கியிருக்கும் வீட்டைப் பாதுகாப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தான். எதிரிகளிடமிருந்து வீட்டை பாதுகாத்தல்! தேவையான உணவு வகைகளை வீட்டினுள் பத்திரப்படுத்துதல். சுறுசுறுப்பாக இயங்குதல்.
காப்கா தன் கடைசி காலகட்டங்களில் காசநோயினால் அவதிக்குள்ளாகியிருக்கிறார். அந்த அவதியின் நான்கு வருட காலகட்டத்தில் அவர் எழுதிய சிறுகதைகள் அனைத்தும் அவரது நோய்க்கூறுகளின் தீவிரத்தையும், ஓடியாடி உழைத்து சேமித்திருக்க வேண்டிய வாழ்க்கைத் தேவைகளையும் பற்றியே எழுதிச் சென்றிருக்கிறார். இப்போது  அவரது கதைகளை வாசித்து உள்நுழைவதற்கான வாசல் திறக்கிறது.

எல்லா விலங்குகளும் காப்கா தான். ராட்சத மூஞ்சூறு, ஒரு நாயின் ஆராய்ச்சி, வண்டு இவை யாவுமே. தன்னுடைய பதட்டம், தனிமை, தந்தை மீது தனக்கிருந்த மரியாதை, வேலைப்பழு, ஆசை, நோய்க்கூறு, துன்பத்தில் ஆழ்த்தும் உடல் வலி இவைகளே இக்கலைஞனுக்கு போதுமானவைகளாக இருந்திருக்கின்றன அவனது படைப்பாற்றலுக்கு. படைப்புகளில் இருக்கக்கூடிய நிதானம் கூட, அல்லது திரும்பத் திரும்ப ஒன்றை சொல்வதின் மூலமாக அவரது நோய்க்கூறுகளின் அவஸ்தை காரணமாக இருந்திருக்கலாம். அதற்காகவே அவர் அதீத கற்பனை வடிவத்தை ஆசையோடு தேர்ந்தெடுத்திருக்கிறார். அதிலும் அவருக்கு போதாமை இருந்திருக்கிறது என்பதை வாசிக்கையில் நாம் உணருகிறோம்.

உருமாற்றம் கதையில் வெளி உலகம் செல்ல வேண்டும், தன் குடும்ப நிலையை உழைத்து சம்பாதித்து உயர்த்த வேண்டும் என்ற ஆசையை நினைவுகள் வாயிலாக கிரிகர் வெளிப்படுத்துகிறான். ஆனால் அவன் நோயின் தீவிரப்பிடியில் படுக்கையில் கிடக்கிறான். அவனது தந்தை அவன் நோய் பற்றி எந்த வருத்தமும் அடைவதில்லை. பதிலாக சொற்களால் விரட்டுகிறார். அந்த சொற்களில் ஒன்று தான் ஆப்பிள் வடிவில் அவன் முதுகில் ஆறாத வடுவாக ஒட்டியிருக்கிறது. அம்மா அவன் நோய்க்காக கண்ணீர் சிந்துகிறார். தங்கை வேறு வழியில்லாமல் அண்ணனுக்கு உதவுகிறாள்.

கிரிகர் தன் உடல் உபாதைகளை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. உணவின் மீதும் ஆசையில்லை. அவனது அறை அவனுக்கான உலகமாகி விடுகிறது. அவன் அறையிலிருந்து வெளியேறினால் தந்தை விரட்டியடிக்கிறார் அறைக்குள்ளே அவனை. வீட்டை மாற்றிச் செல்லலாம் என்றால் நோவுக்காரனை இழுத்துக் கொண்டு எங்கு அலைவது? என்ற எண்ணமும் அவர்களிடம் இருக்கிறது. கிரிகர் இறந்த பிறகு அவர்கள் தங்கள் திட்டங்களை செயல்படுத்த முனைகிறார்கள் என்று முடிகிறதுஇதில் ஒரே விசயம் அவனது நோய்க்கூறுகளைப் பற்றியோ, அதை சரிப்படுத்துவது பற்றியோ வீட்டார் எதுவும் செய்வதில்லை. அவன் அப்படியே கிடக்கட்டும் என்று மட்டு விடுகிறார்கள். எல்லாமே குறீடுகள் தான்.

2009-ல் நான் எழுதிய சிறுகதை நல்லதம்பியின் டைரிக் குறிப்புகள். அது ஒரு பிற்பகல் மரணம் தொகுதியில் வெளிவந்தது. அதை எந்த பத்திரிக்கையும் வெளியிடவில்லை. ஒரு பத்திரிக்கை காப்காவின் உருமாற்றத்தை ஞாபகப்படுத்துகிறது என்றது. அருமை! எனக்கே அப்போது தான் உறைத்தது. பூரான் கடியை சிறுவயதிலிருந்தே வாங்கிக் கொண்டிருக்கும் ஒருவன் கதைப்போக்கில் பூரானாக மாறி விடுவது. இதில் எந்த நோய்க்கூறுகளையும் நான் ஒளித்து வைக்கவில்லை. நேரடியாக சொல்லப்பட்ட கதை கொஞ்சம் வேடிக்கைகளை சேர்த்து. இனி அது திரும்பவும் திருத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.

நல்ல சிறுகதை என்பது ஒரு பூடகக் கவிதை போன்று நாவல் வடிவங்களிலிருந்து வேறுபட்டது தான். சிறந்த சிறுகதை ஆன்மரீதியில் நாவலை விட நெருக்கமாக இருக்கத்தான் செய்கிறது. சிறுகதை தரம் கூட வேண்டுமானால் கெட்டிப்படுத்துதல் வேண்டும். வளையில் வரும் விலங்கு தன் பணியில் ஒன்றாக சுவற்றை கெட்டிப்படுத்தும் செயல் அதன் மூக்கருகில் ரத்தம் வருகையில் தான் உணருகிறது சுவர் கெட்டிப்பட்டு விட்டதென்பதை. பல்வேறு விதமான போக்குகளைப் பற்றி நுணுக்கமான பகுப்பாய்வுகள் எளிய முறையில் ஒன்றை விளக்க துணை புரியும்.

வாசிப்பு என்ற செயல் வேகமான ஒன்றல்ல. படைப்பாளியோடு கைகோர்த்து இறங்கும் அல்லது பங்கு கொள்ளும் செயல். மேலோட்டமான வாசிப்புக்கு புத்தகங்கள் பல இருக்கின்றன. உண்மையான வாசிப்பைக் கோரும் புத்தகங்களாக மொழிபெயர்ப்பு புத்தகங்கள் இருக்கின்றன. கவனமும் அக்கறையுமான வாசிப்பு மொழிபெயர்ப்புகளை வாசிக்கையில் தேவைப்படுகிறது. அப்போது தான் அதன் முழுவீச்சும் நமக்கு புலப்படும். இலக்கியம் வாழ்க்கையை நம்மோடு பகிர்ந்துகொண்டே தான் இருக்கும்.

உருமாற்றம் (ஃப்ரன்ஸ் காப்கா)
தமிழில் : பேரா.ச.வின்சென்ட்.
எதிர் வெளியீடு. விலை : 200. தொலைபேசி : 04259 226012.Post Comment

1 கருத்து:

விஜய் மகேந்திரன் சொன்னது…

கோமு, 'நல்ல தம்பியின் டைரிக்குறிப்புகள்' கதை நான் தொகுத்து தோழமை பதிப்பகம் வெளியிட்ட ' இருள் விலகும் கதைகள்' தொகுப்பிற்கு சிறப்பாக எழுதிக்கொடுத்தது. 2008 செப்டம்பர் எனக்கு அனுப்பி வைத்தீர்கள் ! அதன் பிறகே பிற்பகல் மரணம் தொகுப்பில் வந்தது. நினைவுக்கு இந்த தகவல் நன்றி!
அன்புடன்
விஜய் மகேந்திரன்