சனி, பிப்ரவரி 07, 2015

நடுகல் வெளியீட்டில் வந்த “எலி” நாவல்!நடுகல் கொண்டு வந்த நாவல்!


லக்கி லுக் படிப்பவன் இவன். அதைக்கூட இவன் படிக்கும் சமயம் நான் பார்க்கவும் இல்லை. டெக்ஸ் வில்லரின் ரசிகனான எனக்கு அவரின் புத்தகங்கள் சொய்ங்கென வந்து விடும். அதை கையால் கூட தொடமாட்டான். எஸ்.ராமகிருஷ்ணனின் அண்டசராசரம், சாக்ரடீஸின் சிவப்பு நூலகம் இரண்டையும் இவனுக்காகத் தான் உயிர்மையிலிருந்து எடுத்து வந்திருந்தேன். அண்டசராசரம் 75 அகவை சாப்பாட்டு பிரியர்  டீக்கடையில் வேலை செய்யும் பையனை வைத்துக் கொண்டு துப்பறியக் கிளம்பும் கதை. என்ன காரணமோ அது குழந்தைகள் வாசிக்க இயலாத கதையாக போய் விட்டது. சாக்ரடீஸின் சிவப்பு நூலகம் சிறுவன் நூலகம் சென்று புத்தக வாசிப்பில் இறங்குவதை சொல்கிறது. கூடவே மற்றொரு சிறுவனுடன் சேர்ந்து ரகசிய நூலகம் ஒன்றிற்குள் சில கட்டுதிட்டங்களுடன் நுழைகிறான். அங்கு ஆடுகள் பேசுகின்றன வாசிக்கின்றன. இப்படி செல்லும் கதை இன்றைய குழந்தைகள் வீடியோ கேம்ஸ் என்று அதிலேயே அமர்ந்து நேரத்தை வீணடிப்பதை கடுமையாக கண்டிக்கிறது. வாசிப்பு பழக்கத்தை ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகளுக்கு நிலா காட்டி சோறூட்டுவது போல ஊட்ட வேண்டியிருக்கிறது.

எங்கள் ஏரியாவில் அரைமணி நேரம் கேம்ஸ் விளையாட பத்து ரூபாய் வசூலிக்கிறார்கள். நல்லவேளை நான் குறுநகரில் இல்லை. என்னுடன் இணைந்து வருபவன் வாரத்தில் மூன்று முறையேனும் கேம்ஸ் விளையாட நுழைந்து விடுவான். அருகில் ஒரு மெடிக்கல் ஷாப் இருக்கிறது. அதில் அமர்ந்திருப்பவர் என் நண்பர் தான்அவரிடம் பேசிக்கொண்டிருக்கையில் தினமும் இவனை இப்படி கேம்ஸ் விளையாட விடாதீங்க! என்றார். எனக்கு அது புரியவில்லை. நான் சிறுவனாய் இருக்கையில் எனக்கு இப்படியான உலகம் இல்லை! இவனுக்கு வாய்த்திருக்கிறது. பிள்ளை வளர்ப்பு என்பது ஆசிரியருக்கு மகனாக பிறந்தவனுக்கு மட்டும் தான் துள்ளியமாகத் தெரியும். தொட்டதிற்கெல்லாம் தடி எடுத்தவரின் மகனல்லவா நான். அதனால் தான் இப்படி வெளங்காமல் காலையில் அமர்ந்து பெரிய அதிசயத்தை சொல்வது மாதிரி இதை தட்டிக் கொண்டிருக்கிறேன்.

அவர் சொன்ன விசயம் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏழாவதில் படிப்பவன் ஒரு ரூபாயை இவரிடம் கொடுத்து பத்து ரூவா குடுங்க, நான் கேம்ஸ் விளையாடப் போகணும் அப்பா மருந்து வாங்க வர்ப்ப அவர்கிட்ட பத்து வாங்கிக்கங்க!’ என்று நின்றானாம் வெகு நேரம். பின் அழுகை! மற்றொருவன் வீட்டில் 100 ரூபாயை திருடிக்கொண்டு வந்து அது தீரும் வரை கேம்ஸில் அமர்ந்து விளையாடியிருக்கிறான். அவ்வளவு வெறி கேம்ஸின் மீது!

இந்த விசயங்கள் எனக்கு சற்று அதிர்ச்சியே தான். நான் விளையாட்டு போக்கில் இவனை அனுப்பிக் கொண்டிருக்கிறேன். நாளை இவனுக்கும் வெறி ஏறி விட்டால்? கத்தி நீட்டி கூட பைசா குடு என்பான்!
நேற்று மாலை வண்டியில் இருவரும் வந்து கொண்டிருக்கையில், உனக்காக புத்தகம் வாங்கி வந்திருப்பதாக விசயத்தை ஆரம்பித்தேன்.

துரை : படக்கதையாப்பா?

நான் : இல்ல! இது நாவல்டா, கொழந்தைகள் படிக்கிற மாதிரி.

துரை : போப்பா, படம் இருந்தா படிக்கிறக்கு ஜாலியா இருக்கும்.

நான் : படிச்சு பழகுடா, ரொம்ப இண்ட்ரெஸ்ட்டா போகும். நீ டெக்ஸ் வில்லரை ஏன் படிக்க மாட்டீங்கறே?

துரை : கலர்ல இருந்தாத்தான் படிக்க முடியும்பா. அதென்னமோ கறுப்பு வெள்ளையா இருக்குது.

நான் : சரி நடுகல் புத்தகம் வந்துடுச்சாம் திலீபன் சொன்னான். எலி அப்படிங்கற நாவல் படிக்கிறியா?

துரை : அதென்னப்பா கதை? (என்றவனுக்கு இப்படி இப்படி என்று கொஞ்சம் சொன்னேன்)

துரை : இது படிக்கலாமாட்ட தான் இருக்குதுப்பா!


தீர்வு : ஒருவனை வளைக்குள் இழுத்து போட்டு கொண்டு வருவதற்கு ஏகப்பட்ட மெனக்கெடல்கள் கெட வேண்டி வருகிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் இரண்டு புத்தகங்களை பார்க்கையில் இந்த வருடம் நானும் குழந்தைகளுக்காக புத்தகம் எழுத வேண்டும் என்ற எண்ணமும் வந்து சேர்ந்திருக்கிறது.
                                                                       
                                                                        00000

முதலாக கி.ச. திலீபனுக்கு ஒரு வணக்கத்தை போட்டுக் கொள்வோம்! 
சென்னையில் இந்த புத்தகத்தை அச்சடிக்க ஆசைப்பட்டது நான் தான்.
புத்தக தயாரிப்பில் உள்ளவர்களால் மட்டுமே சிறப்பாக அதை கொண்டு 
வர முடியும். அந்த வகையில் மணி ஆப்செட் எங்களின் நேரத்தைப் 
பொறுத்து அதை சிறப்பாக செய்து விட்டார்கள். சென்னையில் எனக்கு 
இதை கவனித்துக் கொள்ள நண்பர்கள் பலர் இருந்தாலும் அவர்களை 
சிரமப்படுத்தும் ஆசை எனக்கு இல்லை!. திலீபன் என் முகநூல் குருநாதன்.
அவனுடய பதிப்பகத்தில் வரும் புத்தகமாக எண்ணி காரியத்தை (பெரிய) 
ஆற்றியிருக்கிறான். இதற்கெல்லாம் கைமாறு நான் செய்யும் சமயம்
உண்டு! எதையும் எதிர்பார்த்து என் நண்பர்கள் எனக்கு உதவுவதில்லை! 
அவர்களின் உதவிகளை நான் மறப்பதும் இல்லை!


எலி, ரம்ஜான் சாமி கைவிடல இரண்டு புத்தகங்களையும் தமிழில் முதன் 
முறையாக திலீபனே வெளியிட்டு திலீபனே பெற்றுக் கொண்ட நிகழ்வை 
நாம் யாரும் பார்த்து ரசிக்க இயலாவிட்டாலும் அவனே வெளியிட்ட
பிற்பாடு எனக்கு அன்போடு அனுப்பி வைத்த வெளியீட்டு நிகழ்வை 
பகிர்ந்து கொண்டான்! டேய்! நீ நண்பேன்டா!
                                                000


Post Comment

1 கருத்து:

-'பரிவை' சே.குமார் சொன்னது…

வாழ்த்துக்கள்...