வியாழன், மார்ச் 26, 2015

பதிவுகள்!!


நேற்று பல்லடத்திலிருந்து மிதமாக பேருந்தின் இடது கை ஓரமாக அமர்ந்து திருப்பூர் நோக்கி பிரயாணம் செய்கையில் என் அருகில் அமர்ந்தவன் ஒரு ஹிந்தி வாலா பொடியான். ’திருப்பூர் மேலே ஜாத்தாஹே?’ என்றான் என்னிடம். ஆமாடா ஆமாம்! என்றதும் புன்னகைத்தான். அந்த பேருந்து பூராவும் ஹிந்தி வாலா பொடியன்கள் தான் நின்றிருந்தார்கள். பேருந்தின் கண்டக்டெக்டர் அரை குறை ஹிந்தியில் அவர்களை நொங்கெடுத்தார். அவர் வேதனை அவருக்கு. ஹிந்திப் பயல்கள் தாங்கள் இறங்கும் இடத்தின் பெயரை சரியாக உச்சரிக்காததால் அவர் அனைவருக்கும் ஒரே 10 ரூபாய் வசூல் செய்தார். வெளியே ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஹிந்தி பெண்களிடம் ஹிந்திப் பையன்களின் ஓட்டங்கள் நடைபெற நான் அருகில் இருந்த பையனைப் பார்த்தேன். அவன் புன்னகை பல மொழிகளை எனக்கு கற்றுக்கொடுத்தது! திருப்பூர் எங்கே பிரயாணப்படுகிறது? அல்லது ஜாத்தாஹே பண்ணுகிறது?

000

கருத்துச் சுதந்திரம் என்ற ஒன்று எங்கிருந்து எப்படி வந்தது என்று அனைவரும் யோசித்தோமா? 1947-ல் அவர்கள் விடுதலை அளித்து விட்டு செல்கையில் ஒருவேளை கருத்துச் சுதந்திரத்தையும் கொடுத்துச் சென்றார்களா? இது நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட ஒன்றுதான். அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அறிவும் நமக்கு அப்போது இருக்கிறது என்பதே அதன் உள்ளடக்கம்.

ஒரு எழுத்தாளர் தன் புத்தகத்திற்கு எழுதும் முன்பாகவே லட்சக்கணக்கில் தொகை பெற்று அவர்கள் என்ன செய்யச் சொல்லி தொகை கொடுத்தார்களோ அதற்கான முயற்சியில் இறங்கி நாவல் எழுதுவதால் அந்த எழுத்து, அதை எழுதும் ஆசிரியரியனுக்கு நிம்மதியான எழுத்தாக இருக்குமா? நீ சொன்னதை நான் எதற்காக எழுத வேண்டும் என்ற கேள்வி இருக்காதா? பணம் எழுத்தாளனுக்கு தேவை தான் என்று வைத்துக் கொண்டால் அந்த எழுத்திற்கு ஒரு நியாயத்தை கற்பித்து வரிசைப்படுத்தலாமா?

போக சொந்தப் பிரச்சனையை, பக்கத்து வீட்டாரிடம் ஏற்படும் வசவுகளையோ, அடிதடிகளையோ அவர்களோடு போட்டியிட முடியாத, வெல்ல முடியாத நிலையில் எழுதத் தெரியும் என்ற ஒரே காரணத்தால் எழுத்தில் பக்கத்து வீட்டாரைபற்றி குறை சொல்லி எழுதி வைப்பதும் கருத்துச் சுதந்திமா? அது நியாயம் தான் என்று வாசிப்பாளனுக்கு தோன்றுமா?

எழுத்திற்கு நேர்மை என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறதா? இல்லை வரும் காலத்தில் இவைகள் அடியோடு போய்விடுமா?

000

தனது அங்ஙாடி புத்தகத்தை வாசகனுக்கு ‘20% தள்ளுபடி’ என்று பூமணி ஸ்டாலில் அமர்ந்து கையில் திணிக்கவில்லை! சு.வெங்கடேசனும் அப்படிச் செய்யவில்லை. நாஞ்சில்நாடனும் அப்படி செய்யவில்லை! முந்தைய எழுத்தாளர்கள் அப்படி செய்ததாக கேள்விப்பட்டதுமில்லை! 

சாருநிவேதிதா இங்கு வருகையில் தன் புத்தகத்தில் மட்டுமே கையெழுத்து இடுவதாக முன்பே சொல்லி விட்டு வந்தார். அவரிடம் அவரது புத்தகங்களை ஏற்கனவே வீட்டில் வைத்திருந்தவர்கள் கொண்டு வந்தும், ஸ்டாலில் இருந்து புதிதாக வாங்கியவர்களும் வந்து நீட்டி அவரின் கையெழுத்தை பெற்றுக்கொண்ட காட்சியை நான் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தது.  ஒரு எழுத்தாளனாக புத்தக கண்காட்சிகளுக்கு சென்று வருவதில் மகிழ்ச்சியடைந்தேன். 

புத்தகம் ஒரு பதிப்பாளரால் பதிப்பிக்கப்பட்ட பின் அதன் விற்பனை சார்ந்த விசயங்களை பதிப்பாளர் அறிவார். அவருக்குத் தெரியும் அது விற்றுமுடிய இவ்வளவு காலம் ஆகும் என்று. ஒரு மினிமம் கேரண்டி எழுத்தாளரின் எழுத்தைத் தான் பதிப்பித்து இருக்கிறோமென தெரிந்து தான் அவர் புத்தகத்தை சந்தைக்கு கொண்டு வந்திருக்கிறார். 

இதன் நீட்சி எங்கு போய் முடியும் என்று உங்கள் பலருக்கும் தெரியும் தானே நண்பர்களே! இருந்தும் ஒரு விளம்பரம் ஒரு பொருளுக்கு தேவைப்படுகிறது அல்லவா! ஆகவே நாம் புதிதாக சந்தைக்கு வந்திருக்கும் அந்த குளிர்பானத்தை வெய்யில் சீசன் என்பதால் அருந்தி மகிழ்வோம்!

000

Post Comment

கருத்துகள் இல்லை: