வியாழன், ஏப்ரல் 16, 2015

எலி நாவல் ஒரு மதிப்பீடு


நாவல்கள் தமிழில் விதம் விதமாக எழுதப்படுவதை வரவேற்கவும், வாசிக்கவும் வாசகர்கள்  என்றுமே  ஆர்வமாகவும், காத்திருப்பிலும் இருக்கிறார்கள். எலி நாவலை நடுகல் பதிப்பகத்தில் கொண்டு வருவதற்கு முதலில் ஆர்வமாக இருந்தவர் இலக்கியச்செம்மல் வெளங்காதவன். முன்பாக என் பார்வைக்கு செல்வகுமார் பழனிச்சாமி இந்த நாவலின் முதல் அத்தியாயத்தை வாசிக்க அனுப்பி வைக்கையில் இதன் தலைப்பும், அந்த அத்தியாயமும் என்னை ஆச்சரியப்படுத்தின.

அதாவது கயிற்றில் நடப்பது மாதிரியான விசயம். இம்மி பிசகினாலும் வேடிக்கை கதையாகிவிடும் களம் இது. அந்த அத்தியாயம் எனக்கு இலக்கியப்பாங்குகளோடும், தத்துவச் சரடுகளோடும் இருந்ததாக தெரிந்தது. ஒரு விசயத்தை மிக எளிதாக மனதில் முடிவெடுத்து, ப்பூ! என ஊதித் தள்ளிவிடலாம் என்பது  போல எளிதாகத்தான் இருக்கும். இறங்கிப் பார்த்தால் தான் சிரமம் தெரியும்.

எனக்கு ஒரு நண்பன் இருந்தான். அவனுக்கு கிரிக்கெட் மீது அலாதிப் பிரியம். எந்த நேரமும் ஊமாங்கொட்டையுடனும், தென்னை மட்டையுடனும் இருப்பான். அவன் ஒரு தனி ஆட்டகாரன். அவனுக்கு பந்து பொறுக்கிப் போடக்கூட ஆட்கள் தேவையில்லை. அவனாகவே பாகிஸ்தான் பந்து வீச்சுகளை ஒரு பந்து விடாமல் சிக்ஸரும், பவுண்டரிகளுமாக விளாசுவான். அவனது பணி ஆடுகளை பத்திரமாய் காட்டில் மேய்ப்பது. அதை அவன் ஒன்றும் மேயச் சொல்வதுமில்லை. ஆடுகள் அதுபாட்டுக்கு புற்களை மேய்ந்து வயிற்றை நிரப்பிக் கொள்ளும் என்பது அவனுக்கு தெரியும். இவனுக்கு கிரிக்கெட் என்பது மட்டுமே டிவியில் பார்த்து ரசித்த விளையாட்டு.

ஊமாம்புரடையை கொஞ்சம் மேலாப்பில் இடது கையால் வீசிவிட்டு தென்னை மட்டையால் ஒரு சாத்து சாத்துவான். புரடை பறந்து காட்டின் எதாவது ஒரு இடத்தில் சென்று விழும். அருகே குவியலாய் ஊமாங்கொட்டைகள் கிடக்கும். அவன் வாயும் அந்த சமயம் சும்மா இருக்காது. ஆங்கிலம், இந்தி என்று கலந்து கட்டி உலறிக் கொண்டே இருக்கும். எக்ஸ்ட்ர கவர் கீத்ராகே பவுண்ட்ரி லைன்கே பகார்கே சார் ரன் கலியே! ஒரு புறடை தென்னை மட்டையில் படாமல் கீழே விழுந்தால் பேட்ஸ்மேன் அவுட்! இந்திய அணி பேட்டிங்கில் ஒரு புறடையையும் விடமால் சாத்துவான். பாகிஸ்தான் பேட்டிங்கில் கபில்தேவ் வீசிய பந்துகளை மட்டையில் அடிக்காமல் விட்டு அவிட்டாக்கி விடுவான். இது அவனுக்கான பெரும் விளையாட்டு! ஆடுகளுக்கு இவனைப்பற்றித் தெரியும். கிறுக்குப்பயல் என்று.

இதில் விசயம் என்னவென்றால் யாரையும் எதிர்பார்க்காமல் தனி ஒருவனாய் பலத்த கரகோசத்திற்கிடையில் 13 பேர் ஆடும் ஆட்டத்தை ஆடுவது. அந்த நண்பனின் பெயர் குட்டியான். குட்டியான் இப்போது பேத்தியை கொஞ்சிக் கொண்டிருக்கிறான் என்பது சம்பந்தமே இல்லாத உபரித்தகவல்.

எலி நாவல் எழுத்தாளன் மட்டுமே ஆடிய ஒரு விளையாட்டு. முன்பாக ஒரு சிறு குழப்பம் எனக்கு இருந்தது. யாருக்கானது இந்த பேண்டசி நாவல்? நாவலை முழுதாக நடுகல் வெளியிட்ட இவ்வளவு நாட்களுக்குப் பிறகு தான் வாசிக்கிறேன்இப்போது ஒரே அடியாய் அடித்து விடலாம். எலி நாவல் நிச்சயம் சிறுவர்களுக்கானது தான்தமிழில் சிறுவர் நாவல் எழுத ஆட்கள் குறைவு குறைவு என்று ஒரு கூப்பாடு இருக்கிறது. அதை இலக்கிய ஆசாமிகள் தான் கூச்சலாய் சொல்கிறார்கள். ஆனால் எனக்குத் தெரிந்து எந்தச் சிறுவனும் கூப்பாடு போடுவதில்லை.

சமீபமாக இந்தக்குறையைப் போக்க எஸ்.ராமகிருஷ்ணன் தன்னால் முடிந்த அளவு சிறுவர்களுக்கான குறுநாவல்களை எழுத முயற்சிக்கிறார்அவர் வெயிலைக் கொண்டுவாருங்கள் சிறுகதைத் தொகுப்பு கொண்டு வந்த போதே நான் யூகித்திருந்தேன். இவர் சிறுவர் கதை எழுதலாமே! என்று. கொஞ்சம் தாமசமாய் செய்கிறார்.

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்விக்கு நாவலின் துவக்கத்திலேயே விடை கிடைத்து விடுகிறது. கடவுள் தான்  செல்வாவிடம் ஒரு சேலஞ்சை தருகிறார். அவர் செல்வாவிடம் புத்தகம் ஒன்றை கொடுக்கிறார். அதில் இவன் விரும்பும் உயிரினத்தின் பெயரை எழுதினால் போதும். அந்த விலங்கினமாக மாறி விடுவான். முதல் அரைமணி நேரம் மனித உணர்வுகள் அந்த விலங்கிற்கு இருக்கும். அடுத்த அரைமணி நேரம் அந்த விலங்காகவே சுற்ற வேண்டியது தான். மீண்டும் அரைமணி நேரம் கழிந்ததும் அந்த விலங்கிற்கு மனித உணர்வுகள் வந்து விடும். அப்போது மனிதனாக நினைத்தால் போதுமானது. மனிதனாகி விடலாம். சரி இது எதற்காகா?

வீட்டில் பூஜையறையிலிருக்கும் ஐந்து ரூபாய் காசை எடுத்துச் சென்று திட்டமலை முருகன் கோவிலில் இருக்கும் உண்டியலில் சேர்ப்பிக்க வேண்டும். இது ஒரு போட்டிதான்செய்து முடித்து விட்டால் செல்வா ஒரு மகிழ்ச்சிகரமான மனிதனாக இவ்வுலகில் வாழலாம்

கதை வாயிலாக ஆசிரியர் சகுனம் பார்ப்பதிலிருந்து (பூனை குறுக்கே சென்றதால் திரும்ப வீடு போகும் அப்பா) சிறுவனின் உண்டியல் சேமிப்பு வரை கலந்து கட்டி விஸ்தாரமாய் கொண்டு செல்கிறார். செல்வா ஒவ்வொரு விலங்கினமாக மாறுவதும் அவதிப்படுவதும், அந்த திட்டமலை உண்டியலில் ஐந்து ரூபாயை போட முடியாமல் போவதும் சிறுவர்களுக்காக எழுதியதாகத் தான்  உணர முடிகிறது. என்ன கடைசி காட்சிகள் வேண்டுமானால் சிறுவர்களுக்கு நிச்சயம் பிடிக்காதுசெல்வா கடவுளிடம் போட்டியில் ஜெயித்து வரம் பெற்று சுகபோக வாழ்க்கை வாழத் துவங்கினான்! இது அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும். முடிவு மாறிவிட்டபடியால் இந்த இடத்தில் இலக்கிய வாசகன் வந்து அமர்ந்து விளாவாரியாக பேசலாம்.

இது ஒரு குறுநாவல் வடிவில் வந்திருக்க வேண்டிய புத்தகம் தான். நண்பர் வீடு சுரேஸ் குமார் பெரிய எழுத்து ராமாயணம் போன்றும், வயதானவர்கள் கண்ணாடியின்றியே வாசிக்க ஏதுவாகவும் சிறப்பான வடிவமைப்பில் நாவலாக மாற்றி விட்டார். அடுத்த முறை ஒரு சிறுகதையை  செல்வகுமார் பழனிச்சாமி சுரேசிடம் கொடுத்தால் போதுமானது. நினைத்தே பார்க்க முடியாத பக்க அளவில் பாலிதின் பேக் செய்து புத்தக கண்காட்சிக்கு வரும் வாசகர்கள் தங்கள் தலையில் தூக்கி வைத்து செல்லும் அளவில் கொண்டு வந்து விடுவார். (அந்த நம்பிக்கை வீண் போகாது)

சில நாவல்களை வாசிக்க மனது சுதந்திரமாக இருக்க வேண்டும்அப்படிப்பட்ட நிலையில் தான் வாசிக்க இயலும். போக நாம் அறிவியல் நாவல் வாசிக்கிறோமா? க்ரைம் நாவல் வாசிக்கிறோமா? ரொமான்ஸ் நாவல் வாசிக்கிறோமா? என்ற அடிப்படை விசயம் வேண்டுமல்லவா! இந்த நாவலை சிறுவர்களுக்கான நாவலாகவே வாசிக்கலாம்.

நாவலுக்குள் நுழைவதற்கு முன்பாக ஆசிரியரின் முன்னுரையையும், இவருக்காக முன்னுரை வழங்கிய பரிசல்காரன் கிருஷ்ணகுமாரின் முன்னுரையையும் வாசிக்கையில் ஆசிரியரிடம் கிண்டலும், நக்கலும், நையாண்டியுமான ஒரு ஏரியா எழுத்து புதைந்து கிடப்பதை அறிய முடிகிறது. அப்படி ஒரு முயற்சியையும் மேற்கொள்ளலாம். வாழ்த்துக்கள்!

-வா.மு.கோமு

வெளியீடு -நடுகல் பதிப்பகம். - பேச - 9095277700 / 9095377700. விலை - 130.


000

Post Comment