சனி, ஏப்ரல் 18, 2015

ஆவாரங்காடு புத்தகப் பார்வைதமிழில் வட்டார வழக்கு நாவல்களுக்கு என்று ஒரு தனி இடம் இன்றுவரை இருக்கிறது. அது இலக்கிய வகைமையில் ஒன்று. தீவிர இலக்கியம் சார்ந்து இயங்குபவர்கள் வட்டார வழக்கு படைப்புகளை பாராட்டி மகிழ்கிறார்கள். எனது கள்ளி என்கிற முதல் நாவல் வெளிவந்த போது அது என் நண்பர்களுக்கே பிடிக்காத படைப்பாக போனதற்கு காரணம் இன்று வரை எனக்கு புரியவில்லை. அதாவது நான் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த பல விசயங்களை அவர்கள் எழுத்தில் பார்க்கையில் ஒரு போதாமையை உணர்ந்து பேசினார்கள். அவர்களை நல்ல வாசிப்பாளர்கள் என்று பலகாலம் நம்பிக் கொண்டிருந்தேன்.


எழுதிய எழுத்தை சற்று தள்ளி நின்று பார்க்கும் பக்குவத்திற்கே நான் இப்போது தான் வந்திருக்கிறேன். முக்கிய எழுத்தாளர்கள் பலர் பொதுத்தமிழில் ஏன் எழுதுகிறார்கள்? என்றெல்லாம் இப்போது தான் புரிகிறது. ஆனால் இலக்கியத்தில் ஒரு தொடர்ச்சி இருக்கிறது. கொங்கு மண்ணில் எனக்கும் முன்பாக மண் சார்ந்த படைப்புகளை எழுதியவர்கள் என்றொரு லிஸ்ட் போடுகிறார்கள். இனி எனக்குப் பின்பாக எழுத வருபவர்களின் லிஸ்ட் தயாராகி விடும். அதற்குள் நான் பொது தமிழுக்கு ஓடி விடுவேன்.


இலக்கியம் என்பது தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்க அல்லது மண்ணின் மணத்தை எழுத்தில் குவிக்க உகந்ததான ஒன்றல்ல! இலக்கியம் ஒருவனிடம் தொடர்ந்து படைப்புகளை கேட்டுக் கொண்டு நிற்பதில்லை. திரும்பத் திரும்ப நான் உணருவது ஒன்று தான். இன்றைய இலக்கிய வாசகர்களின் தரம் மிக உயர்வான ஒன்று. ஒன்றையே திரும்பத் திரும்பச் சொல்கிறான் என்று இரண்டு நாவல்களை படித்ததும் சொல்லி விடுவார்கள். இது கமர்சியல் எழுத்துப் பக்கம் குறைவு. குறைவு என்று சொல்வதை விட அங்கு அப்படி ஒன்று இல்லை. எழுத்தாளர்களின் ஒரே விதமான எழுத்தை கமர்சியல் வாசகர்கள் தொடர்ந்து விரும்புகிறார்கள்.


நேரம் போவதற்காக வாசிப்பது என்பது வேறு தான். நேரத்தை பயனுள்ளதாக ஆக்குகிறோமா? என்று வாசகனே கேள்வியை வைத்துக் கொண்டு வாசிக்கும் பக்குவம் என்பது வேறு தான். சொல்ல வேண்டியனவற்றை சொல்லி முடித்த பின் ஜெயகாந்தன் தன் எழுத்துப் பணியை முடித்துக் கொண்டார். திரும்பத் திரும்ப ஒரு சாரரின் வாழ்க்கை முறையை எழுத்தில் சொல்லிச் செல்வதில்  அவருக்கான சலிப்பு அது எனக் கொள்ளலாம். அவர் எழுத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முயற்சி எடுக்கவில்லை. அல்லது அடுத்தகட்டம் என்பது பற்றி தெரியவில்லை. அதற்கு அவரது கல்வியறிவை கூட இப்போது குறையாக சேர்த்துக் கொள்ளலாம்.

ஜெயகாந்தன் என்றுமே இலக்கியம் என்ற வகைமைக்குள் வைத்து தனது கதைகளை எழுதவில்லை. அவர் பறந்துபட்ட வாசகர்களுக்கான எழுத்தை மட்டுமே எழுதினார். இலக்கிய வாசிப்பாளர்கள் யாரும் அவர் புத்தகங்களை சேமிக்கவில்லை. எழுத்தின் தரத்தை இலக்கிய அபிமானிகள் ஒரே புத்தகத்தில் கண்டு கொள்வார்கள். இன்று வரை கள்ளியை தவிர்த்து நாவலே எழுதவில்லை என்று என்னையும் சொல்கிறார்கள். நான் அவர்களுக்கு சொல்வதும் இது தான். கள்ளி அங்கீகாரத்திற்காக எழுதப்பட்ட நாவல் அல்ல. அது போல பல நாவல்களை நான் எழுத முடியும். போலியாய் செய்து கொண்டிருக்க அல்லது நடித்துக் கொண்டிருக்க என்னால் இயலாது. கள்ளிக்கு பிற்பாடு சயனம் மட்டுமே அதே போல கொஞ்சம் திணித்து  எழுதிய நாவல்.


ஆவாரங்காடு நாவல் ஒரு கவிஞரால் எழுதப்பட்டது என்பதே இந்த புத்தகத்தின் முதல் ஆச்சரியம். அடுத்த ஆச்சரியம் கவிதை போன்ற எழுத்து நடை இந்த நாவலில் எங்கும் இல்லை. ரத்தினமூர்த்தியை இந்த நாவல் வழியாக முதலாக வாசிப்பவன் அவர் ஒரு கவிஞர் என்றால் ஆச்சரியமே அடைவான்.


கொங்கு கிராமியம் பேசும் எழுத்துகள் என்றும் வட்டார எழுத்துகள் என்றும் ஆர். சண்முகசுந்தரம் நாவல்கள் வழியாகத்தான்  இப்படியான பேச்சுகளே எழுந்தன. ஆர். சண்முகசுந்தரம் தான் எழுதுவது கொங்கு கிராமிய எழுத்து என்று சொல்லிக் கொண்டெல்லாம் எழுதவில்லை. அவருக்கு தெரிந்த மொழியை அவர் எழுத்தில் கொண்டு வந்தார். அவர் சிறந்த கதை சொல்லி தான். அதற்கு அவரின் நாகம்மாள் என்ற படைப்பே அத்தாட்சி. அதுவும் தவிர அவர் பல நல்ல படைப்புகள் எழுதியிருந்தாலும் நம் இலக்கிய முன்னோர்கள் அல்லது ஆசான்கள் அவரை ஒரே ஒரு நாகம்மாள் படைப்போடு ஒரு கொங்கு எழுத்தாளனை முடித்துக் கொண்டார்கள்.


இப்போது நான் அந்த ஒன்றையும் ஒதுக்குகிறேன். ஆர்.சண்முகசுந்தரம் எழுதிய படைப்புகளை தற்போதைய வாசகன் படித்தறிய வேண்டிய தேவைகள் இல்லை. ரத்தினமூர்த்திக்கு ஆர்.சண்முகசுந்தரம் யார் என்று கூடத் தெரியாது. அவரது படைப்புகள், தான் எழுதிய சிவன்மலை, திருப்பூர் பகுதிகளை வைத்துத் தான் என்பதுவும் தெரியாது. இவர் ஆர். சண்முகசுந்தரத்தை வாசித்திருந்தால் இப்படியான ஒரு கிராமிய வாழ்வியலை பதிவாக்கி இருக்க முடியாதுஆக ஆவாரங்காடு நாவல் முந்தைய கொங்கு எழுத்தாளர்களின் எழுத்தை தக்கவைத்துக் கொண்டு தமிழில் முழுமையான வட்டார அரிதாரம் போட்டு வந்திருக்கும் சமீபத்திய நாவல் என்று தான் சொல்ல வேண்டும்.


வட்டாரம் என்பது திருப்பூர் என்ற நகரத்தை சார்ந்து எழுதினாலே அதற்குள் அடங்கி விடும். அதுவே பொதுத் தமிழில் எழுதப்படுகையில்  பறந்துபட்டு சென்றுவிடும் என்கிறார்கள். இதனால் தான் தொடர்ந்து ஒரு ஏரியாவில் இயங்க கொஞ்சம் பயமாயும் இருக்கிறது. யாரின் வார்த்தைகளுக்கும் மதிப்பு கொடுப்பவன் நான். சும்மா ஒரு விசயத்தை என் காதில் போட்டு விட்டுச் செல்வது அவர்களின் நோக்கமாக இருக்காது.

நண்பர் ஒருவர் சமீபத்தில் என்னிடம் பேசுகையில் உங்கள் புத்தகங்கள் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்றும், சமீபத்திய புத்தகங்கள் என்னிடம் இருந்தாலும் வாசிக்க தயங்குகிறேன்! என்றும் கூறினார். அவர் அதை சொல்ல வருகையிலேயே நான் உணர்ந்து கொண்டேன்மாற்று எழுத்து வடிவத்தை நோக்கித்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன்! உங்களுக்கு என் எழுத்தில் சலிப்பு வந்து விடுமோ ! என்ற பயம். எனக்கு அது வந்தே விட்டது நண்பரே! அதனால் தான் நான் வேறு வடிவத்திற்கு முயற்சி செய்கிறேன். எல்லாமும் நான் நினைப்பது தான். இல்லையென்றால் இத்தனை காலம் இத்தனை சிரமப்பட்டு இங்கே வந்திருக்கவே மாட்டேன்என்றேன். நான் பேசியது அவருக்கு திருப்தியாக இருந்திருக்க வேண்டும்.


நான் இப்படித்தான் எழுதுவேன் என்ற பிடிவாதங்களை எழுத்தாளன் வைத்திருந்தான் என்றால் அவனுக்கு நிலையான மாத வருமானம் இருக்கிறது என்று தான் பொருள். பச்சோந்தி இடத்திற்குத் தகுந்தாற்போல தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் என்பது தெரிந்த ஒன்று தான். எழுத்தை நம்பி வாழ்பவன் அதைப்போலத்தான் இருந்தாக வேண்டும்.


ஜி.நாகராஜன் என்றொரு புரபசர் நல்ல சாராய விரும்பியாகத்தான் எனக்குத் தெரியும். அவர் ஆங்கிலத்தில் புத்தக வாசிப்பு பழக்கமுள்ளவர் என்றும் சில எழுத்துகள் சொல்லின. அவருக்கு விபச்சாரிகள் மீது ஒரு கண் என்று எல்லாரும் சொல்ல மறுப்பார்கள். விபச்சாரிகளை காதலித்தவர் அவர். அவர் எழுத்து விபச்சாரத்தை மட்டும் பேசின. அவரை தலையில் தூக்கி வைத்து  கொண்டாடினார்கள். அவர் தன் கதையை வைத்து நாலு காசு சம்பாதிக்க வேண்டுமென நினைத்திருக்கவே போவதில்லை.  சாராயம் குடிப்பதையும், டெர்லின் சட்டை போடுவதையும், விபச்சாரிகளிடம் போவதையும் எழுதி சம்பாதிக்க எழுத்து வேறு மாதிரி இருந்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு சொல்லத் தெரிந்ததை சொல்லிப் போனார். தமிழில் அந்தந்த காலகட்டத்தில் நடைபெற்ற எழுத்து மாற்றங்களே இவைகள்.


நாச்சிபாளையம் என்கிற கிராமத்தில் மாரியம்மன் கோவில் விழா துவங்குவதிலிருந்து சொந்த பந்தங்கள் என்று நாயகன் சுந்தரின் வீட்டுக்கு வருகிறார்கள்.  படியூருக்கு கட்டிக்கொடுத்த  அக்கா கண்மணி,  அவள் படியூரில் பக்கத்து வீட்டுக்கு அழைப்பு கொடுத்து வந்த நாயகி சிவகாமி என்று கலகலப்பாக நாவல் துவங்குகிறது. நாவலின் ஆரம்பத்திலேயே நாயகன் நாயகி கற்பனைப் பாத்திரங்கள் என்று ஆசிரியர் சொல்லி விடுகிறார்.


நாயகன் திருப்பூர் கம்பெனியில் வேலையில் இருப்பதாகவும், அவரின் பெற்றோர்கள் உயிருடன் இல்லையெனவும், அவ்வப்போது குடிப்பழக்கமிருப்பதால் பெண் கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவும் செல்லும் கதையோட்டத்தை சிவன் மலை தேர்த் திருவிழாஸ்கைலாப் விழுந்த சமாச்சாரங்கள் என்பன தூக்கி நிறுத்துகின்றன என்பதை முதல் வாசிப்பில் உணர்ந்தேன். தற்போதைய இரண்டாம் வாசிப்பில் இவரின் எழுத்து நடையின் சரளம் பிரமிக்க வைத்ததுபனியன் கம்பெனியில் காயத்ரி என்ற உள்ளூர்ப்பெண் கனகராஜன் என்கிற  தஞ்சாவூர் பயல் கட்டிக் கொள்வான் என்று நம்பி தன்னை அவனிடம் இழந்து வயிற்றில் வாங்கிக் கொண்டு அழும் காட்சி இன்று வரை திருப்பூரில் நடந்து கொண்டேயிருக்கும் நிகழ்வு தான். ஏகப்பட்ட கனகராஜன்கள் வெளிஊரிலிருந்தும். வெளி மாநிலத்திலிருந்தும் வந்து திருப்பூரில் காதலிக்கிறார்கள். அவர்கள் அப்பாவிப் பெண்களை நுகர்ந்து கண்டறியும் சக்தி மிக்கவர்களாக இருக்கிறார்கள்.

வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் ஊருக்குள் நடந்து கொள்ளும் முறைகள் இந்த நாவலில் அழுத்தமாக சொல்லப்பட்டு இருக்கிறது. வட்டிக்கு கொடுத்த வீட்டில் அழகான பெண் இருந்தால் பணத்திற்கு பதில் பெண்ணைக் கொடு! என்று நாற்பதாவது வயதிலும் நிற்பார்கள் தான். ஆனால் பெரிய ஒரு தொகையை உறவினர்கள் மூலமாகவேனும் சேர்த்து திரும்பக் கொடுக்கும் நிகழ்வு நாவலில் நிதானமாக சொல்லப்படுகிறது.


சிவகாமியின் அக்கா சாந்தி நாவலில்  தன் கணவனின் கடன் தொகையை தீர்க்கா விட்டால் வீட்டுப் பக்கமே வரக்கூடாது என்று சொல்லி தாட்டி விட்டதாக வந்து அமருகிறாள். “இத பாரு தலையே போனாலும் சரி, உன்னோட புருசனோட கடன உங்கொப்பன் கட்டமாட்டான். நீ இங்கியே இருந்துக்க ஒன்னும் நட்டமில்லே. இதயெல்லாம் கேட்காம உன்ற மாமனாரும் மாமியாரும் என்ன மசுரா புடுங்கிட்டு இருக்காங்க? பெத்த பையனெ தட்டிக் கேட்க துப்பில்லாத மனுசங்க. பொழைக்கறாங்களாம் பொழப்பு.. இந்த பொழப்பு . மானங்கெட்ட நாய்க”  கிழவி பேசும் பேச்சு அப்படியே கொங்கின் கிராமியப் பதிவு. அதன் பின்பாக சாந்தி தன் கணவனின் வீடு சென்று நடந்து கொள்ளும் முறை நாவலில் அட! என்று வியக்க வைக்கும் விதமாய் இருக்கிறது. அது சாந்திக்கும் கூட!


நாவலில் கடைசியாக சிவகாமி சுந்தரிடம் கேட்பது ஒன்று தான். “குடிக்கக் மாட்டேனென சத்தியம் பண்ணுங்க!” என்று. குடியால் எத்தனையோ குடும்பங்கள் சீரழிந்து போனதை, எத்தனையோ பெருசுகள் குடிக்காக தன் நிலபுலன்களை இழந்ததை, இந்த மண் அறிந்தே, பார்த்தே வந்திருக்கிறது. அது இன்னமும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அதை  தடுப்பதற்கான வழிவகைகளும் இங்கில்லை. பெண் நினைத்தால் முடியலாம்! என்பதே இதன் உள்ளர்த்தம். ஆனால் இப்படியான காதல்கள் வெறும் கதைகள் மட்டும் தானே, என்கிற ஆதங்கமும் வந்து சேர்கிறது.


இறுதியாக, இந்த நாவல் கிராம மக்களின் இயல்பான நடத்தைகளை அப்படியே கூறியிருக்கிறது என்றே சொல்வேன். சில நேரங்களில் குடியால் எதேச்சையாக நிகழும் கொலைகள் கூட சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. யோசித்துப் பார்த்தால் ஜெயிலுக்கு செல்லும் அந்த இருவரும் அதிகாரியிடம் சொல்லும் பதிலும் இது தான். “குடியினால”.  போக ரத்தினமூர்த்தி என் நண்பர் என்பதாலுமோ, இது நடுகல் வெளியீடு என்பதாலுமோ  இந்த இடத்தில் நாவலை சீராட்டி நான் பேசவில்லை. வாசிக்க உகந்த நாவல் என்பதை சொல்லவே விழைகிறேன்.

-வா.மு.கோமு.

ஆவாரங்காடு - ரத்தினமூர்த்தி - நடுகல் வெளியீடு - விலை 230. தொடர்புக்கு : 99444 22111.


000

Post Comment

கருத்துகள் இல்லை: