சனி, ஏப்ரல் 11, 2015

இரவுக்கழுகாரின் காமிக்ஸ்.டெக்ஸ் வில்லரின்,  சிகப்பாய் ஒரு சொப்பனம்!”


காமிக்ஸ் வெறியர்களை எனக்கு சிறுவயது முதல்கொண்டே தெரியும். கோவையில் ஒருவன் தன் இல்லத்தில் காமிக்ஸ் பலவற்றை வைத்துக் கொண்டு ஊருக்கே பத்துப் பைசாவுக்கு ஒரு நாள் வாடகைக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். அன்று காமிக்ஸ் ஒரு ரூபாய் விலை தான்பத்துப்பேருக்கு கொடுத்தான் என்றாலே போட்ட முதல் கிடைத்து விடும். அவனிடம் பள்ளி விடுப்பு மாதத்தில் பைசா கொடுக்காமல் தூக்கி வந்து வாசித்தவன் நானாகத்தான் இருப்பேன். ஏனெனில் என்னிடமும் அவனிடமில்லாத காமிக்ஸ் மற்றும் மாயாஜால புத்தகங்கள் இருந்தனஅவைகளை பண்டமாற்று முறையில் கொடுத்து வாசித்தேன். அவைகள் என்னிடம் இருக்க காரணம் என் அப்பிச்சி.

அவர் இந்துநேசன் நாவலில் இருந்து காமிக்ஸ் வரை கைக்கு கிடைப்பதை வாங்கி வாசிப்பவர். அவர் ராணுவத்திலிருந்து வெளிவந்து கோத்தகிரி மில்லில் வாட்ச்மேன் உத்தியோகம் பார்த்தவர். இன்று மில்லும் இல்லை அவரும் இல்லை. காமிக்ஸில் மஞ்சள் பூ மர்மம் கதையை இன்றும் பேசுகிறார்கள். அதை நான் வாசித்திருந்தாலும் இப்போது நினைவில் இல்லை

இன்று சிறுவர்கள் காமிக்ஸ் படிக்கும் பழக்கத்திற்கு வரவே இல்லை. அவர்களுக்கு வேறு விதமான பொழுது போக்கு அம்சங்கள் பெருகி விட்டனபள்ளியின் பாடப்புத்தக வாசிப்புக்கு இணையாக போரான ஒன்றாக நினைக்கிறார்கள்அவர்களுக்கு மொபைல் போன்களில் விளையாட விளையாட்டுகள் குவிந்து கிடக்கின்றன.

சரி யார் தான் இப்போது காமிக்ஸ் புத்தகங்களை வாசிக்கிறார்கள் என்று பார்த்தால் அதே பழைய காமிக்ஸ் ரசிகர்கள் தான். இப்போது லயன் காமிக்ஸ் நிறுவனம் விலையைப் பற்றி கவலைப்படாமல் உயர்தர தாளில் வர்ணத்தில் புத்தகங்களை கொண்டு வருகிறது. அவைகள் மார்க்கெட்டில் உடனடியாக தீர்ந்தும் விடுகின்றது. வர்ணத்தில் இருந்தால் மட்டுமே குழந்தைகள் வாசிக்கின்றன என்ற உண்மையை நானே நம்ம பயலை வைத்து கண்டறிந்தேன். கருப்பு வெள்ளையில் காமிக்ஸ் புத்தகங்களை வாசித்துப் பழகிய எனக்கு வர்ணம் ஒரு ஒவ்வாமையை தருகிறது என்பேன்அதில் ஒரு திருப்தி இல்லை.

பழைய காமிக்ஸ் ரசிகர்களே கண்ணில் தென்படும் புத்தகங்களை வாங்கி யாரேனும் கண்ணில் பார்த்தால் சிரிப்பார்களோ? என்ற பயத்தில் வீட்டில் வாசிக்க பழகியிருக்கிறார்கள்காமிக்ஸ் புத்தகங்களை வாசிப்பவர்களின் மனநிலையை எந்த வகையிலும் விளக்க முடியுமா? என்றால் அது முடியாதெனத்தான் தோன்றுகிறது. அது நிஜமாகவே ஒரு வகையான ஈர்ப்பு என்றே சொல்லலாம். காமிக்ஸ் புத்தகங்களை பிண்டு செய்து பாதுகாத்து வைத்தவர்களின் இறப்பால் அவைகள் பல பழைய புத்தகக் கடையில் எடைக்குப் போடப்பட்ட விசயங்களே நடந்தன.

என்னிடம் என் அப்பாவின் புத்தகங்களூக்கு இணையாக இரண்டு பெட்டிகளில் காமிக்ஸ்கள் இருந்தன. ராணிகாமிக்ஸ் ஆரம்பித்த காலத்தில் ஒரு இதழ் விடாமல் நான்கு வருட சேமிப்பு இருந்தன. இன்று வளைதளத்தில் சில பழைய புத்தகங்கள் பதிவேற்றப்படுகின்றனஇப்பொழுது இரண்டு வருடகாலமாக டெக்ஸ் வில்லரின் புத்தகங்களை மட்டும் என் நண்பர் வருகையில் பெருந்துறையிலிருந்து அழைத்துச் சொல்வார். சென்று வாங்கி வரும் வழக்கத்தை வைத்திருக்கிறேன்.

ஆரம்பகாலங்களில் இரும்புக்கை மாயாவி புத்தகங்கள் என்றால் அப்படி விழுந்தடித்து சென்று வாங்கி வந்து வாசித்தவனுக்கு அவரின் கடைசிக் கதையை இரண்டு வருடம் முன்பாக ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு லயன் வெளியீட்டில் வாசித்த போது, அட சைத்தானே! என்றே தோன்றியது. அது அவ்வளவு போர். மீண்டும் வாசிக்க இயலாதோ காமிக்ஸ்களை என்று பயந்தேன். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வேறு காமிக்ஸ் ரசிகர் என்று எங்கோ படித்தேன்கடைசிக்கு லக்கி லுக் என்னால் வாசிக்க இயலாவிடினும் பயலுக்காக பிடித்து விடுவது நடந்து விடுகிறது. வாசிப்பை பயல்களுக்கு மெதுவாகத்தான் நுழைத்து பயிற்சி கொடுக்க வேண்டும். முன்பெல்லாம் செல்ப்பில் இருக்கும் புத்தகங்களை என் தந்தையாரே வாசிக்க கொடுத்ததில்லை. நானாக வாசித்துப் பழகியது தான்.

ஆக நம்பயல் இறுதியாக தன் நிலைப்பாட்டை தெரிவித்து விட்டான். வர்ணத்தில் இருந்தால் மட்டுமே வாசிக்க இயலும் என்று. காமிக்ஸ் புத்தகங்களின் விற்பனை பரவலாக இலக்கிய அந்தஸ்து போல இப்போது ஆகிவிட்டது. இலக்கிய வாசிப்பாளர்கள் தொடர்ந்து காமிக்ஸ்களை வாங்குகிறார்கள். இது எதுக்கு வெட்டியா!? என்று காமிக்ஸ் ஸ்டாலை கடந்து அவர்கள் செல்வதில்லை. சென்ற வருடம் வியட்நாமிய போர்க்கால சம்பவங்களை வைத்து வர்ணத்தில் ஒரு புத்தகம் லயன் காமிக்ஸ் கொண்டு வந்தது. அது இலக்கிய வாசிப்பாளர்களை கவர்ந்தது நினைவிருக்கலாம்.

டெக்ஸ் வில்லரின் கதைகள் துப்பாக்கிச் சத்தங்கள் நிறைந்தது. இவரைப்பற்றி விளக்கமாய் சொல்ல நான் கூகிளில் தேடி எடுத்து சொல்லிப்போகும் எழுத்தாளனல்ல! சிகப்பாய் ஒரு சொப்பனம் டெக்ஸ் வில்லர் அண்ட் கோ இணைந்து செவ்விந்தியர்களின் கொட்டத்தை அடக்கும் கதை. வழக்கமாக எல்லாமே அப்படித்தான் என்ற போதிலும் இந்தக் கதை செவ்விந்தியர்களும் அவர்கள் பிரிவில் இருக்கும் பல குழுக்களும் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட இறங்கும் கதை. அதற்காக அவர்கள் துப்பாக்கிகளின் தேவையை உணர்ந்து கள்ளத்தனமாக சேகரிக்க இறங்கிய கதை.

தமிழில் துப்பறியும் நாவல்கள் அத்தியாயத்திற்கு அத்தியாயம் மாறி மாறி வருவது போன்று டெக்ஸ்வில்லரும் அவரது உதவியாளன் டைகரும் ஒருபுறம் கிளம்ப, மறுபுறம் இரவுக்கழுகாரின் மகனும் அவன் மாமா கிட் கார்சனும் பயணப்பட கதை இருதிசையில் பயணிக்கிறதுகீழே வைக்க முடியாத விறுவிறுப்பு ! ஹூவால்பை மலைப்பகுதி செவ்விந்தியன் தேவதையோடு பேசி மக்களை ஒருங்கிணைப்பது என்பதெல்லாம் திரைப்பட பாணியே தான். ஆக ஒரு ஆங்கில திரைப்படத்தை பார்த்து ரசித்த நிறைவை நாம் அடைகிறோம்!

இரவுக் கழுகாரே! உம்மை சிலகாலம் வாசிக்கலாம் தான்.

-வா.மு.கோமு.

000

Post Comment

11 கருத்துகள்:

King Viswa சொன்னது…

அருமை சார்.

நீங்களும் நம்ம ஆளுதானா? சூப்பர்.

King Viswa சொன்னது…

அருமை சார்.

நீங்களும் நம்ம ஆளுதானா? சூப்பர்.

Paranitharan.k சொன்னது…

அழகான பதிவு சார் ..நன்றி ...

Paranitharan.k சொன்னது…

அழகான பதிவு சார் ..நன்றி ...

Paranitharan.k சொன்னது…

அழகான பதிவு சார் ..நன்றி ...

தங்க தலைவன் சொன்னது…

நல்ல பதிவுங்க...

KiD ஆர்டின் KannaN சொன்னது…

நானும் நீங்கள் குறிப்பிட்ட காமிக்ஸ் ரசிகர்களில் ஒருவன். குறிப்பாக டெக்ஸ் வில்லர்.
அருமையான பதிவு சார்.!!!

KANNAN S YUVA சொன்னது…

நானும் நீங்கள் குறிப்பிட்டகாமிக்ஸின் தீவிர ரசிகர்களில் ஒருவன். குறிப்பாக டெக்ஸ் வில்லர்.
அருமையான பதிவு சார்.!!!

KANNAN S YUVA சொன்னது…

நானும் நீங்கள் குறிப்பிட்டகாமிக்ஸின் தீவிர ரசிகர்களில் ஒருவன். குறிப்பாக டெக்ஸ் வில்லர்.
அருமையான பதிவு சார்.!!!

POSTAL PHOENIX சொன்னது…

நன்றி சார் . எங்கள் நண்பர் தானா நீங்களும்

POSTAL PHOENIX சொன்னது…

நன்றி சார் . எங்கள் நண்பர் தானா நீங்களும்