வெள்ளி, ஏப்ரல் 03, 2015

எருது -ஒரு பார்வை


உலகச் சிறுகதைகளை ஆங்கிலத்தில் வாசிக்கும் நண்பர்களைப் பெற்று , எழுத்தாளனாய் வேறு நான் இருப்பது  ரொம்ப ஜீரணிக்க முடியாத விசயமாக இருக்கிறது. மரப்பல்லி நாவலை ஆரம்பித்தபோது நண்பர் சொன்னார்.. ’கேவெல்லாம் அங்க எழுதி முடிச்சு புதுசுக்கு போயிட்டாங்க! இப்ப போயி மரப்பல்லின்னு லெஸ்பியன்களை பத்தி எழுதுறீங்களே? என்று நண்பர் ஸ்ரீதர் ரங்கராஜ் பேசினார். போக அவர் வாசித்துக் கொண்டிருக்கும் நாவல் இப்படி பயணிக்கிறதென சொல்லிக் கொண்டே செல்கையில் வறக்கிணறு அருகில் தென்படுமா என்று தேடிக் கொண்டிருந்தேன் குதிக்க! இருந்தும் ஆங்கில வாசிப்பிற்கு செல்லாமலிருப்பதும் நல்லது தான். அங்கிருந்து ஐடியாக்களை சுட்டு மசக்காளிபாளையத்தில் அப்படியாக்கும் என்று எழுதாமல் இருக்கிறேனே!

அவ்வப்போது உலகச் சிறுகதைகளை சிற்றிதழ்கள் வாயிலாக முன்பெல்லாம் வாசித்ததோடு சரி. ஆனால் அப்போது மிக முக்கியமான சிறுகதைகளை மட்டுமே தேர்வு செய்து முடிந்த அளவு சுத்தமான மொழிபெயர்ப்பாக வெளியிட்டார்கள். அந்த வகையில் சிற்றிதழ்களின் அர்ப்பணிப்பு என்பது மிகப் பெரிய விசயம். மீட்சி, ங், கல்குதிரை போன்ற இதழ்கள் (இப்போதைக்கி ஞாபகம் வந்தவை) 90-களில் மொழிபெயர்ப்பு படைப்புகளுக்கென இயங்கின. பிரம்மராஜன் போர்ஹேவை தமிழுக்கு கொண்டு வந்தார். (இன்னமும் முழுதாக முடிவேனா? என்கிறது) அது மொழிபெயர்ப்பாளரின் பிரச்சனையாக இருக்காது என்று தான் நம்புகிறேன்காப்காவின் விசாரணையை 92-ல் வாங்கி வைத்து இன்னமும் பத்து பக்கத்தை தாண்ட இயலவில்லை. ஆக இதெல்லாம் என் குறைபாடு தான். ஆனால் தனிமையின் நூறு ஆண்டுகளை இரண்டு நாளில் முடித்து விட்டதற்கு பலரும் ஆச்சரியப்பட்டார்கள். இப்படியான விசயங்களை தொடர்ந்து மொழிபெயர்ப்பு புத்தகங்களை வாசிக்கும் வாசிப்பாளர்களே உணர்வர்.

சீன எழுத்தாளர்  மோ யானின், எருது சிறுகதை தொகுப்பின் மிக முக்கியமான பலமான கதைசீனாவின் கலாச்சாரப் புரட்சி காலகட்டங்களில் நினைப்பதை வெளியில் பேசி விடாதே! என்ற அம்மாவின் அறிவுரையையே தன் புனைப்பெயராக அவர் வைத்து எழுதிய தகவல் அவர் பற்றியான குறிப்பில் வருகிறது. இது கதையை விட !!! மோ யான் என்றால்பேசாதேஎன்று பொருளாம்!

தந்தைக்கும் மகனுக்குமான உறவை அப்படி அழகாகச் சொல்லிக் கடக்கிறார் இந்தக் கதையில்.  தந்தை அவமானப் படுகையில் சிறுவனாக இருந்தாலும் கொந்தளிக்கும் உணர்வுடையவனாக மகன்  அப்பாவின் மெளனத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறான்எல்லாக்குழந்தைகளுக்கும் தன் அப்பா ஒரு மிகச்சிறந்த நாயகர் என்றே தான் தோன்றும். அது இயல்பு தான். அவர்கள் அருகில் இரவு முழுதும் அடக்கி வைத்திருந்த சிறுநீரை லாவோ லான்  பெய்கையில் தந்தை அமைதியாகவே அமர்ந்திருக்கிறார்கடைசியாக லாவோ லானை எருது முட்டி விட துரத்துகையில் சிறுவனின் தந்தை அதன் கவனத்தை ரூபாய் நோட்டுகளின் மீது செலுத்துமாறு செய்து அதன் முதுகில் தாவி அதன் மூக்கில் தன் விரல்களை நுழைத்து அதன் மூக்கணாங்க கயிற்றைப் பற்றி மேல் நோக்கி இழுத்து அடக்குகிறார்.  மீண்டும் அப்பா ஒரு திறமைசாலி என்றும் தன்மீதான அவமானத்தை துடைத்தெறிந்து விட்டார் என்றும் மகன் நினைக்கிறான். இருந்தும் கடைசியில் அப்பாவும் லாவோ லானும் கைகலப்பில் ஈடுபடுகிறார்கள். அது இரண்டு எருதுகள் மோதிக் கொள்வது போன்றே அமைகிறது!

இக்கதை வாயிலாக சீன கிராமிய வாழ்வு கண்ணுக்கு முன் விரிகிறது! சிறிது நேரமே கதைக்குள் வரும் சிறுவனின் அம்மா யாங் யூஷென் தன் குடும்ப வாழ்வை  நகர்த்தும் விதம் கொண்டு கிராமிய பெண்களின் நிலைமை தெரிய வருகிறது.

வால்வோ என்ற கதை ரவுடியிசத்தை சொல்ல வருகிறது. ஒரு இடத்தில் பேசப்படும் ரவுடியின் ஆடம்பர வாழ்க்கையெல்லாம் சில காலம் மட்டுமே! அவன் மற்றொரு ரவுடியால் சிதைக்கப்படுவான் என்பதை கூற வந்த கதை. கதையாசிரியர் எட்மண்டோ பாஸ் சோல்டன். பொலிவியாவின் முக்கிய எழுத்தாளர். இந்த மொழியிலிருந்து ஒரு கதையை இத்தொகுப்பில் தான் முதலாக வாசிக்கிறேன். இஸ்ரேல் எழுத்தாளர் எட்கர் கெரத்தின் டாட் என்கிற கதை கதையை எழுதுபவரின்  சங்கடங்களைச் சொல்கிறது.  ’எனது நண்பன் டாட் பெண்களை அவனது படுக்கைக்கு அழைத்து வர உதவும் கதையொன்றை அவனுக்காக எழுத வேண்டுமென விரும்புகிறான்!’ என்றே இக்கதை துவங்குகிறது. சிறந்த கதையாக இதை கூற முடியாது என்பதே உண்மை!

ஜெர்மன் எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸே வின்  கவிஞன் என்கிற கதை  இசைக்காகவும் கவிதைக்காகவும் தன் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டவனின் கதையை தொல்கதை சாயலில் சொல்கிறது.

அமெரிக்க எழுத்தாளரின் சட்டமிடப்பட்ட சாளரம் , வேல்ஸ் எழுத்தாளர் ரைஸ் ஹ்யூக்ஸ்சின் கல்லறை சாட்சியம் இரண்டும் என் வாசிப்பிற்கு ஏற்ற ஆச்சரியப்படுத்தும் கதைகளாக அமைந்து விட்டன! அதிலும் கல்லறை சாட்சியம் கதை என்ன தான் சொல்ல வருகிறது என்று இன்னமும் யோசித்துக் கொண்டேயிருக்கிறேன். அது ஒன்றும் சொல்லா விட்டாலும் முன்பாக ஸ்பானிஷ் எழுத்தாளர் ஃபெர்னாண்டோ ஸோரண்டினோவின் ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை என்கிற சிறுகதை  தந்த ஆச்சரியத்தை தந்தது. அதாவது, புரியாவிட்டாலும் ரசித்து விடு! என்பதே அது.

மொழிபெயர்ப்பு தொகுப்பு வாயிலாக களமாட வந்திருக்கும் நண்பர் கார்த்திகைப் பாண்டியனை வரவேற்கிறேன்!

எருது (உலகச் சிறுகதைகள்) எதிர் வெளியீடு, பொள்ளாச்சி. பேச : 04259 226012. 98650 05084.

000


Post Comment

கருத்துகள் இல்லை: