சனி, ஏப்ரல் 04, 2015

ஆகாசமாடன் -சிறுகதைகள் ஒரு பார்வை


சிறுகதைகள் பல வித யுக்திகளால் கையாளப்பட்டு பல வித வடிவங்களில் கடந்த பத்து ஆண்டுகளாகவே சொல்லப்பட்டு வருகின்றன. ஆகாசமாடன் தொகுதியில் இருக்கும் கதைகளும் அப்படித்தான். வடிவ நேர்த்தி என்ற ஒன்றை விஞ்சி வேறு ஒரு வடிவத்தில் நமக்கு பழக்கமான கதைகளே திரும்பச் சொல்லப்பட்டிருக்கின்றன. கறுத்தடையான் கவிஞராகவும் இருப்பதால் கதைகள் சொல்கையில் கூட கவித்துவம் அங்கங்கே நுழைந்து விடுகிறது. சில கதைகளை அவர் இப்படித்தான் நான் சொல்வேன் நீ படி! என்று வாசகனிடத்தில் பேசுகிறார்இப்படியான எழுத்து வடிவத்தை கைக்கொள்வதற்கு அவர் ஏராளமான புத்தகங்களை வாசித்து தாண்டி வந்திருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. எழுத்தை சரளமாக எடுத்து வீசுகிறார்.

கடும்பு என்ற கதை அலைபேசி பேச்சிலேயே முடிகிறது. நாயகன் மூன்று பெண்களிடம் வெகு விரைவாக பேசி முடிக்கையில் ஒரு அப்பட்டமான வாழ்க்கை பதிவாகி விடுகிறது. மணல் வீடு இதழில் வெளிவந்த வேசடை கதை அப்படியே ஹரிகிருஷ்ணன் கதையை வாசித்தது போன்ற அமைவில் இருக்கிறது. பச்சோந்தியுடல் மாறியவன் தொகுப்பில் திருநங்கை பேசும் கதையாக ஏற்கனவே சொல்லப்பட்டு சலித்துப் போன விசயங்களை  விரைந்து சொல்லி வேறு விதமாய் முடிவடைகிறது. “என்னுடைய கவனிப்பை ஒரு கைக்குழந்தையாய் இடுப்பில் தூக்கிச் செல்கிறாள்!” ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டவன், வழியே நிறைய மனித மரங்களையும், கான்கிரீட் மனிதர்களையும், குழந்தைப் பூக்களையும் காண முடியுமென நினைக்கிறான். புதிய வரிகள் இந்தக் கதையில் ஆங்காங்கு சிதறிக் கிடக்கின்றன.

பால் சிறுகதை ஒரு பெண் தனக்கானவனிடம் பிரிந்து விடுவதைப் பற்றிப் பேசுவதிலிருந்து துவங்குகிறது! தொகுப்பில் மிக எளிமையான கதை என்றாலும் கூர்மையான சமகாலக் கதைஅது இப்படி முடிகிறது.. ஐஸ்கிரீமில் பால் சேர்க்கப்படுகிறது. பாலில் ஐஸ்கிரீம் சேர்க்கப்படுவதில்லை. பிறகென்ன அன்றும் கைத்துட்டு காலியானது வழக்கம் போலவே!

மூன்று கண்கள் சிறுகதை ஒரு வடிவ முயற்சி தான். ரன் ரோலா ரன் என்ற ஆங்கிலப்படம் போன்றே! முதற்கண் கணவனின் கண்ணிலிருந்து (அதாவது பார்வையிலிருந்து), நடுக்கண் புது மனைவியின் கண்ணிலிருந்து சொல்லப்படுவதாகவும், அறையின் ஜன்னல் திறந்திருப்பதால்  ஒரு இடுக்கண்.. பார்வையாளரால் சொல்லப்படும் பகுதியாகவும் அமைந்து வாசகனை அடடே! போட வைக்கிறது!

முடிவின் ஆரம்பம் மின் தொடர் வண்டியில் நடைபெறும் சம்பவத்தை சொல்ல வருகிறது. நிஜமாகவே முடிவில் தான் கதையே துவங்குகிறதுஇளநீரின் கடைசி மிடறை உறிஞ்சிக் குடிப்பது போல குடித்தான்முத்தத்தின் அழுத்தத்தை ஆங்கிலப்படங்களுக்கு இணையாகவும், உடனே நினைவுக்கு கமல்ராசின் முத்த முயற்சிகளும் ஞாபகம் வந்து போனது எனக்கு மட்டும் தானா?

பொஸ்தகம் சோறு போடுமால! ன்னு கேக்கும் அம்மாவுக்கும், கேக்காம போயிட்ட அய்யாவுக்கும், என்று புத்தகத்தை சமர்ப்பணம் செய்திருக்கிறார். இம்மாதிரியான இலக்கியக் கதைகள் சோறு போடாது என்றே சொல்லலாம். பேர் பெற்றுக் கொள்ளலாம் என்றால் அதை வைத்து ஓரமாய் அமர்ந்து தலை மயிர் ஒன்றிரண்டை பிடுங்கி நீளத்தை அளந்து கொண்டிருக்கலாம்!

2013 ஏப்ரலில் வந்த தொகுதியை தாமதமாக வாசிக்கக் காரணம் நண்பர்கள் வாசித்து முடித்து விட்டு திரும்ப கால தாமதம் ஆனது தான்.


வெளியீடு - மணல்வீடு,  (எனக்கு வந்த பிரதியில் விலை காணப்படவில்லைபேச -98946 05371.

000 

Post Comment

கருத்துகள் இல்லை: