திங்கள், ஏப்ரல் 13, 2015

தாய்ப்பால் இங்கே கசக்கிறது -ஒரு பார்வை


உழைப்பு, நேர்மை, தாய்ப்பாசம் இவைகளோடு தான் கிராமம் கிராமமாக முன்பொரு காலத்தில் இருந்ததாக வரலாறு சொல்கிறது என்று நம் பிந்தைய தலைமுறையினர் வாசிக்கப் போகும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் நாம் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. முதியோர் காப்பகங்களின் எண்ணிக்கை அதை நிருபணம் செய்யும். நேர்மைக்கு இன்னமும் காப்பகங்கள் உருவாகவில்லை.

தாய்ப்பால் இங்கே கசக்கிறது.. என்கிற புத்தகம் என் கைக்கு வந்து மாதங்கள் பல ஓடி விட்டன. இது என்னிடம் வருவதற்கு இந்த மண்ணின் எழுத்து என்கிற ஒரே காரணம் தான்கதைகளை ஆண்கள் எழுதுவதற்கும் பெண்கள் எழுதுவதற்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆணிற்கு சேவகம் செய்ய (காதலோடு) பெண் எந்த சமயமும் காத்திருக்கிறாள் என்றும், அதற்காக அவன் கொஞ்சம் (காதலாய்) பெண்ணிடம் பாசத்தை விதைத்தால் போதுமென்றும் பிரபல பெண் எழுத்தாளரின் நாவல்கள் இன்னமும் சொல்லிக் கொண்டே இருக்கிறது.

அது வாசகர்களால் விரும்பப்பட்டு வாசிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பெண்ணானவள் அதிகபட்சம் ஆணிடம் கோபம் கொண்டால் துணிமணிகளை பேக் செய்து காப்பகங்களுக்கு நடையைக் கட்டிவிடுகிறாள். ஆணானவன் மனைவியின் அருமையை உணர்ந்து தாடி வளர்த்து தேடிச் சலித்து கடைசியாக  காப்பகத்தில் அவளைப் பார்த்து கட்டியணைத்துக் கொள்கிறான்.

இந்த வகையான நாவல்கள் தொடர்ந்து பெண்களால் பெண்களுக்கென்றே எழுதப்படுகின்றன. வாசிக்கும் பெண்களின் மணவாழ்க்கையோ நாவலை விட நேர் எதிராகா இருக்கிறது. தாலி கட்டிக் கொண்டதற்காய் வாழ்க்கையை எந்த வித கொந்தளிப்புமில்லாமல் அதன் போக்கிலேயே கழிக்கும் பெண்கள் இன்னமும் இங்கு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களுக்கென்ற கற்பனை உலகை நாவல்கள் சிருஷ்டிக்கப்பட்டு வருகின்றன. பெண்களின் புத்தக வாசிப்பை முடித்துக் கட்ட நாடகங்கள் வந்து காலம் பல ஆகிவிட்டன. வாசிப்பு சுவையை அறிந்த சிலரே அதை தொடருகின்றனர். இதில் எழுத்துக்கு வரும் ஒரு சிலரும் (வாழ்க்கையை அப்படியே கண்ணாடியாய் எழுதும்) ஒன்றிரண்டு புத்தகங்களை போட்டுவிட்டு அமைதியாகி விடுகின்றனர்.

நல்ல எழுத்தை எழுத வந்த பெண்கள் ஏன் திடீரென காணாமல் போய் விடுகிறார்கள்? என்ற ஆராய்ச்சியெல்லாம் வீண். அவர்கள் அந்த சிலவற்றை கொடுக்கும் அளவிற்கேனும் இருந்தார்களே என்று ஓரளவு திருப்தி அடைய வேண்டியது தான்முகநூலில் அங்கங்கு கொஞ்சம் எழுதிக் கொண்டிருந்த பெண்கள் இன்று பெண்கள் பத்திரிக்கையில் தொடர்கள் என்றும் கட்டுரைகள் என்றும் எழுத வந்து விடுவது காலத்தின் வேகம் தான். பத்திரிக்கைகள் பக்கங்களை நிரப்ப பெண் எழுத்தாளர்களை வலை வீசி தேடிக்கொண்டு இருக்கிறார்கள். நான்கு கவிதை எழுதிய பெண்ணை  ஒரு போராளி அந்தஸ்துக்கு  உயர்த்தி நாட்டில் நடைபெறும் வன்முறைகள் பற்றி கருத்து கேட்டு பிரசுரிக்கிறது. (அது ஏன் என்றும் நண்பர் சொன்னார். இருக்கும் பெண்களில் கொஞ்சம் சுமாரா அவங்க தான இருந்தாங்க, பேண்ட் டீசர்ட் போட்டுட்டு)

எழுத்தில் நல்ல எழுத்து கெட்ட எழுத்து என்றெல்லாம் தரம் பிரிக்க வேண்டிய அவசியம் ஏதும் இங்கில்லை. அதே போல் பெண் எழுத்து ஆண் எழுத்து என்று கூட நாம் பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை, என்பதையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆண் பெண் என்ற வித்தியாசங்களை பெயர்கள் தான் சுட்டிக் காட்டுகின்றன. எழுத்தானது ஒரே நோக்கோடு தான் எழுதப்படுகிறது. அது வாசகனுக்கு பல விசயங்களை சொல்ல வேண்டும் என்பதே! வாசகன் தனக்கு தெரிந்த விசயங்களையும், தெரியாத விசயங்களையும் அறிந்து கொள்ளவே புத்தகங்களை வாசிக்கிறான்.

சுரபி விஜயா செல்வராஜின் கதைகள் அனைத்தும் அம்மாவைப்பற்றி ஆழமாய் பேசுகிறது. அதுவும் பெற்ற மகன்கள் வாயிலாக. அம்மாக்களுக்கு மருமகள்களாக கதைகளில் வாய்ப்பவர்கள் எல்லோருமே தான் தன் சுகம் இவற்றைப் பற்றியே யோசிப்பவர்களாக இருக்கிறார்கள். வாழ்க்கை இங்கு இப்படித்தான் இருக்கிறது. ஒவ்வொரு மருமகளும் தன் கணவனின் அம்மாவைப் பற்றி பல இடங்களில் தூற்றிக் கொண்டே இருக்கிறார்கள்போக கதைகள் வழியாக அழிந்து கொண்டிருக்கும் கொங்கு கிராமிய வாழ்வு  சொல்லப்படுகிறது. மணல் திருட்டுக்கு ஒப்புக்கொள்ளாத படித்த இளைஞர்களும் இவர் கதைகளில் இருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கை அவர்களை பிழைக்கத் தெரியாத அப்பாவிகள் என்றே தான் தூற்றும். இவரது கதைகள் அனைத்தையும் துவங்கிப் படிக்கையில் ஒரு பதைபதைப்பு இறங்கிக் கொள்கிறது.

அம்மாவுக்கு இனி டாக்டர் தேவையில்லை என்கிற முதல் கதையை வாசிக்கையில் புற்று நோயால் அவதிப்படும் கிராமத்து அம்மா  கண்ணுக்கு முன் வருகிறார். தன் மகன் எப்படியேனும் டாக்டரை கூட்டி வந்து விடுவான் என்ற நம்பிக்கையில் வண்டிக் கொட்டகையில் கடைசிக் காலத்தை கழிக்கும் அம்மா. ‘இந்த ஒரு வாட்டி ஊசி போட்டு வலி நின்னுடுச்சுன்னா  அந்த தெம்புலயே கவுத்தக் கிவுத்த போட்டுட்டு போயிடறேன்என்று கையெடுத்து கும்பிடும் காட்சி வாழ்ந்து முடித்த அம்மாவின் சீரழிவைச் சொல்கிறது. ஒரு ஆறேழு வருட காலமாக  இப்படியான துக்கம் சொல்லும் கதைகளை நான் வாசிப்பதில்லை என்ற முடிவில் இருந்தேன்.

வேதனைகளைச் சொல்லும் கதைகளை வாசிக்க தனி மனநிலை வேண்டும். இல்லையென்றால் படித்து விட்டோ, அல்லது நடந்த விசயத்தை கேட்டு விட்டோ உச்சுக் கொட்டி விட்டுத் தான் செல்ல முடியும்அதே போல் வேறொரு கதையில் இன்னொரு அம்மா  உடல்நிலை மோசமாகி சிரமப்படும் நிலையில் மாமனாரால் வாங்கி தரப்பட்ட காரின் சாவியை மனைவியிடம் கேட்கும் மகன் வருகிறார். அவருக்கு சாவியை மனைவி தருவதில்லை. அம்மாவை பேருந்திலேயே அவர் அழைத்துச் செல்கிறார். இதுவெல்லாம் அடங்கி ஒடுங்கி வாழ்தல் என்கிற வாழ்க்கை முறைமைக்கு பழக்கப்பட்டுப் போன கணவர்களின் நிலையைச் சொல்ல எழுதப்பட்ட கதைகள்.

மனசு என்கிற கதை தன் கணவரின் அம்மாவிடம் ஓரளவு பாசமாய் இருக்கும் மருமகளைச் சொல்கிறது. இவரின் கதைகள் அனைத்துமே குடும்பம் என்ற கட்டுக்குள் மிகச் சரளமாக பயணிக்கின்றன. எப்போதுமே தன்னைப் பார்க்க வராத மகனுக்காக கோழி வளர்த்தும் அம்மா, அதை விலைக்கு கேட்கும் பெண்ணிடம் கூட, மகனுக்காக அது! என்றே சொல்கிறார்மனைவி அமைவதெல்லாம் என்கிற கதையில் மனைவி தன் கணவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறாள்.

கலைச்சாலும் பொம்பள, காப்பர் டி போட்டாலும் பொம்பள, ஆப்பரேசன் பண்ணிக்கிட்டாலும் பொம்பள, மாலா டி மாத்திரையை முழுங்கினாலும் பொம்பள, ஏன் ஆம்பளைங்க செஞ்சுக்க கூடாதா?” இந்தக் கேள்வி படிக்கும் வாசகர்களை கொஞ்சம் நேரம் அந்தப் பக்கத்திலேயே நிறுத்தி விடும் என்றே படுகிறது. பார்க்கப்போகையில் இன்னமும் இது இப்படித் தானே நடந்து கொண்டே இருக்கிறது! எவ்வளவு விளக்கம் மருத்துவர் சொன்னாலும் நரம்பு போச்சுன்னா போச்சு! என்ற நம்பிக்கையில் தான் ஆண் இருக்கிறான். போக பெண்களும் இரண்டு ஆனதும் கையோடு மருத்துவமனையில் அதையும் சேர்த்தே முடித்துக் கொண்டு வீடு வந்து விடுகிறார்கள். இதை எந்த ஆணும் அவருக்கு சொல்வதில்லை. பெண்ணின் பெற்றோரே அது தான் சிறப்பென முடிவெடுத்து விடுகிறார்கள். காலம் போகிற போக்கில் மகள் இன்னும் ஒன்றை பெற்றுக் கொள்ள அவட்டையில்லாமல் இப்பவே ஈக்குமாத்து குச்சி கணக்கா போயிட்டாளே! என்ற கணக்கோ என்னவோ! போக இந்த விசயத்தில் ஆணுக்கு ஒன்றும் தெரியாது, அது ஒரு பெப்பலத்தான்!  என்ற பெண்களின் முடிவு தான். (இது கிராமிய நிகழ்வு)

உயிருள்ள பொம்மைகள் கதையில் ஒருபழமை வேடிக்கை கதை வருகிறது. கொடுமைக்கார மாமியார் ஊருக்கு போஒயிருந்த சமயத்தில், கோழிக்கறிக்கு ஏங்கிக் கொண்டிருந்த மருமகள் அவசரமாய் மாமியார் வருவதற்குள் சமைத்து அதை சாப்பிட உட்காருகையில் மாமியார் வந்து விட பயந்து போன மருமகள் அப்படியே சட்டியோடு தூக்கிப் போய் புற்றுக் கண்ணுக்குள் ஊற்ரி விட்டு வந்து விட்டாளாம். அடுத்த நாள் காலையில் அந்த இடத்தில் நிறைய காளான்கள் புடைச்சிருந்துச்சாம்! அதனால் தான் அதற்கு கோழிக்கறி போல வாசமும், ருசியுமாம்! இதை நான் இப்போது தான் கேள்விப் படுகிறேன்.

போக புத்துக்கண்ணில் கூட்டமாய் கேளான்களை பிடுங்கிய நிகழ்வு தான் எனக்கு அறிமுகம். கிராமத்தில் தொடர் மழையால் காலை நேரத்தில் ஆண்களும் பெண்களுமாக காடு காடாய் அலைவார்கள் காளான் தேடி. அவர்கள அனைவருமே முதலாக சென்று பார்ப்பது புத்துக் கண்ணுகளைய்த் தான். கிடைச்சா ஒரே இடத்துல அள்ளிட்டு வந்துடலாம்ல! ஆனால் இப்போது பெய்யும் மழைக்கு புத்துக்கண்ணு பக்கம் ஈசல் கூட கிளம்புவதில்லை.

சின்ன மனுஷி.. பெரிய மனசு! சிறுகதை கோவை ஞானி தன் தமிழ்நேயம் இதழில் வெளியிட்டிருப்பார் போலிருக்கிறது. சிறுகதைகள் சிறுகதையாகவே அப்பட்டமாக இருப்பதை அவர் வரவேற்கிறார் என்றே படுகிறதுநெல்மணிகளை வைத்து பெண்குழந்தைகளை கொன்று விடும் பழக்கம் இருந்தாக ஒரு கதை சொல்கிறது. ஆண் என்பவனையே பெற்றெடுக்க பெண்ணும் ஆசைப்படுகிறாள் என்றே இந்த கதை வாயிலாக உணர முடிகிறது. முடிவை முன்பே யூகிக்க முடிவது தான் இந்தப் பழங்கதையின் குறை.

சுக்கையும் மிளகையும் வைத்து தான் பெண்கள்  (அந்த) சமயங்களில்  தங்களின் வயிற்றுவலியை ஜமாளித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதாக ஒரு கதை. அது கணவனின் இயல்பை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனைவியின் கதைசுயம் இழந்த சுயநலம் சிறுகதை படித்த கிராமிய இளைஞன் கவிதை எழுதிக்கொண்டு வாழ்க்கையில் சம்பாதிப்பதற்கான எண்ணமின்றி திரிகிறான். அவனுக்கு தன்மானம் என்ற ஒன்றே படிப்பினால் வந்தது தான் முடிவாக அம்மாவின் விருப்பத்திற்கிணங்க மாறுவதாக ஒரு சாதாரண கதை.

தொகுப்பில் மிக முக்கியமான கதை பாவச்சோறுஅதன் கடைசியில் எந்த பத்திரிக்கையும் வெளியிட்ட குறிப்பை காணமுடியவில்லைமற்ற பலகதைகள் அனைத்தையும் ராணி, தேவி போன்ற பத்திரிக்கைகள் வெளியிட்டிருக்கின்றன. நல்லகதையை அல்லது கதையில் அரசியல் இருந்தால் பத்திரிக்கைகள பின்வாங்கிக் கொள்ளும் என்றே படுகிறது.

தொகுப்பில் பல எளிய கதைகள் உள்ளன. அவைகள் எழுதப்பட்ட காலம் ரொம்ப முந்தினவைகளாக இருக்கலாம். சிறுகதை வடிவங்கள் யுக்திகள் இப்போது மாறி விட்டன என்பதை ஆசிரியரே அறிவார்முதல்பதிப்பு 2014 மே மாதத்தில் தான் வந்திருக்கிறது. வாசிக்கவே முடியாத எத்தனையோ தொகுப்புகளுக்கு மத்தியில் இந்த புத்தகத்தை நான் வாசிக்க மொழியே காரணமாகி விட்டது.

-வா.மு.கோமு

தாய்ப்பால் இங்கே கசக்கிறது - சுரபி விஜயா செல்வராஜ்.


விஜயா பதிப்பகம்- கோவை. விலை -80. பேச : 0422 - 2382614 / 2385614

000

Post Comment

கருத்துகள் இல்லை: