வெள்ளி, ஜூன் 26, 2015அம்மா தன் வருத்தங்களை
யாருடனும் பகிர்ந்து கொள்வதில்லை!
இருந்தும் அம்மாவுக்கு ஆயிரத்தெட்டு
வருத்தங்கள் இருக்கலாமென எனக்கு
தோன்றிக் கொண்டேயிருக்கிறது!
அம்மா நேரா நேரத்துக்கு உணவுக்கு முன்னால்
உணவுக்குப் பின்னால் என்று மாத்திரை
வில்லைகளை விழுங்கி தண்ணீர் குடிக்கிறது!
அம்மாவிற்கு அது கேவலமாய் இருக்கவேணும்,
உயிர்வாழும் காலத்தை நீட்டிக்க
இந்த வில்லைகளின் உபயோகம்
ஒன்றுமில்லை என்றே நம்புகிறது!
அஞ்சு பைசாவிற்கு பிரயோசனப்படாத எனக்கு
அம்மா இருக்கும் காலம் வரை வயிற்றுப்
பாட்டுக்கு பிரச்சனையில்லை! –எல்லா
அம்மாக்களும் நீண்டகாலம்
நீடூழி வாழ வேண்டும்! –அவர்களுக்கான இறப்பு
என்றுமே கணவன், மகன் என்று
இறப்புகள் நிகழ்ந்து முடிந்த பிறகு
இருக்க வேணும்! –அம்மா இன்று தான்
தன் முதல் வருத்தத்தை என்னிடம்
பகிர்ந்து கொண்டது!

இந்த கரண்டுக்காரனுக்கு இன்னிக்கி என்ன
கேடு வந்துச்சுன்னே தெரியிலயே

பொழுதுக்கும் இன்னிக்கி நாடகம் பாக்க முடியாதாட்ட!”

000


அன்பு அன்பரசுக்கு!
ஒரு கடுதாசி வாயிலாக நான் பேசுவதற்கு
மன்னிக்கவும்! – என் அலைபேசியை என் தம்பிக்கு
நான் கொடுத்து ஒரு வார காலம்
ஆகி விட்டது! – அவன் புது அலைபேசி எண்ணை
உபயோகப்படுத்திக் கொண்டிருக்கலாம்
என்றே நினைக்கிறேன். –எனக்கு நீங்கள்
பிடித்தமானவர்! நீங்கள் என்றால் எனக்கு உயிர்!
முன்னதாக மூன்று பேர் எனக்கு காதலர்களாக
நடிக்க மட்டுமே வந்தார்கள்! அவர்களிடம் நான் கற்றுக்
கொண்டது காதல் என்பது பொய்! என்பதை மட்டும் தான்!
நீங்கள் என்னை தனியே அழைத்துப் பேச விருப்பப்படலாம்!
உங்களோடு நான் தனித்து ஒதுக்குப்புறமாக வர இயலாது!
காதல் அங்கே காமமாகி விடுகிறது! நீங்கள் எனக்கு-
இனிமையானவர்! புனிதமானவர்! சக்கரைக்கட்டி!
உங்கள் பேரன்பில் நான் உலகை மறக்கிறேன்!
நம் சந்திப்பு எல்லாம் ஒரு பொது இடத்தில்
இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்!
நாலு சனம் உள்ள இடத்தில் நான்
தைரியமாய் உங்களோடு நிற்க ஆசைப்படுகிறேன்.
நாலு பேர் இல்லாத இடத்தில் என் காதலை
நான் வளர்த்தெடுக்க இயலாது!
அதற்கான மனப்பக்குவம் என்னிடமில்லை!
நான் உங்களை நேசிக்கிறேன் உயிருக்கு உயிராக!
உங்களை தக்க வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்!
நீங்கள் என் புருஷர்! உங்களைத்தான் மணம்
முடிக்க ஆசைப்படுகிறேன். என் காதல் மேலானது!
உங்களின் பேச்சு எனக்கு இனிக்கிறது!
அடுத்த உள்ளூர் கோவில் திருவிழாவில் சந்திப்போம்!

(பி.கு. சென்ற விழாவில் உங்கள் நண்பர்களோடு நின்றிருந்தீர்கள்!
சிவப்பு வர்ண சட்டை அவ்வளவு அழகாய் இருந்தது உங்களுக்கு!)

000ஆனந்தனுக்கு பெண்களிடம்
பேசிக்கொண்டிருப்பதில் தான்
பிரியம் அதிகமென்று அவன்
அம்மா சொல்கிறார். –பக்கத்து வீட்டு
பத்மா கொலுசு மாட்டியிருந்தால்
புதுசாக்கா? என்கிறான். இந்தப் பெண்களுக்கும்
ஏனோ ஆனந்தனை பிடித்துத் தான் இருக்கிறது.
ஆனந்தனுக்கு படிப்பு ஏழாவதிலேயே
முடிந்து போனதற்கு கணக்கு வாத்தியார் தான்
காரணம் என்கிறான்! அவன் காதலை
வாத்தியார் ஏற்றுக் கொள்ள மறுத்ததால்
இவன் பள்ளி செல்ல மறுத்து விட்டான்.
ஏன்டா ஆட்டி ஆட்டி நடக்கிறே ஆனந்தா?’
என்று யாரேனும் கேட்டால், அதை ஏன்
நீ பாக்கே? என்றே சண்டைக்கு நிற்கிறான்.
புவனேசுவரி பூப்பு நன்னீராட்டுக்கு சென்றவன்
தன் அம்மாவிடம், ‘புவனேசை நல்லா சோடிச்சு
அலங்காரம் பண்ணியிருக்காங்கள்ளம்மா!’ என்று
கேட்டு அதிர வைத்தான். –பின்பாக கூத்தாண்டவர்
விழாவுக்கு சென்ற ஆனந்தன் ஊர்திரும்பாமல்
போனதை அவன் அப்பா பெரிதாக
எடுத்துக் கொள்ளவேயில்லை! அம்மா தான்
அடிக்கடி சொல்வாள், “எம்பையைன் இருந்திருந்தா
எதனையோ பண்ணியிருப்பான் எனக்கு!’ என்று!

000

Post Comment

கருத்துகள் இல்லை: