திங்கள், ஜூன் 15, 2015

ஜூன் கவிதை மூன்று


அன்புள்ள வகுப்பு ஆசிரியை அவர்களுக்கு!

இப்பவும் என் அக்கா
திருநிறைச்செல்வி. என்.கவிதா நேற்றைய இரவில்
உள்ளூர் சவரம் செய்பவரின் மகன்
திருநிறைச்செல்வன். கே.கணேசன் என்கிற
வாலிபரோடு வாழ்வதற்க்காக ஓடிபோனதாய்
இங்கு எல்லோரும் கூறுகிறார்கள்!
ஓடுகாலிக் கழுதைகளை இரவோடு இரவாக
கொத்தி இழுத்து வர சென்றவர்கள் பலர்
இன்னமும் ஊர் திரும்பவில்லை!
என்னை ஈன்றெடுத்த தந்தையார்
திரு.நாகராஜ் அவர்கள் இதன் பொருட்டு
அதிகமாய் மதுவைக் குடித்ததால்
குண்டி வெடித்து மருத்துவமனையில்
ஐசியூவில் கிடப்பதால் அவரை
அருகிலிருந்து கவனிக்க எனது தாயார்
திருமதி விசாலாச்சி மருத்துவமனை சென்று
விட்டார்! –போக என் கண் தெரியாத பாட்டி
பேழவோ மோளவோ கூப்பிட்டால்
கைப்பிடித்து காட்டுப்பக்கம் கூட்டிப் போக
என்னை நியமித்து விட்டுப் போய் விட்டார்
என் தாயார் விசாலாச்சி! – ஆகவே இன்றும்
நாளையும் பள்ளிக்கு வர இயலாத சூழலில்
நான் சிக்குண்டு போனேன். இரண்டு தினங்கள்
எனக்கு விடுப்பளித்து உதவுமாறு பணிவுடன்
கேட்டுக் கொள்கிறேன்!

இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள
என். பழனிவேல்
ஆறாம் வகுப்பு பி பிரிவு.


 000ஒரு கொசுவை உங்கள் வீட்டிலிருந்து
வெளியேற்றும் முயற்சியில் நீங்கள்
எப்போதும் தோல்வியையே அடைகிறீர்கள்!
பூப்பந்தாட்ட மட்டை போன்றிருக்கும் உங்கள்
ஆயுதம் பல கொசுக்கள் இருந்தால்
மட்டுமே தாக்குதலில் வெற்றியடைகிறது!
சுருள்களின் புகை மண்டலம் உங்களுக்கு
சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துவதால்
சென்ற வாரம் தான் மருத்துவ ஆலோசனையில்
அதை விட்டொழித்திருக்கிறீர்கள்!
ஒரே ஒரு கொசுவின் மீது தான் உங்களின்
வஞ்சம் அனைத்தும் இப்போது திரும்பியிருக்கிறது!
கையிலிருக்கும் ஒரே ஆயுதமான பூப்பந்து
மட்டையை இலக்கென்று எதுவுமிராமல்
சுழற்றிச் சுழற்றி கை ஓய்ந்து களைப்படைகிறீர்கள்!
உங்களை அந்த ஒற்றைக் கொசு ஏராளமாய்
வாதிக்கிறது தான்! –நீங்கள் சற்றேனும்
பொறுமையை கடைப்பிடிக்கவே மறுக்கிறீர்கள்!
அந்த ஒற்றைக் கொசு உங்களின் காதுக்கருகாமையில்
தன் புதிய இசையை இசைத்து செவிமடுத்துக் கேட்கச்
சொல்வதிலான தர்ம நியாயம் உங்களுக்கு புரிவதேயில்லை!
ஒரே ஒரு கொசுவை உங்களால் அதன் பின்
உங்கள் வீட்டை விட்டு வெளியே அனுப்பவே முடியவில்லை!
இதை ஒரு தோல்வியாக நீங்கள் மனதளவில்
ஏற்றுக் கொண்டாலும் இதை ஒரு வெற்றியாக
அந்த ஒற்றைக் கொசு நினைத்துக் கொள்வதேயில்லை!

000

நான் காகமாய் இருந்த போது
அந்த வீட்டில் சனியன்று காலை
உணவை எனக்கு ஒரு சின்னப்பயல்
வைத்துக் கொண்டேயிருந்தான்.
நான் இன்று சென்று பார்க்கையில்
அவன் அப்பாக்கு பணி மாற்றலாகி
வேறு ஊர் சென்று விட்டதாய்
அருகாமை வீட்டார் சொல்கிறர்கள்!
இதை கவிதை என்று நாலு பேர்
துண்டை விரித்து தாண்டினார்கள்!
எழுதியவன் வெட்கம் மிகுதியில்
காகமாகிக் கொண்டிருந்தான்.

000


Post Comment

கருத்துகள் இல்லை: