புதன், ஜூன் 17, 2015

ஒரே ஒரு கவிதை கவிதையாக!

நகர்ப்புற பேருந்து நிறுத்தமொன்றில்
மனைவியின் கையைப் பிடித்து பத்திரமாய்
கூட்டிச் செல்பவனுக்கு வாழ்க்கையில்
என்னவென்ன பிரச்சனைகள் இருந்தன என்பது
இந்தக் கவிதைக்கே தெரியாது..- இருந்தும்
அவனது இரண்டாவது மனைவி தான் அவள்
என்பது மட்டும் எழுதும் எனக்கு தெரியும்!

000

கனரக வாகனம் ஒன்றின் பின் சக்கரத்தில்
சிக்கிய நாயொன்றுக்குத் தெரியாது
அதன் பின் பல வாகனங்கள்
தன் மீது பயணம் செய்தது பற்றி!

000

பேருந்து நிறுத்தத்தில் செல்போன்
நோண்டிக் கொண்டிருந்தவனுக்குப் பெயர்
சுரேஷாக இருக்கலாம்! இருந்தும் அவன்
நிச்சயமாக ராமசாமியாக இருக்க முடியாது!
எனெனில் ராமசாமியை ஏற்கனவே எனக்குத் தெரியும்!

000

நீலவர்ண சுடிதார் அணிந்த பெண் தன்
இடது கையில் கடிகாரம் கட்டி இருப்பதைப்பற்றி
எனக்கு எந்தப் புகாருமில்லை! ஆனால் இடது
கை விரல்களை அவள் தன் மூக்கினுள்
விட்டு குடைந்து கொண்டிருப்பதில் தான்
எனக்கு பிரச்சனையிருக்கிறது!

000

பேருந்து நிலையத்தினுள் பிச்சைக்காரன்
கம்யூனிசம் பேசினான்! – அவனுக்கு சில
தர்ம அடிகளை சிலர் வழங்கிப் போனார்கள்!
சிலர் அவன் சட்டைப்பையில்
சோவியத் யூனியன் உடைந்தது பற்றி
காரணங்கள் இருக்கலாமென தேடினார்கள்!

000

கணவனை கிக்கத்தில் இடுக்கிக் கொண்டு
வந்த மனைவி அனுப்பர்பாளையம் போகும்
7-பி எப்போது வரும் என்று கேட்டாள்.
எனக்குத் தெரியாது ஊருக்குப் புதுசு
என்று ஒருவன் ஒதுங்கி நின்றான்.
000
ஊசி பாசி, சீப்பு விற்றபடி வந்து சிறுமிகள்
இருவர் மூக்குச் சளியை சிந்தி அமரும்
நாற்காலியில் தடவிப் போனார்கள்.
அவர்கள் இருவர் கையிலும் மிரண்டா
பாட்டில் ஒரு லிட்டர் கேன் இருக்கவே
எனக்கு இந்த வாழ்க்கை மீது
ஆயிரத்தெட்டு கேள்விகள் உதித்தன!

000

இரவு விளக்கினருகில் உணவு தேடி வரும்
பல்லிகள் எந்த நாளும் தங்களுக்குள்
சண்டையிட்டுக் கொள்வதில்லை
ஒரு பேருந்து நீங்கள் இறங்கும் இடம் வரை
பத்திரமாய் கூட்டிச் செல்லுவதில் தான்
உங்கள் வாழ்க்கை இருக்கிறது! ஏனெனில்
எதிரே வாகனங்களும், புளியமரங்களும்
நிறையவே வருகின்றன.. போக அவைகள்
என்ன நினைக்கின்றன? என்பது நாம்
பயணிக்கும் பேருந்துக்கு தெரிவதேயில்லை!


000


Post Comment

கருத்துகள் இல்லை: