வியாழன், ஜூன் 18, 2015

கவிதை இரண்டு

இந்தப் பெருநகர வீதிகளில் முதலாக
சுற்றித் திரிவதில் ஆர்வம் கொண்டு
அலைகிறான் அவன் எனக்கொள்க!

எங்கேயேனும் சிறிது அமர்ந்து
இளைப்பாறலாம் என்றவன் நினைக்கையில்
அருகிலேயே ஜெயக்காந்தனின் எழுத்துக்கள்
ஒரு பார்வை என்ற அமர்வு நடப்பதாய்
ஒரு ப்ளக்ஸ் அவனை அழைத்தது!

அது ஓய்வெடுப்பதற்கான இடமல்ல என்றே
அவன்  அதே வீதியின் கடைசியில்
சமகால கவிதைகளின் போக்கு என்றோரு
ப்ளக்ஸ் அழைக்க படியேறி விட்டு
உள்ளே இருந்த கூச்சலால் திரும்பி விட்டான்!

அடுத்த வீதியில் ஒரு தெலுங்கு டப்பிங் படம்
அவனை அழைத்தது! உள்ளே இறைச்சல்
அதிகமிருக்கும் என்பதை ப்ளக்ஸே அறிவித்தது!
ஒரு ரயில் நிலையத்தில் அமரலாம் இவன்
என்றாலும் காக்கி உடுப்புக்காரர்களின் பார்வையில்
பட்டால் குண்டு வைக்க வந்தவன் போன்றே
இருக்கலாமென கடைசியாக மதுபானக்கடை
முகப்பில் பத்து ரூபாய் பத்தாமல்
வருவோர் போவோரின் முகம் பார்த்து
நின்றிருந்தான்!

யாரேனும் போதை ஏறிய
ஒருவர் வருகையில் அவரின் கார் கதவை
நீக்கி விட்டு டிப்ஸாக ஏதேனும் கிடைத்தால் தான்
இன்றைய இரவு சிறப்பாக முடியும் அவனுக்கு!
சொந்த ஊருக்கு நாளை திருட்டு ரயிலில்
போய் இறங்கி விடலாம்!

000

 நீ சுத்தமானவள்!
அதனால் கூட உன் தந்தை
உனக்கு சுகந்தி என்று பெயரிட்டிருக்கலாம்!
உன் பற்களை ஆலவிழுதுகளைக் கொண்டு
துலக்கினாய்! – நீ அணியும் ஆடைகள்
அனைத்தும் அப்போது பளீரிட்டன!
விரல் நகங்களை ஒட்ட நறுக்கி அதில்
நெயில் பாலீஸ் இட்டிருப்பாய்! போக
உன் மூக்குத் துவாரங்களில் அசுத்தமே இருக்காது!
உன் முகத்தை பழவகைகளை ஒரு கூறு கெட்டவள்
சொன்னாளென்று தேய்த்து அரைமணி நேரம் கழித்து
அலசி அலசி பளபளப்பாக்கி வைத்திருந்தாய்!
நீ சுத்தமானவள் சுகந்தி! உன் அக்குள் மற்றும்
அந்தரங்கப் பிரதேசமெங்கும் ஒற்றை முடிகளை
காணவே இயலாது! –ஆனால் உனக்கு வாய்த்த
மணவாளன் வாரத்தில் இரண்டு முறை தான்
குளியலறைப் பக்கமாக எட்டிப் பார்ப்பவன்.
சுத்தமென்றால் என்ன விலை? என்றே கேட்பவன்.
போக உன்னைப் போல ஆப்பிள் ஜூஸ்
அருந்துபவனல்ல! அவன் அழகான குடிவிரும்பி!
பின்வந்த காலங்களில் நீ அவனைப் போன்றே
தேமேயென்று இந்த வாழ்க்கையை கழிப்பதை
நான் சொல்லவும் வேண்டுமோ?! சுகந்தி!
எக்காலத்திலும் சுத்தம் சோறு போடும்
என்பது படிக்க அழகாகவே இருக்கும்!

000

Post Comment

கருத்துகள் இல்லை: