செவ்வாய், ஜூன் 09, 2015

முகநூல் கவிதைகள் ஜூன்


சீனுவின் அம்மாவையும் அப்பாவையும்
எதிரெதிர் தூண்களில் கட்டிவைத்திருக்க
அருகில் அப்படியிருந்தும் நான்கு தடியன்கள்
உருட்டுக்கட்டையை இடது கையில் தட்டியபடி
பாஸின் அடுத்த ஆர்டருக்கு காத்திருந்தார்கள்.
வந்து சேர வேண்டிய சீனு பைக் பஞ்சர் என்று
சிகரெட் குடித்தபடி நடந்து வந்து கொண்டிருந்தான்.
பாஸின் குடோனுக்குள் அவன் நுழைந்த போது
மண்டையடி பட்டு உருண்டு விழுந்தான்.
வழக்கம்போல எதிரிகளை துவம்சம் செய்து
அம்மாவையும் அப்பாவையும் விடுவித்து விட்டு
குடோனில் அன்புத் தங்கையையும் ஆருயிர்
காதலியையும் தேடி ஓடினான். –அரிசி மூட்டைகளுக்கிடையில்
புறங்கை கட்டப்பட்டு கிடந்தவர்களை காப்பாற்றி
கட்ஷாட்டில் குடோனை விட்டு ஐவரும்
வெளிவரும் போது தியேட்டரிலிருந்து
பார்வையாளர்கள் எழுந்து கிளம்பினார்கள். அவர்களில்
ஒருவன் சும்மா கேட்டான்.
அப்புறம் சீனு பவித்ராவை கலியாணம் கட்டுறதை

காட்டவேயில்லை?

000

உன் புத்தி என்ன சொல்கிறதோ
அதன்படியே நீ எப்போதுமிருக்கிறாய்
என்பதே எனக்கு பெரிய வேதனை!
முன்பாக உன்னிடம் ஒரு சாந்தம் குடியிருப்பதாக
நான் நம்பியதால்
உன் மடியில் என் தலை வைத்துக்கிடக்க..
உன் கழுத்து வியர்வையில் முகம் புதைக்க..
நீ சென்ற பக்கமெல்லாம்
உன்னைப் பின்தொடர்ந்து ..
(அப்பொதெல்லாம் காதலில் விழ
காதலியானவளை ஒரு வருடமேனும்
பின் தொடர்ந்து நன் மதிப்பை பெறவேணும்)
இப்படி இருக்கையில் 397-ம் நாள்
என் காதலில் வெற்றி பெற்றேன்!
அம்மிணி! நீ யோசிப்பனவற்றையெல்லாம்
நான் யோசிப்பதில்லை!
என் பற்கள் கறையாய் இருப்பதைப்பற்றி
உனைப்போல எனக்கு கவலையேதுமில்லை!
இந்த நீல வர்ண ஜீன்ஸை வாரம் ஒருமுறை
தான் நான் லண்டரிக்கு போடுகிறேன்.. ஆகையால்
கொஞ்சமாய் அதில் ஏதேனும் வாடை
இருக்கத்தான் செய்யுமடி! –மூக்கு நோண்டுவது
என் சிறுவயதிலிருந்தே ஹாபி!
விலைவாசி உயர்வால் கிங்ஸ்சை இரண்டுமுறை
பயன்படுத்துகிறேன்! –மதுவிடுதிப்பக்கம் வாரத்தில்
இரண்டு நாட்கள் மட்டுமே செல்கிறேன்!
பொழுது போகாத போது பக்கத்து வீட்டு
ஆண்ட்டியிடம் சென்று ‘’சாப்பிட்டீங்களா ஆண்ட்டி?”
என்ற கேள்வியை வைத்துக் கொண்டிருக்கிறேன்.
நீயோ.. எந்த நேரமும் அப்படி இருக்க வேணும்
இப்படியிருக்க வேணும் என்று புத்திமதிகளை
சந்திக்கும் சமயமெல்லாம் வாறி வழங்குகிறாய்
அல்லது வாறி இறைக்கிறாய்!
இந்தப் பூங்காவில் அமர்ந்திருக்கும் ஜோடிகளை
ஒருமுறையேனும் பாரடி! கிடைத்த
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வாழ்க்கையை
எப்படி அழகானதாக்கிக் கொள்கிறார்கள்?!
நீயோ மரத்தினாலான அடிஸ்கோல் கொண்டுவந்து
அளந்து என்னை விட்டு தள்ளி அமர்ந்திருக்கிறாய்!
(எத்தனை அடி? என்ற கணக்கு தெரியவில்லை)
அம்மிணி! என்னை அப்படியே நீ ஏற்றுக் கொண்டால்
தானடி நான் உனக்கானவன்! நீயே ரசித்து
எடுத்துக் கொண்டவன்! நீயே யோசித்துப்பார்..
உன் ஆசைப்படி அஜித் ரசிகனை
விஜய் ரசிகனாக்க முடியுமா?

000 

என் பத்திற்கு பத்திலான அறைக்குள்
திடுமென நுழைந்து சுற்றிலும் நோக்கிய
அந்தச் சிறுமிக்கு வயது எட்டு இருக்கலாம்!
அறையின் தூசி துப்புகளைப் பார்த்து
மகிழ்ச்சியுற்றவளின் பெயரை
என்னெவென விசாரித்தேன். –உதடு
பிதுக்கியவள் தனக்கொரு அழகான
பெயரிடுமாறு என்னை நச்சரித்தாள் சிணுங்கியபடி!
எனக்கொரு பெண் பிறந்தால் வைக்கலாமென
யோசித்திருந்த பெயரை அவளுக்குச் சூட்டினேன்!
சின்ரெல்லா! என்ற பெயர், தான் பள்ளி
வாழ்க்கைக்குச் செல்கையில் சீச்சி என்று மருவி
மானம் கப்பலேறிவிடுமென்றாள் அச்சிறுமி!
சரி ஃப்ளவர்குயின்.. இது சரியாயிருக்குமா? என்றேன்.
இதற்கு அர்த்தமென்ன? என்று விசாரித்தாள்.
பூக்களின் அரசி, என்றேன்.
இது நன்றாக இருக்கிறது, என்றவள்
அன்றிரவு என் படுக்கையிலேயே விழுந்து தூங்கினாள்.
காலையில் நான் விழித்தெழுந்து பார்க்கையில்
என் படுக்கையில் வாடிய ஒரு பூ கிடந்தது!

000

மாயைகளாலும் சூழ்ச்சிகளாலும்
நிரம்பிவிட்ட இவ்வானாந்தரத்தில்
இங்கே என்னாடி செய்கிறாய்?
ஈரமண்ணில் இட்லி சுட்டு விளையாடக்கூட
நேரமின்றி வீட்டுப்பாடம் செய்ய வேண்டுமே
என அழும் பாப்பா போல
இந்த நேரத்தில் உனக்கு
என்னாடி வேலை இங்கே?
வந்ததால் பார்த்தேன் உன் முகவடிவை!
யாருக்கோ காத்திருக்கும் உன் தனிமையை
நான் கொல்ல வந்தவன் போன்று
என்னை முறைக்காதேடி சனியனே!
காலம் எங்கே இருக்கிறது தெரியுமா?
ஒரு கவிதையைக் கூட வெள்ளைத்தாளில்
எழுத இயலாமல் வெண்திரையில் தட்டி
அழகு பார்த்து சீர் செய்யும் காலமடி இது!
ஆக நீ இந்த வனாந்தரத்தில் உன் காதலுக்காக
வரவில்லை! சிறந்த ஒரு மறைவிடம் தேடி
வந்திருக்கிறாய் உன் காமத்தை தீர்த்துக்கொள்ள!
ஆனாலும் காலம் நான் நினைத்ததை விட
அதிக வேகமெடுத்துத்தான் செல்கிறதடி!
ஆக முதல் வேலையாய் இந்தக் கவிதையைக்
கொல்கிறேன் என் தட்டெழுத்தால் லொட்டு
லொட்டெனத்தட்டி! சாவட்டும் அது!

000

மரக்குதிரை ஒன்றின் அழகில்
அவள் மனதை இழந்திருந்தாள்.
விலைவாசி உயர்வால் அவள்
அந்த மரக்குதிரையை வாங்க இயலாமல்
பொறாமையோடு பார்த்தாள்.
அதை வாங்கியவன் அவளுக்கு அதை
பரிசாகத் தர இசைந்தான்.
அவள் அவனுக்கு நன்றி சொல்ல
எத்தனித்தாள். – அவன் அவளின் நன்றியை
குப்பைக்கூடையில் வீசி விட்டு
வேறு ஒன்றை நன்றியாய்க் கேட்டான்.
அவன் என்ன கேட்டிருப்பான் என்று
உங்களுக்கும் தெரியும். உங்கள்
குடும்பத்தாருக்கும் தெரியும்! அந்த
மரக்குதிரை கடைசியாய் அவளைப்பார்த்து
கண்ணடித்ததாய்க் கூட அவளுக்குத் தோன்றியது
பிரமையாகக் கூட இருக்கலாம்!

000

வேதாளங்கள் இப்போதெல்லாம்
முருங்கை மரத்தில் தொங்குவதில்லை!

000

Post Comment

கருத்துகள் இல்லை: