வியாழன், ஜூலை 16, 2015

அன்பிற்கினியவள் -குறுந்தொடர் இரண்டு


அன்பிற்கினியவள்
மூன்று
பூஞ்சோலை கிராமத்தில் மொத்தமாக இரநூற்றைம்பது வீடுகள் இருந்தன. கீதாவை அந்த ஊருக்குத்தான் கட்டிக் கொடுத்திருந்தார்கள் அவள் பெற்றோர். ஊரின் ஒதுக்குப் புறத்தில் கடைசி வீடாக அவள் கணவர் வீடு இருந்தது. கணவரின் இரண்டு குழந்தைகளுக்கு புதிய அம்மாவாக கீதா பூஞ்சோலை கிராமத்திற்கு சென்றிருந்தாள். திருமணம் என்ற பேச்சையே வெறுத்து வந்திருந்த கீதாவுக்கு அந்த திருமணம் நடக்கையில் வயது இருபத்தி ஐந்து.

திடீரென நகர்ப்புற வாழ்க்கையிலிருந்து கிராமத்து வாழ்க்கைக்கு வந்தவளுக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலத்தான் இருந்தது. கணவரின் குழந்தைகள் ராணி வாணி இரண்டும் படு சுட்டிகளாக இருந்தன. கணவர் தான் காற்றடித்த பலூன் போல இருந்தார். அவருக்கு பூஞ்சோலை கிராமத்தில் நிலபுலன்கள் நிறைய இருந்தது. அண்ணன் என்றொருவரும் தம்பிகள் என்று இருவரும் என அவர் குடும்பம் பெரிதென்பதால் சொத்துக்களைப் பிரித்துக் கொண்ட போது நிலபுலன்களின் அளவும் குறைந்து விட்டது.

கீதாவுக்கு பூஞ்சோலை கிராமம் கட்டி வந்த பத்து நாளில் பிடிக்கவில்லை. இரண்டாம் தாரமாக வந்தவளை ஊரார் பாவம் என்றே பார்த்தார்கள். பிள்ளைகள் இரண்டும் உள்ளூர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள்முதலாக அம்மா என்று அழைத்த அந்தப் பிள்ளைகளை அக்கா என்று அழைக்க வைத்தாள்.

எங்கப்பா உங்களை புது அம்மான்னு தான் கூப்பிடணுமுன்னு சொன்னாரே!” இரண்டும் ஒரே குரலில் கேட்டன.

உங்க அப்பா பொய் சொல்லியிருக்காரு! நான் உங்க அக்கா தான்.”

எங்கப்பா தானே உங்களுக்கு மஞ்சள் கயிறு கட்டி கூட்டி வந்தாரு! அப்ப நீங்க அம்மா தான்னு ராணி உறுதியா சொன்னாளே!” என்று சின்னது வாணி கேட்டது.

சரி விடுடி அப்பா கிட்ட அக்காவை கூட்டி வந்துட்டு அம்மான்னு கூப்பிடச் சொல்றியான்னு கேப்போம்!”

சரி உங்க அம்மா எங்கே போனாங்க?” என்றாள் கீதா.

அவங்க மானத்துக்கு போயிட்டாங்க!”

அவங்க நல்ல அம்மாவா? உங்க அப்பா கூட சண்டையெல்லாம் போடுவாங்களா?”

அம்மா நல்ல அம்மா தான். அப்பா தான் எப்பவும் கிறுக்குத் தண்ணி சாப்பிடும். கிறுக்குத்தண்னி குடிச்சிச்சுன்னா அம்மாவை எப்பவும் அடிச்சு வச்சிட்டே இருக்கும்

கிறுக்குத் தண்ணியா?” இவளுக்கு புரியாமல் கேட்டாள்.

ஐய்யே! அது கூட தெரியாதா உங்களுக்கு? சின்ன பாட்டில்ல வச்சிருப்பாங்களே!”

ஏன் உங்க வீட்டுல டிவி இல்ல? வாங்கவே இல்லையா? இலவச டிவி வந்திருக்கும்ல? அது எங்கே?’

அம்மா மானத்துக்கு போன பிறகு அப்ப தான் தூக்கி பரண் மேல போட்டுட்டாரு அக்கா! ஆத்தாவுக்கு டிவின்னா புடிக்காது

உங்களுக்கு டிவி புடிக்குமா? பக்கத்து வீட்டுக்கு ஓடீர்றீங்களே!”

அக்கா நாம டிவியை கீழ இறக்கிடுவோமா?’’ உடனே அதை செய்தார்கள். கேபிள் கனெக்சன்காரன் இரண்டு மணி நேரத்தில் வந்து போட்டுக் கொடுத்துச் சென்றான். மாலையில் சுந்தரம் வந்த போது வீட்டில் டிவி ஓடிக் கொண்டிருப்பதையும், கீதாவும் குழந்தைகளும் அதில் ஆழ்ந்திருப்பதையும் பார்த்து அவரால் ஒன்றும் சொல்ல முடியாமல் போயிற்று. அவரால் கீதாவை ஒன்றும் சொல்ல முடியாது தான்.

சுந்தரத்தின் வழுக்கை மண்டையை முதல் ராத்திரியில் கேவலமாய் பேசினாள். சுந்தரம் அவள் கையைப் பிடித்த போது அதை உதறி விட்டு பேச்சாய்ப் பேசினாள். இல்லாதப்பட்ட இடத்தில் கூட ஏழு பவுன் நகையை போட்டு வரச் சொன்னது கேவலம் என்றாள். பிள்ளைகளுக்கு அம்மா வேண்டுமென்று தானே வந்தீர்கள்? கையைப் பிடித்து இழுத்து படுக்கையில் தள்ளவா கூட்டி வந்தீர்கள்? இந்த படுக்கை விசயங்களையெல்லாம் உள்ளூரில் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி விட்டாள். அப்படி இவளே தான் வேண்டும் என்றால் கையில் தொகை வைக்க வேண்டும் என்றாள். சுந்தரம் தன் முன் வழுக்கையை தடவி வாழ்வில் முதல் முதலாக வேதனைப் பட்டார்.

அக்கா எங்கப்பா வந்துட்டாருங்கக்கா.. போயி முதுகு தேச்சு தண்ணி வாத்து விடுங்கக்கா!” என்று கீதாவை ராணி சொல்கையில் இவருக்கே அதிர்ச்சியாக இருந்தது. என்ன இது? அக்கா என்று அவளை கூப்பிடுகிறாளே!

ஐய்யே! அத்தாச்சோட்டு ஆம்பளைக்கி யாராச்சிம் தண்ணி வாத்து விடுவாங்களாநீங்களே கூட ரெண்டு பேரும் சேர்ந்து தானே காலையில தண்ணி வாத்துக்கறீங்க!” என்றாள்.

ஆமால்ல! போப்பா போயி நீயே வாத்துக்க!” என்றாள் ராணி. சுந்தரம் துண்டை எடுத்துக் கொண்டு குளியலறைக்குச் சென்றார்.

அவருக்கு கீதாவிடம் பேச நிறைய விசயங்கள் இருப்பதாக தெரிந்தது. தாலி கட்டி மனைவியாக வந்த பெண் இப்படி வீட்டில் விட்டேற்றியாகத் திரிகிறாளே! அவளுக்கு என்ன தான் மனதில் இருக்கிறது? முன்பாகவே இந்த திருமணத்தை வேண்டாமென மறுத்திருக்கலாமே இவள்? இருபத்தைந்து வயதான பெண் நடந்து கொள்ளும் விதமாக இவள் நடவடிக்கைகள் இல்லையே! அன்று அவராகவே வட்டிலில் சாப்பாடு போட்டு சாப்பிடுவதைக் கண்ட அவர் அம்மா அழுதார். அவர் அம்மாவிற்கு சுந்தரம் இரண்டாம் மணம் புரிந்து கொள்வது ஆரம்பத்திலிருந்தே பிடிக்கவில்லை. இப்படியெல்லாம் நடந்து விடும் என்பது முன்பே அறிந்தவர் போலத்தான் அப்போது பேசினார்.

சுந்தரத்தின் அம்மாவிற்கு ஒரே திருப்தி என்னவென்றால் தன் பேரக் குழந்தைகளிடம் அவள் சகஜமாக இருப்பது ஒன்று தான். ஊரில் மற்ற பையன்கள் தனித்தனியாக வீடு கட்டி வாழ்ந்து கொண்டிருந்த போதும் அவர் சுந்தரத்திடமே ஆரம்பத்தில் இருந்து இருந்தார்.

முதல் ராத்திரிக்குப் பிறகு கீதா குழந்தைகள் தூங்கும் அறையில் படுத்துக் கொள்ளத் துவங்கி ஆறு மாதங்களாகி விட்டது. சுந்தரம்  அவளிடம் அதிகம் பேச்சுவார்த்தை கூட வைத்துக் கொள்ளவில்லை. அன்றைய இரவில் மனைவியை தன் அறைக்கு அழைக்கவே தன் அலைபேசியை உபயோகித்தார். கீதா அது சின்னு தானோ? இந்த நேரத்தில் எதற்கு கூப்பிடுகிறான்? என்று எடுத்து காதில் வைத்தவளுக்கு சுந்தரத்தின் குரல் தான் கேட்டது.

என்ன இந்த நேரத்துல? தூங்க உட மாட்டீங்களா?” என்றாள். பின்பாக அவர் அறைக்கு இவளாகச் சென்றாள்.

அறைக்குள் அவர் தன் நாற்காலியில் அமர்ந்திருந்தார். இவள் அறைக்குள் சென்றதுமே கட்டிலின் மீது போய் அமர்ந்து கொண்டாள்.

என்னை எதுக்காக இங்க கூப்பிட்டீங்க? கட்டில் விசயத்துக்குத்தான் உங்களை வேற பக்கம் பார்த்துக்கங்கன்னு சொல்லிட்டேனே!”

சுந்தரம் தொண்டையைச் செருமிக் கொண்டு மெலிந்த குரலில் பேசத் துவங்கினார்.

நான் உன்னை அதுக்காக கூப்பிடலை கீதா. நான் உன்னை கட்டிக்கிறேன்னு வந்தப்பவே இந்தக் கல்யாணம் வேண்டாமுன்னு உங்க வீட்டுல சொல்லியிருக்கலாமே! ஏன் அப்படிச் சொல்லாம என்னைக் கட்டிக்கிட்டே?”

எங்கிட்ட யாரும் கேக்கலையே! அதும்மில்லாம மாப்பிள்ளை தங்கமானவர்னு சொன்னாங்க! அஞ்சு பைசா செலவில்லாம உன்னை கட்டிக்க அவரு வந்திருக்காருன்னும் சொன்னாங்க! அவரு கொழந்தைகளை பத்திரமா பார்த்துக்கிட்டா போதும்னு சொன்னாங்க! அதைத் தான் பண்ணிட்டு இருக்கேன். புருசன்னா கட்டில்ல தள்ளுறதுக்கு பார்ப்பான்னு எனக்கென்ன தெரியும்?”

சரி தான். அப்ப உனக்கு புருஷன்னா என்ன என்ன பண்ணுவான்? அவனுக்கு திருப்பி என்ன என்ன பண்ணோனுமுன்னு தெரியாமலா இருபத்தி அஞ்சு வயசு தாண்டி என்னை கட்டிக்கிட்டே!”

இங்க பாருங்க, இந்த நாயமெல்லாம் எதுக்கு சாமத்துல என்னை உக்காத்தி வச்சு பேசிட்டு இருக்கீங்க? நான் என்ன மாட்டேன்னா சொல்றேன்? எப்ப வேணாலும் என்னை கூப்பிடுங்க.. இதே மாதிரி எந்திரிச்சு வர்றேன். ஆனா எனக்கு கையில பணம் கொடுத்துடணும்.”

சரி அப்படி வர்றியா? ஊர்ல உலகத்துல கட்டுன பொண்டாட்டி அப்படித்தான் செஞ்சுட்டு இருக்காங்களா? எல்லாரும் தான் வாழ்க்கையை ஓட்டலியா?”

ஏற்கனவே ஒருத்தி கூட வாழ்ந்து அவளைத் தின்னுட்டு மண்டையில முடிகழண்டவரு தான நீங்க? உங்க மொத சம்சாரம் எப்படி வாழ்ந்தாங்கன்னு எனக்கென்ன தெரியும்? போக நீங்க ராசி இல்லாத ஆள் தானே! உங்களுக்கு எந்த சோசியகாரன் பொருத்தம் பார்த்து கட்டிக்கலாம்னு சொன்னான்? வந்தவ சாவப்போறோம்னு தெரிஞ்சிருந்தா  உங்க தாலியை கழுத்துல வாங்கியிருப்பாளா?”

சரி தான். ஏன் என் மேல உனக்கு இப்படி ஒரு காண்டு? எதாச்சிம் காரணம் இருக்கோணுமே! உன்னை நல்ல இடத்துல் கட்டி வெக்க உங்க வீட்டாரால முடியல! ஏழு பவுன் நகைக்கு இந்தக் காலத்துல பொண்டாட்டியத் தின்னவன் தான் கிடைப்பான்னு உங்க வீட்டுல முடிவு செஞ்சிருப்பாங்க! இங்க உனக்கு இப்ப என்ன குறை?”

நான் குறை இருக்குன்னு உங்க கிட்ட வந்து சொன்னனா? உங்களுக்கு வேணா குறை இருக்குமாட்ட இருக்குது சாமத்துல இதுக்கு எங்க போறதுன்னு! எங்க போனாலும் சும்மா எதுவும் கிடைக்காது தெரியுமில்ல! அங்கியும் கீழ வெச்சாத்தான் காரியம் நடக்கும்! அது மாதிரி தான் நானும் சொல்றேன். எனக்கும் கீழ வெக்கணும்! இது தப்பா?”

தப்பில்ல! நீயும் உன் வாழ்க்கையை கெடுத்துட்டு என்னோட வாழ்க்கையையும் கெடுக்க வந்திருக்கியா?”

உங்க வாழ்க்கையை கெடுத்தனா? இதென்ன புதுக் கதைநீங்களா பொண்ணு வேணும்னு வந்து கட்டிக்குவீங்க! அப்புறம் வாழ்க்கையை கெடுத்துட்டாள்ன்னு சொல்லுவீங்களா? நான் வந்து உங்களுக்கு எதாச்சிம் கெடுதல் பண்ணீட்டனா? பிள்ளைங்களை கொடுமைப் படுத்தீட்டனா? வேலைக்காரி மாதிரி தானே காலையில இருந்து பொழுதுக்கும் இருக்கேன். அதும் எழு பவுன் நகையோட வந்து!”

நீ உன்னோட நகைகளை வாங்கிக்க! அது தான் குத்தமுன்னா எங்கிட்ட எதுக்கு?”

அப்ப முதல்லயே எங்க வீட்டுல எதும் வேண்டாம்னு சொல்லியிருக்கணும். என்னமோ மண்டபத்துல ஊரெல்லாம் கூட்டி பத்திரிக்கை வச்சு அழைச்சு விருந்து போட்டு தாலி கட்டினது மாதிரி சலிச்சுக்கிறீங்க? மலை ஏறி பத்து சனம் முன்னால கட்டுன தாலி தான இது! எனக்கென்னமோ திருட்டுக் கல்யாணம் பண்ணது மாதிரி தான் இருக்குது. பேசாம நீங்க ஒரு வேலைக்காரியை இந்த வீட்டுல வச்சிருந்திருக்கலாம். அதை உட்டுட்டு பொண்டாட்டியே தான் வேணுமுன்னு யாரு உங்களுக்கு மண்டையில ஏத்துனது? தாயில்லாப் பிள்ளைகளை என்னை விட அவ நல்லாவே பாத்திருப்பா!”

எனக்கு ஒன்னுமே புரியல கீதா.. எதுக்காக நீ இந்த வீட்டுல வேலைக்காரின்னு நெனச்சுட்டு இருக்கணும்?”

மாட்டை எதுக்கு விலை குடுத்து வாங்கிட்டு வந்து வீட்டுல கட்டி வச்சு வளத்துறீங்கஅது பால் கொடுக்கும். அதைக் கொண்டி சொசைட்டில ஊத்துனா மாசமானா காசு கிடைக்கும். போக வண்டியில பூட்டி தோட்ட வேலைக்கும் ஓட்டலாம்! இப்படித்தானே நெனச்சு வாங்கறீங்க? ஆனா அதுகளுக்கு அவ்வளவு தான் தெரியும். அறிவு இல்ல அதுகளுக்கு! நாய் வளர்த்துனாக் கூட திருடன் வந்தா கொலைக்கும்னு தான வளத்துறீங்க! அது கொலைக்கறக்கு பணமும் வேணும்னு கேட்டா என்ன செய்வீங்க? உங்க தேவைக்கு தான எதையும் வீட்டுக்கு கொண்டு வர்றீங்க! என்னை குழந்தைகளை பாத்துக்க தான கட்டி வந்தீங்க! நீங்க தான நகை பணம் கொடுத்து கட்டி வந்திருக்கணும்? இங்க நான் தான ஜாமான் செட்டுகளோட. நகையோட வந்திருக்கேன்.”

உனக்கு வேற என்னதான் தேவைன்னு சொன்னால் கூட அதை நான் செய்யுறேன் கீதா! இப்படி ஒரே வீட்டுல இருந்துட்டு சரியா ரெண்டு பேரும் பேசிக்காம கிட்டத்தட்ட ஆறு மாசமா இருக்குறது எனக்கு என்னவோ போல இருக்கு! நீ தான் இதுக்கு வழி சொல்லணும்

நீங்க தான் எனக்கு சொல்லணும். வீட்டை விட்டு போயிடுன்னு கூட சொல்லலாமே!”

ஏன் இப்படி தப்பாவே பேசுறே கீதா? நான் ஏன் அப்படி சொல்லணும்? நீ என்னை புருசனா நினைக்கிறியோ இல்லையோ நான் உன்னை என் மனைவியாத்தான் நினைக்கேன். அதனால இதை எப்படி சரிப்படுத்தலாம்னு பேசு

எதையும் இங்க சரிப்படுத்தவே வேண்டாம். சரிப்படுத்த ஒன்னுமே இல்லை இங்க! நான் சரியாத்தான் இருக்கேன். எனக்கு ஏதாச்சும் தோணுச்சுன்னா கண்டிப்பா அதை உங்க கிட்ட சொல்றேன். அதனால இப்போ நான் தூங்கப் போகவா?”  சுந்தரம் ஒன்றும் பேசாமல் இருக்கவே அவளாக எழுந்து அறையை விட்டு வெளியேறினாள்.

நான்கு

ராணி வாணி இருவரையும் கீதா பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டு சுந்தரம் அம்மாவுக்கு சாப்பாடு கொண்டு போய் அவர் வட்டிலில் போட்டாள். அந்த அம்மாவும் இவளிடம் பெரிதாக எதுவும் பேசிக் கொள்வதில்லை. சுந்தரத்தின் அம்மாவின் காலம் ஓரளவு முடிந்து விட்டிருந்தது. அது எப்போதும் கயிற்றுக் கட்டிலில் தான் படுத்துக் கிடக்கிறது.

உள்ளூரில் இருந்து துணிமணிகளை துவைக்க என்று வாரம் ஒருமுறை ஒரு ஆள் வந்து துணிகளை வாங்கிச் சென்று விடுகிறான். இவளுக்கு துவைக்கும் வேலையும் அந்த வீட்டில் இல்லாமல் இருந்தது. சொல்லப்போனால் ராஜ வாழ்க்கையை இவள் நினைத்தால் இங்கு பூஞ்சோலை கிராமத்தில் வாழலாம். ஆனால் விதி விடுகிறதா என்ன?

அவளுக்கு திடீரென சின்னுவின் மீது பற்றுதல் வந்திருந்தது. சின்னு இவளுக்காகவே உயிரை வைத்துக் கொண்டு நகரில் காத்திருக்கிறான் என்றே தோன்றியது. சின்னு இவளிடம் தினமும் பேசியாக வேண்டும். சின்னுவுக்கு இப்போது தான் பெண் பிள்ளை பிறந்திருக்கிறது. அதற்கு கீதா என்று பெயரிட்டிருக்கிறானாம் இவள் நினைவாக. அவன் மனைவி நகரில் ஜெராக்ஸ் கடை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தவள். இவனோ கீதாவின் மீது பைத்தியமாக அந்த சமயத்தில் சுற்றிக் கொண்டிருந்தான். கீதா அவனுக்கு எந்தப் பிடியையும் கொடுக்கவில்லை.

சின்னு நகரில் சின்னதாக ஒரு டூவீலர் வொர்க்ஷாப் வைத்திருந்தான். உதவிக்கு என்று அவன் சொந்தத்தில் ஒரு சிறுவனை வைத்திருந்தான். அவனோடு முன்பு கீதா திரையரங்கிற்கு கூட நான்கைந்து முறை சென்று வந்திருக்கிறாள். அவனை அவளால் காதலிக்கத்தான் முடியவில்லை. ஏனெனில் இவளை விட இரண்டு வயது குறைவு அவனுக்கு.

இவளுக்கே தம்பியுடன் சென்று சினிமா பார்ப்பது போலத்தான் சிரமமாய் இருக்கும். அதற்காகவே அவனோடு செல்கையில் சேலை அணியாமல் சுடிதார் அணிந்து கொண்டு செல்வாள். அவனால் இவளை துளி கூட சீண்டிப்பார்க்க முடியாது. விரல் பட்டால் கூட தீயாய் முறைப்பாள். அவனோ நடுங்கிப் போவான். இவளுக்கு இருபத்தி மூன்று நடக்கையில் இருபத்தி ஒன்றில் இருந்த சின்னு, வீட்டில் அவனுக்கு பெண் பார்ப்பதில் தீவிரமாய் இருப்பதாக கூறினான். இவளோ கட்டிக்கோ! என்றே சொல்லி விட்டாள்.

இப்போது தான் ஏண்டா அப்படி சொன்னோமென்று இவளுக்குப் பட்டிருக்கிறது. நெட்டையான வாழ்க்கையோ குட்டையான வாழ்க்கையோ அவனோடு வாழ்ந்து பார்த்திருக்கலாம் என்று காலம் போன கடைசியில் நினைக்கிறாள். அவன் திருமணத்திற்குக் கூட கீதா போகவில்லை. ஒரே வெறுப்பாய் இருந்தது. காரணமில்லாமல் தொட்டதற்கெல்லாம் கோபம் வந்தது. அவனை நேரில் பார்த்தால் அவன் முகத்தை பிறாண்டிக் கிழித்து விட வேண்டும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டாள் கீதா. எல்லாம் இவளால் தான் என்பது மட்டும் புரியவில்லை.

திருமணம் முடிந்து பத்து நாள் கழித்து சாலையில் அவன் புது மனைவியோடு பைக்கில் செல்வதைப் பார்த்தாள். அவள் கோழிக் குஞ்சு போல அவன் பின்னால் அமர்ந்திருந்தாள். ஆனால் இவளை விட நல்ல சிகப்பு அவள். அப்போதும் இவளுக்குள் பொறாமையாய் இருந்தது. இவள் அமர்ந்து சென்ற இடத்தில் பைக்கில் இன்னொருத்தியா? என்று இவள் மனது பேசத் துவங்கியது. தனக்கு வரும் மாப்பிள்ளைகளில் யாரை வேண்டுமானாலும் கட்டிக் கொண்டு ஊரை விட்டு ஓடி விடலாம் என்றே வெறியாய் இருந்தது.

இனி அடிக்கடி அவன் பைக்கில் இவள் பார்வைக்கு தட்டுப்பட்டுக் கொண்டே இருப்பான். அவனைப் பார்க்கையில் எல்லாம் கொலை செய்யும் எண்ணம் தான் வருவதாக தோன்றியது இவளுக்கு. அவனோ எப்போதும் போல் திருமணம் ஆகி மனைவியோடு வாழ்ந்தாலும் இவளோடு அலைபேசியில் பேசுவதை நிறுத்தவேயில்லை. இவளாக துண்டித்தாலும் தொடர்ந்து கூப்பிட்டுக் கொண்டே இருப்பான். அவனாக வாங்கிக் கொடுத்த அலைபேசி தான் இது. இதை அடுத்தமுறை அவனை சாலையில் பார்த்தால் அவன் கையிலேயே கும்பிடு போட்டு கொடுத்து விடலாம் என்றே நினைப்பாள்.

அப்படிக் கொடுத்தால் அவன் இவளுக்கென பிறந்த நாள் தவறாமல் வாங்கிக் கொடுத்த சுடிதார்களில் இருந்து அனைத்தையும் கொண்டு சென்று ஒப்படைக்க வேண்டும். அவன் வாங்கிக் கொடுத்து தின்றவைகளுக்கெல்லாம் அவனுக்கு கணக்கு கொடுத்து தீர்க்க வேண்டும். இவளாக அவனுக்கு எதுவும் செய்ததேயில்லை. அதான் விரல் பட்டால் கூட கோபம் வந்து விடுகிறதே!

திருமணத்திற்குப் பிறகு அவன் அலைபேசியில் பேசும் பேச்சுகள் எரிச்சலையே இவளுக்கு கொடுத்தது. புதிதாக செல்லம் போட்டு அழைக்கத் துவங்கியிருந்தான். என்ன செல்லம் பண்றே? தூங்கிட்டியா செல்லம்? என்றே பேசி வயிற்றெரிச்சலை கிளப்பி விட்டிருந்தான்.

உனக்குத்தான் சம்சாரம் வந்தாச்சுல்ல.. அப்புறம் என் கூட என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு? என்றும் கூட சொல்லிப் பார்த்தாள். கல்யாணம் ஆயிட்டா காதல் மாறிடுமா? இப்ப நீ என் மேல வச்சிருந்த காதல் போயிடுச்சா? என்றெல்லாம் பேச ஆரம்பித்து கடைசியாய் உன் குரலை கேக்கோணும்னு இருந்துச்சு கீதா! என்று பேசி இவள் இதயத்தை ஈரப்படுத்தி விடுவான். வலை எப்போதும் தயாராகவே தான் இருக்கிறது மீன்களுக்கென்றே! நழுவிய மீனாக ஒரு மீன் குளத்தில் வாழ்ந்தாலும் என்றெனும் ஒரு நாள் அந்த வலையில் விழத்தான் செய்கிறது.

இவள் தன் திருமணச் சேதியை அவனுக்கு சொல்கையில் அவன் சந்தோசம் தான் அடைந்து வாழ்த்துக்கள் சொன்னான். அது தான் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி இவனால் இப்படி இருக்க முடிகிறது? வேண்டாம் கீதா.. நான் இருக்கேன் உனக்கு! என்று அவன் பேசுவான் என்றே எதிர்பார்த்து அவனுக்கு தகவலைச் சொன்னாள். அப்போது தான் இவளால் பேசியிருக்க முடியும் அவனிடம். ஆனால் அவனோ வாழ்த்துக்கள் சொன்னதும் என்ன பேசுவதென்றே தெரியாமல் கடைசிக்கு, ஆனா கல்யாணத்துக்கு வந்துடாதே சின்னு! என்று சொல்லி வைத்து விட்டாள். அவ்வளவு தான் அவளால் முடிந்தது.

 மீண்டும் தொடரும்

Post Comment

3 கருத்துகள்:

Avineni Bhaskar / అవినేని భాస్కర్ / அவினேனி பாஸ்கர் சொன்னது…

தினமும் ஒரு பாகமா? விருவிருப்புக்கு தகுந்த வேகத்துலதான் எழுதறீங்க :-)

வா.மு.கோமு சொன்னது…

தினமும் இதை விட வேகம் என்னிடம் இருக்கும்! வேறு பணிகள் இருந்தால் (இன்று போல) இதை கண்டு கொள்ள மாட்டேன். போக இது திட்டமிடாத ஒரு முயற்சி. என்ன ஆகுமென எனக்குள் எந்த முடிவுகளும் இல்லை. இருந்தும் இதை முடிப்பது சுலபம் தான்.

பரிவை சே.குமார் சொன்னது…

அருமை... அருமை...