வியாழன், ஜூலை 23, 2015

ரசிகா - இரண்டு

ரசிகா
வா.மு.கோமு
இரண்டு
அபினயா கல்லூரி செல்லும் அந்த 7-பி பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்திருந்தது. கோவை காந்திபுரத்திலிருந்து கிளம்பிய 7-பி இடதுபுறமாக சாய்ந்து விழுந்து விடுமோ? என்று பார்ப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்தியதுஅது நூறடி சாலையில் முக்கி முனகி முன்னேறிக் கொண்டிருந்தது.

பேருந்து ஓட்டுனரை சுற்றிலும் வருங்காலத் தாய்மார்கள் கூட்டமாக இருந்தது. பேருந்தின் பின்பகுதி முழுக்க வருங்கால தந்தைமார்கள் கூட்டம் தான். அவர்கள் பேருந்தின் படிக்கட்டுகளில் மனிதன் குரங்கிலிருந்து தான் தோன்றினான் என்பதை உறுதி செய்தவாறு வந்தார்கள். சாலையில் சுடிதார்கள் கண்ணுக்கு தென்பட்டதென்றல் அவர்கள் விநோதமாக ஒலி ஒன்றை எழுப்பினார்கள். அது பண்டைக்காலத்தில் மனிதர்கள் வனங்களில் வேட்டைக்கு செல்கையில் விலங்கினங்களை கையிலிருக்கும் கூரான ஆயுதங்களால் தாக்குகையில் எழுப்பிய ஒலி போன்றே இருந்தது.

பத்து மணிக்கு கல்லூரி சங்கு ஊதி வகுப்புகள் ஆரம்பமாகி விடும். பேருந்து 9.45க்கு கல்லூரி முகப்பு வாயிலுக்கு சென்று விடும் என்பதால் அந்த குறிப்பிட்ட 7-பி கல்லூரி நாட்களில் அப்படி நிரம்பித்தான் செல்லும். நடத்துனர் கடைசி டிக்கெட்டை கிழித்துக் கொடுக்கையில் கல்லூரி வந்து விடும். நடத்துனருக்கு அந்தக் கூட்டத்தில் நுழைந்து அவர்களிடம் டிக்கெட்டை சேர்ப்பது என்பது பெரிய விசயம் தான். நசுங்கி பிதுங்கி கூட்டத்தினுள் நகருவதற்கு ஏற்றாற் போல அவர் உடல் ஒல்லிப்பிச்சானாக ரப்பர் போல இயங்கியது.

டிக்கெட் வாங்கவில்லை சிலர் என்று தெரிந்தும் அவர் அவர்களை பேருந்திலிருந்து கீழே இறக்கி விட்டுச் சென்று விட முடியாது. மொத்தமாக வினையை தேடிக்கொண்டதாக அது முடிந்துவிடும். பேருந்தை அதே இடத்தில் கிடத்தி விடுவார்கள். வந்தவரை லாபம் என்று பணம் கொடுப்பவர்களுக்கு டிக்கெட்டை அவர் கொடுப்பார்.

அன்று எப்போதும் தன் யமஹாவிலேயே வரும் சித்ரன் பேருந்தில் இருந்தான். அவனையொட்டி அவன் நண்பர்கள் சிலர் இருந்தார்கள். இன்று மட்டும் பேருந்தில் சித்ரன் வருவதற்கு மகத்தான காரணம் இருந்தது. முத்து தினமும் பேருந்தில் பயணித்து வரும் சித்ரனின் நண்பன். அவன் கடந்த இரண்டு நாட்களாகவே அவன் கண்மணி சாந்தியை பேருந்தில் ஓரம் கட்டிக் கொண்டே இருக்கிறானாம் மூர்த்தி என்கிற பயல். அவன் கெமிஸ்ட்ரி மூன்றாவது வருடத்தில் இருந்தான்.

அதை இரண்டு நாளாக இவன் காதில் போடவும் அதை என்ன விசயம்? என்று கவனிக்க நண்பர்களுடன் பேருந்து ஏறி விட்டான் சித்ரன். இப்போது அவர்கள் கண் முன்பாக சாந்தி இருந்தாள். அவனை ஒட்டி அந்த மூர்த்தி பயல் கொஞ்சம் தாறுமாறாகவே பேருந்து பிரேக் பிடிக்கையிலெல்லாம் விழுந்து உரசிக் கொண்டிருந்தான். சாந்தி அவன் உரசலின் போதெல்லாம் அவனை முறைப்பதும் முகத்தை சுழிப்பதுமாக இருந்தாள்.

-மாமனாரே! பாத்தியா முத்து சொன்னாப்ல அவன் வேணும்னே தான் உன் ஆளை டார்ச்சர் பண்ணிட்டு நிற்கிறான், என்றான் ரமேஷ். பேருந்து கவுண்டம்பாளையம் நிறுத்தத்திலிருந்து கிளம்பியது.

-சீக்கிரம் நீ கதாநாயகனா மாறிட நேரம் நெருங்கிடுச்சு மாமனாரே! போயி அந்தப் பயலை ரெண்டு தட்டு தட்டு! நான் சொல்றப்ப, அப்படி நடக்க சான்சே இல்ல, என்றாளு அடிச்சு வச்சிடுவான்னெல்லாம் சொன்னேல்ல! பாரு அங்க! என்றான் முத்து.

-போயி பதனமா சம்பவத்தை செய்யணூம் பாத்துக்க மாமனாரே! சொதப்பிடாதே! அவன் கதாநாயகனா மாறிட்டான்னு வச்சிக்க.. உன்னோட ஒருதலை காதலும் புட்டுக்கும், என்றான் ரமேஷ்.

சித்ரன் கூட்டத்தில் நசுங்கி முன்னேறினான் சாந்தியை நோக்கி. அவனுக்கு பேருந்துப் பயணம் கடுப்படித்தது. எப்படி இப்படி நசுங்கி வேர்த்து பயணிக்கிறார்கள்? என்றிருந்தது. சாந்தி இவனை அன்று தான் பேருந்தில் முதலாகப் பார்க்கிறாள். கண்டிப்பாக பிரச்சனை பண்ணத்தான் பேருந்தில் ஏறியிருக்கிறான் என்று அவளுக்குத் தெரிந்தது. அவளை இரண்டு நாளாக தொந்தரவு செய்து கொண்டிருக்கும் இவனைப்பற்றி யாரேனும் அவனிடம் சொல்லியிருக்கலாம். அதற்காகவே அவன் வந்திருக்க வேண்டுமென நினைத்தாள்.

சித்ரன் இவள் முதல் வருடம் கல்லூரியில் சேர்ந்ததிலிருந்து அவனுக்கானவரை சாந்தி சாந்தி என்று முயற்சிக்கிறான். அது அவளுக்குத் தெரியாமலில்லை. காதல் அவன் நினைப்பது போன்று எளிதானது அல்ல என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. போக அவள் படித்து பட்டம் பெறவே கல்லூரியில் சேர்ந்திருக்கிறாள். இப்படி காதல் அது இது என்றால் வீட்டில் சிரமப்பட்டு அவளை படிக்க அனுப்பும் அப்பாவுக்கு சங்கடத்தை கொடுக்க வளுக்கு விருப்பமில்லை.

கிட்டே நெருங்கிய வந்து நின்றவனை ஏறெடுத்து ஒருமுறை பார்த்து விட்டு திரும்பிக் கொண்டாள் சாந்தி. சமயம் பார்த்து பேருந்து திடீரென ப்ரேக் அடித்து குலுங்கி நின்றது. மூர்த்தி வாகாய் சாந்தி மீது தன் முழு உடலையும் பதித்து எடுத்தான். சாந்தி நகர்ந்து விடக்கூட வழியின்றி நின்றிருந்தாள். அவளுக்கு தன்னை உரசுபவன் பெயர் கூட தெரியாது. கல்லூரியில் படிக்கிறான் என்று மட்டுமே தெரியும். ஒன்று அவன் கன்னத்தில் வைக்கலாம் என்றாலும் திமிராக கார்ல வரலாம்ல, ப்ளைட்ல வரலாம்ல, என்று பேசுவான். சீக்கிரமேனும் ஒரு ஸ்கூட்டி எடுத்துத் தரச் சொல்ல வேண்டும் அப்பாவிடம் என்று நினைத்துக் கொண்டாள்.

அப்போது தான் அவன் சட்டைக்காலரை பற்றி இழுத்து அவன் கன்னத்தில் ரெண்டு அப்பு அப்பினான் சித்ரன். கன்னத்தில் அடி விழுந்ததும் யார் தன்னை அடிக்கிறார்கள் என்றே உணராத மூர்த்தி அவனும் தன் கையை காற்றில் வீசினான். சிதரன் அவன் கையை வீசுவது கண்டு அதை கெட்டியாகப் பிடித்து பின்பக்கமாக அதை திருப்பினான். அவன் வலியால் துடித்தான். சாந்தி அங்கே நிற்கப் பிடிக்காமல் எப்படியோ முன்னே கிடைத்த சந்தில் முன்னேறினாள். பேருந்து கல்லூரி வாயிலில் அப்போது சென்று நின்றது.

-என்னா மாமனாரே தகராறு?, சிலர் என்ன ஏது என்று அறிந்துகொள்ளும் ஆவலில் வந்தார்கள். முன்புறம் படிக்கட்டில் ஆட்கள் இறங்கத் துவங்கவும் இடம் விஸ்தாரமானது. முறுக்கிய கையை முறுக்கியபடி அவனை முன் நகர்த்தினான் சித்ரன்.

-என்னான்னு கேக்குறோம்ல!

-அதை இவனை கேளுங்க! பஸ்ல இவன் சும்மாவா வந்தான்? எந்த குரூப்டா எடுத்திருக்கே நீ? எந்த இயர்?

-வலிக்குது விடுங்க! நான் கெமிஸ்ட்ரி தேர்டு இயர்.

-வலிக்குதுல்ல! என் ஆளை நீ இப்படி தினமும் உரசுனா எனக்கு வலிக்குதுல்ல!

-சாரி சாரி! இனிமே இப்படி நடக்காது பிரதர். உங்க ஆளு அவங்கன்னு தெரியாது.

-தெரிஞ்சிருந்தா இப்படி பண்ணியிருக்க மாட்டே? அப்படித்தானே! இதெல்லாம் ஒரு பொழப்பாடா? போய்த் தொலை!

அவன் அத்தனை பேர் மத்தியில் கேவலப்பட்டதை உணர்ந்து படிகளில் இறங்கிச் சென்றான். என்னதான் ஆகிறது? என்று பார்க்க சாந்தியும் தன் தோழிகள் இருவரோடு கீழே நின்றிருந்தாள். கீழே இறங்கிய மூர்த்தியின் பின்னாலேயே சித்ரன் தன் நண்பர்களோடு இறங்கினான். மூர்த்தி சாந்தியிடம், சாரி சிஸ்டர்! என்று சொல்லி விட்டு சென்றான். சித்ரன் சாந்தியை ஒரு பார்வை பார்த்து விட்டு நண்பர்களோடு நகர்கையில் சாந்தியின் குரல் தெளிவாகவே கேட்டது!

-ரவுடின்னு நெனப்பு. நெனச்சேன்டி இந்த மாதிரி எதாச்சும் நடக்கும்னு!

சித்ரன் அப்படியே ஆணி அடித்தாற் போல நின்றான். அவனைக் கடந்து சாந்தி தன் தோழிகளிடம் பேசிக் கொண்டே சென்றாள்.

-மாமனாரே! என்ன உன்னோட ஆள் இப்படி உன்னை ரவுடின்னு சொல்லிட்டு போவுது? இதுக்கா நாம பஸ் ஏறி வந்தோம்? ரொம்பச் சிரமம் மாமனாரே இவளை கவுத்தி நீ கல்யாணம் கட்டிக்கிறது!

-என்னோட ஆள் எப்பவும் ஸ்பெஷல் தான்டா! அதனால தான் அவளை எனக்கு பிடிச்சிருக்கு.

-அதுக்காக இப்படி மானம் செட்டு மருவாதி கெட்டு.. சேச்சே! நட போலாம் சங்கு ஊதிருவாங்க!

அவர்கள் கல்லூரிக்குள் நுழைந்தார்கள். சித்ரன் நினைத்தது ஒன்று. ஆனால் நடந்தது ஒன்றாகி விட்டது.

மூன்று

அன்று டீ ட்ரம்முடன் மூன்று மணிக்கு முன்னதாகவே விக்னேஷ் வந்து விட்டான் கல்லூரி வாசலுக்கு. அவனை எதிர்பார்த்திருந்த சக டீக்கடைக்காரர்கள் மூவர் அவன் இருக்குமிடம் வந்தார்கள். விக்னேஷுக்கு அவர்களை யாரெனக்கூடத் தெரியவில்லை.

-தம்பி நீ எங்க இருந்து இங்க வர்றே?

-என்னங்க உங்களுக்கு டீ வேணுமா? ஏலக்கா டீங்க, சூப்பரா இருக்கும் குடிச்சுப் பார்த்துட்டு சொல்லுங்க!

-டீ இருக்கட்டும் தம்பி, நாங்களும் டீக்கடைக்காரங்க தான். எங்களுக்கே டீ குடுக்கறியா நீயி? மொதல்ல கேட்டதுக்கு பதிலைச் சொல்லு. எங்க இருந்து இங்க வந்து எங்க ஏவாரத்தை கெடுக்குறே?

-என்னது? உங்க ஏவாரத்தை கெடுக்கிறேனா? நீங்க யாரு மொதல்ல?

-எதுக்க பார்த்தீல்ல.. அதா அங்க பாரு.. அதுக எங்க பேக்கரிக! நீ இங்க மூனு மாசமா வர்றதால எங்க ஏவாரம் டல்லடிக்குது. அதனால..

அப்போது கல்லூரி சங்கு ஒலிக்க மாணவ மாணவிகள் சிலரும் அவ்விடத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.

-அதனால?

-இனிமேல் இங்க நீ வந்து ட்ரம் டீ ஏவாரம் பண்ணக்கூடாது.

-பண்ணினா?

-என்னடா ஒரு மரியாதைக்கு சொன்னா ஓவரா ஏறீட்டு நிக்கே?

கொஞ்சம் தடிமனாய் இருந்தவர் விக்னேஷின் கன்னத்தில் ஒன்று வைத்தார். அடுத்து காலை உயர்த்தி ஒரு மிதி மிதித்தார் அவனை. கூடவே நின்றிருந்த இருவரும் இது தான் சாக்கென ஆளுக்கு ஒன்று வைத்தார்கள். ஒருவன் சைக்கிளை ட்ரம்மோடு தள்ளி விட முயற்சிக்கையில் மாணவர்கள் சிலர் அவனை இழுத்து ஓரம் நிறுத்தினார்கள்.

விக்னேஷ் கீழே விழுந்து கிடந்தான். அவன் உதட்டில் ரத்தம் வேறு வந்தது. அவன் அவர்களை திருப்பி தாக்கலாம் என்று கூட நினைத்தான். ஆனால் அது பிறகு வேறு பிரச்சனைகளுக்குள் தள்ளி விட்டு விடும் என்பதால் மெதுவாக எழுந்தான். போக மாணவ மாணவிகள் பலரும் சூழ்ந்து கொண்டு அவர்களை சரமாரியாக திட்டினார்கள். ஒழுக்கமாய் டீ போட்டால் யாரும் வராமலா போவார்கள். இவன் நாங்கள் எங்களுக்காக வைத்த ஆள். இவன் எங்களுக்காக தான் டீயை கொண்டு வருகிறான் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அது இவனுக்கு நிம்மதியாய் இருந்தது.

சமயம் பார்த்துத்தானா தேவதையும் அங்கே தோழிகளோடு வரவேண்டும்? நேற்று மாதிரி விடுப்பிலேயே அவள் சென்றிருக்கலாமென நினைத்தான். வாயில் வரும் ரத்தத்தை ஓராமாகத் துப்பினான். லைந்திருந்த தலைமுடியைக் கோதி விட்டுக் கொண்டு அவர்களுக்கு ட்ரம்மிலிருந்து டீயைப் பிடித்துக் கொடுத்தான்.

அவர்கள் இவனை உதைத்தது மட்டுமே லாபமென இடத்தைக் காலி செய்து சென்றார்கள். இவனுக்காக பேசிய அனைவருக்கும் நன்றியைச் சொன்னான். அவர்களோ இவர்கள் மிரட்டுகிறார்கள் என்று நாளையில் இருந்து வராமல் போய் விடாதே! என்றார்கள். இவர்களுக்கு பயந்து அப்படியெல்லாம் நான் வராமல் போக மாட்டேன், என்றான் இவனும். டீயை கப்பில் வாங்கிக் கொண்டவர்கள் ஓரம் ஒதுங்கி நின்று அதைக் குடித்தபடி பேசிக் கொண்டிருந்தார்கள்.

-இன்னாப்பா அவனுவ உன்னிய அட்ச்சு வச்சுட்டானுவளா? நம்ம கையில மேட்டரை உடுபா! அவுனுகளை நம்ப பேட்டை ஆக்களை வச்சு கீச்சிட சொல்லிடறேன்! தா! டீய போடு, அழாதே ஆமா!

முன் தினம் கிண்டல் செய்த பெண்ணே இப்போதும் ஆண் குரலில் பேசியது. இவன் அவர்களுக்கு டீயைப் பிடித்துக் கொடுத்தான். அவனுக்கு இப்படி அடையாளம் தெரியாத ஆளிடம் அடி வாங்கிய வேதனை தான் இப்போது இருந்தது. சைக்கிளில் தேவதை முன் தினம் கொடுத்த குடையை ஹேண்ட்பாரில் மாட்டி வந்திருந்தான். அதை தேவதை பார்த்தும் எடுத்துக் கொள்ளவில்லை. அவளுக்கும் இவன் அடிபட்டது சங்கடமாய்த் தான் இருந்தது. அது ஏனென்று அவளுக்கும் தெரியவில்லை.

ஒருவேளை திரைப்படத்தில் காட்டுவது போல பெண்களுக்கும் முன்னால் அவர்களை திருப்பி அடித்து ரவுடியைப் போல நடந்து கொள்வதில் விருப்பமில்லாமல் விட்டு விட்டானோ என்று நினைத்தாள். அவன் ஒரு ரவுடி என்று தெரிந்தால் யார் அவனிடம் பின்பாக டீ சாப்பிட வருவார்கள்?
அங்கு சித்ரனும் தன் நண்பர்களோடு வந்து சேர்ந்தான். அவர்களுக்கும் ட்ரம் டீயை விக்னேஷ் பிடித்துக் கொடுத்தான். சித்திரனிடம் முத்து தான் சொன்னான் அப்போது.

-மாமனாரே! என்னோட பிந்து இருக்காள்ல!

-ஐயோ இவனோட தொந்தரவு தாங்க முடியல மாமனாரே! ஒரு நாள் மஞ்சுங்கறான், இன்னொரு நாள் வேணிங்கறான்.. ஒருத்தி இவனை ஓரக்கண்ணால பாக்கப்பிடாது! உடனே இவனோட ஆளாம்! இன்னிக்கி என்ன பிரச்ச்னைய சொல்லப் போறானோ!

-நீ கம்முன்னு இரு ரமேசு! இது என்னோட வாழ்க்கைப் பிரச்சனை. அதான் மாமனாரு கிட்ட பேசுறேன்.

-பேசு பேசு!

-மாமனாரே! என்னோட பிந்து இன்னிக்கி என்னை நக்கல் பண்ணிடுச்சு!

-உன்னையேவா? விசயம் பயங்கரமா இருக்கே! சொல்லு! என்றான் சித்ரன்.

-என்ன கொஞ்சம் சுறுசுறுப்பில்ல! கண்ணுல வேற கண்ணாடி! இல்லீன்னா ஜாக்கிஜான் தானுங்கறா!

குபீரெனச் சிரித்தான் ரமேஷ்.

-சரியாத்தான் சொல்லியிருக்கா!

-பாரு மாமனாரே! நானே நொந்து போயிருக்கேன் இவன் சிரிச்சு வேற கடுப்படிக்கிறான்.

-சரி சரி விடு முத்து. அடுத்தவாட்டி உன்னோட ஆளைக்காட்டு. ஒரு அள்ளு அள்ளிடலாம்.

அவர்கள் விக்னேஷிடம் பணத்தைக் கொடுத்து சில்லறை வாங்கிக் கொண்டு சென்றார்கள். கூட்டம் மெதுவாக இடத்தைக் காலி செய்து கொண்டிருந்தது. அது குறைய வேண்டுமெனத்தான் தேவதையும் அங்கு தோழிகளுடன் பேச்சுக்கொடுத்து நின்றிருந்தாள்.

விக்னேஷ் வழக்கம் போல குட்டானாய்க் கிடந்த டம்ளர்களை அள்ளி எடுத்து வந்து சாக்குப்பையில் போட்டான். கையில் தேவதையின் தோழிகள் வைத்திருந்த கப்புகளையும் வாங்கி கொண்டு வந்து சாக்குப்பையில் தேவதை போட்டாள். அவனுக்கு தன் பர்ஸிலிருந்து பணத்தைக் கொடுத்தாள். விக்னேஷுக்கு இதயம் வேகமெடுத்து துடிக்க ஆரம்பித்து விட்டது. ஏதாவது சற்ரு முன் நடந்த அடிதடி பற்று பேசிவிடுவாளோ என்று பயந்தான்.

சைக்கிளில் இருந்த அவளது குடையை எடுத்துக் கொள்ளச் சொன்னான் அவளிடம்.

-ஓ! குடைக்கான தேவை முடிஞ்சுது அதான் தர்றீங்களா எனக்கே?, என்றவள் அவனையே சிறிது உற்றுப் பார்த்தாள். அந்தப் பார்வை அவனிடம் என்ன என்னவோ சொல்வது போலவும் இவனுக்குத் தெரிந்தது. அவளாக பார்வையை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்று தெரிந்து இவனாக அவளைப் பார்ப்பதை தவிர்த்து வேறு புறம் பார்த்தான்.

-அப்படியில்லைங்க! இது உங்க குடை. உங்களுக்கே திருப்பி கொடுத்துடறது தான் மரியாதை.

-ஓ! அப்ப நான் எடுத்துக்கிட்டன்னா இனிமேல் இந்தப் பக்கமே வர மாட்டேன். சம்மதமா?

-ஏங்க இப்படியெல்லாம் பேசுறீங்க?

-என் பெயர் ரசிகா! உங்க பேர் என்ன?

-விக்னேஷ்.

-ஏய் வாடி போகலாம்! விட்டா சைக்கிள்ல ஏறீட்டு டீ விக்கப் போயிடுவா போலிருக்கே! என்று இவள் தோழிகள் சப்தமிட்டனர்.

-குடை உங்க கிட்டயே இருக்கட்டும். நான் கிளம்புறேன். அவங்க கிண்டல் பண்ணியே நோகடிச்சுடுவாங்க விக்னேஷ்!, என்றவள் அவர்களை நோக்கி நகரவும் இவன் குழம்பிப் போய் நின்றான். என்னது? குடை எங்கிட்டயே இருக்கட்டுமா?


 வளரும்

Post Comment

1 கருத்து:

பரிவை சே.குமார் சொன்னது…

தொடருங்கள்... தொடர்கிறோம்...