வியாழன், ஆகஸ்ட் 20, 2015

பழங்கதைகள் 2 என் ஸ்டைலில்
ஒன்று

ஒரு கதெ சொல்றங்கேளு நீயி. காட்டு வேலைக்கிப் போன புருசங்காரன் காட்டுல சொரக்காயி ஒன்னை பொறிச்சுட்டு ஊட்டுக்கு தூக்கிட்டு போற வழியில வேலியில கெடந்த காடைக்குஞ்சு நாலை லுங்கியக் கழட்டி அமுத்திட்டான். அப்புடியே அதுகளை உசுரோட கொண்டி ஊட்டுல பொண்டாட்டிகிட்ட குடுத்து சோறாக்கி கொழம்பு வச்சுட்டு மத்தியானமா தூக்கிட்டு காட்டுக்கு வான்னு சொல்லிட்டு போயிட்டான். அவொ பக்கத்தூட்டுல கள்ளப் புருசனோட ஆட்டங்கட்டீட்டு சோத்தயும் ஆக்காம, கொழம்பும் வெக்காம உட்டடிச்சிட்டா.

பொழுது வேற மேக்க உழுந்திடுச்சு. கெரகத்தப்பாருன்னு அரிசிய போசியில போட்டுட்டு குருவிகளை அதுக்குள்ளார போட்டு சொரக்காயயும் போட்டுட்டு காட்டுக்கு போசியத்தூக்கிட்டு போனா. அவனோ வேலையெல்லாம் முடிச்சுட்டு வயிறு காஞ்சி போயி எதுக்க அவட்ட கழண்டு வந்துட்டு இருந்தானாம். இவ இப்பத்தான் ஆக்கிட்டு, திங்க கொண்டாறான்னு வயித்தெரிச்சல்ல, ஏண்டி இமுட்டு நேரமுன்னு அடிக்க பல்லை வெறுவீட்டு வந்திருக்கான்.

இவொ ஒடனே போசிய கீழ வெச்சுட்டு தலை முடிய அவுத்து விட்டுட்டு சாமியாட ஆரம்பிச்சுட்டா! இதென்னடா கெரகமுன்னு அடிக்க ஓடியாந்தவன் அப்புடியே ஆணியடிச்சாப்புல நின்னுட்டான். என்னெய அடிக்காதீங்க மாமா! நானு பொய்யி பித்தலாட்டக்காரியில்ல! ரொம்ப நீதியுள்ள பொண்ணு! என்னைய அடிக்க வந்தா சோறு அரிசியாப்போயிரும், சொரக்கா பச்சையாப் போயிரும், காடைக்குருவிகளுக்கு உசுரு வந்துருமுன்னு பாட்டு படிச்சிட்டா!

புருசன் அவொ கொண்டாந்த போசிய தெறந்து பாத்து அப்படியே மலச்சிட்டான். பர்ர்ருன்னு குருவிக ரெண்டு பறந்துடுச்சு. சொரக்கா அப்படியே பச்சக்காயா கெடக்குது. அரிசி அப்படியே இருக்குது போசிக்குள்ள! பாத்தவன், எம் பொண்டாட்டி பத்தினி! எம் பொண்டாட்டி பத்தினின்னு குதியாளம் போடறான் காட்டுக்குள்ள! இதக் கண்ணு வெச்சு பார்த்துட்டு இருந்த மாரியாத்தா இப்புடி புளுவறாளே புருசங்கிட்டன்னு கன்னத்துல கைய வெச்சு வடக்க பாத்துட்டு குக்கீட்டு இருந்தவ தெக்கு முகனா திரும்பி குக்கீட்டா!

வெள்ளிக்கிழம காத்தால பூசை போட வந்த பூசாரி ஆத்தா கன்னத்துல கைய வெச்சுட்டு தெக்க பாத்து உக்காந்துட்டாளேன்னு மணியகாரங்கிட்ட ஓட்டமா ஓடியாந்து சொன்னானாம். மணியகாரன் ஆத்தாவுக்கு வெசனம் வந்துடுச்சு போல எப்படி தீக்கறதுன்னு ஊரு முழுக்க தண்டோரா போடச் சொல்லிட்டான். இதக்கேட்டு காட்டுல வேல செஞ்சிட்டு இருந்த புருசங்காரம் மறுக்காவும் எம் பொண்டாட்டி பத்தினி. அவளுக்கு சாமி வந்து ஆடங்காட்டி சோறு அரிசியாப்போச்சுன்னு சொல்லீட்டு மணியகாரன் ஊடு வந்துட்டான். அந்த பத்தினி சொன்னாத்தான் ஆத்தா கன்னத்துல கைய எடுக்குமுன்னும் சொல்லிட்டான்.

அவளப்போயி கூட்டியாங்கடான்னு மணியகாரன் குதிர வண்டி அனுப்பினான். விசயங்கேட்ட அவொ நாம பண்டுன அக்குரமத்தால தானோ என்னவோ ஆத்தா அப்படி குக்கீட்டாளோன்னு சீவக்கட்டைய தூக்கிட்டு குதிர வண்டியில வந்துட்டா. சாமி முன்னால சேலையக்கட்டி மறைக்கச் சொல்லி யாரும் பாக்கப்புடாதுன்னு உள்ளார பூந்து ஆத்தா முன்னால போயி நின்னா. அட நாந்தான் ஒரு தப்பு பண்டி புருசங்காரனை ஏமாத்த பொய்யி சொன்னேன். அதையே நீ புடிச்சுக்கிட்டியேன்னு சீமாத்தை ஓங்குனா. ஆத்தா கன்னத்துல இருந்து கைய எடுத்துடுச்சு. தப்பிச்சோம்டா சாமின்னு ஓட்டமா வெளிய ஓடியாந்தவ மணியகார்ருகிட்ட, சாமி சரியாப் போச்சுன்னு சொல்லிட்டா! மணியகார்ரும் அவ பேருல ரெண்டேக்கரா எழுதி வச்சிட்டாப்ல! கதை எப்படி? எங்காயா எப்பவோ சொன்னது எனக்குஎன்றாள் பொடுசாள்.

ரெண்டு.

ஒரு ஊர்ல ஒரு கிழவனும் கிழவியும் இருந்தாங்க. அவிங்களுக்கு ரெண்டு புள்ளைங்க! ஒருத்தி லட்சுமி இன்னொருத்தி சரசு. லட்சுமி அவிங்க ஆயாளாட்டவே மொரண்டு பண்ணுறவ. சரசு கெழவனோட மொத தாரத்து புள்ள. இவளுக்கு நேர்மாறு அவொ. அவளெ கெழவிக்கி எப்பயும் புடிக்காது. அவளோட கண்ணு பார்வையில் சரசு படவே கூடாதுன்னு கெழவங்கிட்ட சொல்லிட்டே இருந்தா! “இந்தக் கொமுறியோட இந்த ஊட்டுல வாழ எனக்கு புடிக்கலஅப்பிடின்னே சொல்லிட்டு இருந்தா கெழவி. சரசு நாளு முழுக்க ராட்டையில் நூலு நூக்கறது தான் செஞ்சுட்டு இருந்தா. கெழவன் ஒரு பயந்தாங்கொள்ளி.  

பார்த்துட்டு சரசுவை ஒரு நா வண்டி பூட்டி காட்டுல கொண்டி ஒரு குடிசையில உக்காத்தி வச்சுட்டான். சோறாக்கி ரவைக்கி திங்க கம்பும், நூக்கறக்கு நூலும் கொடுத்துட்டு அடுத்த நாளு வர்றேன்னு சொல்லிட்டு வந்துட்டான் கெழவன். அவொ அங்க பகலு முழுக்க நூலு நூத்துட்டு ரவைக்கி கம்மங்கூலு கிண்டீட்டு இருந்தா! அப்ப குடிசையில இருந்த வங்குல இருந்து ஒரு சுண்டெலி வந்து, “அம்மிணி! எனக்கும் துளி கம்மங்கூலு குடுக்குறியா! பசியா இருக்குதுஅப்பிடிங்காட்டி சரசு அதுக்கும் கொஞ்சம் கம்மங்கூலு ஊத்தீட்டு சாமத்துல குடிசையில படுத்துட்டா!

அப்பப் பாத்து  கரடி ஒன்னு வந்து குடிசை கதவ தட்டுச்சு! யாரோ என்னமோன்னு சரசு கதவை நீக்கி பாத்தா கரடி நிக்கிது! “அம்மிணி விளக்கை அணைச்சுடு குடிசையில, நாம் ரெண்டு பேரும் கண்ணாமூச்சி வெளையாடுவோம். உனக்காவ நான் ஒரு வெள்ளி மணி கொண்டாந்திருக்கேன். நீ குடிசைகுள்ள ஓடீட்டே மணியை அடி. உன்னை எட்டிப்புடிச்சுடறேன்அப்படின்னுட்டு கண்ணை வேற துணியால கட்டிக்கிச்சு.

அப்ப பார்த்து சுண்டெலி வங்குல இருந்து வந்து, ‘பயப்படாதே அம்மிணி, மணியக் கொண்டா! நீ போயி அடுப்புக்கு மேல உகாந்துக்கோ!” அப்படின்னுட்டு மணிய வாங்கிட்டு குடிசைக்குள்ள ஓடுச்சாம். கரடி தொறத்தி தொறத்தி பார்த்து சங்கிப் போச்சாம். ஓடுறப்ப சட்டி பானையெல்லாம் வேற ஒடஞ்சி போச்சி. களைச்சுப் போன கரடி விளையாட்டை நிறுத்திட்டு, “பயங்கரமா வெளையாண்டே அம்மிணி நீயி! காலையில ஒரு பட்டி ஆடுகளும், வண்டி நெறையா நீ கட்டீட்டு போற எடத்துக்கு சாமான் செட்டும்  அனுப்புறேன்னு சொல்லிட்டு போயிடுச்சாம்.

மறாநாளு கெழவி கெழவனை வண்டியில் அனுப்பி உட்டுட்டு வாசல்படியிலயே உக்காந்திருந்தா! எப்பிடியும் சரசுவோட எலும்புகளை தான் கெழவன் தூக்கி வண்டில போட்டுட்டு வருவான்னு வாசல்ல படுத்துட்டு இருந்த நாயி கிட்ட சொல்லிட்டு இருந்தா! அப்ப வண்டி வர்ற சத்தம் நாயிக்கும் இவளுக்கும் கேட்டுச்சு!

சரசாவ கெழவன் வண்டில கூட்டிட்டு வர்றான். வண்டி நொம்ப சாமான் செட்டு கடப்புடன்னு உருண்டுட்டு வருது. பொறவுக்கே ஒரு பட்டி ஆடுகளும் மே! மே!ன்னு சத்தம் போட்டுட்டு வருதுக!” அப்படின்னு நாயி கெழவிகிட்ட சொல்லுச்சு!.

நீ பொய்யி சொல்ற நாயே! வண்டில சரசாளோட எலும்புக போடற சத்தம் தான் அது!” அப்பிடின்னா.

பாத்தா நாயி சொன்னாப்புல பொருளுகளோட கெழவன் வந்து இறங்குறான் வீட்டு முன்னால. இதென்ன அதிசயமடான்னு மறா நாளு கெழவி தன்னோட புள்ள லட்சுமிய நூலு நூக்க கெழவங்கூட காட்டுக்கு வண்டில அனுப்பி வச்சுட்டா! அவ இன்னும் நெறையா கொண்டாருவா பாரேன்னு நாயிகிட்ட சொன்னா!

அதே மாதிரி லட்சுமி, நூலு பொழுதுக்கும் நூத்துட்டு கம்மங்கஞ்சி ஆக்குனா குடிசையில. அப்ப பார்த்து சுண்டெலி வந்து, ‘அம்மிணி! எனக்கு ஒரே பசியா இருக்குது. துளி கம்மங்கூலு ஊத்து!’ அப்பிடின்னுச்சு. லட்சுமி அதுக்கு, “எங்கிட்ட கூலு கேக்குற அளவுக்கு உனக்கெல்லாம் ஆயிப் போச்சா? ஓடிப்போயிரு ஆமா!” அப்படின்னு வெறட்டி உட்டுட்டா. வகுறு நம்ப தின்னு போட்டு படுத்துட்டா லட்சுமி. சாமத்துல கரடி வந்து கதவெ தட்டுச்சு. இவொ பயந்துட்டே போயி நீக்குனா.

முன்ன மாதிரியே இவளையும் மணியாட்டம் ஆட கண்ணை கட்டீட்டு கூப்புட்டுச்சு கரடி. இவொ பயந்துட்டு மணியைப் புடிச்சுட்டு குடிசையில சுத்துனா. கரடி ரெண்டே சுத்துல இவளை கப்புனு புடிச்சுடுச்சு. எலி பாத்துட்டு, பாவம் இவொஅப்படின்னு மொணகிட்டு வங்குக்குள்ளார போயிடுச்சு.

மறா நாளு கெழவி வாசல்ல லட்சுமி வருவா ஏகப்பட்ட சாமானங்களோடன்னு காத்துட்டு உக்காந்திருந்தா. கெழவனை வெடியக் காத்தாலயே தட்டி உட்டுட்டா புள்ளையக் கூட்டி வரச் சொல்லி. வண்டி வர்ற சத்தமும் கேட்டுச்சு.

எஜமானரோட புள்ள அழுதுட்டே வர்றா! காலி வண்டி கடமுடான்னு கல்லுக மேல ஏறி வருதுன்னுநாயி கத்துச்சு.

நீ பொய்யி சொல்றே நாயே! பொட்டில வெள்ளி, தங்கம்னு காசுக சலசலக்குற சத்தம் தான் அது!” அப்பிடின்னா கெழவி.

வண்டி வந்து வாசல்ல நின்னுச்சு. அவொ அழுதுட்டே வண்டில இருந்து இறங்க மாண்டீங்கறா! கெழவி வெறும் வண்டியப் பாத்துட்டு ஓ!ன்னு கத்துப் புடிச்சுட்டா.

Post Comment

1 கருத்து:

'பரிவை' சே.குமார் சொன்னது…

ரெண்டு கதையும் அருமை...