வெள்ளி, ஆகஸ்ட் 07, 2015

மரநிற பட்டாம் பூச்சிகள் -ஒரு பார்வை


எனக்கு முன் எப்போதும் இல்லாதது என்றும், தமிழில் புதியனவாக வாசிக்க உகந்தனவாய் என்றும், எதுவும் கண்ணுக்குச் சிக்குவதில்லை சிறுகதை கூட்டங்களில்! தொன்னூறுகளில் எஸ்.ராவின் முயற்சிகள் எல்லாம் தோல்வியில் தான் முடிந்தன. கோணங்கியிடம் மிரட்டல் மட்டுமே மிச்சமாய் இன்று வரை தொடர்கிறது. ஜி.முருகனை வாசிக்க முடிந்தது என்றால் அவரது கதைகளின் களம் நமக்கு அறிந்த குறுநகரங்களாக இருந்தன. கெளதமசித்தார்த்தனை வாசிக்க இயலவில்லை என்பதற்கு என்னையே குற்றம் சாட்டிக் கொண்டிருக்கவெல்லாம் இயலாது. அ-கதைகள், ஆ-கதைகள் இ-கதைகளாக எவ்வாறு உருவமாற்றம் கொள்கின்றன? என்பதையெல்லாம் ஒரு எழுத்தாளனே வாசகனுக்கு கற்பித்துக் கொண்டிருந்த சோகங்கள் எல்லாம் தொன்ன்னூறுகளில் மட்டுமே அரங்கேறின.

தொன்னூறுகளின் இறுதியில் வந்த முன்பு ஒருகாலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன! ரமேஷ்-பிரேமின் தொகுப்பு தான் பத்து ஆண்டுகளை நிறைவு செய்தது வெற்றிகரமாய்! அதில் இடம்பெற்றிருந்த பத்து சிறுகதைகளும் பத்து முத்துக்கள். தமிழில் வடிவ மாற்றம் எங்கிருந்து துவங்கி, எப்படிச் சொல்லப்பட வேண்டுமென்பதை முழுதாகவே கற்பித்த புத்தகம்.

சாருவும் சமயத்தில் எழுதிக் கொண்டிருந்தார் என்றாலும் அவர் கதைகளனைத்தும் நேர்கோட்டுக் கதைகள். தமிழை வார்த்தைகளின் தடுமாற்றமின்றி இன்னமும் சரியாக எழுதுபவர்களில் முதன்மையானவர் சாரு! போக அவர் தமிழின் மிக முக்கியமான மொழிபெயர்ப்பாளர். ஊரின் மிக அழகிய பெண் தமிழுக்கு அவர் கொடுத்த மொழிபெயர்ப்புக் கொடை. அவர் பலமொழிபெயர்ப்பு சிறுகதைகளை தமிழுக்குக் கொடுத்திருக்கலாம். ஆனால் தவறி விட்டார். ஒரு மிகப்பெரும் ஆளுமையாய் வந்திருக்க வேண்டிய படைப்பாளி எவ்விதம் நீர்த்துப் போய் களைப்படைந்து வீழ்ந்து விட்டார் என்பதற்கு உதாரண புருஷன். எழுத்து அவரை தன்னைப்பற்றியே எழுதத் தூண்டுகிறது. வடிவ மாற்றங்களில் அவருக்கு ஈடுபாடு இல்லாமல் போய் விட்டது.

இந்த விசயத்தில் எஸ்ரா இன்னமும் வடிவ மாற்றத்திற்லும், சொல்லல் முறையிலும் மாற்றங்களை கொண்டுவர போராடுகிறார். அவருக்கும் முன்பாக இன்னமும் ஒரு பற்றி எரியும் விளக்கு அவர் நடக்கையில் எல்லாம் முன்பாக சென்று கொண்டேயிருக்கிறது. யாரும் இங்கே ஓய்வெடுக்க இயலாமல் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இயங்குகிறார்கள். அப்படியான படைப்புகள் புதிய வாசகனை வேண்டுமானால் ஆச்சரியப்படுத்தச் செய்யுமென்றாலும் என் போன்ற எழுத்தாளர்களை ஒன்றுமே செய்வதில்லை.

கதைகளின் வாயிலாக என்ன சொல்ல வருகிறார்கள் என்பது எனக்கு முக்கியமாகப் படுவதில்லை. வாசிக்க உகந்ததாக கதையோட்டத்தை நகர்த்துகிறார்களா? என்பதை மட்டுமே கவனிக்கிறேன். எந்த எழுத்தாளரும் கதைகளில் தீர்வுகளை சொல்லிச் சென்றுகொண்டிருக்க வேண்டியதேயில்லை எனக்கு.

சமீப காலங்களில் நான் என் இலக்கிய தாகங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு எளிமையான வாசிப்புக்குச் சென்றிருக்கிறேன். அவற்றை சரியான முறையில் எழுதவும் கற்றுக் கொள்கிறேன். போக தமிழில் கைக்கு கிடைக்கும் மொழிபெயர்ப்புகளையும் வாசிக்கிறேன். ஒரு கூட்டுக் கலவையாக நான் உருமாறிக் கொண்டிருக்கிறேன் என்று தெரிகிறது. இருந்தும் நான் எல்லா எழுத்துகளையும் ரசிக்கும் மனோபாவத்தில் இருக்கிறேன். இதனால் தான் இப்போது கார்த்திகைப் பாண்டியனின் 12 கதைகளையும் வாசிக்க முடிந்தது.

முன்பாக இவரது மொழிபெயர்ப்பு புத்தகம் எருது இந்த ஆண்டின் துவக்கத்தில் வாசித்தேன். பலதேசங்களின் கதைகளை அதில் கோர்த்திருந்தார். மரநிற பட்டாம்பூச்சிகள் வாசிக்கையில் மொத்தமாக வாழ்க்கை மீது பற்றற்ற, பெண் உடல் மீது அதீத ஆர்வம் கொண்ட, ஒரு நடுத்தர வர்க்க மனிதனின் உள்மன ஆசைகளையும், சாவு என்பது என்ன என்ற தேடலை உடையவனாகவும் ஒருவன் வந்து கொண்டே இருக்கிறான் எல்லா கதைகளிலும்.

கனவு மனிதர்களுக்கான பெரிய சந்தோசம் தான். இந்த கதைகளில் நான்கைந்தை வாசித்து விட்டு உறங்கிய உறக்கத்தில் என்னை ஒன்றிரண்டாக ஊர்ந்து வந்து கொண்டிருந்த செந்தேள்கள் கடிக்க ஆரம்பித்து விட்டன! இவரது நிழலாட்டம் கதையில் சிறகுகளசைத்து காற்றில் மிதந்து வருபவள் ரயில் பெட்டியில் யாருமே இல்லாததால் வேட்கையுடன் படருகிறாள். இது பாண்டியனின் கனவுதான் என்பதில் மாற்றமில்லை. கனவுகளை வார்த்தைகளுக்குள் கொண்டு வருவதில் சாமார்த்தியசாலியாய் இருக்கிறார். பலர் கனவுகளை விடிகாலையில் மறந்து விடுகிறார்கள்.

இணைய மும்மூர்த்திகள் சிறுகதை மிகப் பழைய வடிவம். இதை முன்பாக பலரும் செய்து பார்த்து தோற்றுப்போன வடிவம். இந்த வடிவம் செத்து இருபத்தி ஐந்து வருடங்களாகி விட்டன. போக அந்தரமீன் மெளனி சிறுகதை ஒன்றை ஆழ்ந்து வாசித்த அனுபவத்தைக் கொடுத்தது. பெருத்த மார்புடைய ஆண் சிறுகதை எனக்கு உவப்பானதாக இல்லை! இதுபற்றி பேசவும் தயங்குகிறேன் என்பதே உண்மை. கார்த்திகைப் பாண்டியன் இந்தக் கதை மூலமாக சொல்ல வரும் விசயம் சற்று தீர்க்கமாக இருப்பதால் இப்படி ஓட்டிச் சென்றாரா? என்று தெரியவில்லை.

மரநிற பட்டாம்பூச்சிகள் தொகுப்பின் ஆகச்சிறந்த கதை. காதலியை வரவழைத்தவன் அவளை படுக்கையில் வீழ்த்தி தோற்றுப் போகும் காட்சியை அழகாக சொல்லிச் செல்கிறார். சிறுகதைகளுக்குள் எண்களை இட்டு தனித்தனி விசயங்களாகச் சொல்வது ஒரு புதிய முறையாக இருக்கிறது.

பரமபதம் என்கிற கடைசி கதை சாவை இன்னதென அறிய முயல்பவனின் வேட்கையாக இருக்கிறது. ஒரு அமானுஷ்யத் தன்மையுடன் நகரும் இந்தக் கதை தமிழில் தவிர்க்க முடியாத முக்கிய சிறுகதை.

ரயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு மரணம் நோக்கிச் செல்லும் பெண்ணை இவன் எட்டிப் பார்க்கிறான்.

/கண்கள் பாதி திறந்தும் பாதி மூடியும் உயிர் அதன் வழியே சிறு சிறு சொட்டுகளாய் கண்ணீரென சிந்திக் கொண்டிருந்தது. பிளந்த உதடுகளின் வழியே தண்ணீர் தண்ணீர் என முனங்கிக் கொண்டிருந்தாள். அவ்வார்த்தைகளின் துயரம் கோடரியாய் என்னைப் பிளக்க நான் அங்கிருந்து விலகி ஓடினேன். தண்டவாளத்தின் ஓரமாக அமர்ந்து வாந்தியெடுத்துக் கொண்டிருந்த என்னைத் தாண்டிப்போன இரண்டு நபர்கள் அந்தப்பெண்ணின் மரணத்தை அறிவித்துச் சென்றார்கள்./

இவரது கதைகளில் தான் ஆதர்ஷமாக கொண்ட எழுத்தாளரின் பாதிப்பு ஆங்காங்கே வரிகளாய் வந்து வந்து போகிறது. போக அவைகள் தனித்து தெரிகிறது. தனக்கென ஒரு எழுத்துக்கு சீக்கிரமாய் வந்து விடுவாரென்பது சில கதைகள் வாயிலாகவும் தெரிகிறது. யாரும் யாருக்கும் ஆதர்ஷமாக இருந்தே ஆக வேண்டிய தேவைகள் ஏதேனும் இருக்கிறதா? என்ற கேள்வி இப்போது என்னுள் முளைத்து விட்டது.

அப்படிப்பார்த்தால் அஸ்வகோஸ்-ம், அசோகமித்திரனும் என் ஆரம்ப கால ஆதர்ஷ எழுத்தாளர்கள். அவர்களின் பாதிப்பு என் ஆரம்பகால கதைகளில் இருந்திருக்கலாம். அஸ்வகோஸ் நல்லவேளை எழுதுவதில்லை சிறுகதைகள். அசோகமித்திரனை ஆரம்பகால அவரது மூன்று தொகுப்புகள் வாசித்ததோடு சரி! தப்பித்துக் கொள்ளுதல் என்பது இது தான்! ராஜேஷ்குமார் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அசோகமித்திரன் திடீரென கையில் கிடைத்தால் அதிசயம் தானே!

மரநிற பட்டாம்பூச்சிகள் - எதிர் வெளியீடு. விலை -140.00


000

புத்தகத்தை நான் வெளியிட நண்பர் மோகனரங்கன் பெற்றுக் கொள்ளும் காட்சி!Post Comment

கருத்துகள் இல்லை: