திங்கள், ஆகஸ்ட் 10, 2015

ஜி.ஆர் சுரேந்திரநாத் கதைகள் ஒரு சொல்


திரைப்படங்களில் நாயகனுடன் கூடவே தோழனாக வருபவர் காமெடி நடிகராகவே இருப்பார். அவர் தான் காதலியை அடைவதற்கு பல வித ஆலோசனைகளை நாயகனுக்கு வழங்கிக் கொண்டே இருப்பார். திரையில் பார்வையாளர்கள் இருவரையும் ரசித்தவண்ணமே நேரத்தைக் கடத்துவர்.  அதே போல் நாவல்களிலோ சிறுகதைகளிலோ கதைகளினூடே மெலிதான நகைச்சுவை இடம் பெற்றிருந்தால் வாசிப்பவர்கள் புன்னகையை உதிர்த்துக் கொண்டே வாசிப்பார்கள். தமிழில் எழுதும் எல்லா எழுத்தாளரும் ஒரே மாதிரியாக எழுதும் நபர்கள் அல்ல. சிலருக்கு  சிலரின் எழுத்துகள் பிடித்துப் போக காரணங்களை அடுக்கிக் கொண்டே இருக்கலாம்.

பூக்கரையில் ஒரு காதல் காலம் என்கிற நாவல் ஒன்றை குடும்ப நாவல் ஒன்றில் சென்ற வருடம் நான் வாசித்த போது வாசிக்க வாசிக்க அப்படி மகிழ்வாய் எனக்கு இருந்தது. இப்படியான மாத நாவல்களை என் கோவை நண்பர் என் உறவினர்களை நான் நாடிச் செல்கையில் எல்லாம் திரும்பி வருகையில் ஒரு பையில் எப்படியும் 50 புத்தகங்களை வைத்து என் டூவீலரில் சைடில் மாட்டி அனுப்புவார்அவைகளை நான் நாள் ஒன்றுக்கு ஏழு எட்டு என்கிற வீதம் வாசித்து விட்டு படித்தவைகளில் முக்கியமாக மனதைத் தொட்ட புத்தகங்களை பதுக்கி விடுவேன்.

என்னைத்தேடி வரும் நண்பர்கள் அனைவரும் கவிதை தொகுப்புகளையும் சுந்தரராமசாமி, தஞ்சைப்ரகாஷ்,ஜெயமோகன், எஸ்.ரா என்று அடுக்கிலிருந்து வாசிக்க எடுத்துச் செல்பவர்களாகையால் மாத நவல்கள் என் அறையில் கிடந்தாலும் அவர்கள் அவற்றை தொட மாட்டார்கள். அதுபற்றி பேசவும் மாட்டார்கள். இரண்டு வருடம் முன்பாக ஒரு நண்பரிடம் மகேஷ்வரன் என்றொருவர் மிகச் சிறப்பாக எழுதி வருகிறார் என்றேன். கேள்விப்படவே இல்லையே? என்றார். போக காலச்சுவடு, உயிர்மையில புக்கு போட்டிருக்காரா? என்றார். கூடவே நீங்க அவ்ளோ சீக்கிரம் யாரையும் பாராட்ட மாட்டீங்களே?! என்ற இடைச்செருகல் வேறு!

கையிலிருந்த தேவியின் கண்மணி புத்தகத்தை எடுத்துக் காட்டினேன். அவர் என்னை வெளிகிரகத்திலிருந்து வந்த விசித்திர ஜந்துவைப் பார்ப்பது போன்றே பார்த்தார். ஆனால் ஒரு அதிசயம் என்னவென்றால் காமிக்ஸ் படிக்கும் வழக்கம் கொண்ட நான் அவற்றை முன்பொருகாலத்தில் சேகரம் செய்து வந்தது போல சேகரித்து பதுக்குவதில்லை. என்ன தான் இலக்கிய வாசிப்பாளராக இருந்தாலும் என் செல்ப்பில் கிடக்கும் டெக்ஸ் வில்லர், மாயாவி காமிக்ஸ் புத்தகங்களை அவர்கள் எந்த சங்கடமும் இன்றி எஸ்.ராவோடு எடுத்துச் செல்கிறார்கள்.

ஜி.ஆர். சுரேந்திரநாத் என்கிற பெயர் நான் வாசித்த அந்த முதல் புத்தகத்திலேயே மனதில் பதிந்து விட்டது. முன்பாக சிறுகதைகளில் சுஜாதாவின் நக்கல் நையாண்டிகளை ரசித்து வாசித்தவன் பிறகு அப்படியான ஒரு எழுத்து வடிவமுடன் ஒருவர் தமிழில் வரவே இல்லையா? என்றே கைக்கு கிடைப்பனவற்றையெல்லாம் வாசித்துக் கொண்டிருந்தேன். இந்த மாதத்தில் அவரது ஆறு புத்தகங்களை பிடித்து வாசித்திருக்கிறேன் மிக்க மகிழ்ச்சியாக!

காதல்! திகட்டத் திகட்ட காதல்!

ஆண்கள் என்கிற இவரது சிறுகதை தொகுதியும் தீராக் காதல் என்கிற தொகுதியும் நேற்று வாசித்து முடிக்கையில் அல்வாவை அளவுக்கு அதிகமாய் தின்று தீர்த்தவன் போல ஆகிவிட்டேன்.  இவரின் நாயகிகள் மழையில் நனைவதை விருப்பமாக கொண்டிருக்கிறார்கள். இவரின் நாயகர்கள் கவிதை சமைப்பதையும் காதலின் பிரிவில் வாடி வதங்குபவர்களாகவும், கட்டிய மனைவியை அன்பொழுக பார்த்துக் கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். காதலிகள் அனைவருமே அடுத்தவனை கட்டிக் கொண்டு சென்று விடுவதால் ஒரு எல்லைக் கோட்டோடு தான் காதலனோடு பழகுகிறார்கள். அவர்களுக்கு நதியில் கால் நனைத்து விளையாடுவதை விட நதியோரமே காதலனுடன் வீடு கட்டி வாழ ஆசைப்படுகிறார்கள். ஆசைகள் நிராசையாக மாறுகையில் அமெரிக்க மாப்பிள்ளையை கட்டிக் கொண்டு சொய்ங்கென பறந்து விடுகிறார்கள்.

போக இன்று வாசித்த சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் குறுநாவல் அட்டகாசமான திரைக்கதை. காதலித்தவர்கள் பெண்ணின் அப்பா சொன்னதால் இரண்டு வருடங்கள் பேசாமல் தொடர்பில்லாமல் வாழ்ந்து கடைசியாக சேருகிறார்கள். அடுத்ததாக இனியொரு காதல் செய்வோம் என்கிற குறுநாவல் காதலில் தோற்ற ஒரு ஆணுக்கும், கணவனை  வெள்ளைத்தோல்காரியிடம் இழந்து ஒரு குட்டிப்பெண்ணுடன் வாழும் பெண்ணுக்குமான நட்பு. நட்பு எப்படி காதலாக உருமாறி திருமணத்திற்கு வந்து சேருகிறார்கள்? இது கதை. வழக்கம் போல கடைசி நேரத்தில் அவளின் கணவன் வெளிநாட்டிலிருந்து வந்து சேர்ந்து விடுகிறான்பாரம்பரியம் ,கலாச்சாரம், குடும்ப அமைப்பு என்ன சொல்கிறது? கணவன் வந்து விட்டால் அவனுடன் தானே வாழ்வு! இந்த நாவலின் முடிவை நான் புன்னகையோடு ரசித்தேன். அதற்கு காரணம் இப்படியான முடிவுகளை பெயர் பெற்ற கமர்சியல் எழுத்தாளர்கள் யாரும் முன்பாக எழுதவேயில்லை! (முடிவுக்காக நடந்த கட்டில் விசயம்)

எனக்கு இலக்கிய வாசிப்பாளர்கள் தான் முக்கியமான நண்பர்கள்மேலே உள்ள இனியொரு காதல் செய்வோம் என்கிற நாவலின் சாரம்சம் அவர்களுக்கு மிகச் சாதாரணமாகத் தோன்றலாம். சாதாரணத்தை எழுதுவது எவ்வளவு சிரமம் என்று எழுதுபவர்களுக்கு தான் தெரியும். போக அதை சுவாரஸ்யமாக சொல்வது என்பது ஒரு கலை! அது சுரேந்திரநாத்திற்கு வாய்த்திருக்கிறது. தொடர்ந்து அவர் இயங்க வேண்டும்!


வாழ்த்துக்கள்!

Post Comment

கருத்துகள் இல்லை: