சனி, ஆகஸ்ட் 22, 2015

என் செல்லம் என்னியக் கொல்லுதாமா.. (சிறுகதை)

என் செல்லம் என்னியக் கொல்லுதாமா...

தளவாய்பாளையம் அப்படி ஒன்றும் பெரிய ஊர் இல்லை தான். ஊத்துக்குளியிலிருந்து கேபிள் ஒயர் கூட இன்னமும் ஊருக்குள் நுழையவில்லை. ஊருக்குள் மொத்தமாகக் கணக்கிட்டால் ஐம்பது வீடுகள் தேறுவதே அதிசயம் தான். ஆங்காங்கு தோட்டம் காடுகளுக்குள் இருக்கும் வீடுகளைக் கணக்கிட்டால் மட்டுமே ஐம்பதை எட்டிப் பிடிக்கும்.

ஊருக்குள் கொஞ்சம் தம் பார்ட்டி என்றால் மட்டும் அவர்கள் வீட்டின் மீது சின்னக் கொடைகள் நின்றிருந்தது. கலைஞர் அறிவித்த இலவச டிவி தளவாய் பாளையம் பஞ்சாயத்திற்கு இன்னமும் கிட்டவில்லை. பொட்டிகள் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்து விட்டதாய் பேசிக் கொண்டார்கள். ஊத்துக்குளி கேபிள்காரர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். டிவி பெட்டிகள் வீட்டுக்கு வீடு சென்றதும் கேபிள் ஒயர் ஊருக்குள் நுழைந்து விடும்.

தளவாய்பாளையம் ஊருக்குள் கிடந்த சனமே முச்சூடும் தெக்கால வீதி நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. சுந்தரவள்ளி வம்புச் சண்டை ஒன்றை காலையிலேயே இழுத்து விட்டாளாம். ஊரின் நான்கு வீதிகளிலும் சுந்தரவள்ளியின் கணீரென்ற குரல் திருவிழாவிற்கு வைத்த மைக்செட் கணக்காய் விழுந்து கொண்டிருந்தது. வழக்கமாக ஊருக்குள் சுந்தரவள்ளி இழுத்துப் போட்டுக் கொள்ளும் சமாச்சாரம் தான் என்றாலும் இன்று மளிகைக் கடை மயிலாத்தாள் சிக்கி விட்டாளாம். அவளும் சண்டைக்குச் சோடை போனவள் அல்ல என்பதால் தான் வேடிக்கை பார்க்க பொண்டு பிள்ளைகள் ஓடிக் கொண்டிருந்தன.

என்னைய யாருன்னுடி நீ மனசுல நெனச்சுட்டு பேசுனே? மளிகை கடை வெச்சு நடத்துறாளாமா பெரிய மளிகைக் கடை! காத்தால என்னெ சாவு கெராக்கின்னாடி சொன்னே? கெராக்கியாடி நானு? நீதாண்டி கெராக்கி! அலேய், ஒரு மளிகைக் கடையின்னு இருந்தா நாலு பேரு வந்து கத்திரிக்கா எப்பிடி? தக்காளி எப்படி? வெண்டக்கா எப்படின்னு வெலைய வெசாரிக்கத் தானடி செய்வாங்க. கடையில கல்லாவுல நீ என்ன மசுத்துக்குடி காலங்காத்தால ஒக்காந்திருக்கே? வெலையச் சொல்லத்தானடி? அதச் சொல்லறதுக்கு உனக்கென்ன மொடைமசுரு? இல்ல கேக்கேன்..”

மயிலாத்தாள் கடை முன்பாகப் பெண்கள் கூட்டமும், ஆண்கள் கூட்டமும் கணிசமாக கூடி விட்டது. ஆனால் யாரும் உள்ளே நுழைந்து பிரச்சனைக்குத் தீர்வு சொல்லி முடித்து வைப்பார் இல்லை. அப்படி நுழைந்தாலும் சுந்தரவள்ளியை நம்புவதற்கில்லை. திடீரென எடுத்தெறிந்து பேசி விடுவாள். முன்பு அப்படியெல்லாம் நடந்திருக்கிறது.

நல்லாப் பேசட்டும் கழுதைய, வசமா இன்னிக்கி சுந்தரவள்ளி கிட்ட மாட்டிக்கிட்டா யக்கோவ். நேத்திக்கித் துணி தொவைக்கிற சோப்பு வாங்க வந்து நிக்கேன், நிக்கேன் நின்னுட்டே நிக்கேன். பெருசா பொஸ்தவம் படிக்கிறாளாமா! நாங் கேட்டது காதுலயே உழுவாம பத்து நிமுசங்கழிச்சி, என்ன வேணுமுங்கறா கொழுப்பு. கடையில உக்கோந்து ஏவாரம் பண்றவளாட்டமா இருக்கா? காலு மேல காலு போட்டு, ஒத்தக் காலை ஆட்டீட்டு கையில பொஸ்தகம் வேற. ரிச்சிக்கி படிக்கிற புள்ளீவ கூட அப்புடி படிக்காதுக போ. கொஞ்சம் செவந்த ஒடம்புக்காரிங்கறதால பவுடர் அப்பிக்கறதென்ன, கண்ணுமையி அப்பிக்கிறதென்ன, உட்டா ஒதட்டுல இந்த சினிமாக்காரிக பூசிக்கிறாப்ல கலர் கலரா பூசிக்குவாளாட்ட இருக்கு யக்கோவ். மாட்டுனா பாரு இன்னிக்கி மயிலாத்தா சுந்தரவள்ளிகிட்ட!” குசுகுசுவென கூட்டத்திலொருத்தி தனக்கு அருகாமையிலிருந்தவளிடம் காதுக்குள் முணுமுணுத்தாள்.

இந்தா சுந்தரவள்ளி, ந்த அடிபுடிங்கிற வேலையெல்லாம் எம்பட கடை முன்னாடி வேண்டாம். சொல்லிட்டேன். அப்புறம் மருவாதி கெட்டுப் போயிரும் பாத்துக்கமயிலாத்தாவும் பதிலுக்கு திருப்பிக் கத்தினாள் கடைக்குள் இருந்தபடியே.

எசமாங்கன்னு உன்னிய நாங் கூப்பிடோணுமாடி? ஒத்த ரூவா காசு குடுத்து சி பதினாலு பஸ்ஸு ஏறினா ஊத்துக்குளியில எல்லாச் சாமானமும் வெல கம்மி தெரியுமா? எதெ எடுத்து வெல கேட்டாலும் ஒவ்வொன்னத்தியும் ஆனை வெல குதிரெ வெல சொல்றே? நேத்து பொதங்கிழமெ சந்தையில தேங்கா வெல அஞ்சு ரூவா தான் தெரியுமா? நீ என்னடான்னா பன்னெண்டு ரூவாங்கறே? கடனுக்கு வேற ஏவாரம் பண்ணமாட்டாளாம். கடன் அன்பை முறிச்சுப்போடும்னு போர்டு வேற உனக்கொரு கேடு. ஊரை உட்டு நாங்கென்னா ஓடியா போயிருவோம்?”

நீ ஊத்துக்குளியில போயி வாங்குவியோ, இல்ல திருப்பூர்ல போயி வாங்குவியோ, எங்க போனாலும் மகராசியாப் போயி வாங்கிக்க சுந்தரவள்ளி. உன்னய யாரும் எங்கடைக்கே வந்து சாமா வாங்கிக்கோன்னு வெத்தலை பாக்கு வச்சு அழைக்கில போதுமா! மொதல்ல நீ கடைய உட்டு அக்கட்டால போ. எம்பட ஊட்டுக்கார்ரு வாழைக்காயிக்கித் தொட்டிபாளையம் வரைக்கிம் போயிருக்காரு. அவரு வந்துட்டாருன்னா ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிப் போயிரும்

ஓஹோ உங்கொப்பந் தன்னானே.. ஊட்டுக்காரன் வந்துட்டா என்னெய மிதிச்சுக் கிழிச்சுப்போடுவானா? அதுவரைக்கிம் எம்பட கையி பூப்பொறிச்சுட்டாடி இருக்கும்? எம்பட ஊட்டுக்காரன் நல்ல வேலைக்காரன். ஆனா அப்பாவிங்காட்டி தானடி நீ அவனை வளைச்சுப் போட்டுக்கிட்டே! எம்பட ஊட்டுக்காரனை நீயி எத்தன வருசமா வெச்சுட்டு இருக்கீன்றது எனக்குத் தெரியாதுன்னு நெனச்சியாடி?”

த்தா.. கொழுப்பெடுத்தவளே.. வாயிக்கி வந்தபடியெல்லாம் பேசாதே ஆமா. உம்பட ஊட்டுக்காரன் என்ன பெரிய கிளிக்குஞ்சு அழகனாடி? அவனெ நான் போயி வளைச்சிக்கிட்டனாம். பேச்செப்பாரு! அவனே ஒரு மண்டை மாக்கான். உன்னியப் போயி சென்னிமலையில இருந்து கட்டீட்டு வந்த நாள்ல இருந்து நிம்மதி இருக்குமா அவுனுக்கு? சென்னிமலை சந்தைக்கடைக்குள்ளார அவுசாரித் தொழிலு பண்டீட்டு சுத்தினவ தானடி நீயி. அதான் இப்புடி பேசுறே. அவன் சாமம் ஏமமெல்லாம் போயி சம்பாதிச்சுட்டு வந்து உனக்கு கொட்டறான். நீயும் தெனத்திக்கிம் கறியுஞ் சோறுமாவே தின்னுட்டு பன்னியாட்ட ஆயிட்டு, எவடா கெடைப்பா சண்டைக்குன்னு ஊருக்குள்ளார திரியுறே. ஒரு நாளைக்கி இல்லன்னாலும் ஒரு நாளைக்கிப் பாரு.. தின்னே நீ வெடிக்கப் போறே

எம்பட ஊட்டுக்காரன் எங்கடி எனக்குக் கொண்டாந்து கொட்டறான்? அவன் காசைத்தான் நீயே புடுங்கிக்கிறியே. ஆத்தா மாவாளியாத்தா சாமி.. எல்லாத்தியும் பாரு.. நீயே பாரு சாமி. பாத்துட்டே தான்டி இருக்குது சாமி. உனக்கு நல்ல சாவு வருமுன்னு மட்டும் கனா காங்காதே. அடுத்தவிங்க சாபத்தெ வாங்கி கட்டீட்டு நீ நிம்மதியா இருந்துருவியா? நானு பாக்க லட்சணமில்ல தான்டி, ஆனா உண்ட சோறு எனக்கு செரிமானம் ஆயிடும்டி. எம்பட மனசுல வஞ்சகம் இல்ல. அதனால தான்டி நான் திங்கற சோறு ஒடம்புல ஒட்டுது.

நீ செவப்பா இருந்து என்னத்த பண்ட? எமபட ஊட்டுக்காரனைத்தான் மினுக்கிக் காட்டி வளைச்சுப் போட்டுக்க முடியும். இந்த வாரம் எங்காச்சிம் எம்பட ஊட்டுக்கார்ரு காசு கமியாக் கொண்டாந்து எங்கிட்ட நீட்டட்டும், நேரா உம்பட கடைக்கி வந்து கல்லாவுல காசை எடுத்துட்டு போறனா இல்லியான்னு பாருடி. நீ இருட்டுக் கட்டுனதும் கடையச் சாத்தீட்டு எவத்திக்கி எவத்திக்கி எந்தெந்தக் காட்டுல எம்பட புருசனோட சுத்துறீன்னு எனக்குத் தெரியும்டிஎன்று சரிக்குச்சரி கத்திக் கொண்டிருந்த சுந்தரவள்ளி திடீரெனத் தலைமுடியைக் கலைத்துப் போட்டுவிட்டு மளிகை கடை வாசலிலேயே அமர்ந்து ஓவென பெருங் கூச்சலெடுத்து அழ ஆரம்பித்தாள்.

ஐயோ எம்பட ஊட்டுக்காரனை வெச்சுக்கிட்டு அவஞ்சம்பாதிக்கிற காசையெல்லாம் புடுங்கித் தின்னுட்டு இருக்காளே, இதை ஊர்ல ஒரு பெரிய மனுசனும் கேக்க மாட்டிங்களா? ஐயோஎன்று கூப்பாடு போட, கூட்டத்தில் எந்த சலனமும் இல்லை. இவுளுக்கு இதே பொழப்பாப் போச்சு. எங்க போனாலும் எதையோ ஒன்னை ஆரம்பிச்சுக்கறா, என்ற முனகல் மட்டும் தான் கூட்டத்தினுள் கேட்டது.

சுந்தரவள்ளியின் வீட்டுக்காரன் மாரியப்பன் சூதுவாது அறியாதவன். காலையில் நேரமே சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினான் என்றால் திருப்பூர் மண்ணரைக்கு அருகிலிருக்கும்ப் பனியன் கம்பெனியில் ஒன்னரை ஷிப்ட் வேலை செய்து விட்டு வீடு வருகையில் இரவு பத்தரைக்கும் மேலாகி விடும். ஊரில் என்ன நடக்கிறது? யார் யார் வீட்டில் என்ன விஷேசம், யார் யார் வீட்டில் துக்கம் என்று எதையும் கண்டு கொள்ள மாட்டான். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவனிடம் சுந்தரவள்ளி ஊருக்குள் இப்படி சேட்டை பண்ணுகிறாள் என்று யாரும் எதுவும் சொல்வதுமில்லை. அப்படியே சொன்னாலும் சரிப் பாத்துக்கறேங்க! என்று ஒற்றை வார்த்தையில் சென்று விடுவான்.

மயிலாத்தாள் காலையில் முழித்த முழியே செரியில்லை என்று கடையை விட்டு இறங்கினாள். கடையைப் பலகை போட்டு சாத்தி விடுவது தான் இப்போதைக்கான வழியாய் அவளுக்குத் தோன்றியது. அதன்படியே சுவற்றில் சாத்தி வைத்திருந்த பலகைகள் இருக்குமிடம் போய் ஒன்றாம் நெம்பர் பலகையைத் தூக்கி வந்து செருகினாள். கடை திறந்திருந்தாலும் சுந்தரவள்ளி இன்றைய ஏவாரத்தைக் கெடுத்து விடுவாள். கடை திறந்திருக்கும் வரை கடை வாசலிலிருந்து எழுந்து போகவும் மாட்டாள். ‘தேனாயா கடையச் சாத்துறே? இவுளுக்குப் பயந்துட்டா?’ என்று யாரும் ஒரு வார்த்தை கேட்கவில்லை.

கூட்டத்தில் இதுவரை புறங்கை கட்டி வேடிக்கை பார்த்தவண்ணமிருந்த சுப்பிரமணி தான் சரிப்போச்சாது என்று அழுது ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்த சுந்தரவள்ளியிடம் போனான். சுப்பிரமணி மூன்றடி உயரமே இருப்பான். ஊரில் அவனை எல்லோரும், வாடா குள்ளையா.. என்றா குள்ளையா என்றே தான் பேசுவார்கள். வளர்ச்சி இல்லாத குள்ளையன் என்றாலும் வயது முப்பத்தைந்து ஆகி விட்டது. உருளைக்கட்டை மாதிரி பார்ப்பதற்கு இருப்பான்.

த்தா சுந்தரவள்ளி எந்திரி, ஊடு கொண்டி உடறேன் நானு. இங்கென்ன சண்டை உனக்கு காத்தால? நீ எவ்ளோ நல்லவ, அவ கூடப் போயெல்லாம் உனக்கு சண்டையா. மாரியப்பன் இதைக் காதுல கேட்டா என்ன நினைப்பான்? உனக்கு என்ன சாமானம் வேணும்? சொல்லியிருந்தா நானு வாங்கிக் கொண்டாந்து உம்பட ஊட்டுல குடுத்துட்டுப் போறேன். எந்திரி சுந்தரவள்ளி. நட ஊட்டுக்கு. உம்பட கொழுந்தனாருக தான் போயி கூட்டியாடா குள்ளையான்னு தாட்டி உட்டானுக. எந்திரி மளார்னுஎன்று சுப்பிரமணி கூப்பிடவும் சுந்தரவள்ளி எழுந்தாள்.

கூட்டத்தினரை ஒரு பார்வை பார்த்தவள் கடைப்பலகையை எடுத்துச் சொருவிக் கொண்டிருக்கும் மயிலாத்தாவையும் பார்த்தபடி கலைந்து கிடந்த தலைமுடியை சுருட்டிக் கொண்டை போட்டு விட்டு தன் வீடு நோக்கி நடந்தாள். அவள் பின்னே சுப்பிரமணியும் வெக்குடு வெக்குடென நடந்தான்.

சுந்தரவள்ளி இப்படியெல்லாம் தெருவுல நீ சண்டெக்கட்டுறதெ உடவே மாட்டியா? நீயும் நல்ல பொண்ணு, உம்பட ஊட்டுக்காரனும் நல்லவன். எனக்கு சின்ன வயசுல இருந்தே அவனைத் தெரியும். அவனும் நானும் ஒட்டுக்கா ஒரே பெஞ்சுல அஞ்சாப்பு வரைக்கிம் படிச்சோம். அவ்ளோ தான் எங்க ரெண்டு பேர்த்த படிப்பும். இன்னி வரைக்கும் ஒரு பொட்டப் புள்ளைய தலை தூக்கி பாக்க மாட்டான். நீ என்னடான்னா அவன் தப்புப் பண்றதா ஊருக்குள்ளார தூத்தி உட்டு உம்புருசன் பேரை நீயே கெடுத்துட்டு இருக்கே. நீ எவ்ளோதான் அவன் மேல தப்பு போட்டாலும் ஊரே அதை நம்பாது. அவன் நல்ல புள்ளையின்னு தான் சொல்லும். வாச்சது தான் செரியில்லீங்கும் ஊரு.”

எம்பட ஊட்டுக்கார்ரு கெட்டவருன்னு நான் சொன்னனா? சென்மத்திலியும் நானு அப்புடிச் சொல்ல மாட்டேன். அடக் குள்ளையா இவளுங்க தான் அவரெ கெடுக்கப் பாக்காளுக. பாத்துட்டே இரு ஒரு நாளைக்கி வெளங்காமப் போயிருவாளுக!”

சரி சொல்றதை சொல்லிட்டேன். வீணாப் போட்டு அவம் பேரை அசிங்கம் பண்ணீட்டு இருக்காதே. சரி அது உஞ்சவுரியம். ஆமா எமுட்டு நாளா நான் உங்கிட்ட கேட்டுட்டே இருக்கேன். உம்மேல எனக்கு கொள்ளைத்த ஆசையின்னு. ஒருக்காவாச்சிம் மூஞ்சி குடுத்து சிரிச்ச மானிக்கி பேசுறியா ஒன்னா? உன்னியக் காங்கறப்பெல்லாம் பெருமூச்சு உட்டுட்டு ஆறு மாசமா சுத்துறேன். உனக்காவப் பாரு நானு ஊத்துக்குளியில இருந்து வர்றப்ப மலையாளத்தான் பேக்கரில இருந்து அல்வா பொட்டணமும் சோன் பப்புடியும் வாங்கிட்டு வந்தேன். இந்தா புடிஎன்று சுப்பிரமணி பொட்டணத்தை நீட்ட சுந்தரவள்ளி வாங்கிக் கொண்டாள்.

சேரிச்சேரி அதைம் இதைம் பேசீட்டே என் பொறத்தாண்டி ஊட்டுக்கே வந்துடாதே. எம்பட கொழுந்தனுக இருந்தா பாத்துட்டானுகன்னா உன்னிய அடிச்சுக் கிடிச்சு வெச்சுருவானுக

அவுனுக என்னெய எதுக்கு அடிக்கறானுக? அதெல்லாம் அப்புடி செய்ய மாட்டானுக. நானே குள்ளக் கத்திரிக்கா. என்றா குள்ளையா காத்து இந்தப் பக்கமா வீசுதும்பானுக. அதோட சரி. நானும் காபித்தண்ணி குடிச்சுப் போட்டு போலான்னு வந்தேன்னு சொல்லிக்கறேன்

ஊட்டுப்பக்கமே வரக்கூடாதுங்கறேன், காபித்தண்ணி வேற நான் உனக்கு வெச்சு நொட்டோணுமா? இந்தாபுடி உம்பட தீம்பண்டங்களை. ஆளப்பாரு சோளக் காட்டுக்குள்ள.. கிசுக்கு. என்னெ என்ன கேனைச்சினு நெனச்சியா?”

சரி சரி உடு சுந்தரவள்ளி. நானு உன்ற ஊட்டுக்கு வரலை. அதுக்காவ நானு ஆசையா வாங்கித் தந்த்தெ திங்காமெ உட்டுடாதே.” என்றவன் பால்சொசைட்டி சந்தில் நுழைந்து மறைந்து நின்று கொண்டான். சந்தரவள்ளி நடந்து போகும் அழகு இவனின் வயிற்றைப் புரட்டியது. வெகு நாளாகவே சுப்பிரமணிக்கு சுந்தரவள்ளி மீது கண்ணாய் இருக்கிறது தான்.

எல்லா சந்தர்ப்பத்திலும் சுந்தரவள்ளி இவனுக்குப் பிடி கொடுப்பதேயில்லை. நல்ல எசவான சந்தர்ப்பம் ஒன்றை எதிர்பார்த்துத்தான் சுப்பிரமணி காத்திருந்தான். இவனுக்கு அவளின் போக்கும் நடத்தையும் சுத்தமாக அத்துபடி ஆகிவிட்டது. சுந்தரவள்ளிக்கு ஊருக்குள் அழகான பெண்களை எப்போதும் பிடிக்காது தான். வம்பு இழுக்கவே பார்ப்பாள். சுந்தரவள்ளி வேறு திருப்பத்தில் திரும்பியதும் சுப்பிரமணி நடந்து வந்து ஆலமரத்திண்டில் ஏறி நிழலில் உட்கார்ந்தான்.

மாரியப்பனுக்கு தூரத்து உறவுதான் சுந்தரவள்ளி. மாரியப்பனுக்கு தம்பிகள் இரண்டு பேர் உண்டு. அவர்கள் இவனுக்கும் முன்பாகவே திருமணத்தை முடித்துக் கொண்டு குழந்தை குட்டிகளோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு பத்தாவது வரை படிப்பறிவும் இருந்தது. அப்பாவும் அம்மாவும் இறந்து பத்து வருடங்கள் ஓடி விட்டது.

காடு கரை என்று பத்து ஏக்கரா தேறும். அதையும் இவர்கள் ஊர்ப்பெரிய மனுசருக்கு குத்தகைக்கு விட்டிருந்தார்கள். அவர்கள் அதைப் பங்கிட்டுக் கொள்ளவும் இல்லை. இப்போதெல்லாம் சுற்றுப்புறமெங்கும் செண்ட் நல்ல விலைக்கு போய்க் கொண்டிருப்பதால் கடைசி தம்பி மட்டும் விற்று விடலாம் என்று அண்ணன்கள் இருவர் காதிலும் ஓதிக் கொண்டிருந்தான்.

மாரியப்பனை இருபது வயது வரை ஏழரை சனி போட்டு ஆட்டி விட்டுச் சென்றது. அதன் பிறகு தான் பனியன் கம்பெனிக்கு செல்லத் துவங்கினான். அடுக்கிக் கட்டுவதில் ஆரம்பித்து அயர்னிங் வரை வந்தவன் அயர்னிங் செக்சனிலேயே நின்று விட்டான். வயது முப்பதிற்கும் மேல் கூடிக் கொண்டே போன போது தான் சிவன்மலை மாமா இவனுக்காகச் சுந்தரவள்ளியைப் பேசி முடித்து சென்னிமலை ஈஸ்வரன் கோவிலில் அதிக ஆடம்பரமில்லாது திருமணத்தை முடித்து வைத்தார். இப்போது ஆயிற்று மூன்று வருடம். சுந்தரவள்ளி மாரியப்பனுக்கு ஒரு புழுவைக்கூட ஈன்று தர முடியாமல் ஊருக்குள் வம்பளத்துக் கொண்டிருக்கிறாள்.

சுந்தரவள்ளி இப்படி ஊருக்குள் வம்புச் சண்டை கட்டிக் கொண்டிருக்கிறாள் என்பதைக் கூட அறியாதவன் மாரியப்பன். அப்படி யாராவது கூறினாலும் இந்தக்காதில் வாங்கி அந்தக் காதில் தள்ளி விட்டுப் போய் விடுவான். செவிடன் காதில் ஊதிய கதை தான் அது. ஒருமுறை மாரியப்பனின் தம்பிகளே ஒன்று கூடி சுந்தரவள்ளியை அடித்து விட்ட சம்பவமும் நடந்தது.

ஊருக்குள் வந்த பாத்திரக்காரனை நிறுத்தி கடைசித் தம்பியின் பொண்டாட்டி பழைய உடைந்த ஜாமான்களைப் போட்டு வேறு புதியதாய் எடுத்துக் கொண்டிருப்பதைக் கவனித்த சுந்தரவள்ளி பொழுது சாயும் நேரத்தில் வீடு வந்த கொழுந்தனிடம், ‘உம் பொண்டாட்டி இன்னிக்கி ஒரு காரியம் செஞ்சு போட்டா. இந்தப் பாத்திரக்காரன் ஒருத்தன் வாரமானா வருவான்ல சைக்கிள் பெல்லு அடிச்சுட்டு.. அவன் கூட சோரம் போயிட்டா. இன்னிக்கி மட்ட மத்தியானத்துல கச்சேரி நடந்து முடிஞ்சிட்டுது. பாத்திரக்காரன் என்ன சாதியோ என்ன எழவோ ஊட்டுக்குள்ளார கூட்டியாந்து உக்காத்தி வெச்சு காரியம் பண்டீட்டா. நானொருத்தி இங்க இருக்குறதவே கண்டுக்காம தொண்டுப் பட்டிக்கி போயி சொளப்பு சொளப்புனு கழுவீட்டு போறா பாத்துக்க!” என்று சொன்னதும் தான் இரண்டு தம்பிகளும் ஒன்று கூடிக் கொண்டார்கள். உள் ஆசாரத்தில் வைத்து சப்பு சப்பு என வீசி விட்டார்கள்.

ஊருக்குள்ளார வம்பளக்குறது பத்தாதுன்னு ஊட்டுக்குள்ளாரவும் வம்பைக் கொண்டாரப் பாக்கியா? செவுலு திரும்பி நின்னுக்கும் பாத்துக்கஎன்று மிரட்டி வைத்தார்கள். சுந்தரவள்ளி இந்த விசயத்தை மாரியப்பனிடம் சொல்லவில்லை.

மாரியப்பனோ காற்று பலமாக வீசினால் பறந்து விடும் உடம்புக்காரன். தவிர தம்பிகள் மீது எந்தக் குற்றச்சாட்டுகளையும் யார் வைத்தாலும் விரும்ப மாட்டான். சின்ன வயதிலிருந்தே மூவருக்குள்ளும் ஒட்டு உறவு அதிகம். உள்ளூர் கோவிலுக்கு ஒரு கெடா வெட்டு வருகிறதென்றாலும் மூவரும் கலந்து தான் செய்வார்கள். சண்டை சச்சரவு என்று இதுவரை அவர்களுக்குள் நிகழ்ந்ததுமில்லை.

ஊருக்குள் ஓய்வு நேரத்தில் பெண்கள் பனியன் வேஸ்ட்டுகளை நூல் நூலாக பிரித்துக் கொண்டிருப்பார்கள். ஒரே வாரத்தில் மூட்டைக் கணக்கில் பிரித்து வாரம் இரநூறு, நூற்றைம்பது சம்பாதித்து விடுவார்கள். சுந்தரவள்ளியும் வேஸ்ட் பீஸ்களை மடியில் கட்டிக் கொண்டு யாராவது வீட்டில் அமர்ந்து டிவி பார்த்தபடி பிரித்துக் கொண்டிருப்பாள். அந்த வீட்டுப் பெண்ணிடம் அக்கா அக்கா என்று அட்டை போல பத்து நாள் ஒட்டிக் கிடப்பாள். மாதம் கூடித்தான் இரநூறு ரூபாய்க்கு பிரிப்பாள். அக்காவிடம் ஏதாவது சின்னதாக நடந்து விட்டால் ஒருமாதம் அந்த வீட்டுப்பக்கம் தலை வைத்துப் படுக்க மாட்டாள். வேறு வீடு தான். இவளுடைய வீட்டில் அமர்ந்து வேஸ்ட் பிரிக்கும் வேலையை செய்யவே மாட்டாள்.

போனவாரம் அப்படித்தான் சரஸக்கா வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பொறுப்பாக வேஸ்ட் பிரித்துக் கொண்டிருந்தாள். சரஸக்காவும் பக்கத்து திண்ணையில் பிரித்தபடி தான் அமர்ந்திருந்தது. ஊத்துக்குளி தைப்பூசத்திற்கு சரஸக்காவின் வீட்டுக்காரன் குழந்தை குட்டிகளோடு கூட்டிப்போவதாய் வாக்களித்து விட்டானாம். அதை சரஸக்கா சொல்லிக் கொண்டிருந்த போது ஊர்ப்பாதையில் குடத்தோடு எஸ்தர் டீச்சர் தண்ணிப் பைப்படிகுச் செல்வதை சுந்தரவள்ளி பார்த்து விட்டாள்.

அதே தான் கோடு. ‘இரு சரஸக்கா இந்தா வர்றேன்என்று கிளம்பியவள் தன் வீட்டு மரக்கதவிற்கு சென்று நின்று கொண்டாள். எஸ்தர் புதுப்பொண்ணு மாதிரி இடுப்பில் குட்த்தை வைத்தபடி தண்ணீர் நிரம்பிய குடத்துடன் இவளைக் கடந்து சென்றதும் வீட்டுக்குள் சென்றவள் சில்வர் குடத்தை எடுத்துக் கொண்டு பைப்படிக்கு வந்து விட்டாள்.

குடத்தை குழாய் அருகே வைத்தவள் எஸ்தர் டீச்சர் மறு நடைக்கு குடத்துடன் வருகிறாளா? என்று ஊர்ப்பாதையையே பார்த்தபடி நின்றிருந்தாள். எதிர்பார்த்தது போலவே ஊர்ப்பாதை வழியாக எஸ்தர் பைப்படிக்கு வந்து கொண்டிருந்தாள். சடக் சடக் சடக்கென கைப்பம்ப்பை அடித்துக் கொஞ்சம் நீர் பிடித்தவள் குடத்தை தூக்கிக் குலுக்கி அலாசிக் கீழே ஊற்றி விட்டு மீண்டும் குழாய் அருகே வைத்து விட்டு திரும்பிப் பார்த்தாள்.

எஸ்தர் இவள் அடித்து நிரப்பி எடுத்துச் செல்லட்டுமென புளியமர நிழலில் குடத்தை வைத்து நின்றிருந்தாள். சுந்தரவள்ளி நான்கைந்துமுறை கைப்பம்ப்பை அடித்து விட்டு கொஞ்சம் குடத்தில் நீர் சேர்ந்ததும் மீண்டும் குடத்தை எடுத்து அலாசி கீழே ஊற்றினாள். சுந்தரவள்ளி இப்படியே நான்கைந்து முறை செய்து கொண்டே இருந்தாள். இப்போதைக்கு இவள் குடத்தை நிரப்பி தண்ணீரோடு போக மாட்டாள் என்று எஸ்தர் கண்டு கொண்டாள்.

ஏன் சுந்தரவள்ளி இப்படியே பண்ணீட்டு இருக்கே? எத்தனை விசுக்கா கொடத்தை கழுவி ஊத்திட்டே இருப்பே? எனக்கு பன்னண்டு மணி பஸ்சுக்கு திருப்பூரு போற வேலை இருக்குது. இன்னம் தண்ணி கூட நான் வாக்குலஎன்று சொல்லவும் தான் சுந்தரவள்ளி ஆரம்பித்தாள்.

தேன்டி, இருக்குறவங்களுக்கு வேலைப் பொழப்பு இல்லீன்னு நெனச்சுட்டியாடி? எனக்கும் தான் ஊட்டுல ஆயிரத்தெட்டு வேலை கெடக்குது. துணிமணிக வேற தொவைக்காம ஒரு மோளி கல்லு மேல கெடக்குது. என்னமோ உனக்குத்தான் தனியா புடுங்கிக் கத்தெ கட்டுற வேலை இருக்குறாப்புல பேசுறே?”

உன்னிய சீக்கிரம் புடிச்சுட்டு போன்னு தான் சொல்றேன். எத்தன தடவெ தான் அலாசி அலாசி ஊத்திட்டே இருப்பே?”

பார்றா, தண்ணிப் பைப்பு என்ன உன்ற அப்பனூட்டுச் சொத்தா? என்னமோ உங்கொப்பனூட்டு மொதலு தேஞ்சு போற மாதிரி கத்துறே?”

நாங் கத்தலை ஆயா.. சீக்கிரமா புடி

என்னத்த புடி புடி? என்னமோ பள்ளியோடத்து புள்ளைங்களை படி படின்னு வெரட்டுற மாதிரி இங்க ஊருக்குள்ள நாட்டாமெ பண்ணப் பாக்கே?”

சப்தம் பெரிதாகப் பெரிதாக என்னமோ ஏதோ என்று பைப்படிக்கு பெண்கள் கூட்டம் வந்து சேர்ந்தது. ஏன்டா இவொகிட்ட வாயைக் குடுத்தோமென எஸ்தர் டீச்சருக்கு சங்கட்டமாகி விட்டது. கூட்டத்திலிருந்து ஒருத்தி மட்டும் குரல் கொடுத்தாள்.

தா சுந்தரவள்ளி, டீச்சரை உட்டுரு. அதும்மோட சோலிக்கி அது போயிச் சாட்டாது. டீச்சரு பாவம் திரு திருன்னு முழிக்குது பாரு. அதுக்கென சோலியோ என்னமோ. தாட்டி உட்டுட்டு போவியா

ஆமாமாயா.. நான் தாட்டி உட்டதும் நேரா இவொ திருப்பூரு போறங்கறா. இவுளுக்கு இன்னிக்கி சனிக்கிழமெ. பள்ளியோடம் கெடையாது. எதுக்கு போறாங்கறே? எம்பட புருசன் கம்பெனிக்கி போயி வாசக் கதவுக்கிட்ட நின்னுக்குவா. இன்னிக்கித் தான அவுருக்கு சம்பள நாளு. நேரத்துலயே அவரை காசை வாங்கீட்டு வெளிய  வரச் சொல்லி அவரை மொதலாட்டத்துக்கு சினிமாக்கு கூட்டிட்டு போயிருவா. இவ வாரமானா இதே வேலை தான் பண்டீட்டு இருக்கா. என்ற ஊட்டுக்கார்ரு கூல்டிரிங்ஸ் வாங்கிக் குடுப்பாரு இவுளுக்கு.

அந்த நீட்டக் குச்சிய பாட்டிலுக்குள்ளார போட்டு உருப்பு உருப்புனு இவொ குடிப்பா. எம்பட ஊட்டுக்காரனை வெச்சுட்டு இருக்கா இவொ. இவளை நேரங்காலமா பஸ்சுக்கு நான் தாட்டி உடோணுமா? இல்ல எந்தூரு நாயம் இதுன்னு கேக்கேன். செவப்பா இவொ தக்கோளிப் பழமாட்ட இருந்தா வேற ஆரையாச்சிம் போயிப் பிடிச்சு முந்தானையில முடிஞ்சுக்க வேண்டீது தான? எம்பட ஊட்டுக்காரன் தான் கெடைச்சானா இவுளுக்கு?” என்று சுந்தரவள்ளி சத்தத்தைக் கூட்டவும், எஸ்தர் டீச்சர் வீலெனக் கத்திக் கொண்டு காலிக் குடத்தோடு வீடு நோக்கி ஓட்டமாய் ஓடினாள்.

இதுக்காடி திண்ணையில இருந்து அவ்ளோ அவசரமா இரு வர்றேனுட்டு ஓடியாந்தே? நல்ல கதை போ. போங்க எல்லாரும். இவுளுக்கு வேற வேலையே இல்லசரஸக்கா கிளம்ப எல்லோரும் இட்த்தைக் காலி செய்தார்கள். சுந்தரவள்ளி வெற்றிப் பெருமிதத்துடன் குடத்தை நிரப்பி இடுப்பில் வைத்துக் கொண்டு வீடு கிளம்பினாள்.

சுப்பிரமணி ஆலமரத் திண்டில் தான் பீடி ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான். சுந்தரவள்ளியை இவனால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை. இவளென்ன எல்லாப் பெண்களுமே அப்படித்தான் என்றே நினைத்தான். சுந்தரவள்ளியிடம் ஆசையாய் எதைக் கொண்டி நீட்டினாலும் மறுக்காமல் வாங்கிக் கொள்கிறாள். வேண்டாம் போடா உன்னுது, என்று சொல்வதுமில்லை. வீடு வர்றேன் என்றால் சரி வா! என்று மட்டும் சொல்லவே மாட்டேன் என்கிறாள்.

சுந்தரவள்ளிக்கு தீனி வாங்கிக் கொடுத்த செலவு மட்டும் இந்த ஆறு மாதத்தில் ஆயிரத்தை தாண்டிப் போயிருக்கலாம் என்றே தோன்றியது. இப்படியே போய்க் கொண்டிருந்தால் செலவு கணக்கு மட்டும் தான் ஏறிக் கொண்டே போகும். சுந்தரவள்ளியும் போக்குக் காட்டிக் கொண்டே பிடி கொடுக்காமல் போய்க் கொண்டே தான் இருப்பாள். இன்று ஏதாவது செய்தாக வேண்டும். பிறகு ஆனது ஆகட்டும்.

வீதியில் தொப்ளான் ராமசாமியின் ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்தான். ‘ஏன்ணே? இன்னிக்கி எங்கீம் போவலியாக்கோ? ஒரு பீடி இருந்தா தாருங்களேன்!’ என்று இவனிடம் வந்து கேட்டு வாங்கி பற்றிக் கொண்டு ஆடுகள் பொறத்தே ஓடினான். ஊரில் தொப்ளான் ஒருத்தன் தான் இவனை அண்ணே போட்டு அழைப்பவன். மற்றபடி ஊரில் இருக்கும் பொட்டு பொடுசுகளுக்கும் கூட இவன் குள்ளையன் தான்.

மாரியப்பனின் தம்பிகள் இந்த நேரத்திற்கு சிகில் நிட்டிங் கம்பெனிக்கு ஊத்துக்குளி சென்றிருப்பார்கள். அவர்கள் பொடுசுகளும் பள்ளிக்கூடத்திற்கு வந்திருப்பார்கள். மறுபடியும் ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு இறங்கி நடந்தான் சுப்பிரமணி. ரயில்வே பாலத்தை தாண்டி சுந்தரவள்ளி வீடு நோக்கி விறுவிறுவென சென்றான்.

அவன் இதயம் வேறு தடக் தடக்கென தடதடக்க ஆரம்பித்து. சுந்த்ரவள்ளியின் பக்கத்து வீடுகளின் கதவுகள் எல்லாமே சாத்தியே கிடந்தன. ஆவுற போது ஆவட்டும் என்று விட்டு விட்டு திரும்பி விடலாமா? என்று கூட இருந்தது அவனுக்கு. இருந்தும் காம்பெளண்டு மரக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். தட்டுப்போர் அருகே மாடுகள் இரண்டையும் காணவில்லை. அது அவனுக்கு சந்தோசமாய் இருந்தது. மாரியப்பனின் நடுத்தம்பியின் மனைவி அவைகளை அவிழ்த்துக் கொண்டு ரயில் ரோட்டோரம் சென்றிருப்பாள்.

நீக்கியிருந்த நடைக்கதவை நோக்கி பூனை மாதிரி சென்றவன் கதவை ஒண்டி நின்று உள்ளே நிலவரத்தை நோட்டமிட்டான். ஆசாரத்தில் ஆள் அரவமே இல்லாமலிருந்தது. மளமளவென ஆசாரத்திற்குள் வந்தவன் வடக்குப் பார்த்திருந்த சுந்தரவள்ளியின் வீட்டுக் கதவு ஒந்திரித்து சாத்தியிருப்பதைப் பார்த்தான். ஆக அவள் உள்ளே தான் இருக்க வேண்டும். கதவை சத்தமில்லாமல் உள்நோக்கித் தள்ளினான். ஆள் நுழையும் அளவு திறந்து தலையை நீட்டி உள்ளே பார்த்தான். சுப்பிரமணி தன் நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டு உள்ளே சென்றான்.

மேபக்கத்து சமையலறை ஜன்னல் திறந்திருந்ததால் வெளிச்சம் வீட்டினுள் இருந்தது. கதவை பழையபடி சாத்தி விட்டு சுந்தரவள்ளியைத் தேடினான் வீட்டினுள். அவள் கயிற்றுக் கட்டிலில் மேற்கே சுவரைப் பார்த்து குறுக்கிப் படுத்திருந்தாள். அவளைக் கண்டதும் ஜிவ்வென மண்டைக்குள் மின்சாரம் பாய்ந்தது போலத் துடித்தான் சுப்பிரமணி.

வடக்குச் சுவற்றில் விநாயகர், வள்ளி தெய்வானை, முருகன், திருப்பதி என்று சாமி போட்டோக்கள் மாட்டப்பட்டிருந்தது. ஒவ்வொரு சாமியாய் கையெடுத்துக் கும்பிட்டான். போட்டிருந்த காக்கி டவுசரை சாமி படத்திற்கும் முன்பாகவே கழற்றிப் போட்டு விட்டு மளாரென கட்டிலுக்குத் தாவினான் சுப்பிரமணி.

திடுக்கிட்டுப் போன சுந்தரவள்ளி, ‘உட்றா உட்றா என்னை குள்ளையா! டேய் உட்றா! கத்துப் புடிச்சுடுவன்டா!’ என்று இவனை கட்டிலில் இருந்து உருட்டி கீழே தள்ளிவிட முயற்சித்தாள். சுப்பிரமணி மிருகம் மாதிரி மாறிப் போனான் அந்த நிமிடத்தில். சுந்தரவள்ளியை இறுக்கிக் கொண்டு அவளின் கன்னம், கழுத்து, மூக்கு, உதடு என்று மாறி மாறி முத்தமிடத் துவங்கினான்.

சுந்தரவள்ளி தம் கட்டி இவனைத் தள்ளி விட முயற்சித்து தோற்றுப் போனாள். குள்ளையனுக்கு இவ்வளவு பலம் எங்கிருந்து வந்தது என்று அவளுக்கு தெரியவே இல்லை. பாறை ஒன்று தன் மேல் விழுந்து அழுத்தி விட்டது போன்றே இருந்தது அவளுக்கு. கால்களைஒ உதறலாம் என்று உதறும் சமயம் சுப்பிரமணி இவளின் தொடைச் சந்திற்கு முகத்தைக் கொண்டு சென்று விட்டான். சந்தரவள்ளியின் இரண்டு தொடைகளையும் இறுக்கமாகப் பிடித்து விலக்கிய போது தான் குள்ளையன் சாமானியப் பட்டவன் அல்ல என்று சுந்தரவள்ளிக்குத் தோன்றியது. குள்ளையன் வேகமாய் முன்னேறிக் கொண்டிருந்தான். சுந்தரவள்ளியும் தன் வசமிழந்து குள்ளையனிடம் சரண்டைந்து கொண்டிருந்தாள்.

எல்லாம் முடிந்தபிறகு குள்ளையன் எழுந்து கட்டிலின் முனையில் காலைத் தொங்கப் போட்டு அமர்ந்து மூச்சு வாங்கினான். பின் எழுந்து போய் தன் டவுசரை எடுத்து மாட்டிக் கொண்டு, டவுசரிலிருந்து பீடி ஒன்றை எடுத்துப் பற்ற வைத்து புகையை சாமி படங்களை நோக்கி அன்னாந்து குப்பென ஊதினான். சுந்தரவள்ளி மேலே கூரை ஓட்டைப் பார்த்தபடி வெறித்துக் கிடந்தாள் கட்டிலில். இவன் அவளருகே சென்று அவளது கன்ன்ங்களைத் தட்டி, ’அப்ப நான் போயிட்டு வரட்டுமா சுந்தரவள்ளி?’ என்று முனகினான்.

கையைத் தட்டி விட்டு கலைந்து கிடந்த சேலையைக் கால்வரை இழுத்து விட்டு எழுந்து கட்டிலின் விளிம்பில் அமர்ந்தவள் தன் முன்னே நின்றிருந்த சுப்பிரமணியின் நெஞ்சில் குடீர் குடீரென குத்தினாள். சிரித்த வண்ணமே குத்துகளை வாங்கிக் கொண்டவன். ’எந்தங்கம்.. என்னையப் போட்டு அடிக்குது!’ என்று சிரித்தபடி பீடிப் புகையை அவள் முகத்தில் ஊதினான். ‘சீக் கருமம் போடா! பொகையக் கொண்டாந்து மூஞ்சில ஊதுறான். நாத்தம் கொடலைப் புடுங்குது. ஓடிப் போயர்றா.. ஓடீரு. எந்திரிச்சன்னா உன்னியக் கொன்னே போடுவேன். ஓடீர்றா!’ என்றாள்.

என் செல்லம் என்னையக் கொல்லுதாமா!’ என்றவன் தன் உள்ளாங்கையில் முத்தம் வைத்து சுந்தரவள்ளியை நோக்கி ஊதினான். ‘போயிட்டு வர்றேன் தங்கம்என்று சாத்தியிருந்த கதவை நீக்கி பூனை போல வெளியேறினான்.

குள்ளையன் போய் விட்டதும் எழுந்தவள் கலைந்து கிடந்த தலைமுடியைக் கொத்தாக பிடித்து சுருட்டிக் கொண்டையாக கட்டி விட்டு பனியன் வேஸ்ட்டுகளை கொஞ்சம் மடியில் கட்டிக் கொண்டாள். கதவைப் பூட்டி சாவியை இடுப்பில் செருகிக் கொண்டு சரஸக்கா வீடு வந்தாள். திண்ணையில் அமர்ந்திருந்த சரஸக்கா நிச்சயமாக குள்ளையனை பார்த்திருக்குமே! என்று நினைத்தாள்.

வாடி சுந்தரவள்ளி, நேத்து ஊருகுள்ளார ஒரு கூத்து ஒன்னு நடந்து போச்சாமில்ல! தெரியுமா உனக்கு?” என்று சரஸக்கா ஆரம்பித்தது. சுந்தரவள்ளியும் போய் திண்ணையில் அமர்ந்து, ‘அந்தக் கூத்தை உடுக்கா நீயி, கூத்தாம் கூத்து. இதைக் கேளு மொதல்ல நீயி. இந்த சுப்பிரமணிக் குள்ளையன் இருக்கான்லக்கா.. அவன் இப்ப சித்த முந்தி எம்பட் ஊட்டுக்குள்ளார முட்டி என்னையக் கட்டலோட சேத்தி அமுத்தி காரியத்தை பார்த்துட்டு போயிட்டானக்கா! என்னத் தங்கம்ங்கறான், செல்லங்கறான், அவம் மூஞ்சியக் கொண்டி எங்க வச்சான் தெரியுமாக்கா?’ என்று ஆரம்பித்தவளிடம், ‘த்தா கூறு கெட்டவளே! திண்ணையில வந்து உக்காந்துட்டு என்ன நாயமடி பேசுறே.. பேச்சை பாரு!’ என்று சரஸக்கா சப்தமிடவும் இவள் கோவித்துக் கொண்டு எழுந்தாள். ‘உங்கிட்டப்போயி நானு சொல்ல வந்தேம்பாருஎன்றபடி கோமதியக்கா வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தாள் சுந்தரவள்ளி.

                                                   -செளந்தரசுகன்
                                                    ஆகஸ்டு -2009.Post Comment

கருத்துகள் இல்லை: