செவ்வாய், ஆகஸ்ட் 25, 2015

சிறுகதை - டவுனுக்குப் போனேன்டவுனுக்குப் போனேன்

எங்கம்மா எனக்கு ட்ரவுசர் போட்டு வுடுறப்பவே நெனச்சிக்கிட்டேன், முன்னுக்கால வூட்டு சரோசா புள்ள கிட்ட ஓடிப்போயி, ‘ஏய் பாருடி, சரட்டு புதுசு டவுசரும் புதுசு. நீதான் தான் தெனமும் புதுசு புதுசா போடுவியா? நீதான் பஸ்ஸுல ஊருக்கெல்லாம் போவியா? நானும் எங்கக்காவும் அம்மாவும் இன்னிக்கு டவுனுக்குப் போறோம். அங்க தான் எங்க சித்தப்பாரு வீடு இருக்குதுஅப்படின்னு சொல்லிட்டு டாட்டா பை பை சொல்லோணுமுன்னு நெனச்சுக்கிட்டே புதுச் சொக்கா போட்டுக்கிட்டேன்.

இன்னிக்கி பட்டாஸ் உடற நோம்பியோ, தூறி ஆடுற நோம்பியோ எதுவும் இல்ல. எங்கம்மா கிட்ட காலையிலயே கேட்டுக்கிட்டேன். நெசமாலுமே இன்னிக்கி நாம டவுனுக்கு போறமான்னு. அம்மாவும் ஆமாம்டான்னு சொல்லிடுச்சு. புதுச் சொக்கா சேப்புக் கலர்ல இருந்துச்சு. மொதல்லயே எப்பாச்சிம் வாங்கி பொட்டிக்கி அடியில ஒளிச்சு வச்சிருந்தாலும் வச்சிருந்திருக்கும் எங்கம்மா.

அங்கீம் இங்கீம் ஓடிப்போயி புழுதில உழுந்து சட்டைய அழுக்குப் பண்டிப்போடாதே! அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வந்துரும் பாத்துக்கன்னு அம்மா சொல்லச் சொல்ல சரோசாப் புள்ள ஊட்டுக்கு ஓடியாந்துட்டேன். சரோசா புள்ளையோட தங்கச்சி தான் ஆசாரத்துல உக்கோந்துட்டு டிக்கி டிக்கி அடிச்சுட்டு வெள்ளாண்டுட்டு இருந்துச்சு. பிரிட்டானியா பிஸ்கோத்து பிஞ்சு பிஞ்சு பாப்பாவைச் சுத்தியும் கெடந்துச்சு. எச்சிப்பண்ணி எச்சிப் பண்ணி போட்டுருது பாப்பா. முழுசா ஒரு பிஸ்கோத்துக் கெடந்தாலாச்சிம் எடுத்து தின்னுபோட்டு கொக்காணி காட்டலாம் பாப்பாக்கு. ‘ண்ணா .. போடா ண்ணா உங்கூட்டுக்குபாப்பா தான் அப்படின்னா என்னெப் பாத்து.

சரோசா புள்ளையோட அம்மாதான் ஊட்டுக்குள்ளார இருந்து வந்து என்னையப் பார்த்து, ‘சரோசா அவிக மாமா ஊட்டுக்குக் காத்தால நேரத்துலயே பஸ்ஸுல போயிட்டான்னு சொல்லுச்சு. அவிங்க மாமா நேத்து சாயங்காலம் வீட்டுக்கு வந்திருந்தாராம். பள்ளியோடம் லீவு ரெண்டு நாளைக்கி இருக்கங்காட்டி கூட்டிட்டு போயிட்டாராம். இனி எப்போ வருவாளோன்னு நெனச்சிட்டே நான் எங்கூட்டுக்கு வந்துட்டேன்.

எங்கக்கா மாலினி புளூ கலர்ல புதுத் தாவணி போட்டிருந்தா. படக் படக்குனு ஓடியோடி கண்ணாடி முன்னாடி நின்னு மொகரக் கட்டைய பாத்துக்கிட்டா. பெரிய இவொ இவ. கரகாட்டக்காரி கனகான்னு நெனப்பு போல இருக்கு. பகடர் பூசுறா பொட்டு வெச்சிக்கறா மையி அப்பிக்கறா!

அப்புறமேத்திக்கி எங்கம்மா ஊட்டைப் பூட்டிச் சாவிய எடுத்துக்கிச்சி. நாங்க கெளம்பீட்டோம். தெருவுல நடந்தப்ப எம்பட ஜோடியாளுங்க எல்லாரும் எங்கடா? எங்கடான்னானுக! பஸ்ஸுல போறண்டா டவுனுக்குன்னேன். போறப்ப எங்க போறீன்னு யாரும் கேக்கப்புடாதாமே! அப்படி கேட்டுட்டா போற காரியம் வெளங்குனாப்புல தான்னு எங்கம்மா வேற சொல்லிட்டே வந்துச்சு. ஒரு மைல் நடந்து வந்து பஸ் புடிச்சு நாங்க ஏறினோம். நானு சன்னலோரமா வேடிக்கை பாக்குறதுக்கு உக்கோந்துக்கிட்டேன். பஸ்ஸும் கெளம்பிடுச்சு.

அந்தப்பக்கத்து ஓரத்து சீட்டுல ஒருத்தன் கையில செல்லுப்போனைப் புடிச்சு நோண்டீட்டே வந்தான். அப்புறம் அதை ஜோப்புக்குள்ளார போட்டுட்டு எங்கக்காவ பாக்க ஆரம்பிச்சுட்டான். வ அவனைப் பாத்து பல்லைக் காட்டுறதும் அவன் இவளைப் பார்த்து பல்லக் காட்டுறதும்.. ‘அக்கா ஆரது?’ன்னேன். ‘சீப் போடா!’ன்னு எம்பட தொடையில கிள்ளி வெக்கிறா. ‘அம்மா கையில சொல்றம் பாரு இப்பஅப்படின்னதும், ‘கெரவம் புடிச்சவனே சொல்லிடாதேடாஅப்படிங்கறா.

ஆமா சித்தப்பாரு வூட்டுக்கு நாம எதுக்காவப் போறோம்?’ அப்படின்னேன். ‘காசு வாங்கத்தான் போறோம். எனக்கு கலியாணம் நடக்கப்போவுது. நம்ம அப்பா உசுரோட இருந்தப்ப அந்தாளு கிட்ட காசு குடுத்து நம்மளைக் காப்பாத்தச் சொல்லுச்சாம். அதை வாங்கீட்டு வர்றதுக்குப் போயிட்டு இருக்கோம்அப்பிடின்னா. ‘ஓஹோ அப்படியா சமாச்சாரம்அப்படின்னேன்.

சித்தப்பாரு இன்னிக்கி நம்மளை விஜய் படத்துக்கு கூட்டிட்டு போயி  காட்டுவாரு, ஜாலியா இருக்கலாம்னு அவ சொன்னங்காட்டி எனக்கு ஒரே சந்தோசம் தான். ‘மதுரைக்கிப் போவாதடி அங்க மல்லியப்பூ கண்ணெ வெக்கீம், தஞ்சாவூர் போவாதடி தலை ஆட்டாம பொம்மெ நிக்கிம்னு முனகிட்டே வெளிய வேடிக்கை பார்த்துட்டே வந்தேன். அப்புறம் பஸ் ஒரு எடத்துல நின்னதும் பச்சுன்னு சனமே முச்சூடும் இறங்கங்காட்டி அம்மாவும் நாங்களும் இறங்கிட்டோம்.

எங்கம்மா பொறவு எங்களை நடக்கடிச்சே கூட்டிட்டு போனா. போறோம் போறோம் சந்து சந்தா.. தடம் மூயவே மாண்டீங்குது. ‘ஏம்மா சித்தப்பாரு ஊடு இன்னம் எவ்ளோ தூரத்துல இருக்குது? நாம இன்னம் நடக்கணுமா?’ அப்பிடின்னேன். ‘இன்னம் கொஞ்சம் தூரம் தான் சாமி, கிட்டக்க வந்துட்டோம்னா. ‘சித்தப்பாரை பார்த்து வெகு நாளாச்சி. அப்பா கருமாதி அன்னிக்கி வந்தவரு அப்புறம் எங்கேக்கா?’ன்னேன். ‘அவரு நம்ம கூடவேவா இருப்பாரு? சோலி பாக்க வேணும்ல. அதான் டவுனுக்கே வந்துட்டாருஅப்படின்னா.

ஒருவழியா சித்தப்பாரு ஊடு வந்து சேர்ந்துட்டோம். நேரம் வேற உச்சி வெயில் யிடுச்சு. வீட்டுக்குள்ளார போனதீம் அம்மாவும் அக்காவும் சித்தி கூட பேசிட்டு ஒரு ரூமுக்குள்ள போயி கதவச் சாத்திட்டாங்க. நானு ஆசாரத்துல டிவி ஓடிட்டு இருந்தங்காட்டி அங்கியே  அதை வேடிக்கை பார்த்துட்டு நின்னேன். சித்தி இன்னா முட்டும் நாடகம் பார்த்துட்டு இருந்திருக்குமாட்ட.

குடுகுடுன்னு ஏராப்பிளேன் ஒன்னை கையில புடிச்சுட்டு எம்பட சோட்டு பையன் ஒருத்தன் உள்ளார ஓடியாந்தான். வந்தவன் என்னெய யார்றா இவன் புதுசா ஊட்டுக்குள்ளார நின்னுட்டு இருக்கானேன்னு பார்த்தான். அவன் வாயி உர் உர் உர்ர்ருன்னு சத்தம் வேற போட்டுட்டு இருந்துச்சு. ‘ப்ளைனை குடு பாக்கலாம்ன்னேன். பொச்சுக்கு பொறத்தீல மறைச்சுக்கிட்டு மண்டைய தரமாட்டேன்னு ஆட்டினான். ‘புடிச்சுக் கிள்ளி வச்சுடுவேம் பாத்துக்கஅப்பிடின்னதும். பார்த்துட்டு குடுத்துடோணும்னு சத்தியம் பண்டச் சொன்னான். அவங்கையில சத்தியம் பண்டீட்டு ப்ளேனை கையில வாங்கீட்டேன். ச்சே! சூப்பரு! இதுக்குத்தா டவுன்ல இருக்கோணுமுங்கறது. அங்க வரப்பட்டிக்காட்டுல மசரா இருக்குது?

உள்ளார அம்மா சத்தம் போட்டு பேசீட்டு இருந்தா. சித்தப்பாரு கெட்ட கெட்ட வார்த்தையில என்னமோ சத்தம் போட்டாரு போல. ஏழு ஊருக்கு கேக்குற மாதிரி பேசிக்கிட்டாங்க. கடேசியா எங்கம்மா, நாசமாப்போ!ன்னு கத்திட்டு வெளிய வர்றப்ப இவன் என்னடான்னா அவங்காயா செத்துப் போனாப்புல அழுதுட்டு உள்ளார ஓடினான். நானு சுத்திலும் ஒருவிசுக்கா பார்த்துட்டு ப்ளேனை சோப்புக்குள்ளார போட்டுக்கிட்டேன்.
டிவி பொட்டிலயும் ஒருத்தி நாசமாப்போன்னு தான் சொல்லிட்டு இருந்தா எங்கம்மா மாதிரியே. இன்னிக்கி எப்பிடியும் சித்தப்பாரு விஜய் படத்துக்கு கூட்டிட்டு போயி தியேட்டர்ல படங்காட்டுவாப்ல! திடீருன்னு. ‘வாடா மொள்ளமாரி அவனே அமட்டையும் தின்னு பேதி வந்து தூக்கீட்டு போவட்டும்னுஎங்கையை புடிச்சு இழுத்துட்டு ஊட்டை உட்டு வந்தா. அப்ப இன்னிக்கி விஜயை பாக்க முடியாதாட்ட தெரியுதே.

வெச வெசையா அம்மா என்னை இழுத்துட்டு ரோட்டுல நடந்தா. எங்கக்காவும் கண்ணுல தண்ணி வர முசுக்கு முசுக்குன்னுட்டே பொறவுக்கு வேகமா வந்தா. கொஞ்சம் தூரம் வந்ததீம் நான் ஜோப்புல இருந்து ப்ளேனை எடுத்து அம்மாட்ட காட்டினேன்.

மளார்னு புடுங்கி டிச்சுக்குழியில வீசிட்டா எங்கம்மா அதை. ‘திருட்டுக் கழுதை! அந்த நாசமாப் போனவனுது ஒன்னும் வேண்டாம்டான்னா!’ ‘ஐயோ பிளேனு போச்சே! எம் பிளேனு போச்சே! எனக்குப் பிளேனு வேணும்அப்படின்னு அழுவாச்சிய ஆரம்பிச்சுட்டேன். ‘அம்பதாயிரத்தை குடுக்கவே இல்லையின்னு சத்தியம் பண்டீட்டு  இருக்கான் அவன். வக்காளி உனக்கு பிளேனு ஒரு கேடுஅப்படின்னு எம்பட முதுகுல சாத்துனா! எங்கக்காவும் ஒன்னு முதுகுல ஓசீல வெச்சா!

மறுக்காவும் கொண்டாந்து பஸ்ஸுல உக்காத்தி வச்சாளுக! இவுளுக என்ன நெனச்ச போது சிரிக்காளுக, நெனச்ச போது மொத்துறாளுக? சவுரீத்துக்கு. ம்.. நாளைக்காச்சிம் சரோசா புள்ள கிட்ட டவுனுக்குப் போனேன்டி அப்படின்னு சொல்லோணும்.

000

(1989-ல் ஊன்றுகோல் இதழில் எழுதிய கதை இது. செல்போன், விஜய் என்று சின்ன மாற்றமுடன் இங்கே)

Post Comment

கருத்துகள் இல்லை: