சனி, ஆகஸ்ட் 22, 2015

தூங்காமத் திரியறாங்க (சிறுகதை)தூங்காமத் திரியறாங்க
துன்புறும் உறுப்புகளின் அழுகைக் குரலே
நோயின் அறிகுறி எனப்படுகிறது - சார்க்கோ.

இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கும் மனநலக் காப்பகம் நகரை விட்டு ஒதுக்குப் புறத்தில் பலவகையான மரங்கள் சூழ்ந்த அமைவினுள் இருந்தது. காப்பகத்தினுள் தென்பட்ட மூன்று கட்டடங்களிலிருந்தும் கூட்டுக் கலவையான ஒலிகள் கேட்டபடி இருந்தன. மனநல மருத்துவத்தில் பயிற்சி பெற்ற வல்லுனர்களின் நடமாட்டமும் சிறப்புப் பயிற்சி பெற்ற செவிலியர்களின் நடமாட்டமும் இருந்தபடியிருக்க, அவர்களை வெறித்த பார்வையுடன் சில பிணியாளர்கள் உற்று நோக்கித் தமது படுக்கை மீது அமர்ந்திருந்தார்கள். கையில் நீளமான நோட்டுகளை வைத்திருக்கும் மனநல மருத்துவ முதுநிலைப் பட்டம் படிக்கும் மாணவர்கள் பிணியாளர்களிடம் நின்று உடல் நிலை பற்றி விசாரித்த வண்னமிருந்தனர்.

பெரிய மருத்துவர் அறைக்கு வெளியே பிணியாளர்களை அழைத்து வந்திருந்த உறவினர்கள் கையில் எக்ஸ்ரே, ப்ளட் ரிசல்ட், யூரின்  ரிசல்ட் இவற்றைக் கையில் பிடித்தபடி, பிணியாளர் மீதும் கண் வைத்தபடி தங்களது டோக்கன் எண் அழைக்கப்படுமா? என்று காத்து அமர்ந்திருந்தனர். அவர்கள் முன்புறமாகஉஸ்ஸ்ஸ்என்று குழந்தையொன்று வாய் மீது ஆள்காட்டி விரலை வைத்தபடி இருக்கும் பெரிய புகைப்படம் இருந்தது. வயது முதிர்ந்த பிணியாளர் ஒருவர் புகைப்படத்தைப் பார்த்து அதன்படியேஉஸ் உஸ்என்று சப்தமிட்டு சைகை காட்டி அமர்ந்திருந்தார்.

வெளியே ஆலமரத்தினடியில் சாப்பிட மறுத்து பிணியாளர்கள் அழுது கொண்டும், ஓட்டமாய் ஓடி மரத்திற்குப் பின்புறமாக ஒளிந்து கொக்காணி காட்டிக் கொண்டும் இருந்தார்கள். வெற்றுத்தாளைப் பிடித்திருந்த ஒரு பெண்மணி, ‘அன்புள்ள அத்தான், நான் நலம். நீங்கள் நலமா?’ என்கிற வரிகளை மட்டும் திரும்பத் திரும்ப பரிட்சைக்கு மனனம் செய்வது போல படித்தபடி சென்று கொண்டிருந்தார். பிணியாளர்களை சேர்க்க வந்திருந்தவர்களுக்கு வேடிக்கையாய் இருந்தது அங்கு. ‘ச்சீக் கருமம் சீக் கருமம்என்று ஒருவர் துண்டை உதறி உதறித் தோளில் போட்டுக் கொண்டு நடந்து போனார்.
நீளமான ஹாலில் தான் எல்லாப் பிணியாளர்களும் தங்களது பச்சை வர்ப் படுக்கை மீது படுத்திருந்தார்கள். பிணியாளர்களில் ஒரு சிலர் மேலே சுழலும் மின் விசிறியையே எரித்து விடுவது போல வெறித்துப் பார்த்தபடி படுத்திருந்தனர்.

நாம் சுந்தரவள்ளியிடம் வருவோம்.

சுந்தரவள்ளி நகரை விட்டு ஒதுங்கியிருக்கும் சிற்றூரிலிருந்து வந்தவள். சுந்தரவள்ளியின் தாயார் தான் காப்பகத்தில் ஒரு வாரத்திற்கும் முன்பாக இவளைக் கொண்டு வந்து சேர்த்து விட்டுப் போயிருந்தாள். வாய் ஓயாத பேச்சு ஒன்று தான் சுந்தரவள்ளியிடம் குறை. பேச்சு. பேச்சு. என்னம்மா பண்ணுது? என்று யார் கேட்டாலும் சரி, பேச்சு. வரும் கார்த்திகை வந்தால் இருபதாவது வயதில் அடியெடுத்து வைக்கப்போகும் சுந்தரவள்ளிக்கு மனநிலையில் பிசகு ஏற்பட்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டதாகவும், அப்பா இறந்த அன்றிலிருந்து தான் இப்படி என்றும் பதிவேட்டில் அம்மா சொல்லியிருந்ததை குறித்திருக்கிறார்கள்.

மருத்துவமனைக்கு வந்ததிலிருந்து தன்னைப் பார்க்க சுந்தரன் என்கிற வாலிபன் தினமும் மதியமும் இரவிலும் வந்து தனக்கு ரோசாப்பூ கொடுத்து, ‘ஐ லவ் யூ சுந்தரவள்ளிஎன்று  கூறியும், பெயர்ப் பொருத்தம் சோதிடனிடம் பார்த்தாயிற்று என்றும் கூறி முத்தங்கள் கொடுத்துப் போகிறான் என்றும் செவிலியர்களிடம் கூறிக் கொண்டிருந்தவள். நேற்று முன் தினம் அவன் தன்னை உருட்டிப் புறட்டிக் கற்பழித்துவிட்டான் என்றும், தன் குறிக்குள் அவனது குறியை நிரந்திரமாக செருவி வைத்து விட்டுப் போய் விட்டான் பாவி என்றும் அழுது புலம்பிக் கொண்டிருந்தாள்.

அப்படியெல்லாம் நடைபெறவில்லை என்று செவிலிகள் விளக்கமளித்தாலும் உள்ளே குத்திக் கொண்டே நிற்கிறதே! என்று செவிலியர்களுக்கு விளக்கியவள் எதைக் கண்டு கொண்டாளோ நேற்றிலிருந்து எந்தச் சப்தமும் போடாமல் ஒழுங்காக மாத்திரை விழுங்கி தூங்கிக் கிடந்தாள். இந்த சமயத்தில் நாமும் அவளிடம் தான் சென்று நிற்கிறோம். இனி சுந்தரவள்ளியே பேசட்டும்.

யாராச்சிம் என்னெப் பத்தி பொரளி  பேசீட்டு இருந்தீங்கன்னாப் பாத்துக்கங்க.. எனக்கு பொல்லாத கோவம் வந்துரும் ஆமா! எப்பப் பார்த்தாலும் என்னோட நாயத்தையே ஏன் கூடிக் கூடி உக்காந்து பேசுறீங்க? வேற வேலை வெட்டி எதுவும் இல்லீன்னா டிவி பாருங்களேன். சரி பேசுறது தான் பேசுறீங்க.. என்னெப்பத்தி நல்லவிதமா யாராச்சிம் ஒருத்தி பேசுறீங்களா? எனக்குப் பித்துப் பிடிச்சிப் போச்சுன்னு பேசறீங்க. அம்மாவாசை கண்டா ஓவரா சவுண்டு உடறனாம். என்ன பேச்சு இது? சரிப் பேச்சோட தான் உடறீங்களா? எங்கம்மாட்ட வெசம் வெச்சு கொன்னு போடு, இது ஒன்னத்துக்கும் ஆகாதுன்னு வேற சொல்லி தாட்டி உடறீங்க. நான் செத்துப் போயிட்டா எல்லாரும் நிம்மதியா இருந்துக்குவீங்களா? சண்டைக்கே நான் நிக்கேன்.. கல்லெடுத்து ஆளு மேல எறியறேன்னு எங்கம்மாட்ட ரிப்போர்ட் குடுக்கீங்களா?

என்னெப்பத்தி பேசுறதை மொதல்ல நிப்பாட்டுங்க. நானும் கல்லெடுத்து எறியறதை நிப்பாட்டிக்கறேன். அப்புறம் சொல்ல மறந்துட்டனே.. உங்க கொழந்தைகளைப் பத்திரமா ஊட்டுக்குள்ளார வெச்சுக்கங்க. எந்தக் கொழந்தைங்களைக் கண்டாலும் முன்னெல்லாம் ரொம்ப பாசமாத்தான் இருந்துச்சு. கை நீட்டினா எங்கிட்ட எந்தக் கொழந்தையாச்சிம் வராமப் போயிருமா? சலாங்னு என்மேல ராஞ்சிடும்ல. கொழந்தைங்க கிட்ட முத்தம் வாங்கியிருக்கீங்களா? பச்சக்குனு கன்னத்துல குடுக்கும் பாருங்க, நானும் திருப்பி பச்சக் பச்சக்குனு நாலு தாட்டியாவது குடுப்பேன். அண்ணாச்சி கடைக்கித் தூக்கிட்டு போயி பிரிட்டானியா வாங்கிக் கொடுப்பேன்.

இப்பத்தான் சடுதிக்கி எந்தக் கொழந்தைகளை கண்டாலும் பெசாசுங்களைக் கண்டாப்புடி ஓடிப்போயி கழுத்தை நசுக்கிக் கொன்னு போடலாம்னு தோணுது. பாத்து பத்திரமா கொழந்தைகளை வீட்டுக்குள்ளாரவே வெச்சிக்கோங்க. அப்புறம் வெட்டியா கொழந்தைப் பொணம் ன்னு விழுந்திரும். மறுபடியும் என்னெப் பத்தி பேசிட்டே இருப்பீங்க. மனசுல தோண்றதை சொல்றேன்

மருத்துவப்படிப்பு மாணவர்கள் ஐந்து ஐந்து பேராக பிணியாளர்களிடம் பேசியபடி குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்கள். சிலருக்கு மாத்திரை கொடுத்து தண்ணீர் காட்டி, ‘எல்லாம் சரியாயிடும்என்று கூறியபடி இருந்தார்கள். இன்று ஏனோ எல்லாப் பிணியாளர்களும் சாந்தமாகவே தென்பட்டார்கள். சில சமயம் படுக்கை மீதேறிக் குதித்து பாட்டுப்பாடி அலங்கோலம் செய்வார்கள். தாதிகளுக்குமே இது ஆச்சரியமான விசயம் தான். மாணவர்கள் சுந்தரவள்ளியிடம் வந்து குழுமி நின்றார்கள்.

என்னம்மா, ஏதோ பேசிட்டே இருக்கியாமே? நல்ல பொண்ணு நீ அப்பிடின்னு சிஸ்டர் சொன்னாங்க. மாத்திரை எல்லாம் அடம் பிடிக்காம போட்டுக்கறியாம். சீக்கிரமா குணமானதும் உன் அம்மாவைப் பார்க்க நீ போயிடலாம். ஆமா என்னமோ பேசிட்டு இருந்தியே.. எங்களைக் கண்டதும் ஏன் நிப்பாட்டிட்டே? எதா இருந்தாலும் எங்க கிட்ட சொல்லு சுந்தரவள்ளிஎன்றதும் தான் கால் நீட்டி படுக்கையில் படுத்திருந்தவள் எழுந்து அமர்ந்து அவர்களையே உற்றுப் பார்த்தாள்.

உன் பேரு என்ன சொல்லு

என் பேரு நெசமா உங்களுக்கெல்லாம் தெரியாது?”

உனக்கு ஊசி போடணும். அப்பத்தானே அம்மாவைப் பார்க்க சீக்கிரமா போக முடியும். உன் பேரு சொன்னாத்தானே ஊசி போடலாம். சொல்லு

என்னோட பக்கத்து ஊட்டுக்காரிக இங்க வந்து உங்களுக்கும் சொல்லிக் குடுத்துட்டு போயிட்டாளுங்களா? ஊசி போட்டு கொன்னுடுவீங்களா என்னை?”

யாரும் இங்க வரமுடியாதும்மா. நீ நல்ல பொண்ணு தான. யாரு எது சொன்னாலும் நாங்கெல்லாம் கேட்கவே மாட்டோம். ஹாஸ்பிடல் பக்கமெல்லாம் நின்னுட்டு பேசிட்டு இருக்கக் கூடாதுன்னு தொறத்தி உட்டுருவோம்

எப்ப தொறத்தி உட்டீங்க? அவுளுங்க அஞ்சு பேரு. தடித் தடியா இருப்பாளுங்க. உங்களுக்கே டிமிக்கி குடுத்துட்டு அதா பாருங்க, அந்த சன்னலுக்கு அந்தப்பக்கமா காத்தால புடிச்சி நின்னுட்டு நான் செத்துடோணுமுன்னு சாமி கும்புட்டுட்டு இப்பத்தான் சாயந்திரமா போறாளுங்க டாக்டர். நான் செத்தா என்ன சாவாட்டி தான் இவுளுங்களுக்கு என்ன? ஏன் டாக்டர் நான் சாவோணும்?”

நாளையில இருந்து ஒருத்தரையும் ஆஸ்பிடலுக்குள்ள உடவே வேண்டாம்னு வாட்ச்மேன் கிட்ட சொல்லிடறோம். அஞ்சு பேர்தானா? அஞ்சு பேர்த்தையும் எப்பவும் வரக்கூடாதுன்னு சொல்லி தடியில அடிச்சு முடுக்கி உடச் சொல்லிடறோம்

அதைச் செய்யுங்க டாக்டர். அவுளுங்க மோசமான பொம்பளைக. நீங்க தான் முடுக்கி உடச் சொன்னதுன்னு அவுளுங்க கண்டுபுடிச்சுடுவாளுங்களே. அப்புறம் ஊருக்குள்ளார போயி டாக்டருக எல்லாரும் என்னை வெச்சுட்டு இருக்காங்க, இவளும் டாக்டர்களை செட் பண்ணி கைக்குள்ளார போட்டு வச்சுக்கிட்டான்னு உங்களையும் என்னையும் சேர்த்தி தப்புத் தப்பா பேசுவாளுங்க. எதுக்கும் ரெண்டு நாளு என்னெ வெளிய உடுங்க. போயி வீட்டுக்கிட்ட நெலவரத்தை பார்த்துட்டு வந்துடறேன். நீங்க அதுக்கெல்லாம் கவலையே படாதீங்க டாக்டர். அவுளுங்க முடியக் கொத்தாப் புடிச்சு ஆட்டி உட்டுட்டு நறுக்குனு நாலு கேள்வி கேட்டுப் போட்டு வந்துடறேன். டாக்டர்னா சாமிகள் மாதிரின்னு அவுளுங்களுக்கு சொல்லிப் புரிய வெச்சுட்டு வர்றேன்

சரிம்மா, அப்பிடியே திரும்பிப் படுத்துக்க. ஊசி போட்டுட்டு போறேன். அப்புறம் நிம்மதியா தூக்கம் வரும். தூங்கி எந்திரிச்சா யாரும் உன்னைப் பேச மாட்டாங்கதாதி ஒருத்தி சுந்தரவள்ளி திரும்பிப் படுக்க உதவினாள்.

எறும்பு கடிச்சா மாதிரி ஊசி போடுங்க டாக்டர். அவுளுங்க சொன்னாளுகன்னு நறுக்குனு குத்திடாதீங்க. அப்புறம் வீங்கீட்டு வலிக்கும்

மெதுவாத்தாம்மா.. கொசு கடிச்சா மாதிரி தான்.”

நல்ல டாக்டர் நீங்க. அவுளுங்க பேச்சை நீங்க கேக்க மாட்டீங்கன்னு மொதல்லயே எனக்கு தெரியும்.”

அவர்கள் அடுத்த நோயாளியைப் பார்க்க நகர்ந்ததும் சுந்தரவள்ளி மேலே சுழலும் மின்விசிறியை பார்த்தபடி பேசத் துவங்கினாள்.

எல்லாமே இவுளுங்களால வந்த வெனை தான் அத்தனையும். அவிங்க மட்டும் எத்தனை பண்டுனாலும் என்னை மாதிரியா இங்க ஆஸ்பத்திரியில வந்து ஊசியப் போட்டுட்டு கெடக்காளுக? நொப்பமா ஊட்டுல தின்னுட்டு என்னெப் பத்தி பேசீட்டே, என்னெக் கொல்றதுக்கும் திட்டம் போட்டுட்டுத் தூங்காமத் திரியறாங்க.

டிவியில நியூஸ் பார்த்தீங்களா சிஸ்டர்? எனக்குத் துன்பத்தைக் கொண்டாந்து உட்டுட்டாங்க. என்னோட ஃபோட்டோவை நானு ஒன் டூ த்ரீன்னு கவுண்ட் பண்ண ஆரம்பிச்சி தேர்ட்டி சொல்ற வரைக்கிம் காட்டுனாங்க. விசயம் என்னான்னு கேட்டீங்களா? நான் காணாமப் போயிட்டனாம். எனக்குத் தெரியும் இது யாரு வேலையுன்னு. மீனாக்கா ஊட்டுக்காரரு டிவி ஸ்டேசன்ல தான் வேலை பாக்காரு.

என்னோட அம்மா ஊட்டுல இல்லாத நேரம் பார்த்து ஊடுமுட்டி எவளோ என்னோட போட்டோவை லவட்டீட்டு வந்திருக்கா. என்னெக் கண்டு பிடிச்சுக் குடுக்குறவங்களுக்கு துட்டு வேற தர்றதா அறிவிச்சுட்டாங்க. துட்டெல்லாம் குடுத்து என்னைய புடிச்சுக் கொல்றதுன்னா அவிங்களுக்கு வெளிநாட்டுல இருந்து யாரோ துட்டு உதவி பண்றாங்கன்னு தெரியுது. என்னெக் காட்டிக் குடுத்தீங்கன்னா உங்களுக்குத் துட்டு கிடைக்கும் சிஸ்டர். ஆனா என்னை கொன்னு போடுவாங்க!

என்னெய ஒவ்வொருத்தியும் பாக்குற பார்வை இருக்கே சாமி! ரோட்டுல நடக்கவே புடாதுங்கறாங்க. என்னோட சேலையில தீயப் பத்த வச்சு உட்டுட்டாங்கன்னா? எதுக்கும் துணிஞ்சவங்க அவிங்க அஞ்சு பேரும்.

எல்லாம் எங்கப்பா செத்த பொறவு ஆரம்பிச்சது தான். ஆமா எங்கப்பா யானை கடிச்சு வச்சுத்தான் செத்தாரு. இவளுங்க அப்பிடியில்ல எலிக்காப்டர் மோதி செத்துட்டாருன்னு சொன்னாளுங்க. எங்கம்மா வேற ஓவரா தண்ணியப் போட்டுட்டு உழுந்து செத்துட்டதா சொல்லிட்டு அழுவுது. நானு எதை நம்புறது? சரி எங்கப்பா எப்படியோ செத்தாச்சு. அந்தன்னிக்கித் தான் எனக்கு ஒரே சிரிப்பாணியா வந்துடுச்சு. அப்பா செத்ததுக்கு ஊர்ல நான் மட்டுமா சிரிகேன்? எல்லாரும் தான் சிரிக்காங்க. நான் மட்டும் அதிசயமா சிரிச்சாப்டி இவங்க என்னை தரத்தரன்னு இழுத்துக் கொண்டு போயி சாந்தியக்கா ஊட்டுக்குள்ளார உட்டு, சிரிச்சுட்டே கெடடின்னு வெளிய பூட்டிட்டு போயிட்டாளுங்க. அன்னையில இருந்து தான் இவளுங்களை எனக்குப் பிடிக்கிறதே இல்ல.

அப்பா பொணத்து முன்னாடி கால் நீட்டி உட்கார்ந்து நிம்மதியா சிரிக்க உட்டாளுங்களா? கடைசில அவுரு பொணத்தைக் கண்ணுல காட்டாமத் தூக்கீட்டு போயிட்டாங்க. அன்னிக்கினு பார்த்து ஏன் இவுளுங்க அப்படிச் செஞ்சாங்கன்னே எனக்குத் தெரியல.

இன்னிக்கித் தூங்கவே கூடாது. எதாச்சிம் திட்டம் தீட்டியிருந்தாளுகன்னா ஆஸ்பத்திரிக்குள்ள முட்டீருவாளுக என்னையப் போட்டுத்தள்ள. ரொம்ப வசதியான இடம் தான் இது. நர்ஸுங்களை நம்பவே முடியாது. லஞ்சமா அஞ்சு பேரும் நர்ஸுகளுக்கு துட்டு குடுத்துட்டாளுகன்னா போட்டுத் தள்றதுக்கு வசதியா கத்திரிக்கோலு, கத்தி குடுத்து அவுளுங்களுக்கு ஹெல்ப்புல்லா ஆயிடுவாங்க. யாரைத்தான் நம்ப முடியுது இந்தக் காலத்துல?

கண் அசந்தாப் போதும் காலுக்கு வெச்சிருக்குற தலவாணிய எடுத்து என் மூஞ்சி மேலப் போட்டு அமுத்திக் கொன்னுடுவாங்க. அப்புறம் முகத்தைத் திருப்பி உட்டு மூக்கு மேல கை விரலை வச்சி காத்து வருதான்னு பார்த்து காத்து வரலின்னதும் கையைத் தட்டீட்டு போயிடுவாளுக. தூங்கவே கூடாது. தூங்குனா சோலிய சுலபமா முடிச்சுருவாங்க.

டாக்டர் நல்ல டாக்டர் தான். லஞ்சம் குடுத்துப் பார்த்தாலும் அவரு மசிய மாட்டாரு. ஆனா செல்வி அக்கா சும்மா இருக்காதே! ஆளும் வேற சினிமா நடிகை கணக்கா செக்கச் செவேல்னு இருக்குதே. ஐயோ! டாக்டரை செட் பண்ணி தன்னோட கைக்குள்ளார போட்டுக்கிட்டு என்னோட காரியத்தை முடிச்சுட்டா? டாக்டர் சம்சாரம் ஊடு வேற எனக்கு எங்கீன்னு தெரியலையே! போயி இந்த மாதிரி என்னெப் போட்டுத்தள்ள டாக்டரை செல்வி மடக்கீட்டா.. வந்து என்னன்னு விசாரிங்கன்னு சொல்லணும்.

எனக்கு சாமியிலயே விநாயகரைத் தான் ரொம்பப் புடிக்கும். நல்ல சாமி. பழம் வாங்கித் திங்கறதுக்காக உலகத்தை சுத்தினவரு அவுரு தான். அப்பனையும் ஆத்தாளையும் சுத்தினா அதெப்புடி உலகத்தை சுத்தினது மாதிரி கணக்காகும்? கொஞ்சம் நாளைக்கி விநாயகரை என்னோட பந்தோபஸ்துக்கு கூப்புட்டுக்க வேண்டிது தான். அவரு மட்டும் என்னோட பெட்டுக்குப் பக்கத்துலயே நின்னுக்கிட்டாருன்னா எவளையும் கிட்டவே அண்டவே உடமாட்டாரு.

தும்பிச்சாங்கையிலயே அவுளுங்களை ஒவ்வொருத்தியா புடிச்சித் தூக்கி ஆஸ்பத்திரிக்கி வெளிய வீசி எறிஞ்சுடுவாரு. ஒடம்புக்கு செரியில்லீன்னா எல்லாரும் விநாயகரை காப்பாத்தச் சொல்லி கும்பிடுங்க. டாக்டரு என்ன ஊசி எனக்குப் போட்டு உட்டாருன்னு தெரியில. தூக்கம் தூக்கமா வருது. தூங்கினாச் செரியாப் போவுமுன்னு வேற சொன்னாரு. தூக்கம் வந்திடுச்சி.

காலையில் சுந்தரவள்ளியைப் பெரிய டாக்டரிடம் மருத்துவமனை தாதி கூட்டிச் சென்றாள். சுந்தரவள்ளி காலையிலேயே கூச்சலை ஆரம்பித்த்து தான் காரணம். ஏறக்குறைய தாதி இவளை இழுத்துப் போகத்தான் வேண்டியிருந்தது.

வாங்க சுந்தரவள்ளி, நல்ல பொண்ணு நீங்க.. இப்படி சப்தம் போட்டுட்டே இருக்கலாமா? உட்காருங்க இப்படி. சொல்லுங்க சுந்தரவள்ளி இப்ப எப்பிடி இருக்கு?”

உங்களை மிதிக்கலாம்னு இருக்குது டாக்டர்

அது அப்புறம் பாத்துக்கலாம். என்ன பிரச்சனை உங்களுக்கு இப்ப?”

என்ன டாக்டர் சொல்றது? நேத்து ராத்திரி நான் உசுரு பொழச்சதே பெரும்பாடாப் போச்சு. நேத்து எனக்கு வேற டாக்டரு ஒருத்தரு ஊசி போட்டு தூங்க வெச்சுட்டு போயிட்டாரு. ஆனா நான் தூங்குற மாதிரி நடிச்சுட்டு நர்ஸுக எல்லாரையும் ஏமாத்திட்டு என் வீட்டுக்கு நைட்டு கெளம்பிப் போயிட்டேன். வீட்டுல அம்மா அது பாட்டுக்கு தூங்கீட்டு இருந்துச்சு. சரி பகலு பூராம் வேலை செஞ்சுட்டு வந்த அலுப்புல தூங்குதுன்னு அம்மாவை நான் எழுப்பலை. சோத்துச் சட்டியை நீக்கிப் பார்த்தேன். பழைய சோறு தண்ணிக்குள்ளார இருந்திச்சு. ஒரு குண்டான் போட்டு கரைச்சுக் குடிச்சுட்டு கதவைச் சாத்தீட்டு வர்றேன். கொடுமை டாக்டர் சார். ஆமா நேத்து நான் சொன்னாப்பிடியே ஆயிடுச்சு. என்ன டாக்டர் கேக்கறீங்களா? ம் கொட்டவே மாட்டீங்கறீங்க?

நீங்க ம் கொட்டாட்டி உடுங்க. பக்கத்து ஊட்டுக்காரிக அவிங்க ஊட்டுக்காரர்களையும் கொழந்தைகளையும் தூங்கப் பண்ணீட்டு சாமத்துல குட்டாங் கூடிட்டாங்க அஞ்சு பேரும். குசு குசுன்னு பேசிட்டு இருக்காங்க. நானு இன்னொரு சந்துல முட்டி சுத்தி வந்து அவிங்க பேசுறதை ஒட்டுக் கேட்டேன் டாக்டர். நேத்து எனக்கு ஊசி போட்ட டாக்டரை நான் செட் பண்ணிட்டனாம். அதான் கேட்டுல என்னை பாக்க உடாமெ வாட்ச்மேன் அவிங்களை உள்ளார உடவே மாட்டீங்கறானாம்.

நானே வியாதி புடிச்சு மாத்திரை சாப்டுட்டு இருக்கேன்ல. ஒரு பரிதாபம் கூட இல்லாம என்மேல இப்படி பழியத் தூக்கி போட்டுப் பேசுறாங்க. நரம்பு இல்லாத நாக்கு எப்புடி வேணாலும் பேசுங்கறது சரியாப் போச்சுங்க டாக்டர். வந்துது பாருங்க எனக்கு கோவம். கல்லெடுத்து அவுங்களை முடுக்க ஆரம்பிச்சுட்டேன். கிய்யா கிய்யான்னு ஆளுக்கு ஒரு திசையில ஓடுறாளுங்க. உடுவனா? கைக்கு சிக்குனதை எடுத்து வீசிட்டு எவுளும் என்னெப் பத்திப் பேசப்புடாதுன்னு மெரட்டி வெச்சுட்டு நேரா ஆஸ்பத்திரி வந்து என்னோட பெட்டுல படுத்துட்டேன் டாக்டர் சார்.”

நல்ல காரியம் பண்ணீங்க சுந்தரவள்ளி. இனிமேல் உங்களைப் பத்தி அவுங்க பேச மாட்டாங்க. சனியனுக தொலஞ்சிதுன்னு உடுங்க

அப்படித்தான் டாக்டர் நானும் நம்பினேன். சரி தூக்கமும் வரலைன்னு விநாயகரை கூப்பிட்டு என் பக்கத்துல வெச்சுக்கிட்டேன். நான் கூப்பிட்டா விநாயகர் ஒடனே வந்துடுவாரு. நானும் அவிங்களை நெனச்சிட்டே உம்முன்னு இருந்தங்காட்டி, எனக்கு வேடிக்கை காட்டியெல்லாம் சிரிக்க வெச்சாரு. தும்பிச்சாங்கையில ஃபேனைப் புடிச்சுத் தொங்கீட்டே சுத்துனாரு. ஒரு றெக்கையத்தான் புடிச்சிருந்தாரா.. ஐயோ சுத்துது சுத்துதுன்னு சின்னப் பசங்களாட்டம் மெரண்டு ரவுசு உட்டாரு. நான் சிரிச்சதும் இறங்கி வந்து தும்பிச்சாங்கையை என் தலையில வச்சு ஆசீர்வாதம் பண்ணி, ‘சரி தூங்குன்னு சொல்லிட்டு போயிட்டாரு.

அப்புறம் நல்லா தூங்கிட்டீங்களா?”

எங்க டாக்டர்! விநாயகரு போனதீம் தான் அவுளுங்க எல்லாரும் துப்பாக்கியத் தூக்கீட்டு என்னை சுட்டுப் பொசுக்கீட்டுதான் மறுவேலையின்னு ஆஸ்பத்திரிக்குள்ளார முகமூடி போட்டுட்டு வந்துட்டாளுங்களே. ஃப்ர்ஸ்ட்ல யாரு இவிகன்னு எனக்கு அடையாளமே தெரியல. சேலைகளை பார்த்தங்காட்டி தான் எனக்குத் தெரிஞ்சுது அவுளுங்களே தான்னு. இன்னியோட தீர்ந்தோம்டான்னு போர்வையால முகத்தை மூடிட்டு பெட்ல இருந்து உருண்டு கீழே விழுந்து பெட்டுக்கு அடியில குறுக்கிப் படுத்துட்டேன் டாக்டர்.

நர்ஸ் தான் காலு வெளீய தெரியுதுன்னு போர்வையை இழுத்து உட்டுட்டுப் போச்சு. அவிங்க சுத்தீம் புத்தீம் துப்பாக்கிய நீட்டிப் புடிச்சுட்டுத் தேடீட்டு, என்னையக் காணோம்னு பேசிக்கிட்டாங்க. டாக்டர் வீட்டுக்குத் தான் போயிருப்பா அவ, ஒரு டாக்டர் வீடு வுடாமத் தேடிக் கண்டு பிடிக்கணும் நாம அப்படின்னு பேசிட்டு கெளம்புனாங்க. உங்க வீட்டுப் பக்கம் வந்தாங்களா டாக்டர் சாமத்துல?

உங்களுக்கே தெரியாம வந்து செக் பண்ணீட்டு போவாளுங்க டாக்டர். ரொம்ப சாமார்த்தியமான பொம்பளைக அவங்க அஞ்சு பேரும். நான் எதுக்கும் இந்தக் கதவை நீக்கிப் பார்த்துட்டு வந்துடட்டுமா டாக்டர் இப்ப? நாம என்ன பேசிக்கறோம்னு ஒட்டுக் கேட்டுட்டு நிப்பாளுங்க. விசயம் தெரிஞ்சதும் ஊர் முழுக்க பேசிட்டே திரியுவாங்க. எதுக்கும் ரெண்டு பெசாசுங்களை சுடுகாட்டுல இருந்து புடிச்சுக் கொண்டாந்து கேட்டுக் கிட்ட நிக்க வெச்சிடுங்க டாக்டர். பேயின்னா ஆருக்குமே பயம் தான டாக்டர். அவளுங்க ஆஸ்பத்திரி பக்கமே தலை வச்சு படுக்க மாட்டாளுங்க.

ஆனாப் பாருங்க டாக்டர் எமன் கூடவும் இவளுங்களுக்கு காண்டேக்ட் இருக்கும் போல இருக்கு. வெடியக் காத்தால எமனை எருமை மேல உக்காத்தி வச்சு தாட்டி உட்டிருக்காளுக. நல்லவேளை எங்கம்மா கோழி கூப்புடற முந்தியே எனக்காக முருகனைத் தாட்டி விட்டிருந்தா. முருகன் தன்னோட வேலை விரல்ல வெச்சு சுத்திக் காட்டீட்டு இருந்தப்ப தான் எமனோட எருமை ஆஸ்பத்திரிக்குள்ளார வந்துச்சி. முருகனைப் பார்த்துட்டு எருமை பயந்து திரும்பிடுச்சி.”

நாம் அடுத்த நாள் காலையில் மறுபடியும் சுந்தரவள்ளியைப் பார்த்து வரலாம் என்று சென்ற நேரத்தில் டாக்டர் மருத்துவமனையில் ரவுண்ட்ஸ் பார்த்தபடி வந்தார். நாம் சுந்தரவள்ளி அருகில் செல்கிறோம். டாக்டரிடம் அவள் கூறியது இது.

நான் நேத்திக்கி நைட்டு செத்துட்டேன் டாக்டர். அவுளுங்க பலவழியில என்னை அட்டாக் பண்ணி மர்டர் பண்ணிட தயாராயிட்டாங்க. உங்களை நம்பியும் பிரயோஜனம் இல்லை. நீங்க ஊசியப் போட்டுட்டு நர்ஸ்கிட்ட மாத்திரையை நேரா நேரத்துக்கு குடுக்கச் சொல்லிட்டு கம்பிய நீட்டிடறீங்க. நீங்க போனதும் அவுளுங்க நுழைஞ்சிடறாங்க. அவங்களை ஏமாத்திடணும்னு நானே முடிவு பண்டி என்னோட பெட்ஷீட்டை எடுத்து பேன்ல போட்டு கழுத்துல கட்டீட்டு தொங்கீட்டேன் டாக்டர். அவளுங்க சாமத்துல வந்து தொங்கீட்டு இருந்த என்னைப் பார்த்துட்டு ஒரு பாட்டம் அழுது தீர்த்துட்டு போயிட்டாளுக டாக்டர்

                                               -வார்த்தை 2008Post Comment

கருத்துகள் இல்லை: