புதன், அக்டோபர் 14, 2015

ப்ரகாஷின் நாவல்கள் சொல்வன!தஞ்சை ப்ரகாஷ் பற்றியான பேச்சுகள் தமிழில் அவர் இறந்து பல காலம் கழித்தே மேலெழுந்து வருகிறது. அது அவரது புத்தகங்கள் இனி வரிசையாக வருகையில் சிலகாலம் பேசப்படும் எழுத்தாளராக இருப்பார். உண்மையிலேயே ப்ரகாஷ் சிறந்த சிறுகதை எழுத்தாளர் மட்டுமே! அவருக்கு நாவல் கைகூடி வரவில்லை. கைகூடும் சமயம் பாலியல் மீதான கவர்ச்சி அவரை அங்கே கூட்டிப்போய் விடுகிறது. அவரது மீனின் சிறகுகள் நாவலை அதீத பாலியல் விரும்பிக்கு கொடுத்த போது, படிக்க முடியல கோமு! என்றார். என்ன காரணம் என்று கேட்ட போது ஒருத்தனே பல பெண்களை புணருகிறான்! என்றார். பொறாமையாக வேற இருக்கு.. எது முடியாதோ அதை எழுதியிருக்காரு! என்றார். அவருக்கு நான் என்னுடைய மங்கலத்து தேவதைகள் நாவலை இன்று வரை தரவில்லை! 
காலம் தான் வேறேயொழிய விசயம் அதே தான். ஒருத்தனே குமுறுவான்!

ப்ரகாஷின் கரமுண்டார் வூடு இப்போது வெளிவந்தால் கொங்கு மண்ணில் நடந்த பிரச்சனைகள் போன்றே தஞ்சையில் பிரச்சனைகள் எழக்கூடும். அந்த நாவல் சொல்லும் சேதி அப்படித்தான் இருக்கிறது. ப்ரகாஷின் பாலியல் படிக்கும் வாசகனை தன்னை விட்டு அகல விடாமல் அருகிலேயே வைத்திருக்க முயற்சிக்கிறது. தமிழில் பாலியல் தேவைகள் அதிகம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது பலருக்கும். என் சாந்தாமணி நாவலை குப்புற விழுந்து படித்தவர்கள் மற்றவர்களிடம் பேசுகையில் அது ஒரு பிட்டு படம் என்றே குறிப்பிட்டார்கள். பிட்டோ கிட்டோ.. பதிப்பகம் காசு பார்த்துச்சா இல்லையா? மீனின் சிறகுகளை எந்தப் பதிப்பகம் வெளியிட்டாலும் நாலு காசு பார்க்கும்! அதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஜி.நாகராஜனை நான் சிறந்த எழுத்தாளர் என்று நான் எங்கும் குறிப்பிடுவது இல்லை. நல்ல சாராய விரும்பி என்று வேண்டுமானால் சொல்லலாமா?. (எழுத்தரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசுதல் கூடாது என்றாலும் குடி இல்லாமல் இருந்திருந்தால் ஒருவேளை அந்த நல்ல, சிறந்த, பயங்கர, ஒன்னுல இருந்து ஒன்னுக்கு தாவுற, பிரயாணிக்கிற புத்தகம் கொடுத்திருப்பாரோ!) போக அவருக்கு ஆங்கில அறிவு அதிகம். அறிவு ஜீவிகள் எவ்வளவு குடிக்க வேண்டுமோ அவ்வளவு குடித்தார் என்றே வைத்துக் கொள்ளலாமா?. அவர் எழுத்து பெண்களை புணரும் இடங்களை நோக்கிச் செல்லும் ஆண்களைப் பற்றி பேசியது. அதில் ஆண் டெர்லின் சட்டை அணிந்திருப்பதைப் பற்றி யாரும் கவலை கொள்ளவேயில்லை. பாலியல் தொழிலாளி என்றறியப்பட்டவள் எப்படி மனிதர்களிடம் பழகுவாள்? அவளுக்கு காதல் உண்டா? காமம் உண்டா? ரோசம் உண்டா? என்று அப்போதைய பயம் மிகுந்த வாசகர்கள் படித்து பரவசம் கொண்டு தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள்.

எனக்கென்னவோ அவர் சிறந்த எழுத்தை எழுதுவதற்கான பயிற்சியில் மட்டுமே இருந்தார் என்றே தோன்றுகிறது. அவர் நல்ல எழுத்தை தமிழுக்கு கொடுப்பதற்குள் மரணித்து விட்டார். இதைக்கூட தமிழுக்கான சாபக்கேடு என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.
தஞ்சை ப்ரகாஷின் கள்ளம் பற்றி சொல்ல வருகையில் அவரது முதல் நாவல் என்பதால் நல்ல முயற்சி! எழுத்தாளர்கள் என்றறியப்பட்டவர்களின் முதல் நாவல் என்றும் சிறந்தது தான். ப்ரகாஷ் பின்னர் எழுதிய நாவல்களில் பாலியல் தூக்கலாக இருப்பது வாசகர்களை தன் வசமே கட்டி வைத்திருக்கும் திட்டம் தானே தவிர வேறொன்றுமல்ல!


நல்ல எழுத்து சதத் ஹசன் மண்டோவிடம் இருக்கிறது. ஆனால் அது மொழிபெயர்ப்பு. அதை தூக்கி வைத்துப் பேசிக் கொண்டிருக்க எனக்கு மனமில்லை.

000

Post Comment

கருத்துகள் இல்லை: