செவ்வாய், டிசம்பர் 15, 2015

2015 டிசம்பர் கவிதைகள் -2மாமனின் கதை!
---------------
முதலாக அவர் எனக்கு மாமனே இல்லை!
அவர் தான் ரொம்ப வற்புறுத்தி என்னை
மாமா என்று அழைக்க வைத்து விட்டார்.
அவருக்கு அதில் பெருமகிழ்ச்சி!
அழகான வடிவான பெண்ணொருத்தி
அவளுக்கு இருக்க வேணுமென்ற என்
அல்ப ஆசைக்கு அவருக்கு திருமணமே
இல்லையென்ற தகவலை ஊரார்
சொன்ன போது, போடா மாம்ஸ்! என்றேன்.
ஒரு நாள் பேருந்து நிறுத்தத்தில் தாலிச்சரடு
கழுத்தில் தொங்க விட்டு வந்த ஒரு குண்டு
பெண்ணிடம் மாமா, தன்னை மாமா என்று
அழைக்கும்படி வற்புறுத்திக் கொண்டிருந்தார்.
எனக்கு எவண்டா புதுசா மாமன்? என்று அந்தப்
பெண்ணும் தன் மைக் வாயை திறந்திருந்தது.
நான் உன்னை கட்டிக்கிறேன்! ஒரு வாட்டியாவுது
மாமான்னு கூப்புடு புள்ளே! என்று கெஞ்சத்
துவங்கி விட்டார் மாமா!
வெளியூரில் இப்போது வேலையில் இருக்கும் நான்
ஊர் செல்கையில் அவரை அந்த பேருந்து நிறுத்த
குடையின் கீழே பார்ப்பேன்! அவர் அதை தனக்கு

தங்கும் இடமாக மாற்றியிருந்தார்.

000

எனக்கொரு பொம்மை கொடுத்தான்
என் கணவன்! அந்த பொம்மை அவனை
அப்பாவென்றும் என்னை அம்மாவென்றும்
அழைத்து எங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில்
ஆழ்த்தியது! மகள் நன்றாக பிழைக்கிறாள்
கட்டிக் கொடுத்த ஊரில்! என்றாள் என் அம்மை!
இன்னொரு பொம்மைக்கு ஏற்பாடு செய்யலாமா?
என்றான் என் கணவன். இப்ப எனக்கு மூனு
பொண்ணுக ரெண்டு பசங்க! – அறுக்காம ஆட்டம்
போட்டுட்டு இருக்கா எம்புள்ள கட்டிக்குடுத்த ஊர்ல!
என்றாள் என் அம்மை!

000

மழெ கொசுறுது! இருந்தாலு
சந்தெக்கி போகாம இருக்க முடியுமா?
தக்கோளி, வெண்டக்கா, பாழை,கருஞ்சுக்குட்டி,
அகத்தின்னு கீரெ வகை,
வெங்காயம், கேரட்டு, பீட்ரூட்டும் பீனுசு,
அவரென்னும்.. மக்காச்சோள கதுரு,
தர்பூசணி, ஆரஞ்சி, பூம்பழமுன்னு
ரெண்டு பெரிய பைய நப்போணும்!
கத்திரி தா ஊட்டு முன்னாலயே
மரமாட்ட இருக்கே ரெண்டு மூனு!
டேசியா ஒரு ஆரஞ்சி வோட்கா!
ஆக நனைஞ்சி தொப்பலாக முடுவு எடுத்தாச்சுங்!

000

எல்லா குழந்தைகளும்
விளையாட்டு மும்முரத்திலிருந்தன!
அந்த ரெண்டு மட்டும்
விளையாட்டை பார்த்தபடி
அமர்ந்திருந்தன! அந்த ரெண்டுக்கும்
விளையாட ஆசை துளிகூட இல்லை!
அம்மா இது வழி வந்ததும் கூடவே போனா கஞ்சி
வச்சித் தருவா! துளி குடிச்சுட்டு சாஞ்சுடலாம்!
அவ்ளோதான்!

000

இந்த மழையில் ஏதாவது செய்ய வேணுமென
எல்லா இல்லத்தரசிகளும் ஆசை கொள்கிறார்கள்!
ஒருத்தி சுண்டல் வேகவைக்க ஆசை கொள்கிறாள்!
ஒருத்தி பஜ்ஜி சுட ஆசை கொள்கிறாள்!
ஒருத்தி சரக்கு போட ஆசை கொள்கிறாள்!
ஒருத்தி மழை ஈரத்திற்கு காதலனை கட்டிக் கொள்ள ஆசை கொள்கிறாள்!
ஏதுமறியா இல்லத்தரசன் அரை கட்டிங் போட்ட பிறகு
கள்ளக்காதலியை அலைபேசியில் அழைக்கிறான்!
கொஞ்சம் சளி! என்று இருமிய கள்ளக்காதலி நாளைக்கு
பார்க்கலாம் என்கிறாள்! இந்த வாழ்வு ஏகதேசமாய்
நாசமானது குறித்து மழையில் நனைந்த வண்ணம்
பிதற்றத் துவங்குகிறான் இல்லத்தரசன்! சிம்பு எதோ பாடல்
பாடியதற்காய் வயித்தெறிச்சல் அடைகிறான் ஒருவன்.
வயித்தெறிச்சலை காசு பார்க்கும் திறமை உன்னிடமில்லை
என்கிறாள் அவனை ஓரக்கண்ணால் ஒருமுறை
பார்த்து என்றேனும் ஆவான்! என்றே நினைத்தவள்!

000

Post Comment

கருத்துகள் இல்லை: