புதன், டிசம்பர் 16, 2015

டிசம்பர் கவிதைகள் - 3புளியாமர ஸ்டாப்பிங்ல ஒரு பொட்டிக்கடை
கூட இல்லீன்னு தான் உங்குளுக்கு தெரியுமே!
அவத்திக்காலிக்கி தான் பெருசு டவுனுக்கு
போறேன்னு மினி பஸ்ஸுக்கு வந்து நின்னுச்சு!
பஸ்ஸு வர்ற நேரம் பாத்து பெருசுக்கு உச்சா வந்துருச்சு!
பெரிய புளியாமரத்துக்கு பொறவுக்கு போயி கவ்வக்கோலை
ஓரமா சாத்தி வச்சுட்டு குக்கீடுச்சு! தெக்க ஒன்னும்
வடக்க ஒன்னுமா மினி பஸ்ஸுக அவத்திக்கி எறங்க
ஆளில்லைன்னு சொய்யுனு ஆரனை போட்டுட்டு
போயிடுச்சுக! பெருசு ஹப்பாடான்னு எந்திரிச்சு வந்து
வடக்க பாத்துட்டுபோயிடுச்சா பஸ்ஸூ?” அப்புடின்னு
தன்னப்போல பேசிக்கிச்சு! -அப்பாரு நீ இங்கியா நிக்கே?
எங்கம்மா உன்னிய கூட்டியாறச் சொல்லுச்சு!- அப்படின்னு
பேரப்புள்ளையோ.. இல்ல மருமவளோ அவத்திக்கி வந்து
தேனுங் மாமா நா என்ன சொல்லிப்போட்டன்னு வெக்குடு
வெக்குடுன்னு கெளம்பி வந்துட்டீங்கொ? வாங்க ஊடு போவோ!”
அப்புடின்னு கூப்புடுவாங்களான்னு வந்த இட்டேறி வழியவே
பெருசு பாத்துச்சு! பஸ்ஸுக்கு காசு இருக்குதான்னு பாத்தா
ரெண்டு பொயலக்குச்சி தான் கெடக்குது கருமம்!
ஆத்து மெல கோவிச்சுட்டு சூத்து கழுவாமப் போனா
யாருக்கு நட்டமாம்? பெருசு இட்டேறி பாதையில

கவ்வக்கோல ஊனி நடக்குது பாத்துக்கிடுங்க!

000


பேய்னா எங்கப்பாரு கடேசி
காலம் வரைக்கிம் பயந்துக்கும்!
சாமத்துல தடியத் தூக்கிட்டு போயி
வரஓலைய சாத்துவாரு!
பேய்னா பயமில்லாத மாதிரி
எங்கப்பன் சத்தமில்லாம படுத்துக்குவாப்ல!
பேய்னா எனக்கு பயம் சாஸ்தி!
பள்ளியோடம் போறப்ப மங்காங்காட்டு
கெணத்த தாண்டறக்குள்ள எனக்கு
காது அடச்சிக்கும்! பேயிக்கி பயந்துட்டு
எங்க மாப்ள சாமத்துல வாசல்லயே
உச்சா அடிச்சுட்டு வந்து கவுந்துக்குவாப்ல!
தி கஞ்சூரிங் பாக்குறப்ப நம்ம சன் எனக்கு
பொறவுக்கே ஒட்டியொட்டி நின்னு
எட்டிப் பாத்துக்கிட்டான்! காஞ்சனா
இன்னிக்கி போடறாங்கப்பா! என்று ஊர் முழுக்க
இலவச விளம்பரம் செஞ்சுட்டு படம்
ஓடறப்ப ஆளு காணாமப் போயிடுவான்!
ஆக மொத்தத்துல பேய்னா.... நம்ம
வீட்டம்மிணி மட்லும் தான் பயக்குறதேயில்ல!
வீட்டம்மிணி இருக்குற பக்கமா அதுக
தலை வச்சுக்கூட படுக்கறதுமில்ல!


000


ஏனுங்! உங்களைத்தானுங்!
நான் ஒன்னு கேப்பேன்.. நீங்க
சிரிக்கப்பிடாது! டவுனுக்கெல்லாம்
போயிட்டு வந்துட்டு இருக்கீங்கொ!
நானு இந்த பட்டிக்காட்டுலயே
ஆடுகளை ரோட்டோரத்துல மேச்சுட்டு
ஊட்டுக்கு ஓட்டீட்டு போயி
பட்டீல அடைச்சுட்டு சித்தே
டிவி பொட்டியில பொம்மெ
பாத்துட்டு படுத்துக்கறேன்.
சீக்கிரஞ் சொல்லு சீக்கிரஞ் சொல்லுன்னு
பறவா பறக்குறீங்கொ? அப்புடி
எந்தக் கோட்டையப் புடிக்க
அவசரப்படறீங்கொன்னு தா தெரியில!
பாருங்.. சிரிக்கிறீங் பாருங்! அதான்
நான் ஒன்னையுங் கேக்கப்புடாதுன்னே
கம்முன்னு பொட்டாட்ட இருந்துக்கறது!
இந்த டிவி பொட்டீல போன வாரம்..
த்தைத்! அங்க போயி வேலீல ஏறி
மேஞ்சாத்தான் வவுறு ரொம்புமா?
வாரன் இப்ப இரு! முன்னத்தங்காலை ஒடிச்சு
வீசுறேம் பாரு! இந்த ஆடுகளெ வெச்சுட்டு
நாம்படுற பாடு இருக்குதுங்களே! சாமி சாமீஈ!
எங்க உட்டேன்?
இந்த டிவி பொட்டீல வட்டமா பிச்சான்னு
திங்கற பண்டம் அன்னிக்கி காட்டுனாங்க!
அது மாரி வட்டமா எனக்கொரு நாளைக்கி
பிச்சா வாங்கிட்டு வந்து குடுக்கீங்களா?
சலவாயி ஊத்தீடுச்சு அன்னிக்கி அதைப் பாத்து!
பாத்தீங்களா.. சிரிக்க கூடாதுன்னேன் சிரிக்கீங்க!
அதான் நான் கேக்கவே புடாதுன்னு நெனச்சேன்!
சரி அந்தக் கருமத்தெ திங்காட்டித்தான் போச்சாது
நீங்கொ போங்க! ஆடுக வேற கெடையில நின்னு
மேயுவனாங்குதுக!

000


ப்ரியா ஐ லவ் யு!
பிரேமா ஐ லவ் யூ!
மல்லிகா ஐ லவ் யூ!
சாந்தி ஐ லவ் யூ!
எல்லாருக்கும் ஒரு உம்மா!
ஆனா மூஞ்சி புத்தவத்துல
நீங்க இல்லியேடி கன்னுக்குட்டிகளா!

000

-ஒரு கவிதெ ஒன்னு எழுதி குடுத்தீங்கன்னா
நேராக் கொண்டி எம்பட லவ்வர் கிட்ட
நீட்டி எம்பட கவிதென்னு சொல்லி.. இதுக்கு
எதாச்சிம் பிரசண்ட் பண்ணுன்னு கேப்பேன்!
நீங்க தா பயங்கரம் பயங்கரமா எழுதுவீங்களே!

-உம்பட லவ்வரு யாருன்னு பாத்ததே இல்லியே?

-ஹன்சிகாவ பாத்திருக்கீங்கள்ளோ! நேராக்க பாத்தா
அப்பிடித்தா இருப்பா! சைடா பாத்தீங்கன்னா நய்ந்தாரா!

-அப்படியா? அப்ப இதக்கொண்டிக் குடு!

-என்னுங்கொ இதுல ஒன்னுமே எழுதல? வெறும்
பேப்பரக் கொண்டி குடுத்தா எதாச்சிம் பிரச்சனை
ஆயிடப்போவுதுங்கொ!

-ஒன்னும் ஆவாது! அது ஒரு அபத்தக்கவிதெ!
வெத்தியாத்தா இருக்கும்! அவுளுக்கு புரியும்
நீ கொண்டி குடு!

-ரெண்டு வருசமா பொறவுக்கு சுத்தி
சர்க்கஸ் வித்தெ எல்லாங் காட்டி
கவுத்ததுங்கொ! ஒரு பேப்பர்ல.. சரி
நீங்க சொல்றீங்கொ! நாங் குடுக்கேன்!

000

இவங்கப்பன் இவளெ பெத்ததீம்
செத்துப்போனான்னு தா ஒலவத்துக்கே தெரியுமே!
இவளெ நாலெழுத்து படிக்க வச்சி
நோம்பி நொடின்னா துணிமணி வாங்கி குடுத்து
சமஞ்சப்ப ஐநூறு பத்திரிக்க போட்டு நம்ம
வெசாலாச்சி மண்டவத்துல சீரு வெச்சு
கண்ணுல ஒருசொட்டு தண்ணி வரப்புடாதுன்னு
சீராட்டி கொஞ்சிக் கொஞ்சி அப்புடி வளத்தனாக்கும்!
அமுட்டையுஞ் செஞ்சு கடேசில மேலப்பாளத்தானத்தா
கட்டிக்குவேன்னு ஒத்தக்கால்ல நின்னாளே மவராசி!
சரி புள்ள ஆசப்படுதேன்னு அவங் குடிகாரன்னு தெரிஞ்சுமில்ல
அஞ்சு வவுனு போட்டு கட்டிக் குடுத்தேன்! அந்தப் பீத்தரெ
அதப்பண்டிக் கழட்டுறேன் இதப்பண்டி அவுக்குறேன்னு
உள்ளதீம் தொலச்சுட்டு பக்கத்தூட்டு சிங்காரி ஒருத்திய
இழுத்துட்டு போயிட்டானாம்! இவொ மடியில
ஒன்னோடவும் இடுப்புல ஒன்னோடவும் இங்க வந்து நிக்காளே!
ஏலே உங்கோயா என்ன இன்னமு கொமுறின்னு நெனச்சுட்டு
இங்க ஏறீட்டு வந்தியாளே? நிமுசம் நிக்கப்புடாது எம்பட வாசல்ல!
போயி நீயும் ஒருத்தனை இழுத்துட்டு கங்காணாத ஊருக்கு ஓடீரு!


000

Post Comment

கருத்துகள் இல்லை: