புதன், டிசம்பர் 16, 2015

டிசம்பர் கவிதைகள் - 4இந்தக்குருவிகளின் குளியல்
சாலையோரத்தில் தேங்கி நிற்கும்
சின்ன குட்டையில் நடந்தேறுகிறது!
சற்றுமுன் குளியலை முடித்த காகமொன்று
வேப்பையின் கிளையில் அமர்ந்து
கொஞ்சமேனும் தன்னை உலர்த்திக் கொள்கிறது!
முக்குழிச்சான் கோழி தனக்கான
துணை எதுவுமின்றி பாறைக்குட்டையில்
எந்த நேரமும் குளித்துக் கொண்டேயிருக்கிறது
என்றேனும் ஒருநாள் சிவப்பாகி விடுவேனென்ற
நம்பிக்கையில்!
மழை நின்ற இரவில் இவைகளெல்லாம்
இத்தனை காலம் எங்கிருந்தன? என்பது போல்
எல்லா விஷப்பூச்சிகளும் சாலையில் சுற்றுகின்றன
புழுக்கம் தாங்காமல்!
இந்த மழைக்கு ஒன்பது எருமைத் தேள்கள்
தினம் ஒன்றாய் கொல்லப்பட்டதும் நிகழ்ந்து விட்டது!
அவைகளுக்கான இறப்பு வந்து விட்டது
என்கிறபோது தான் மற்றவர் கண்ணுக்கே
படுமாம்! என்று தத்துவம் சொல்லிச்
செல்கிறாள் இல்லத்தரசி! இவையெல்லாம் போக
பெயர்தெரியா பூச்சிகளின் உருவ அமைப்புகள்
பயமுறுத்தும் விதமாய் இருந்தன! பழைய வீட்டின்
விட்டத்தில் வளரும் இரு சிட்டுகளுக்கு அரிசி
மணிகளை காலையில் இடுகையில் மூக்கில்
வேர்த்து விட்டது போல அந்த காகங்களும்
வந்தமர்ந்து விடுகின்றன வயிற்றை நிரப்பிக் கொள்ள!
கிழக்கில் சிவந்த விடியல் அதோ வருகிறது என்றே
முடியும் எழுபதுகளில் என் தந்தை எழுதிய சிவப்புக்
கவிதைகள் சிலவற்றை வாசித்துக் கொண்டிருக்கிறேன்!
இன்னமும் கிழக்கு சிவக்கவேயில்லை என்ற வருத்தமுடன்!
குருவிகளில் ஆரம்பித்து சிவப்பில் முடிப்பதுவும் கூட

கவிதைகளில் சேர்த்தி தான் இப்போதைக்கு!


000


கடவுளரின் மதுவிடுதியை கண்டடைந்தவன்
தாக சாந்திக்காக உள் நுழைந்து குளிராய் உணர்ந்தான்!
கிண்ணத்தில் மது நிரப்பும் பணியில் இருந்தவரை
முன்பே தன் வீட்டு புகைப்படத்தில் கண்டிருப்பதாக
பேச்சுக்கு சொல்லி வைத்தான் புன்னகையோடு!
வியாபார பேச்சு தவிர அவர் வேறு பேசாமலிருக்கவே
ஒரு பூனையின் கனவில் தான் எப்படி நுழைவதென
கேள்வியை அவரிடம் வேண்டுமெனவே வைத்தான்.
அதற்கும் பதில் கிட்டாமல் போகவே தனக்குரிய
கிண்ணத்தோடு காலியாயிருந்த மேஜை ஒன்றில்
வந்தமர்ந்தான் அவன்! கையிலிருந்த தலைக்கவசத்தை
மேஜை ஓரம் வைத்து விட்டு மெல்லிய விளக்கொளியில்
சுற்றிலும் நிரம்பியிருந்த அந்த அறையை நோட்டமிட்டான்.
எல்லா மேஜையிலும் கடவுளர்கள் தங்கள்
தலைக்கிரீடங்களை கழற்றி வைத்திருந்தார்கள்! அவர்கள்
அனைவருமே.. அல்லது அவைகள் அனைத்துமே
இவனது தலைக்கவசத்தை உற்றுப் பார்த்தார்கள்
அல்லது உற்றுப் பார்த்தன!


000

அந்தக் குழந்தை அழுது கொண்டிருந்தது!
தேஞ் சாமீ அழுதுட்டே இருக்கே?
அம்மாவை சோச்சி ஆக்க சித்த உடேன்!
வெங்காயம் தொளிச்சு, கத்திரிக்கா அரிஞ்சி
தக்கோளி வெட்டி, வடச்சட்டிய வெச்சு ...

அந்தக் குழந்தை அழுது கொண்டிருந்தது!

உங்கொப்பன் வந்தா வந்த ஒடனே
சோறு சோறுன்னு பறப்பாரு சாமி!
ஆச்சு ஆச்சு.. மூனாவுது விசிலு வந்த
ஒடனே சோச்சி மொதல்ல ரெடியாயிடும்!

அந்தக் குழந்தை அழுது கொண்டிருந்தது!

உம்பட பாட்டி இருந்தாக் கூட இந்த நேரம்
என்னிய திட்டீட்டாவுது உன்னை தூக்கிட்டு
செல்லமாச்சிம் கொஞ்சும்! அது ஊருக்குள்ள
யாரு ஊட்டுல போயி வம்பளந்துட்டு இருக்கோ?
அழாதடா சாமி! சித்த நேரம் கம்முனிரேன்!

அந்தக் குழந்தை அழுது கொண்டிருந்தது.

ஏய்! உருமாண்டி இப்ப இது வழியா
வரப்போறான் பாத்துக்க.. இந்தப் புள்ள என்னேரமும்
அழுதுட்டே இருக்குது.. தூக்கிட்டு போடான்னு
சொல்லீருவேன் பாத்துக்க! அவன் வர்ற சத்தம்
கேக்குமாட்ட இருக்குதா!

அந்தக் குழந்தை அழுகையை நிறுத்தியிருந்தது!

000


நகர வீதியொன்றில்
எனைக் கடந்து போன
பெண்மணிக்கு மோனலிசாவின்
புன்னகை அப்பியிருந்தது!

000

உலகப் புகழ் பெற்ற
பஷீரின் மூக்கை அந்தக்
குழந்தை பிடித்துத் திருகி
விளையாடிக் கொண்டிருந்தது!

000

ஏகதேசம் எல்லாராலும்
கை விடப்பட்டவளிடம்
கண்ணீர் தீர்ந்து போயிருந்தது!

000

எல்லா ஊரிலும் ராவணன்கள்
தங்கள் பத்துத் தலைகளை
சுமக்க இயலாமல்
சுமந்தலைகிறார்கள்!

000

முன்னப்பின்ன இருக்கத்தான்
செய்யும்! படிஞ்சுதுன்னா பாத்து
கூட்டிட்டு போங்க மகராஜ்!
படிஞ்சு கூட வந்ததிற்கு காலில்
கொலுசு இருக்கும் போல!

000

எல்லாமே முடிஞ்சு போச்சு!
ஐயோன்னா வருமா?
அச்சச்சோன்னா வருமா?

000

Post Comment

கருத்துகள் இல்லை: