சனி, டிசம்பர் 19, 2015

டிசம்பர் கவிதைகள் - 6
ஆகவே பெருங்குடி மக்களே!
இனிமேல் ஊரிலுள்ள எல்லா
மம்மிகளையும் தாயே! என்றே
நாம் விளிக்க வேண்டுமென்பதை
இந்த பொன்னான தருணத்தில்
கூறிக்கொண்டு
இப்படித்தான் ஏதென்ஸ் நகரிலே
மம்மி என்றழைக்கப்பட்ட அம்மாக்களெல்லாம்
பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்திலே
மார்க்சிம் கார்க்கியின் தாய் சொன்னது போல
சொட்டுச் சொட்டாய் பனி
பெய்யும் அவ்விரவில்..மம்மிக்கு
தேர் தந்த வள்ளலென பெயர் பெற்றான்
வென்றது பாஞ்சாலங்குறிச்ச்சி! என்று
முழங்கிய பலே நெடுஞ்சேர் கொடிக்கிழான்!
ஆகவே நாம் நம் முன்னோர்கள்
எவ்வழி நடந்தார்களோ
அவ்விதமே இனி மம்மியை தாய் என்றே
அழைத்து மகிழ்வோமென இந்த நேரத்தில்
உங்களிடம் கூறிக் கொள்ள
கடமைப்பட்டிருக்கிறேன்!


000

எம் பிருஷன் வந்தா தெரியும்
வகுந்து போடுவான் வகுந்து..
வரட்டும் இன்னிக்கி இருக்குது உனக்கு!
ஆம்பள இல்லாத நேரம் பாத்து
அத்தன அக்குரமம் பண்ணப் பாக்கியா?
இர்றா இன்னிக்கி பட்டாஸ் கெளப்ப
போறாரு அவுரு வந்ததீம்! தப்பிச்சி
ஓடுறதுன்னா பொட்டியக் கட்டீட்டு
புருசனும் பொண்டாட்டியு ஓடீருங்க
கங்காணாத ஊருக்கு!

வந்துட்டீங்களா நீங்கொ! வாங்க!
பக்கத்தூட்டுல சண்டைக்கே நிக்கானுங்க,
அங்ககீது நீங்களு ஏறீட்டு போயிறாதீங்க!
ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிப்போச்சுன்னா
நானு வெள்ளச்சீல கட்டீட்டு சுத்தணும்!

000

சண்முகனுக்கு அந்தப் பழக்கம் எப்போதிருந்து
ஒட்டிக்கொண்டது என்பதுபற்றியான தெரிவுகள்
எந்த புத்தகங்களிலும் இல்லை! -இருந்தாலும் சண்முகன்
எந்த ஊரில் இலக்கிய மீட்டிங்குகள் நடந்தாலும்
முதல் ஆளாக சென்று போடப்பட்டிருக்கும்
நாற்காலியில் அமர்ந்து விடுவான். -அவன் அப்படி
அமர தேர்ந்தெடுக்கும் இடம் எப்போதும் கடைசி
வரிசையில் முக்கில் இருக்கும் நாற்காலி!
அமர்வு எப்போது துவங்கினாலும் அதற்காக
அவன் ஒரு நாளும் சலித்திக் கொண்டதில்லை!
கூட்டம் நடந்து கொண்டிருக்கையில் யார்
சிரித்தாலும் கணீரென்ற குரலில் சிரிப்பான்!
யார் கை தட்டினாலும் கை தட்டுவான்!
அவனுக்கு ஒரு பேரெழவும் தெரியாது!
செம்மறி ஆடுகள் ஒன்று குதித்து சாலையை
கடந்தால் அனைத்தும் அதே வண்ணம் குதித்தே கடக்கும்!
சண்முகனை எல்லா இலக்கிய பரிட்சயம் உள்ளவர்களும்
தெரிந்தே வைத்திருந்தார்கள்! அவன் ஒரு இலக்கிய அபிமானி!
(பி.கு. சண்முகன் வாசிப்பாளன் அல்ல)
சண்முகனுக்கு இரங்கல் கூட்டமும் ஒன்று தான்
புத்தக வெளியீடுகளும் ஒன்று தான்!
காலத்தின் எல்லா நாட்களும் அவனுக்கு ஒரு
மண்டபத்திலோ, பள்ளி அறையிலோ இலக்கிய
அமர்வுகள் வேண்டும்! கடைசி இருக்கையை அவன்
தேர்ந்தெடுப்பது பற்றி ஒரு நாள் எட்டிப்பார்த்த போது
அவன் கட்டிங் போடுவதற்காகவே கடைசி இருக்கையை
தேர்ந்தெடுக்கிறான் என்பது தெளிவானது.
சண்முகன் சமீப காலங்களில் அமர்வுகளுக்கு வருவதில்லை!
சண்முகன் கடைசியாக அமர்ந்த அமர்வு ஒரு இலக்கிய பீடத்தின்
இறுதி அஞ்சலி அமர்வு! -அதற்கு அடுத்த நாள் சண்முகன் என்ன
உடல் நிலை மோசத்தின் காரணமாக மரணித்தான் என்று
எமக்கு தெரியாது! யாரும் அமர்வுகளுக்கு
சண்முகனை அழைக்க வேண்டாம் என்றே இப்போது
சொல்லிக் கொள்கிறேன்!

(பல்லடம் ராசுவுக்கு)

000

சூரியனை குச்சி ஐஸ் கணக்காய்
சப்பிக் கொண்டு அமர்ந்திருந்தவன்
அவ்வப்போது இடது கையில்
வைத்திருந்த இலைகளையும்
மென்று தின்று கொண்டிருந்தான்.
இங்கனக்குள்ள எங்கியோ
குறியீடு சிக்கியிருக்குது!

000

சிறப்பான குளியல்,
சிறப்பான பக்தி,
சிறப்பான இட்லி சட்னியோடு,
கிச்சுக்கு கொஞ்சம் சட்டைக்கிம்
வாசனை திரவியம்,
சூப்பரா பங்சனுக்கு தயாரான தோழர்
காரை எடுக்க செட்டுக்கு வந்ததும்
வயிறு செரியில்லையென
பாத்ரூமிற்குள் சென்று விட்டார்!
புரோக்ராம் கேன்சல்!

000

-புலவரே மாங்கா என்று அரசியாரை திட்டினீரே!

-ஆமாம்! மாங்காயை காயாகவும் பழமாகவும்
மக்கள் தின்பதால் சொன்னேன்!

-தேங்கா என்றாயே?

-ஆமாம்! தேங்காயை போன்றே அரசியாரின்
மூளையில் தண்ணீரும் ஓடுகிறது என்றேன்!

-கொய்யா என்றாயே?

-ஆமாம்! சின்ன வயதிலிருந்து தாங்களுக்கு
உண்ணப் பிடித்த பழத்தை சொன்னேன்!

-வெங்காயம் என்றாயே?

-மக்களின் துயரம் கண்டு நீங்கள்
விடும் கண்ணீரைச் சொன்னேன்! வழக்கப்படி
கவிதையை வாசித்து விட்டு கவிஞன்
பரிசு கொடுக்க வேண்டுமல்லவா! இந்தாருங்கள்
பிடியுங்கள் அரசியாரே!

000Post Comment

கருத்துகள் இல்லை: