திங்கள், ஜனவரி 11, 2016

டெக்ஸ்காமிக்ஸ் வாசிப்பது என்பதே ஒரு விநோதமான மனநிலை தான். இன்னாடே சின்னப்பயபுள்ள மாதிரி? பொம்மெ போட்ட பொத்தவம் வாசிக்கிறே? என்று யாரேனும் கேட்டு விடுவார்களோ? என்ற அச்சம் வேறு முதுகுக்குப் பின்னால் ஒரு கருத்த பூதம் போல் ஒட்டி அமர்ந்திருக்கிறது. என் சவுரியம் அது! என்று முகத்துக்கு நேராக அவர்களிடம் கூற மனது ஒப்ப மாட்டேன் என்கிறது. ஏடா! நீ சுந்தர ராமசாமி வாசிச்சவனல்லோ! அதென்னமோ பேரே... ஆங் சி.நாவராசன் வாசிச்ச பயலல்லோ! கேவலம்டே!

ஆக நாம் முன்பாக பைங்கிளி புத்தகங்களை வாங்கி இடுப்பில் செருகி வீடு வந்து காக்கி அட்டை போட்டு வாசித்தது போல இப்போது காமிக்ஸ்களை அட்டை போட்டு வாசிக்க வேண்டிய மனநிலைக்கு வந்து விட்டோம். என் மகனாரிடம், புதுசுடா! என்று காட்டிய போது குடுத்த பாவத்துக்கு சும்மா பார்த்து விட்டு 150 ரூவாயாப்பா? என்றான். அடுத்து பிரின்ஸ் என் ஆதர்ஸ நாயகர்களில் ஒருவர்டா! அவருது 4 புக்கை ஆர்டர் போடணும்! என்றதும், பிரின்ஸ் உன்னோட நண்பராப்பா? என்றான்! ஆஹா வென்றது பாஞ்சாலங்குறிச்சி! பலே வெள்ளையத்தேவா!

சட்டத்திற்கு ஒரு சவக்குழி டெக்ஸ் வில்லரது தனித்த சாகசம்! கருப்பர் இனத்தை சேர்ந்த பொடியனிடம் அவர் சொல்லும் வாசகம் காமிக்சை எங்கோ கொண்டு செல்லும் தலமாற்றம் கூட இந்த புத்தகத்தில் நடைபெற்று விட்டது. “உன் மேனியின் வண்ணம் உன் வாழ்க்கையின் உயரத்தை தடை செய்ய அனுமதிக்காதே! நீ எந்த மனிதனுக்கும் சளைத்தவனில்லை என்பதை நினைவில் இருத்திக் கொள்”

போதும்! காமிக்ஸ் புத்தகம் விற்பனைக்காக இங்கே நான் விமர்சனம் என்று எழுதப் புகவில்லை! முடிந்தால் உங்கள் பால்யத்தை மீட்டெடுத்துக் கொள்ளுங்கள் என்பதற்காக! காமிக்ஸ் பற்றி அறியாத நண்பர்கள் அதில் ஒரு குகையில் நுழைவது போன்று நுழைந்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காக!

00

Post Comment

2 கருத்துகள்:

Senthil Sathya சொன்னது…

அருமை நண்பரே நான் கூட சிலாகித்து மெய் சிலிர்த வசனம் அது

Senthil Sathya சொன்னது…

நண்பர் என்று கூறியதற்காக கோபித்துக் கொள்ள வேண்டாம் காமிக்ஸ் நேசத்தில் நாமெல்லாம் சிறார்களே அதனால்தான் நண்பரே என்று குறிப்பிட்டேன்