வெள்ளி, பிப்ரவரி 19, 2016

ராஜேந்திரசோழன் கதைகள் -ஒரு பார்வை

சிறுகதைகள் எழுதத் துவங்கி விட்டவர்கள் கூட வாசித்தாக வேண்டிய படைப்பாளி அஸ்வகோஷ். எந்த விதமான இட்டுக்கட்டுதல்களும், பயங்காட்டும் வேலைகளும் இவரது சிறுகதைகளில் கிடையாது. நேரடியான மண்ணின் எழுத்து. எல்லாமே வாழ்க்கையிலிருந்து உருவி வெளியில் எடுக்கப்பட்டவைகள். போக கிராமிய வாழ்வு அப்படியே அசலாக எழுத்தில் பதிந்திருக்கும். பேச்சு வழக்குகள் கூட அப்படியே! இயல்பாக அமைந்து கொண்டிருந்த கதைகளில் இதழ்கள் கேட்கின்றனவே என்பதற்காக வலிந்து (அது தெரியாத மாதிரி) சில கொள்கைகளை, எதிர்ப்புகளை சிறுகதைகளுக்குள் நுழைத்திருக்கிறார்.

70 களில் சுரண்டல்கள், முதலாளித்துவம், பூர்ஷ்வா, சிவப்பு என்று இருக்கையில் நல்லவேளை நான் குயந்தையாக கிடந்தேன். பின்பாக 80களின் இறுதியில் தான் வாசிப்பு பக்கம் நகர்ந்தேன். முதலாக இவரது எட்டு கதைகள், பறிமுதல், தற்செயல் என்கிற தொகுப்புகளை அச்சமயம் ஒன்றாக வாசித்தேன். (என் அப்பாவுக்கு ஒரு பயக்க வயக்கம் இருந்திருக்கிறது.. அசோகமித்தரனை கொடுத்தால் ஒரே முட்டாக அவர் புத்தகங்கள் மட்டும் தான். நல்லவேளை ஜெயக்காந்தனை அவர் வாங்கி வீட்டில் அடுக்கவே இல்லை! !) பிறகு நடுகல் 91-ல் திருப்பூரில் ஆரம்பித்த சமயம் நண்பர்கள் மத்தியில் புற்றில் உறையும் பாம்புகள், தனபாக்கியத்தோட ரவ நேரம் சிறுகதைகள் பல காலம் சிலாகிக்கப்பட்டது.

போக இந்த தொகுப்புகள் எல்லாவற்றையும் என் நண்பர்கள் வாசிக்க எடுத்துப் போய் போயே விட்டது. பல புதிய ஆச்சரியம் கொள்ளும் வகையான கதைகளை இந்த புதிய ஒட்டுமொத்த தொகுதி வாயிலாக வாசித்து முடித்தேன். தோழர் என்று ஆரம்பிக்கும் கதைகள் சில பின்பகுதியில் இருக்கின்றன. அவைகள் எனக்கு அலர்ஜிமுன்பாக எழுதும் காலத்தில் வாழ்க்கையை பல சிறுகதைகளில் நானும் எழுதினேன் என்றால் இவரை வாசித்ததால் தான்.

இவரது திருவாளர் பரதேசியார் பண்டித புராணம் என்கிற நாவல் அது வெளிவந்த சமயம் வாங்கி .. யாருக்கேனும் ஓசி கொடுத்தால் ஒருவேளை திட்டுவார்களோ என்று பொட்டிக்குள் இன்னமும் மறைந்தே கிடப்பது உறுத்தல் தான். ஆக நல்ல சிறுகதையாசிரியர் நாவல் எழுதினால் தோற்று விடுவார். நல்ல நாவலாசிரியர் சிறுகதை எழுதினால் தோற்று விடுவாரென முன்பாக பலர் சொல்லுவார்கள். அது இப்படித்தான் வந்திருக்குமோ?

(நல்ல கதை வாசிப்பாளர்களிடம் ஒரு சந்தேகம் கேட்க வேண்டும்.. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். ஒரு கிராமத்தில் பொங்கல் சமயம் அங்கேயே களி மண்ணெடுத்து அச்சு போட்டு பொங்கல் பானைகள் செய்து விற்பனை செய்ய ஒரு குடும்பம் ஊரின் ஒதுக்குபுறத்தில் வந்து தங்கி பானைகள் செய்கிறது. வருடம் தவறாமல் வரும் குடும்பம் தான் அது. அந்த வருடம் ஊரார் அவர்களிடம் பானைகள் வாங்க வருகையில்.. அடுக்கி அழகாய் வைக்கப்பட்டிருக்கும் பானைகளை செய்த குடும்பமே எட்டி உதைத்து உடைத்து விட்டு செல்லும். - இது ராஜேந்திரசோழன் தான் எழுதினார் என்று இது நாள் வரை நம்பிக்கொண்டிருந்தேன்.. யாராய் இருக்கும்?)


ராஜேந்திரசோழன் கதைகள் -தமிழினி- விலை 790.

Post Comment

கருத்துகள் இல்லை: