செவ்வாய், பிப்ரவரி 02, 2016

அஸிஸ் பே சம்பவம்- ஒரு பார்வை


அய்ஃப்ர் டுன்ஷ் துருக்கி இலக்கியத்தின் முதன்மையான ஆளுமைகளில் ஒருவர் என்று குறிப்பு சொல்கிறது. 2 நாவல்கள், 5 சிறுகதைகள், 2 வாழ்க்கை குறிப்பு, ஓர் ஆய்வு என்று குறைவான படைப்புகள் எழுதியுள்ளவரின் அஸீஸ் பே சம்பவம் ஒரு குறுநாவல் வடிவில் இருக்கிறது.

தான்தோன்றியாக நிலையில்லா வேலைகளை செய்தும், மதுவிடுதிகளுக்கு சென்று வருவதுமாக பெற்றோரின் வெறுப்புக்கு ஆளான அஸீஸ் பே- வின் முழு வாழ்க்கையை வழுக்கிச் செல்லும் தமிழ் மொழிபெயர்ப்பில் (சுகுமாரன்) வாசிக்க அவ்வளவு சுவையாக இருந்தது என்பதை முதலாகவே சொல்லிக் கொள்கிறேன்.

வயது முதிர்ந்த, மனைவியை இழந்த, காய்ச்சலால் கிடந்து மீண்டெழுந்த அஸீஸ் பே தம்புரா வாசித்து பாடல்களை பாடுவதற்காக மது  ஸேகியின் மது விடுதிக்குச் சென்று அவனால் அடிபட்டு துக்ககரமாக தன் இல்லம் திரும்புவதில் ஆரம்பிக்கிறது குறுநாவல். போக அஸிஸ் பே தன் வீட்டிற்குத் திரும்பிய பின் அன்றைய மழை இரவில் அந்த தெருவாசிகள் அவனை இழக்கிறார்கள்.

துக்க சம்பவத்துடன் தொடங்கும் கதை பின்பாக அஸிஸ் பே சிறுவனாக இருந்த காலத்தை சொல்வதில் துவங்குகிறது. தம்புரா கலைஞனாவதற்கு எந்த அம்சத்தையும் கொண்டிராதா சிறுவன் அஸிஸ் பே தாத்தாவின் தம்புராவை எடுத்து அப்பா இல்லாத சமயங்களில் அதன் வில்லை தேய்த்துப் பழகுகிறான். அம்மா அவ்வப்போது அதனால் கடிந்து கொள்கிறார். அப்பாவுக்கு விசயம் தெரியாமல் மறைக்கிறார். அஸீஸ் பேயின் அப்பா கடுகடுப்பை முகத்தில் எந்த நேரமும் தேக்கி வைத்திருப்பவர். அப்பாவுக்கும் மகனுக்கும் சாதகமான சூழல் என்று நாவலில் எந்த இடத்திலும் வரவில்லை. வேலைக்கு சென்று கொண்டிருக்கும் காலங்களில் வழியில் மரியத்தின் கருவிழிகளில் விழுந்து நிலைகுலைகிறான் அஸீஸ்.

அந்த ஆழமான கண்களின் காதலில் அவன் விழாமல் இருந்திருந்தால் வாழ்க்கை வேறு விதமாகக்கூட அமைந்திருக்கும். ஆனால் அந்தக் காதல் பிழையாகிப் போகிறது. அலுவலகத்திற்கு கிளம்பிச் செல்லும் ஒரு நாளில் மரியத்தின் குடும்பம் வீட்டை காலி செய்து வண்டியில் எற்றிக் கொண்டிருக்கிறது பொருட்களை. மறைந்திருந்து கண்களில் நீருடம் அஸீஸ் அந்நிகழ்வை கவனிக்கிறான்.  அது அஸீஸ் பேயின் வாழ்க்கையில் நிகழ்ந்த முதலாவது பேரவலம். மரியம் பெய்ரூட்டிலிருந்து ஈஸ்தான்பூலில் இருக்கும் அஸீஸுக்கு கடிதம் எழுதுகிறாள். பணிநீக்கம் செய்யப்பட்ட அஸீஸை அப்பா வீட்டை விட்டு வெளியில் அனுப்புகிறார். பெய்ரூட்டுக்கு கப்பலில் வந்து சேர்கிறான் அஸீஸ்.

ஒரு தங்கும் அறையில் இவனை தங்க வைத்து விட்டு ஒன்றிரண்டு முறை வந்து பார்த்துச் செல்லும் மரியம் பின்பாக இவனை ஒதுக்கி விடுகிறாள். அஸீஸ் தம்புராவின் உதவியால் மொழிபுரியா தேசத்தில் மது விடுதியில் குறிப்பிட்ட காலம் வரை வாசித்து விட்டு ஊர் திரும்புகிறான். அது அவன் காதலைத் தேடிச் சென்ற பயணமாகவும், துக்கரமான வாழ்வியலின் பக்கங்களாகவும் நாவலில் சொல்லப்படுகிறது. பின்பாக அம்மாவின் இறப்பு, அப்பாவின் இறப்பெனவும், மனைவியாக வுஸ்லாத்தையும் அடைகிறான். அப்போது நகரில் பிரபலமான தம்புராக் கலைஞனாக அவன் இருக்கிறான்.

காலமாற்றத்தில் எல்லாமும் சோக வடிவெடுக்கிறது. கடைசியாக ஸேகியின் மதுவிடுதியில் இணைகிறான். வாடிக்கையாளர்கள் மதுவிடுதி நோக்கி வருவதற்கு காரணமே உங்கள் இசைதான்! என்று மதுபோதையில் இருக்கும் அஸீஸுக்கு ஸேகி சொல்கிறான். பின்பாக மனைவியை புளூ காய்ச்சலுக்கு சாகக் கொடுத்து தனியனாகிறார் அஸீஸ்.

நாவல் முடிவை நெருங்கும் சமயம், மது விடுதியில் கூட்டம் குறைவதற்கு எந்த நேரமும் சோக கீதங்களை இசைக்கும் அஸீஸ் தான் காரணம் என்பதை உணர்ந்து அவரை வீட்டிலேயே கிடக்கச் சொல்லிவிட முயற்சிக்கிறான் ஸேகி. இறுதியாக அந்த சம்பவம் மது விடுதியில் ஆரம்ப அத்தியாயத்தில் சொல்லப்பட்ட விதமாக நடந்தேறி விடுகிறது.

பெரும்பாலும் வாழ்வின் முறைமைகளை சற்று ஆழமாகச் சொல்வதில் தான் நாவல்கள் வெற்றி பெறுகின்றன.  சொல்லும் முறைமையில் கூடவும் தான். அந்த சொல்லும் முறைமையில் இது முக்கியமான நாவலாகப் படுகிறது.

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம். விலை : 50.00

000

Post Comment

கருத்துகள் இல்லை: