வெள்ளி, பிப்ரவரி 26, 2016

தாக நதி- நாவல் ஒரு பார்வைவிவாகரத்துக்கள் மேலை நாடுகளில் அற்பக் காரணங்களுக்காகவேணும் நடந்து முடிந்து விடுவதை நாம் அறிந்திருக்கிறோம். தூங்குகையில் கணவன் குறட்டை போடுவது சகிக்க முடியவில்லை என்று மனைவியானவர் விவாகரத்து பெற்று கிளம்பி விடுகிறார். ரத்தினமூர்த்தியின் இரண்டாவது நாவல்தாகநதிகணவன் மனைவிக்கிடையேயான பாகுபாடுகளையும் யாரேனும் ஒருவர் அனுசரித்து சென்று கொண்டிருப்பதையும் பற்றி இறுதி வரை பேசுகிறது.

வழக்கமாக மனைவியாக வாழ வந்த பெண் தான் கணவனை அனுசரித்து செல்வதை கண்கூடாக நாம் கண்டிருக்கிறோம். அவைகளே கதைகளாகவும் புத்தகங்களில் நிறைய வாசித்திருக்கிறோம். பெண் விடுதலை பேசும் நாவல்கள் பல வேண்டுமென்றே திணிக்கப்பட்ட வசனங்களையும், கோப தாபங்களையும் காட்டுவதான புத்தகங்களையும் நிறைய வாசித்து சோர்ந்துமிருக்கிறோம்.

தாகநதியின் நாயகன் வசந்தன் விவசாயத்தின் மீது ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவன். அவனுக்கு மனைவியாக வந்த வெண்ணிலாவுக்கு திருமணத்திற்கும் முன்பாக கோட்டு சாட்டையணிந்த, பெறும் பொறுப்பில் இருக்கும் கனவான் ஒருவர் தனக்கு கணவராக வந்தால் வாழ்க்கை இன்புற்றிருக்குமென ஆசை கொண்டவள். இங்கு எல்லோருக்குமே அப்படித்தான் ஆசை இருக்கிறது. சொந்த பந்தங்களின் எடுத்துரைத்தலுக்கு பின்பாக வசந்தனுக்கு மனைவியாகிறாள்.

திருப்பூர் பனியன் கம்பெனியில் பணியில் அமரும் வெண்ணிலா தனக்குரிய முழு சுதந்திரத்தை பெற்று விட்டதாக உணர்ந்து கம்பெனியில் முழுமூச்சாக உழைப்பை சிந்துகிறாள். கம்பெனியில் அவளுக்கு தோழியாக ரம்யா பழகுகிறாள். ரம்யா காதலித்து மணம் முடித்தவள். அவளது கணவன் ஒரு குடிகாரன். அதுபற்றியெல்லாம் மற்ற பெண்களைப் போல அவள் கம்பெணியில் புலம்புவதில்லை. மேனேஜராக அற்புதராஜ் என்பவன் தலைமுடியை நீவிக் கொண்டு மடிப்பு கலையாத உடையணிந்து இவர்களிடம் பழகுகிறான்.

இப்படி சொல்லிக் கொண்டே சென்றால் முழுக்கதையையும் இங்கே நான் சொல்லி விடுவேன் போலுள்ளது. திருப்பூர் இன்று ஒரு குட்டி ஜப்பான். விரைவான வாழ்க்கை வாழப் பழகிய மனிதர்கள் தான் இங்கு உள்ளனர். சோம்பேறிகளுக்கு இந்த ஊரில் இடமில்லை. திருப்பூரில் புழக்காட்டத்தில் இருக்கும் பணம் இதே ஊருக்குள் தான் புழங்கிக் கொண்டேயிருக்கும்அதிவேக வளர்ச்சியில் இருக்கும் நகரம் தினமும் அதிவேக பிரச்சனைகளையும் சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறது. பெண்கள் இங்கு வெகு சுலபமாக ஏமாற்றமடைவதை போல ஆண்களும் அவர்களுக்கு நிகராக ஏமாற்றமடைந்து கொண்டே தான் வாழ்க்கையை ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவன் தன் மனைவியை நகரத்தில் பறிகொடுக்கும் சமயத்தில் ஒருத்தி தன் கணவனை பறிகொடுத்து பரிதவிக்கிறாள். ஒரு கம்பெனியை நட்டத்தில் இழுத்துச் சாத்திக் கொண்டு ஊரை விட்டு ஒரு முதலாளி கிளம்பும் சமயத்தில் இன்னொரு முதலாளி புதிதாக கம்பெனி ஆரம்பிக்கிறார்.

வாழ்க்கையை சகித்துக் கொள்ள முடியாத வெளியூர் ஆட்கள் ஒன்று மருந்து குடித்துச் சாகிறார்கள் அல்லது குடித்து அழிகிறார்கள். கொஞ்சமாய் கிராமிய வாசனை வீசுமிடத்திலிருந்து பணிக்கு வரும் பெண்கள் கூட நகர வாழ்க்கை ஆடவர் மீது மையல் கொள்கிறார்கள். அவர்களின் ஏமாற்றுத்தனங்களுக்கு சீக்கிரமாய் பலியாகிறார்கள். இந்த நாவலில் வரும் வெண்ணிலா அற்புதராஜின் சோக நடிப்பால் பணத்தையும், மோதிரத்தையும் இழக்கிறாள். (நாவலாசிரியர் மோதிரத்தை அவள் இழக்கவில்லை என்பதற்காக ஒட்டாத ஒரு விசயத்தை கடைசியில் வைத்திருக்கிறார். அது படிப்போருக்கு ஹப்பாடா! என்ற நிம்மதியை தருமாவெனத் தெரியவில்லை)

வாழ்வை சரியாக வாழாமலே இப்படி ஓட்டமாய் ஓடும் வாழ்க்கையில் நுழைந்து கொண்ட வெண்ணிலா பதவி உயர்வுகள் பெற்று முதலாளியின் பாராட்டுகளையும் பெறுகிறாள். சரி இவர்களின் வாழ்க்கையை சரிசெய்வது தான் யார்? அவர்களுக்கு என்ன தேவை இருக்கிறது இவர்களின் வாழ்க்கையை சரி செய்ய?

உறவுகளின் தேவையை நாகரிக வாழ்வு இழந்து கொண்டிருக்கும் காலத்தில் வந்த மிகச் சிறந்த சிருஷ்டியாக இந்த நாவலை பார்க்கலாம் நாம். கிராமங்கள் பல நகர்மயம் ஆகிக் கொண்டிருக்கும் வேளையில் அது தன் நிலத்தையும் நீரையும் இழப்பதை போல உறவுகளையும் இழந்து கொண்டிருப்பது வேதனை தான். கோர்ட்டில் நின்றிருக்க வேண்டிய பிரச்சனையை ஒரு சாதாரண உறவு சரிப்படுத்துகிறது! அது நாவலில் அழுத்தமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

ரத்தினமூர்த்திக்கு எனது வாழ்த்துக்கள்! இவரது முந்தைய நாவலான, ஆவாரங்காடு அப்படமான கிராமிய வாழ்க்கையை, அதன் மனிதர்களை நம் கண்முன் காட்டியது என்றால் இந்த நாவல் திருப்பூர் நகர வாழ்க்கையினை ஓரளவு சொல்வதில் வெற்றியடைகிறது. காலம் படைப்பாளிகளை கண்டுணர வேண்டும் சில சொற்சிக்கனங்கள் இருந்தாலும்!

தாகநதி -நாவல், ரத்தினமூர்த்தி. விலை -200. அலைபேச : 99444 22111, 93442 01063.

000

Post Comment

1 கருத்து:

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்லதொரு பார்வை...