சனி, பிப்ரவரி 27, 2016

கூழாங்கற்கள் -சிறுகதை தொகுப்பு பற்றி.முற்றிலும் புதிய களன்களில் சிறுகதைகளை வாசித்தது மொழிபெயர்ப்புகள் வாயிலாகத்தான். கொஞ்சமாய் பெயர்ப்பு சரியில்லையெனில் அப்படியும் சிரமப்பட்டேனும் வாசித்து முடித்து விடுவேன். புலம்பெயர் ஆக்களின் புத்தகங்கள் கொஞ்சம் சோகம் நிரம்பிய வாழ்க்கைப் பதிவுகளாகவே வாசிக்க முடிந்தது. போக புலம்பெயர் ஆக்களின் புத்தகங்களை ஆறாவடு வாசித்த பிறகு நிப்பாட்டிக் கொண்டேன். கடலில் கள்ளத்தோணியில் செல்கையில் வாந்தியெடுத்தார்கள் அவர்கள் நாட்டை விட்டு வெளிக்கிடும்போது. சும்மாவே எனக்கு வாந்தி வந்துவிடும் போல தான் இருந்தது. முன்பாக (6 வருடம்) தமிழில் முதல் அரவாணியின் எழுத்து, வாழ்க்கை, நாவல் என்று வரிசையாக வரத்துவங்கிய சமயம் ஒரே புத்தகம் மட்டுமே வாங்கி வாசித்து நிப்பாட்டிக் கொண்டேன். (ஒன்றையே திரும்பச் சொல்லல்!)

கனவுப்பிரியனின் முதல் சிறுகதைத் தொகுப்பு எனக்கு மதியம் இரண்டு மணிக்குத்தான் கைக்கு கிட்டியது. கி.ரா-வின் சின்னக் குறிப்பு பின் அட்டையில் இருக்க கிராமியத்தகவல் களஞ்சியமாக இருக்கப்போகிறதென்ற ஆர்வத்தில் முதல் கதையில் நுழைந்தேன். (முன்னுரைகள் என்ற பெரும் கூட்டத்தை தாண்டி விட்டேன் வாசிக்காமலே) இந்த மடம் இல்லைன்னா சந்த மடம்- இந்தக்கதையை வாசிக்கத்துவங்குகையில்கதை சொல்லிஇதழில் படித்த ஞாபகம் வந்தது! ஆஹா! எல்லாமும் அப்படித்தான் இருக்குமென்ற குஷியில் பார்த்தால். முற்றிலும் எனக்கு அறிமுகமில்லாத ஊரில் நடக்கும் விஷயங்கள். போக அங்கங்கே உள்ளூர் விஷயங்களின் ஞாபகச் சிதறல்கள். எவற்றிலும் சோகத்தை காணோம்! எல்லாமே ஏக்கங்கள்!(களிமண் வீடு)  நினைவுகளின் பதிவுகள்.

பெட்ரோமாஸ் லைட் வேணுமென்று ஒரு கும்பல் இங்கே அலைந்தது. முன்பாக மொண்ணைப் பாம்பு தேவை என்று அலைந்ததைப் போல! எதற்காக அந்த பெட்ரோமாக்ஸ் அவர்களுக்குத் தேவையென அப்போது விசாரித்துக் கொள்ளவில்லை. காரணம் தெரிகையில் ஆச்சரியம் தான்!

பனங்கொட்டை சாமியார் ஒரு நம்பிக்கை விதை ஊன்றிய கதை. அதே போல் இனியொரு விதி செய்வோம். கூழாங்கற்கள் கதை அப்படியே சுஜாதாவை வாசித்து முடித்த திருப்தியை கொடுத்தது உண்மை தான். வடிவு கதையின் முடிவு... ல் ஆடு எதிர் வீட்டு சிறுமி கொடுத்த முருங்கை இலையை ஏற இறங்க பார்த்து விட்டு திங்காமல் முகத்தை திருப்பிக் கொள்வது என்று படித்த பிறகு பின்னால் வரும் கதைகளை ஒரே மூச்சில் படிக்கும் ஆர்வத்தை கொடுத்தது. அவரு அனில் கும்ளே மாதிரி கதையை பின்பாக முகப்பில் எழுதிய அனைவரும் பாராட்டி இருந்தார்கள் எனக் கவனித்தேன். உண்மையில் தொகுதியில் வாசக மனங்களின் அருகே நின்று பேசிய கதை அதுதான். நான் வயிறு வலிக்க சிரித்தேன்!

அனுபவங்களுக்கு பஞ்சமில்லாத வாழ்வு ஆசிரியருக்கு கிட்டியுள்ளது. சொந்த ஊரிலேயே கிடந்திருந்தால் இந்த மடம் இல்லன்னா சந்த மடம் மாதிரியான கதைகளைத் தான் எழுதிக் கொண்டிருந்திருப்பார்! அவற்றை வாசித்து விட்டு பாராட்ட தமிழில் கொஞ்சம் வாசகர்கள் இருக்கிறார்கள்! ஆசிரியர் முகநூலில் எழுத வந்தாலும் அவரை செப்பனிட பல நல்ல உள்ளம் பெற்ற படைப்பாளிகளின் ஆதரவையும் பெற்றிருக்கிறார். அதுவே சந்தோசம்! நிறைய இத்தொகுப்பு பற்றி சொல்லலாம் என்றாலும் இதுவும் முகநூல் பார்வைதான்!


கூழாங்கற்கள் - ஓவியா பதிப்பகம். விலை - 200. அலைபேச : 76675 57114, 96296 52652.

000

Post Comment

1 கருத்து:

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல விமர்சனம்.