புதன், பிப்ரவரி 03, 2016

ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் -ஒரு பார்வை

ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் - ஜப்பானிய எழுத்தாளர் யுகியோ மிஷிமாவின் நாவல் அவரது சுயசரிதையாகவும் கொள்ளலாமென பின் அட்டைக் குறிப்பு சொல்கிறது. அட்டைக் குறிப்பு, முன்னுரை, என்பனவற்றை நாவல் வாசித்து முடித்த பிறகு என்ன? ஏது? எனப்பார்க்கும் வழக்கம் சமீப காலங்களில் என்னைத் தொற்றிக்கொண்டு விட்டது. மொழிபெயர்ப்பு புத்தகங்கள் மீது எனக்கு எப்போதிருந்து  பித்துப் பிடித்திருக்குமென சரியாய் யூகித்து சொல்லமுடியவில்லை.

ஆனால் நாவலின் முதல் அத்தியாயத்திலேயே டோக்கியோவில் வாடகை வீட்டில் தன் பிறப்பின் போதே பார்த்த சம்பவங்கள் நினைவில் இருப்பதாக நாவலில் சிறுவன் பெரியவர்களிடம் உரையாடுகிறான். முதன்முதலாக நீராடிய நீர்த்தொட்டியின் ஞாபகம் கூட இருப்பதாய்.

ஜனவரி 4, 1925 காலையில் என் அம்மா பிரசவ வலியால் தாக்கப்பட்டாள். அன்று மாலை ஒன்பது மணிக்கு ஐந்து பவுண்டுகள் மற்றும் ஆறு அவுன்ஸ்கள் எடையிருந்த சிறிய குழந்தையை அவள் ஈன்றெடுத்தாள்.

தன்னைப்பற்றி பேசிக் கொண்டே, சில தத்துவ விசாரங்களுக்குள்ளும் தன்னை ஆட்படுத்திக் கொள்ளும் சில நாவல்களை முன்பாக வாசித்திருக்கிறேன். இந்த நாவல் முழுக்க முழுக்க தன்னைப் பற்றியே கூறிக்கொண்டிருக்கும், யோசித்துக் கொண்டிருக்கும் நபர், தன்விளக்கங்களை சொல்லிக் கொண்டே செல்லும் புத்தகம். ஒருவர் தன் குழந்தைப்பருவ ஞபகங்களை இந்த அளவுக்கு ஞாபகத்தில் வைத்திருக்க இயலுமா? என்ற கேள்வியும் என்னிடம் இருக்கிறது. அம்மாவின் பீரோவிலிருந்து துணியை உருவி இழுத்து, கண்ணாடி முன்பாக நின்று தென்கட்சுவாக தன்னை மாற்றிக் கொண்டு விட்டதாக நினைப்பது, போக அடுத்ததாக கிளியோபட்ரா வசீகரிப்பது.

மற்றொருபுறம், நானே போர்க்களத்தில் மடிந்து போகும் அல்லது கொல்லப்படும் சூழல்களை கற்பனை செய்வதில் மகிழ்ச்சி கொண்டிருந்தேன். போர்ச்சூழலில் இருக்கும் தேசத்தில் குழந்தைகளின் விளையாட்டுகள் கூட மறைந்திருந்து துப்பாக்கிகளை  வாய் ஒலிகளோடு இயக்குவதாயும், சுடப்பட்டவர் வீழ்ந்து மடிவதாயுமே இருக்கின்றன. தொடர்ந்து பள்ளி வாழ்க்கையும் நண்பர்களைப் பற்றியும் விவரித்துச் செல்கிறது நாவல்.

‘உனக்கு 20 வயதாகுமுன்பே நீ செத்துப்போவாய்’ என்னுடைய பலவீனமான தேகத்தைக் காட்டி நண்பனொருவன் என்னிடம் விளையாட்டாகச் சொன்னான். ‘சொல்வதற்கு எத்தனை பயங்கரமான விசயம்!’ கசப்பான புன்னகைக்குள் எனது முகத்தை துளைத்து நிறுத்தி, நான் பதிலளித்தேன். ஆனால் உண்மையில் அவனுடைய ஊகத்தின் மீது வினோதமாக நான் இனிமையான மற்றும் கற்பனையான ஈர்ப்பினைக் கொண்டிருந்தேன்.

நாவலின் பின்பகுதி வாலிபக்காலத்தை பேசுகிறது. விபச்சாரியிடம் தோற்றுப்போவது கூறப்படுகிறது. சொனோகோவுடனான ஈர்ப்பு புது விதமாய் . காதலா? என்று சந்தேகிக்கும் வகையில் சொல்லப்படுகிறது. அந்த பகுதிகளில் நான் வேறு விதமான காதலை நுகர்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை வாசிக்கையில் உணர்ந்தேன். விசயங்களில் இருந்து தப்பித்தலும் சிக்குதலும் பைத்திய நிலைதான். சொனோகோ வேறு நபரின் மனைவியான பிறகும் இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள் நண்பர்களாக! ஆனால் அது எதெற்கென இருவருக்குமே புரிபடுவதில்லை.

பின்பகுதிகளில் இந்த நாவல் என்னை ஏன் ஈர்த்தது என்பதற்கான காரணங்களை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். மேசையின் மேற்பகுதியில் சிதறிக்கிடந்த ஏதோவொரு மதுபானம் பிரகாசமான, அச்சந்தரும் பிரதிபலிப்புகளை வீசிக் கொண்டிருக்கிறது.

நண்பர் கார்த்திகைப் பாண்டியனின் மொழிபெயர்ப்பு உழைப்பு நாவலின் இரண்டவது அத்தியாயத்திலிருந்து சரளமாய் வேகமெடுத்திருக்கிறது!  புத்தகத்தின் பின் அட்டையில், பிறழ்ந்த காமத்தை இயல்பாகக் கொண்டிருக்கும் இளைஞனின் பார்வையினூடாக வாழ்வின் அபத்தத்தையும், மரணத்தின் அற்புதங்களையும் பேசுவதாக சொல்கிறது. வாக்குமூலங்களும் சுயசரிதைகளும் உண்மைகளை சொல்கின்றனவா? என்கிற சந்தேகங்களை  முன்பாக தமிழில் ஏற்படுத்தி விட்டார்கள். ஆனால் இவற்றை சொல்வதற்கும் ஒரு தனித்த தைரியமும் வேண்டும். இதனால் இந்த நாவலின் உண்மைத் தன்மை காப்பாற்றப்பட்டு விட்டது.

எதிர் வெளியீடு- விலை-250. ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்- ஆங்கிலத்தில் -மெடித் வெதர்பை. தமிழில்- கார்த்திகைப் பாண்டியன். - புத்தகம் வேண்டுவோர் தொலைபேச : 9942511302

000

Post Comment

கருத்துகள் இல்லை: