வெள்ளி, பிப்ரவரி 19, 2016

ஜெயமோகனின் பனிமனிதன்

இயல்பாகவே எனக்கு இந்த மகத்தான, சிறப்பான, முதன்மையான என்கிற வார்த்தைகள் பிடிக்காது. ஏதாவது ஒரு புதிய நகரில், ‘அங்க போயி சாப்பாடு சாப்பிடுங்க, ரொம்ப நல்லா இருக்கும்’ என்று தாட்டி விடுவார்கள். நம்பிப்போய்  சாப்பிட்டு விட்டு பத்து நிமிடத்தில் நெஞ்சு எரிச்சல் வருதே! என்று தடவுவது நடந்து விடும். அதற்கு அப்போதைக்கான தீர்வு டைஜினாக இருக்கலாம். எப்போதைக்குமான தீர்வாக டைஜின் இருக்காது.

நான் இந்த பனிமனிதனை தினமணிக்கதிரில் தொடராக வந்த போது, இயல்பில் சிறுவர் கதைகள் என்றால் ஆர்வமாய் வாசிக்கும் எனக்கு ஒன்றிரண்டு தினமணிக்கதிர் கிட்டியதால் வாசித்துப் பார்த்தேன். அதுவும் ஜெயமோகன் என்கிற பெயருக்காக! முன்பாக ரப்பரும், கணையாழியில் வெளிவந்த பார்த்தீனியம் குறுநாவலும் அவர் மீது ஒரு கவனிப்பை உருவாக்கியிருந்த சமயம். அப்புறம் அவை வரிசையாகவும் சிக்கவில்லை. ரெம்ப காலம் கழித்து புத்தகமாக வந்த போது கூட கைக்கு சிக்கவில்லை. வார்த்தை இதழ் வெளியிட்ட புத்தகமும் கைக்கு சிக்கவில்லை. இந்தமுறை கண்காட்சியில் பார்வைக்கு சிக்கியதும் தூக்கியது தான். நேற்றிரவு வாசித்து முடித்து விட்டு சாய்கையில் மணி பதினொன்றாகி விட்டது.  இப்போது தான் மகத்தான என்கிற வார்த்தையை பார்க்கிறேன்.

சிறுவர்களுக்கான கதையாக அதன் பாதையில் சின்னச் சின்ன தகவல் குறிப்புகளுடன் சொல்லப்பட்ட கதை பின்பாக பெரிய குழந்தைகளுக்காகவும் பயணப்படுகிறது. இந்த வகையான நாவல்களை எழுதுகையில் கையில் எகப்பட்ட தகவல் குறிப்புகளை வைத்துத்தான் எழுதவேண்டுமோ? என்கிற பயம் என்னிடம் முன்பிருந்தே இருக்கிறது. எனெனில் நாவல் முழுக்க ஏகப்பட்ட அறிவியல் மற்றும் தத்துவத் தகவல்கள். போக புத்தமத நம்பிக்கைகள் என்று நிரம்பி வழிகிறது.

பனி மலைகள் சூழ்ந்த பகுதியில் மூவர் நடந்து பயணிக்கையில் அவர்கள் உடல் அனுபவிக்கும் குளிரை வாச்கனும் அனுபவிக்க வேண்டும். நிச்சயம் படிக்கையில் எனக்கும் குளிரெடுத்து விட்டது.

அவதார் படத்தில் தான் விதவிதமான வடிவங்களில் பரிணாம வளர்ச்சி பெறாத விலங்குகள் காட்டப்பட்டிருந்தன. நாவலின் கடைசிப் பகுதிகள் வாசிக்கையில் அவதாரே இந்த நாவலை வாசித்து தான் திரித்து பண்ணினார்களோ? என்றே தோன்றியது. போக ஜுராசிக் பார்க்குக்குள் சென்ற மாதிரியும். ஜெயமோகனிடம் கையிலிருப்பது இயல்பான தெளிந்த நீரோட்டமான நடை.  கொஞ்சம் அங்கங்கே மனித இனம் அழிவை நெருங்கும் சமயம் நெருங்கி வருகிறதென்ற பயமும் கூடவே சேர்ந்து கொள்வது தவிர்க்கவே முடியவில்லை.

தனிப்பட்ட முறையில் மனிதர்களுக்கு கருணை உண்டு. ஆனால், மனித இனத்துக்கு கருணையே இல்லை. ஏனெனில் மனிதனின் வாழ்க்கை முறை அப்படிப்பட்டது. இயற்கையை அழித்துத்தான் அவனால் வாழ முடியும். அவன் அப்படியே பழகி விட்டான்.

பனிமனிதன் - ஜெயமோகன். விலை -200. நற்றிணை பதிப்பகம்.

000

Post Comment

2 கருத்துகள்:

பரிவை சே.குமார் சொன்னது…

நல்ல விமர்சனம் சார்.

வா.மு.கோமு சொன்னது…

நன்றி நண்பரே!