அஞ்சல் நிலையம் -ஒரு பார்வை

வாசகர்களோடு சற்றேனும் சமரசம் கொண்டிராத எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் சார்லஸ் புக்கோவ்ஸ்கி என்பதை முன்பாக அவரது கவிதைகள் வாயிலாக (சிற்றிதழ்களிலும், இணையத்திலும்) அறிந்திருந்தேன். யார் இந்த புக்கோவ்ஸ்கி? என்று ஆங்கிலத்தில் தட்டி கூகிளில் தேடிப்பார்க்கும் வேலையெல்லாம் என்னிடம் கிடையாது. அவர் ஒரு கவிஞர் என்கிற அளவில் மட்டுமே முன்பாக அறிந்திருந்தேன். அவரது கவிதைகளில் கேலிகளும் கிண்டல்களும் நகையாடல்களும் நிரம்ப இருக்கும். புன்னகைத்துச் செல்லவாவது அவ்வப்போது வாசிப்பேன்.

அதே போன்று ’அஞ்சல் நிலையம்’ நாவலை மொழிபெயர்த்த பாலகுமார் விஜயராமனும் சமரசம், பூசி மெழுகுதல் ஏதுமின்றி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். சில எழுத்துக்களை, காப்பாற்றுவதாக எண்ணி தமிழில் பூச்சுப் பூசி  காட்டினால்  நாவலின் தன்மையே கூட மாறிவிடும் அபாயம் நேர்ந்து விடும். (இரண்டு வருடம் முன்பாக ஆங்கிலத்தில் குறைந்த பக்கத்தில் சின்ன நாவலாக இருந்த ஒரு புத்தகம் தமிழில் 400 ரூபாய்க்கு தலையணை சைசில் எப்படி வந்தது? என்று ஆச்சரியமாக இன்னமும் விழித்துக் கொண்டு 100 பக்கங்களை தாண்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்.)

கின்னஸ்கி தான் வாழும் வாழ்க்கை முறைகளை அவரே சொல்வது போல நாவல் ஆரம்பமாகிறது. அஞ்சலக தபால்களை தற்காலிகப்பணியாக பட்டுவாடா செய்யத்துவங்கும்  கின்னஸ்கி முதல் அத்தியாயத்திலேயே பருத்த பெண்ணின் உடலை வர்ணித்து, மூன்று நான்கு நாட்கள் இரவுகளில் படுக்கையில் சந்தித்து... பின்பாக மற்ற பெண்களைப் போலவே அவள் மீதான நாட்டம் குறைந்து, அவளிடம் செல்லவில்லை என்று துவங்குகிறார்.

என்னாடா இது?! ஆரம்பமே அபாரமா இருக்கே? என்றும், கீழே வேற வைக்க முடியாது போலிருக்கே! என்றும் முடிக்க வேண்டியாகி விட்டது. நாவல் அவ்வளவு வேகம். போக இடங்களும் பெயர்களும் தான் அமெரிக்க கதை ஞாபகத்தை தந்ததே தவிர விசயமெல்லாம் உலகத்திற்கேயுண்டான  ’அந்த பதினொரு நிமிட ’ வேலைப்பாடுகள் தான்.  தமிழில் வந்த நேரடியான நாவலைப் படிப்பது போன்றே இருந்ததை மறுப்பதற்கில்லை.

’மேடம், இவை தான் உங்களுக்கு வந்திருப்பவை’

‘சீட்டுகள், சீட்டுகள், சீட்டுகள்! இந்த சீட்டுகளைத்தான் உன்னால் கொண்டு வர முடிந்ததா?’

அவர்கள் தொலைபேசி, கெஸ், ஆடம்பர விளக்குகள் என்று அனைத்தையும் கடனுக்கு வாங்கி அனுபவிப்பது என் குற்றமா என்ன? பிறகு தவணைக்கான சீட்டு வரும் போது, ஏதோ நான் தான் அவர்களை தொலைபேசியும், 350 டாலர் தொலைக்காட்சியும் வாங்கி உபயோகிக்கச் சொன்னது போல, என் மீது எரிந்து விழுந்தால் என்ன செய்ய?

 தற்காலிக பணியிலிருக்கும் அஞ்சல் பட்டுவாடா பணியாளரான கின்னஸ்கி அந்தப் பணியின் போது படும் சிரமங்களாக, மழை, நாய்கள், பெண்கள் என்று பலவற்றை சொல்கிறார்.

‘சனியனே, நான் சம்பாதிக்கும் போது நீ வீட்டில் படுத்துக் கிடக்கவில்லையா?’

‘அது வேறு. நீ ஆண்மகன், நான் பெண்.’

‘ஓ, அது தெரியாமல் போய் விட்டது வேசிகளே, நீங்கள் தானே எப்போதும் சம உரிமை கேட்டு கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பீர்கள்?’  (போகிற போக்கில் அடித்து விடுவது என்று இந்த நாவலில் பல! குறிப்பாக கறுப்பர் இனம், தூதன், சிலுவை, நாய்க்குட்டிக்கு பிக்காஸோ என்று பெயரிடுவது  என்று)

‘நான் நல்லவனாகத்தான் இருக்கிறேன். இந்த கருமம் பிடித்த அஞ்சல் அலுவலகம் தான்...’ - எல்லோருக்கும் செய்கின்ற தொழில் மீதான சலிப்பும் வெறுப்பும் ஏனோ கொஞ்சம் காலம் கடந்து தோன்றத்தான் செய்யும். அது வார்த்தைகளில் எங்கேனும் நண்பர்கள் மத்தியிலோ, வேறெங்கோ வெளிப்பட்டுக் கொண்டே தான் இருக்கும். கின்னஸ்கியும் அதிலிருந்து தப்பிக்கவில்லை.

நான் சில்லறைத் திருடனெல்லாம் இல்லை. ஒன்று உலகமே வேண்டும் அல்லது ஒன்றுமே வேண்டாம். அவ்வளவுதான். இந்த வார்த்தைகளை சார்லஸ் புக்கோவ்ஸ்கியே சொன்னதாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

(குறிப்பு : அரசுத்துறையின் சட்டதிட்டங்களுக்குள் வளைந்து கொடுக்க முடியாத, இயல்பு வாழ்க்கைக்குள் சிக்கிக் கொள்ள விரும்பாத, சூதாட்டம், பெண்பித்து, குடி ஆகியனவற்றை கொண்டாடும் ஓர் எதிர்நாயகனின் வாழ்க்கை இந்த நாவல்- பாலகுமார் விஜயராமன்)

-எதிர் வெளியீடு - விலை - 200. புத்தகம் வேண்டுவோர் : 9942511302.

000

கருத்துரையிடுக

0 கருத்துகள்