செவ்வாய், ஏப்ரல் 19, 2016

நான் சீக்கிரமாக வந்து சேர்ந்து விடுவேன்

.நான் சீக்கிரமாக வந்து சேர்ந்து விடுவேன்
அதற்குள்ளாக என்னை புதைத்து விடாதீர்கள்.
தகவல் எனக்கு கிடைத்த போது என்னால்
அதிர்ச்சியை தாங்கிக் கொள்ளத்தான் முடியவில்லை!
பின்பாக உறவினர் பேசிய பேச்சுக்கள் எதுவும்
காதில் சரியாக விழவுமில்லை! –இருந்தும்
பிணத்தை இன்று இரவே இடுகாடு தூக்கிப்
போய் விடுவார்கள்! என்றே சொன்னதாக ஞாபகம்!
இதோ நான் பேருந்து ஏறி விட்டேன்.
ஊர் வந்து நான் சேர எப்படியும் பனிரெண்டு
மணிநேரங்கள் ஆகிவிடும் என்று
தோராயமாக நினைக்கிறேன். இதோ முக்கியமான
பெருநகரமொன்றைத் தாண்டி விட்டேன்.
நான்கு பேருந்துகள் நான் மாற்றி மாற்றி
ஏறி பயணப்பட்டு வந்தாக வேண்டும்!
எப்படியும் யாரேனும் ஒருவர் எனக்காக
இழவு வீட்டில் குரல் கொடுத்துக்
கொண்டிருக்கவேண்டும்! அவன் வந்து
சேரும் வரை அவன் பிணத்தை புதைத்து
விடக்கூடாதென்று! இப்படி ஒரு சாவு
வந்திருக்க வேண்டியதில்லை தான். இழவுச்
சேதிகள் இங்கே எல்லோரையும் பீதிக்குள்ளாக்கி
பயப்படச் செய்கிறது! பிணங்களுக்கு ஆதரவுக்
கரங்களை எல்லோரும் நீட்டிக் கொண்டிருக்க
ஆசை கொண்டிருக்கிறார்கள்! நம்புகிறேன்!
என் பிணத்தை கடைசியாக
ஒருமுறை பார்த்து விட்டால்
நிம்மதியாகிவிடும்! அது நான் தானா? என்பதும்
அடையாளப்பட்டு விடும்! இதோ அடுத்த பேருந்தில்
தொற்றிக் கொண்டு விட்டேன்! –நான் வெகு
விரைவாக பயணப்பட்டு வந்து கொண்டு
இருக்கிறேன்! அதற்குள் என்னைப் புதைத்து விடாதீர்!
000

Post Comment