வியாழன், ஜூன் 09, 2016

வேற்றுக் கிரகவாசி - முகப்புத் தகவல்
.


உங்களோடு

மீண்டும் ஒரு சிறுகதை தொகுதி முலமாக வாசகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது சுத்தமாக இலக்கிய வகைமைக்குள் அடங்கி விடும் கதைகளாக அமைவதில் இரட்டிப்பு மகிழ்ச்சியே! இலக்கியச் சிறுகதைகள் என்று தவளைகள் குதிக்கும் வயிறு, மண்பூதம் இந்த இரண்டு புத்தகங்களைத் தொடர்ந்து வெளிவரும் இந்தத் தொகுப்பு என் கடைசி இலக்கியச் சிறுகதை தொகுப்பாக இருக்கவேண்டும் என்றே ஆசைப்படுகிறேன். சென்ற இரண்டு வருடங்களாகவே நான் நாவல் என்ற வகைமைக்குள் பலவற்றை செய்யும் ஆசையில் இருந்தேன். ஆனால் என் பழக்கம் எல்லாம், சாமார்த்தியம் எல்லாம் சிறுகதைக்குள் மட்டுமே!

இலக்கியச் சிறுகதைகள் என்று எழுதுவன எல்லாமே என் நாவல்களுக்குள் அடங்கிப் போய் விட்டமையால் கதைகளை குறைவாகவே எழுதினேன். ஆனால் இந்தத் தொகுப்பு திட்டமிடப்பட்ட தொகுப்பு. இதில் நான் கமர்சியலாக எழுதிய கதைகள் எதுவும் இடம்பெறாமல் பார்த்துக் கொண்டேன். முன்பாக பிலோமி டீச்சர் தொகுதியில் இரண்டு வகைமையான எழுத்துக்களும் சேர்ந்தே அமைந்து விட்டன! அது தவறு என்றும் நான் நினைக்கவில்லை.

முன்னங்காலை ஊன்ற முடியாத சிறுத்தை கதை உயிர்மையில் வெளிவந்த போது பெரிய மாற்றம் எதுவும் நிகழ்ந்து விடவில்லை. அது ஒரு கதை என்கிற அளவிலேயே பார்க்கப்பட்டது. அதில் வழக்கமான என் நையாண்டிகளும் குறைவு. அந்த சிறுகதையை எழுத என் உழைப்பு அதிகம்.

போக நெரிசல் மிகுந்த வீடு சிறுகதையும் உயிர்மையில் வெளிவந்த சிறுகதையே! அதுவும் அப்படியே! இப்படியான கதைகள் என்னிடமிருந்து வருவதற்கு வாய்ப்பு குறைவு தான் என்றாலும் முந்தைய என் பிம்பத்தை உடைப்பதற்காகவே நான் விருப்பப்பட்டு எழுதிய கதைகள். போக மணல்வீடு இதழில் வந்த கதைகளும் என் இருப்பை உறுதி செய்யும் கதைகளே! கதைகள் விதம் விதமாக எழுதப்படும் காலத்திலும் நேரத்திலும் நாம் இருக்கிறோம். வா.மு.கோமு எழுதும் கதைகள் பாலியலை தொட்டுச் செல்பவையே! என்ற பிம்பத்தை உடைக்க நான் போராடிக் கொண்டிருக்கிறேன்.

என் எழுத்துக்களை தொடர்ந்து வெளியிட்ட இலக்கிய இதழ்களுக்கு இந்த சமயத்தில் நன்றியை கூறிக் கொள்கிறேன். என் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய திரு. சுகன் அவர்களையும் இந்த நிமிடத்தில் நினைத்து பெருமூச்சு ஒன்றை விடுகிறேன்.

இந்தத் தொகுதியில் சேர்க்கப்பட்டிருக்கும் பூரான் என்கிற கதை என் அனுபவமே! இத்தனை நாட்களாகவே நான் பூரானின் கடிகளை வாங்கி அவைகளை கொன்று கொண்டேயிருக்கிறேன். நான் பூரானாக மாறிய கனவுகள் ஏராளம். இந்த சிறுகதை எதிர் வெளியீட்டில் வந்த காப்காவின் உருமாற்றம் படித்த போது விரிவாக்கப் பணிகளைத் தேடியது. காசம் காப்காவை உருமாற்றம் எழுத வைத்தது. அந்த காசத்தின் நினைவலைகள் என்னை பழைய கதையை விரிவாக்கம் செய்யத் தூண்டியது. ஒரு விசயம் எப்படி இன்னொரு விசயத்தை எளிதாக இலக்கியத்தில் தொடச் செல்கிறது? என்பதை படிக்கையில் வாசகர்கள் உணரலாம். பூரான் என் காசநோயின் தீவிரத்தையும் ஒருவகையில் தொட்டுச் செல்ல காப்காவின் உருமாற்றம் உதவியது என்பதைச் சொல்லி விடுகிறேன் முகப்பிலேயே!

இந்தத் தொகுதியின் வெற்றி என்னை அடுத்த வருடம் இதைத் தாண்டிய மற்றொரு தொகுதியை வெளியிடும் ஆர்வத்தை உருவாக்கும் பணியைச் செய்யப் போவதில்லை என்பதை இச்சமயத்தில் நினைத்துக் கொள்கிறேன். என் இலக்கிய சிறுகதை வாசிப்பாளர்களுக்கான கடைசி விருந்து இந்தத் தொகுதி. தமிழில் இவ்வளவு எளிதாக விசயத்தை சொல்ல முடியும் என்பதை நினைக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

புத்தகத்தை மிகச்சிறப்பாக கொண்டுவரும் நண்பர் வேடியப்பனுக்கு என் நன்றிகள்!

                                                                                                                                                                                                                                                                                                                      அன்போடே என்றும்
                                                                                                                                                            வா.மு.கோமு
                                                              பேச : 9865442435
                                                             vaamukomu@gmail.com
                                                                                                                                                                                                                                                                                                                                                                                            

Post Comment

கருத்துகள் இல்லை: