மல்லாக்கப்
படுத்து சூரியனைப்
பார்த்து
காறித் துப்புவது
போன்றது
தான் இந்த வாழ்வு!
000
யாரோ
தலை மீது கல்லைப் போட
துரத்தி
வந்த வண்ணமே இருப்பது
தான்
இந்த வாழ்வு!
000
விந்துத்
துளிகளில் உயிர்
அணுக்கள்
இல்லாத கடவுளிடம்
கையேந்தி இறைஞ்சி நிற்பது
தான்
இந்த வாழ்வு!
000
தன்னை
மட்டுமே காப்பாற்றச்
சொல்லி
கோவிலை வலம்
வருகையில்
தடுக்கி விழுந்து
பல்லை
உடைத்துக் கொள்வதே
இந்த
வாழ்வு!
000
மஞ்சுக்
கோழி ஒரே அடையில்
பதனஞ்சு
குஞ்சுகள் பெற்றெடுத்து
அழைத்துப்
போவதும் இந்த
வாழ்க்கையோடு
சேர்த்தி தான்.
000
ஓடிப்போனவள்
திரும்பவும்
ஊருக்குள்
வந்து சேர்ந்த பிறகு
பேசுவதற்கு
நிறையவே
வார்த்தைகள்
இருந்தன!
000
வழிமீது
விழி வைத்துக் காத்திருந்தான்
விழி
மீது எவரேனும் மிதியாமலிருக்க
வழி
மீது கண் வைத்திருந்தான்!
000
இங்கென்ன
மடியில முடிஞ்சா வச்சிருக்கேன்?
காசு
வேணும் காசு வேணும்னு
பன்னண்டு
மணியானா நின்னுக்குறே?
உன்னை
பெத்த கடனுக்கு சோறு
மூனுவேளை
வட்டல் நம்ப எடுத்துக்
கொட்டத்தான்
உங்காத்தாவுக்கு
எழுதி வச்சிருக்கு!
நீ
குண்டி வெடிச்சு சாவ நான் காசு அவுக்க இல்லெ!
ஆளப்பாரு!
கொன்னு போடுவேன் கொன்னே போடுவேன்னு
நாலு
சனம் கேக்க கத்திக்கடா! என்னெக்
கொல்லத்தானே
உன்னெப் பெத்தேன்!
சாவுறேன்
சாவுறேன்னு எனக்கு பூச்சாண்டி
காட்டுறியா?
சாவுடா போயி! ஆனா ஊருக்குள்ள
நல்ல
குடிதண்ணி கெணத்துல உழுந்து செத்துடாதே!
போ!
போயி காட்டுல எங்காச்சிம் மரத்துல
தூக்குப்
போட்டுச் சாவு! இல்ல ரயில் ரோட்டுல
வுழுந்து
சாவு! நான் எழவை எடுத்துக்கறேன்!
பொழைக்கிற
பையன் பொச்சைப் பார்த்தாவே
தெரியுமாம்!
இது வெளங்கவா போகுது?
000
இங்கு
என்னைச் சுற்றிலும் எல்லாமே
சுகமாகவே
இருக்கிறது!
கார்க்காரர்கள் ஹாரன்
அடித்து
சைக்கிள்காரர்களை ஒதுங்கச்
செய்து
ஓரமாய்ச்
செல்கிறார்கள்! –இருசக்கர
வாகனங்கள்
மிதமான வேகத்திலேயே
சாலையில்
பயணிக்கின்றன!
லூசுக்
கிழவி எப்போதும் போல
மேலாடையை
தெருவில் இழுத்துக்
கொண்டே
சாலையைக் கடக்கிறாள்.
டீக்கடைப்பையன் பத்திரமாய்
டீ நிரம்பிய
கண்ணாடி
டம்ளர்களை டெய்லர் கடைக்கு
தூக்கிச்
செல்கிறான்! – பேருந்து நிறுத்த
நிழற்குடையில் எங்கு
செல்வதெனத் தெரியாமல்
பேருந்திற்காய் காத்திருக்கும் பாவனையில்
அமர்ந்திருக்கும் நான்
உனக்காக எழுதப் போகும்
கவிதையின்
முதல் வரியை இப்படி
ஆரம்பிக்கிறேன்!
நீ இப்போது உனக்கான
புதிய
காதலனை கண்டறிந்து விட்டாயா
மூஞ்சிப்
புத்தக வாயிலாக?
000
இந்தப்
பள்ளிக்கு எப்போதும்
விடுமுறை
நாட்கள் தான்!
படிப்பிக்க
ஆசிரியர்களுமில்லை
கற்றறிய
பிள்ளைகளும் இல்லை!
மெட்ரிகுலேசன் பள்ளி
செல்லும்
பேருந்திலிருக்கும் குழந்தைகள்
ஊரின்
கடைகோட்டில் நின்றிருக்கும்
இந்த
நடுநிலைப் பள்ளியை
கடந்து
போகையில் சும்மாவுக்கேனும்
கையசைத்துச்
செல்கின்றனர்!
ஏதுமறியாத
கட்டிடம் புன்னைகைக்க
தெம்பின்றி
வெறுமனே நின்றிருக்கிறது!
000
-ஆக பேருந்தில் நீ செல்கையில் எதுவும்
நடைபெறவில்லை
என்கிறாய் அப்படித்தானே?
-இல்லை, நான் வீட்டில் என் படுக்கையில்
அயர்ந்து
தூங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில்
அப்படி
நடந்தேறி விட்டது!
-அவன் ஆள் எப்படியிருந்தான் என்று உங்களுக்கு
நினைவிருக்கிறதா?
ஆளா? விலங்கா?
-நிச்சயமாக அவன் ஆண் தான்! என் அறையில்
அவன்
திருட வந்தவன் தான்.
-அதெப்படி அப்படி நிச்சயமாக சொல்கிறீர்கள் மிஸ்?
-மின்சாரம் நேற்றைய இரவில் திடீரென
அணையாமல்
இருந்திருந்தால்
நிச்சயம் அவன்
வேறு
ஏதேனும் பொருளை என் அறையில்
களவாடிச்
சென்றிருந்திருப்பான்.
-ஆக மின்சாரம் போனது தான் உங்கள்
உடல்நல
பாதிப்பிற்கு காரணமென்கிறீர்கள்!
-ஆம், அதைத்தான் சொல்கிறேன். மின்சாரம் சென்றபோது
அவன்
என்னிடம் வினவினான் பலமுறை!
-என்னவென்று?
-மிஸ் எங்கிருக்கிறீர்கள்? இங்கே இருளாய் இருக்கிறது!
-நீங்கள் என்ன சொன்னீர்கள்?
-நான் படுக்கையில் வெறுமனே படுத்திருந்தேன்!
-பின் எப்படி தவறு நிகழ்ந்தது?
-ஒருவாறாக அவன் என்னை கற்பழிக்கப்போவதாய்
கூறியதும்
நான் படுகையில் இருப்பதாய்
உடனே
கூறி விட்டேன்! பிறகு தான் அது நடந்தேறி விட்டது!
000