சனி, செப்டம்பர் 10, 2016

தானாவதி- நண்பரின் பார்வையில்!தானாவதி

நானொரு முழு சோம்பேறி. முழு சோம்பேறி என்பதைவிட வாழைப்பழ சோம்பேறி என்று சொல்லலாம்.

இலக்கியவாதிகள் என்று தங்களை தாங்களே கூறிக்கொள்ளும் சில இலக்கியவியாதிகளின் கிணற்றுத்தவளை பேச்சுகளால் இலக்கியம் வாசிப்பதை நிறுத்தி பல மாதங்களாகிவிட்டாலும் சென்ற மாதம் கோமுவின் புத்தக வெளியீட்டிற்காக ஈரோடு சென்றிருந்த பொழுது வாங்கியது இந்த தானாவதி.
ஒருமாதம் முன்பு வாங்கிய புத்தகத்தை நான்கு நாட்கள் முன் தான் திறந்தேன். நாலு பக்கம் படித்ததுமே மூடிவைத்து விட்டேன் காரணம்..
வேறொன்றுமில்லை முதல் பத்தியைப் படித்துக் கொள்ளவும்

மீண்டும் நேற்று மதியம் புத்தகத்தை திறந்தேன் 
ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தானாம் என்பது போலவே கோழிப்பாளையம்னு ஒரு ஊரு, அந்த ஊருல கல்யாண காச்சின்னு நடந்து பதினஞ்சு வருசமாச்சு என்று கதை துவங்கி சுப்பிரமணின்னு ஒருத்தன் இருக்கிறான் அவனுக்கு வயசு 36 ஆச்சு அவன் பொண்ணு தேடிட்டு இருக்கிறான் என்று நீ........ள மறுபடியும் முதல் பத்தி கண்ணில் நிழலாட மெல்ல கோமுவின் விளையாட்டு துவங்கியது
அவனது பைக்கை காணவில்லை என்று மெல்ல துவங்கும் அவருடைய நகைச்சுவை அவன் பார்க்க செல்லும் மெடிக்கல் ஷாப் பெண்ணின் டச்சிங் டச்சிங் கதையால் முடிய

அடுத்ததாக வருகிறான் சின்னசாமி

மதுரையிலிருந்து வரும் பத்து ஜாதகத்தையும் 370 ரூபாய் கொடுத்து வாங்கி அதில் இருவருக்கு போன் செய்து பல்பு வாங்கிக்கொள்ளும் ஒரு அப்பாவி. மீண்டும் மதுரையிலிருந்து வேறோர் திருமண தகவல் மைய அழைப்பு. அந்த பெண்ணிடம் சின்னசாமி பேசும் இடம் தான் ஒரு எழுத்தாளனின் நிஜ சோகம் "பத்து காகிதம் பைத் மூணு முப்பது முன்னூறு! அவனவன் புத்தகம்னு பக்கம் பக்கமா எழுதி இரநூறு ரூவாய்க்கி புத்தகச் சந்தையில வெச்சு வித்துட்டு சிரமப்பட்டுட்டு இருக்கான். இங்கே ஒரு ஜெராக்ஸ் காகிதம் முப்பது ரூவா!" 

அடுத்ததாக வேலுச்சாமி s/o மூர்த்தியப்பன். மகனுக்கு தரகு கொண்டு வரும் தானாவதியை பாதியில் மறித்து தனக்கு பெண் பார்க்கவைத்து மகனின் முன்னால் புதுப்பெண்ணோடு வந்து இறங்கி... 

அங்கே நடக்கும் நிகழ்வுகள் வரிக்கு வரி படிக்கையில் நகைச்சுவை உணர்வு மேலோங்கினாலும் வேலானின் நிலையினை யோசிக்கையில் sweet coated tablet.

பழனிச்சாமி - இவனும் ஒரு பெண்ணைப் பார்க்கிறான். துணிந்து அவள் அம்மாவிடம் பெண் கேட்கையில் மற்ற இருவரையும் போலவே இவனுக்கும் உச்சந்தலையில் ஆணி இறங்குகிறது.

இந்த நாலு பேரையும் சுற்றி நடக்கும் கதையில், இருக்கும் சோகம் மொத்தமுமே ஹாஸ்ய வரிகளாக்கப்பட்டு தானாவதி என்ற பெயரோடு கையில் இருக்க..

மெல்ல இந்த புத்தகத்திலிருக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் யோசித்து பார்க்கிறேன்.
கோமு நினைத்திருந்தால் இதே கதையை மனதை கனக்க வைக்கும் அழுவாச்சி கதையாய் எழுதியிருக்கலாம். இந்த 184 பக்க புத்தகத்தில் மனதை கனக்க வைக்கும் ஒரே இடம் வேலான் மற்றும் மூர்த்தியின் முடிவுகளும் தான்.

திருமண வாழ்க்கைக்காக ஏங்கித் தவிக்கும் முதிர்கண்ணன்களின் வாழ்வின் வலியை எழுதியதற்கு ஒரு உம்மா..

(பிகு - கோமுவிற்கு)

இந்த புத்தகம் மட்டும் விலை போகவில்லை என்றால் இலக்கியம் எழுதுவதை நிறுத்திவிட்டு கமர்ஷியல் பக்கம் ஒதுங்கிவிடுவேன் என்று எழுதியிருந்தீர்கள். ஒரு தனி மனிதனாக உங்கள் முடிவை மாற்ற சொல்லி கேட்கமாட்டேன். ஆனால் ஒரு நண்பனாக.. "யோவ் அவனவன் மங்கிப்போன கண் பார்வையை வச்சிகிட்டு கண்ணுல தெரியுறதை எல்லாம் குறையா பார்த்து எழுதி இலக்கியம்னு சொல்றான். அதையும் நாப்பது பேர் ஆகா ஓகோன்னு கொண்டாடுறான். ஒழுங்கா எழுதும் இல்லேன்னா உம்மைத் தேடி நான் வரவேண்டி இருக்கும். கட்டிபிடிச்சு கன்னத்துல உம்மா கொடுக்க இல்ல செவுள்லயே நாலு இழுப்பு இழுக்க. ஜாக்ரத"

-வாஸ்தோ.


Post Comment

1 கருத்து:

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையான விமர்சனம் எழுத்தாளர் ஐயா...