வெள்ளி, செப்டம்பர் 16, 2016

மகாகிரந்தம் -ஒரு பார்வைதமிழில் சாண்டில்யன், கல்கி, விக்கிரமன் என்று பலர் எழுதிய சாகசக் கதைகள் இன்றும் பலராலும் விரும்பி வாசிக்கப்படுவதற்கான காரணங்கள் அவைகள் வாசகனை தன்னகத்தே தக்க வைத்துக் கொள்ளும் கதைக்களத்தையும், சொல்லிச் செல்லும் மொழிப்பாங்கையும் கைவரப் பெற்றதனாலேயே!

ஒருக்களித்ததால் அவள் சுந்தர உடலின் எழிற்பகுதிகள் குனிந்திருந்த அவன் உடல் மீது நன்றாக அழுந்தின. மெல்ல சுயநிலை இழந்தான் அந்தப் புரவி வீரன். அதுவரை பக்கவாட்டில் ஊன்றியிருந்த அவன் வலக்கை அவள் உடலுக்கு குறுக்கே சென்றுஎன்று சாண்டில்யன் காதலர்களின் கேளிக்கைகளை அவ்வளவு அழகாக எழுதிச் செல்வார். இந்த நாவல்களிலெல்லாம் எந்தப் புரவி வீரனும் இறுதியாக தோல்வியைச் சந்திப்பதில்லை. அதுவே வாசகனுக்கும் தேவை.

இவற்றிலிருந்து முற்றிலும் விலகி சுரேந்திரவர்மா ஹிந்தியில் எழுதிய நாடகமானசூரியனின் கடைசி கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம் வரைவி. சரோஜாவின் மொழியாக்கத்தில் வாசித்த அனுபவம் எனக்கு புதுமையாக இருந்தது முன்பு. போக இன்னும் என்னுள் இந்த விதமான கதை சொல்லல் எழுத்தை எழுதிப் பார்க்கும் ஆர்வம் மிக நீண்ட காலமாகவே இருந்து கொண்டு தான் இருக்கிறது. கண்ணியத்தைப் பற்றி நினைத்துப் பார்க்காத கதைக்களம் இந்தப் படைப்பு.

எச்.முஜிப் ரஹ்மான் குறுநாவல் வடிவில்  எழுதியமகாகிரந்தம்”  இன்னும் சற்று விரிவாக எழுதப்பட்டிருக்க வேண்டிய நாவல் தான். என்ன தான் விரிவாக எழுதப்பட்டாலும் சொல்லப்பட வேண்டிய சமாச்சாரங்கள் 52 பக்கங்களுக்குள்ளாகவே சொல்லி முடிக்கப்பட்டிருப்பது சவாலான விசயம் தான். வாசகனை பரசவத்தில் ஆழ்த்தும் வேலையைச் செய்யாமல், திரைப்பட பாணியிலான கதையோட்டத்தை தக்க வைத்து, பல கேள்விகளை  புனைவின் வழியாக வாசகனிடம் எழுப்பிக் கொண்டே செல்கிறது இந்த சிறு நாவல்.

திருவனந்தபுரத்தில் தமது ஆடல்கலையை நிகழ்த்த வந்த நீல லோகிதையை கடத்திக் கொணர்ந்து திவான் அரவிந்தன், தளபதி அஜீத், தளபதி ரகுமான் ஆகியோர் ருசிக்கிறார்கள். திவான் அரவிந்தனின் மனைவி சுவர்ணமினி மகாராஜாவோடு கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறாள். இதை கேள்வியுற்ற அரவிந்தன் மகாராஜாவை பதவியிறக்க நண்பர்களோடு இணைந்து திட்டம் தீட்டுகிறான். இவர்களால் வன்புணர்வுக்கு உள்ளான நீல லோகிதையின் முதல் பழிவாங்கலாக அரவிந்தனை படுக்கையில் கத்திக் குத்தொன்றில் ஆரம்பிக்கிறாள்.

இந்த சுருக்கமான நகர்வுக்குள் இருக்கும் கிளைகள் தான் நாவலின் முக்கிய பகுதிகள். சாதீயத்தை பற்றி வெளிப்படையாக பேசும் நாவலாகவும் இது வந்துள்ளது. நாயர், நாடார், முஸ்லீம், தலித் இனப்பிரிவுகளுக்கு இடையிலான கலாச்சார மீறல்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏற்றப்படுகிறது. இதனாலேயே இந்த நாவல் தனித்துவத்தையும் காட்டுகிறது நம்மிடையே!

மகாகிரந்தம் (குறுநாவல்) எச்.முஜீப் ரஹ்மான், புது எழுத்து வெளியீடு, பேச : 9842647101. விலை -80.00


000

1 கருத்து: