தானாவதி நாவல்
பார்வை- செல்லமுத்து குப்புசாமி
பானை முனைவது ஒருகலை. எழுத்தும் அப்படித்தான்.
குயவன் விதவிதமாக பானைகளை உருவாக்கிப் பார்த்து மகிழ்வது போல
எழுத்தாளன் வித்தியாசமாக எழுதிப் பார்க்கிறான்.
எழுத்தாளர் வா.மு.கோமு தனது தானாவதி நாவலின்
முன்னுரையில் கூட, “எழுத்து ஒரு கலை. அதை
எப்படி வேண்டுமானாலும் எழுதிக்காட்ட எழுத்தாளனால் முடியும். விதம்
விதமாக எழுதிப்பார்க்க எழுத்தாளன் ஆசைப்பட்டுக்கொண்டேஇருப்பான். அந்த ஆசை தான் எழுத்தாளனை இயங்கச் செய்கிறது.” என இதனைக்
குறிப்பிடுகிறார்.
ஒரு எழுத்தாளராக அவரைப் பொறுத்த வரைக்கும் அப்படியொரு மாறுபட்ட
நாவல் முயற்சியே தானவதி என்ற இந்நாவல். இதற்கு முந்தைய அவரது புதினங்களில் எல்லாம்
சொல்லவரும் விஷயம் போகிற போக்கில் கதையின் பின்னால் ஒளிந்திருக்கும். மேலோட்டமாகப் பார்த்தால் வேறு விஷயங்களை தூக்கலாகப் பேசுவது போலிருக்கும்.
தானவதி என்ற சொல்தற் போது புழக்கத்தில் இருந்து மறைந்து வருகிறது. திருமணபந்தம்
நிறைவேறுவதில் தரகர் வேலைபார்ப்பதற்கு தானாவதி என்று பெயர். தகரர்,
புரோக்கர், திருமண தகவல்மையம், மேட்ரிமொனி என பெயர்கள் மாறிவிட்டாலும் தானாவதிக்கு இருக்கும் சிறப்பே தனி.
கொங்குமண்டலம் சந்திக்கும் பெரிய சவால்களில் ஒன்றை இந்தநாவல்
தொட்டுச் செல்கிறது. எழுபதுகளில் அல்லது எண்பதுகளின் முற்பகுதியில்
பிறந்த, படித்து வேறு வேலைகளுக்குச் செல்லாமல் விவசாயம் மட்டுமே
கதியாகக் கிடக்கும் கொங்கு வேளாள குடியானவ சமுதாய இளைஞர்கள் பலர் திருமணமாகாமல் கிடக்கும்
கதையே இதன் கரு.
கொங்கு மண்ணின் ஒவ்வொரு கிராமத்திலும் முப்பது-நாற்பதைக்
கடந்து திருமணமாகாத ஆட்களைக் காட்ட இயலும். அல்லது அப்படி ஒருவனை
அன்றாட வாழ்க்கையில் நேரடியாக அறிந்தவர்களைக் கடக்க இயலும். வாலிபப்பிராயத்தில்
காதல் உணர்வுகள் கொப்பளிக்கக் காத்திருக்கும் ரோமியோ இளைஞர்கள் அல்லர் இவர்கள்.
கடைசிக்காலத்தில் கஞ்சியூற்ற ஆளிருந்தால் போதுமென்ற யாசிப்பினை நாடும்
பரிதாபத்துக்குரியவர்கள். நிலவுடமை சமுதாயம் முந்தையை தலைமுறையில்
செய்தபாவங்களுக்கு நேர்ந்து விடப்பட்ட பரிகாரங்கள்.
பெண்குழந்தைகளைப் பாரமென்றும், பெண்ணைப்
பெற்பது பாவமென்றும் கருதிய ஒரு கால கட்டத்தில் (இப்போதும் இம்மனநிலை
மாறவில்லை எனினும் சிசுக்கலைப்பு/ கொலை இல்லை) முதல் குழந்தை ஆணாக இருந்தால் இரண்டாவது குழந்தைக்கு முயன்றதில்லை.
முதல் குழந்தை பெண்ணாக இருந்தால் இரண்டாவது ஆணுக்காக மெனக்கெட்டதுண்டு.
மேலும் ஸ்கேன் செய்து கருவிலிருந்த சிசுசிவின் பாலினத்தை அறியும் வசதியிருந்த
காலத்தில் பெண் உயிர்கள் கருவிலேயே களைந்து கலைக்கப்பட்டதும் உண்டு.
அதனால் குறிப்பிட்ட தலைமுறையில் ஆண்களின் எண்ணிக்கை பெண்களின்
எண்ணிக்கையை விட பெருமளவில் கூடியது. இன்னொரு பக்கம் ஆண்களுக்கு நிகராக, ஏன் ஆண்களைவிட அதிகமாகவே, பெண்கள் படிக்க ஆரம்பித்து
விட்டார்கள். பெண்கள் செலக்ட் செய்து நிராகரிப்பது வாடிக்கையாகிப்
போனது.
பெண் கிடைக்காமல் விதவைகள், விவாகரத்தானவர்கள்,
வேறுஜாதிப் பெண்கள், கேரளாவிற்குச் சென்று அங்கிருந்து
பணம் கொடுத்து மணந்து வருதல் என எல்லாவகையிலும் முயன்று பார்க்க வேண்டிய கட்டாயத்தில்
இந்த இளங்கிழவர்கள் தள்ளப்படுகிறார்கள். அப்படி ஏழெட்டு அரை வழுக்கையர்களின்
கதையே தானாவதி.
வழக்கமாக வா.மு.கோமுவின் கதைகளில் வரும்
நகைச்சுவை இங்கும் விரவிக் கிடக்கிறது. ஆனால் அதன்கீழே அடியோடும்
வேதனையும், வலியும், இயலாமையும் சொல்லி
மாளாது. ஆனால் அந்த வலியும், வேதனையும்
வாசகனை வாட்டி வதைக்காத வகையில் எழுத்தின் ஓட்டம் நம்மை லயிக்கச் செய்கிறது.
சமகால கொங்கு மண்ணில் வாழ்க்கையை அழுத்தம் திருத்தமாகப் பதிவு
செய்வதில் வா.மு.கோமுவுக்கு பெரும் இடமுண்டு. அவ்வகையில் இதிலும் ஒருசமகாலப் பிரச்சினையை அதன் வேர் வரைக்கும் சென்று ஆட்டிப்பார்க்கிறார்
என்றே சொல்லலாம்.
பொதுவாக தனது கதைகளில் ஜாதிப் பெயரை இயல்பாக கிராமங்களில் புழங்கும்
வகையில் பதிவு செய்யும் கோமு இதில் அவற்றைத் தவிர்த்திருக்கிறார். மேலும்
பொதுவாக அவரது கதைகளில் வரும் செக்ஸ் இதிலே இல்லை. இத்தனை தண்டுவன்கள்
தமது பாலியல் இச்சைகளைத் தீர்க்க என்ன செய்தார்கள்/செய்வார்கள்
என்ற கேள்வியை நமது யூகத்துக்கே விட்டு விட்டார் போலிருக்கிறது.
தேவைப்பட்டால்மேற்கோள்காட்ட:
“ஐய்யன்
சாணியை கூடையில் எடுத்துக்கொண்டு குப்பை மேட்டுக்கு நடந்து கொண்டிருப்பதைப் பார்க்க
இவனுக்கு வருத்தமாய் இருந்தது. ஏற்றுக்கொள்வது என்பதே திணிக்கப்பட்டதாகத்தானே
இருக்க வேண்டும்!”
”தனிமை சில சமயம் வேறு வேறு எண்ணங்களுக்கு அவனை
இழுத்துப் போகிறது. இந்த
வாழ்க்கை ஏதேனும் ஒரு கட்டத்தில் நிறைவுக்கு வந்து விடும் எனபது மறுக்க முடியாத
உண்மைதான். முடிவை நோக்கித்தான் எல்லோரும் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள். அந்த முடிவை முன்னதாகவே நிகழ்த்திக்
காட்டும் எண்ணம் கூட சின்னச்சாமிக்கு சமீப காலங்களில் வந்து கொண்டே இருக்கிறது.
பின்பாக அந்த நாலு பேர் நாலு விதமாக பேசுவது பற்றி அவனுக்கு எதுவும்
தெரியப்போவதில்லை.”
”இவனுக்கும் கற்பனையான வடிவில் நினைத்துப்
பார்த்து கட்டிலில் கிடக்க ஒரு அழகி இருந்தாள். அவளோடு அவன்
கனவுலகில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறான். அவள் எப்போதும்
இவனுடன் சண்டையிடுவதேயில்லை. ஒரு டூ பாத்ரூமிற்கு கூட அவன்
கனவில் அவள் செல்வதேயில்லை. பல நேரங்களில் பிட்ஷாவைப்
பிய்த்து கனவில் ஊட்டிய வண்ணமே இருக்கிறாள் அவள்.”
-ஜன்னல்
இதழில் செல்லமுத்து குப்புசாமி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக