வெள்ளி, பிப்ரவரி 08, 2019

இரண்டு சிறார் புதினங்கள்


மரப்பாச்சி சொன்ன ரகசியம்

யெஸ்.பாலபாரதி

இந்த சிறார் புதினத்தை நாம் எளிதில் மற்ற சிறார் புதினங்களைப் போல கடந்து செல்ல இயலாது தான். ஷாலினியின் பள்ளித் தோழி பூஜாவுக்கு, தனக்கு நடந்த விசயத்தை யாரிடமும் சொல்ல முடியவில்லை. கீழ் வீட்டிலிருக்கும் தாத்தாவின் பாலியல் தொந்தரவிற்கு இலக்காகிறாள். அவளுக்கு தைரியமூட்டி அம்மாவிடம் சொல்லத் தூண்டுகிறது ஷாலினியிடம் இருக்கும் பேசும் மரப்பாச்சி பொம்மை. கையிலிருக்கும் பொம்மைகள் கண்சிமிட்டுவதிலும், கீ கொடுத்தால் நகர்வதிலுமே மகிழ்ச்சியடையும் குழந்தைகளுக்கு உதவும் மனப்பாங்குடன் செயல்படும் மரப்பாச்சியை பிடித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. வாசிக்கும் குழந்தைகள் அனைவருமே தங்களிடம் இப்படி ஒரு மரப்பாச்சி பொம்மை இருந்தால் எப்படி இருகுமெனவும் கனவு காண்பர். அந்த அளவுக்கு கதை ஓட்டம் வழியே மரப்பாச்சி என்கிற இளவரசி படிப்போர் மனதில் இடம் பிடித்துக் கொள்கிறது. சிறார் புதினங்கள் வாயிலாக மிருகங்கள் பேசுதல், காட்டுயிர்கள், மரங்கள் அழிப்பு, புகை மாசு, கடல்நீரில் மாசு, என சுற்றுச்சூழல் விசயங்களைப் பற்றி பலர் எழுதியுள்ளனர். மிக முக்கியமான குழந்தைகள் பிரச்சனையை இந்தப் புத்தகம் தான் முதலாக புதினம் வழியே சொல்கிறது. அனைத்துப் பெற்றோரும், குழந்தைகளும் வாசிக்க வேண்டிய, தமிழில் மிக முக்கியமான புதினம் இது.

வானம் வெளியீடு, விலை : 60.00. தொடர்புக்கு :- 9176549991

000


பேசும் தாடி

உதயசங்கர்

மாயாஜால யதார்த்தத்தின் வழியே பயணிக்கும் சிறார் நாவல் இது. சகானாவுக்கும் சூர்யாவுக்கும்  விடுமுறை  விடப்பட்ட தினத்தில் அவர்களது தாத்தாவும், ஆச்சியும் மகளையும் மருமகனையும் காண ஊரிலிருந்து ஏராளமான, வகை வகையான தின்பண்டங்களுடன் வந்து சேர்கிறார்கள். தாத்தாவின் அருகில் மொட்டை மாடியில் படுத்து நட்சத்திரங்கள் பற்றிய கதைகளை கேட்டு மகிழ்கிறார்கள். இம்முறை வந்திருந்த தாத்தாவிற்கு நீளமான தாடி இருக்கிறது. தாடிக்குள் பல வர்ணத்தில் சித்திரக் குள்ளர்கள் இருக்கிறார்கள். தாத்தா அவர்களை இருவருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறார். நீல நிற சித்திரக்குள்ளர் தன் அங்கியிலிருந்து நீல நிறப் பொடியை இவர்கள் மீது தூவ இவர்களும் சித்திரக் குள்ளர்களாகி அவர்களோடு பறந்து மகிழ்கின்றனர். இப்படி பட்டாம்பூச்சியோடு பறப்பதும், சிட்டுக்குருவியாகிப் பறப்பதும், எறும்புகளோடு பயணிப்பதுமாக நாவல் சிறார்கள் மகிழ்ச்சியாக வாசிக்கும் வண்ணம் விரிந்து செல்கிறது. இறுதியில் ஆச்சி பாட்டியிடமும் அவளது சுருக்குப் பையில் சித்திரக் குள்ளிகள் இருப்பதை சகானா காண்கிறாள். அவளின் விருப்பத்தின் பேரில் தேன் கூட்டினுள் தேன் பூச்சியாக மாறி சென்று வருகிறாள். விடுமுறை முடிந்து தாத்தாவும் ஆச்சியும் ஊருக்கு கிளம்புகிறார்கள். ஒரு மாத விடுப்பில் பேரக்குழந்தைகளோடு மகிழ்ந்திருக்க வரும் தாத்தா பாட்டியின் கதை வழியே ஏராளமான தகவல்களையும் உதயசங்கர் குழந்தைகளுக்கு தருகிறார்.

வானம் வெளியீடு, விலை :- 80.00.

-வா.மு.கோமு

Post Comment

கருத்துகள் இல்லை: