செவ்வாய், பிப்ரவரி 12, 2019

நகரில் தனித்தலையும் ஆடு - ஒரு பார்வை

சில்வியா பிளாத்
நகரில் தனித்தலையும் ஆடு - ஒரு பார்வை
சிறுகதைத் தொகுதி

சமகால வாழ்வின் பக்கங்களை நையாண்டி கலந்து அப்படியே கண்ணுக்கு முன் வைப்பது வா. மு. கோமுவின் படைப்புகள். 2017-18ல் நடுகல், உயிர் எழுத்து, உயிர்மை, குறி,மணல் வீடு, ஓலைச் சுவடி, விகடன் தடம் போன்ற இலக்கிய இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு.

ஓவ்வொரு கதையும் சொல்லிச் செல்லும் செய்திகள் ஏராளம்.
வேட்டை சிறுகதையில் வரும் டைகர் நாய்க்கும் நாயகனும் உள்ள உணர்வு பூர்வமான பிணைப்பு, டைகரைத் தவிர வேறு யாரும் துணை இல்லை என்று தனிமையை உணர ஆரம்பிக்கும் போக்கு, மற்ற எல்லாக் கதைகளிலும் நீட்சி அடைகிறது.

நகரில் தனித்தலையும் ஆடு என்ற நூலின் தலைப்பு கொண்டு இருக்கும் சிறுகதை, உண்மையில் சுவரொட்டிகளை தின்று நகரத்தில் தனியா சுற்றிக் கொண்டு இருந்த ஆடு, இணைய தளத்தில் கவனம் பெற்று வைரலாகிய பின் என்னவாக ஆகிறது என்று கேள்வியை நம்முன் வைக்கும் போது சமகால அபத்தங்கள் எல்லாம் நம்முன் விரிய வைக்கின்றது.

அகவை நாற்பத்தி மூன்றில் வெங்கடசாமி - மாமனுக்கு பொண்ணு பார்க்க கூட செல்லும் மருமகனும் திருமணத்திற்கு தயாராவது கொங்கு மாவட்டங்களில் உள்ள பெண்கள் வறட்சியை, முதிர் கன்னன்கள் அதிகமாகும் நிலைகளைச் சுட்டிக் காட்டுகிறது

தொங்கீட்டானா? கதையிலும் சனிக்கிழமை வாழ்க்கை கதையிலும் வரும் அம்மாக்கள் தனியாக வசித்து வந்தாலும் மகன் மீது வைக்கும் பாசத்தை குறைக்கவில்லை. எப்போதும் அம்மா ஒரு படி உசத்தி தான் என்று தோன்றச் செய்து விடுறார்கள்.

பருஷோத்தனமாகிய எனக்கு வயது முப்பத்தொன்று சிறுகதையில் தந்தையாக வரும் கவிஞர் வாதைகளையும், சோதனைகளையும் கவிதையில் ஏற்றி விடுவார். அவரது கவிதைப் புத்தகங்களை எடைக்குப் போட்டே தங்கையின் கல்யாணத்தை நடத்தி விட்டதாக கதை நகரும் போது சமகால கவிஞர்களை பகடி செய்திருக்கும் கலை ரசிக்க வைத்தது.

லொடக்லெஸ் கதையில்
வரும் ஆசிரியரின் வாக்கு மூலம் - //என் பெயர் பழனிச்சாமி, நான் இலக்கிய சிற்றேடுகளில் எழுதுபவன். எனக்கு கதைகள் மனிதர்களின் வாழ்க்கையில் எந்த நேரமும் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. நான் சொல்வது எல்லாம் இந்த மண்ணினுடைய மக்களின் கதைகள் //

ஆம் இந்த கொங்கு மண்ணின் மக்களின் சமகால வாழ்க்கை முறைகளை ஆவணப்படுத்தி வைக்கும் ஒரு புத்தகம் தான் இது.

000

Post Comment

கருத்துகள் இல்லை: