SC NO : 42
மாணிக்கம்
கலையரசி வீட்டுக்கு வருதல்! பைக் ஹாரன் கேட்டு ஜன்னலில் இருந்து பார்த்து கலையரசி மகிழ்ச்சியோடு ஓடி வெளிவருதல்!
கலையரசி : வாங்க மாணிக்கம்! வீட்டை கண்டு பிடிக்கிறதுல எதும் சிரமமில்லையே!
மாணிக்கம் : இருக்கறதுலயே இந்த வீதி மட்டும் பளிச்சுனு பிரகாசமா இருந்துச்சு பகல்லயே! எனக்கு சுலபமா போச்சு கலை! அப்பா இருக்காரா?
கலையரசி : அப்ப அவரை பார்க்கத்தான் வந்தீங்களா? என்னைப் பார்க்க இல்லையா?
மாணிக்கம் : பிள்ளைங்க எல்லாரும் ஒன்னைக்கண்ட மாதிரியேதான் இருக்காங்க!
கலையரசி : எத்தனை பிள்ளைங்களை தெரியும் உங்களுக்கு?
மாணிக்கம் : பின்ன எதோ ஒரு சாக்கு சொல்லிட்டு கண்மணிய பார்க்க வந்திருக்கேன்! ஒரு முத்தமுண்டா? ஒரு லிப் டு லிப் உண்டா?
கலையரசி : வீட்டுக்குள்ள வாய்ப்பு கிடைக்குதான்னு பார்க்கலாம்! (மாணிக்கத்தை முதுகில் கைவைத்து வீட்டுக்குள் தள்ளிக் கொண்டு செல்தல்)
வீட்டினுள்
மாலையோடு கலையரசியின் அப்பா போட்டோவில் இருத்தல்!
மாணிக்கம் : அப்பா எங்கே? (கலையரசி காதில் குசுகுசுத்தல்)
கலையரசி : அந்த ரூம்ல!
மாணிக்கம்
பூபதி கட்டிலில் படுத்திருக்கும் அறைக்கு வந்து ஒரு சேரை எடுத்துப் போட்டு அவர் அருகில் அமர்தல்!
பூபதி : மாணிக்கா!
மாணிக்கம் : அப்பா என்னப்பா இப்படி பண்ணிட்டீங்க? யாருகிட்டவும் சொல்லாம! நான் எங்கெங்க தேடினேன் தெரியுமா!
பூபதி : மனசு சரியில்லப்பா! அதான்.. நான் என்ன பண்றேன்னு எனக்கே தெரியில!
கலையரசியின்
அம்மா வருதல்! கையில் தண்ணீர் செம்பு.
அம்மா : வாங்க தம்பி!
மாணிக்கம்
எழுந்து வணங்கி தண்ணீரை வாங்கி பேருக்கு துளி குடித்து விட்டு தண்ணீர் செம்பை கொடுத்தல்!
கலையரசி : அவங்க பேசிட்டு இருக்கட்டும் நீ காபி போடும்மா! (குரல் கொடுத்தல்)
மாணிக்கம் : அப்பா என்னை மன்னிச்சுடுங்கப்பா!
பூபதி : நீ என்னடா தப்பு பண்ணினே நான் மன்னிக்க! நீ என்கிட்ட சபதம் போட்டே! அதுல ஜெயிக்க நீ போன ரூட்டு தான் தப்பா போயிடுச்சுடா!
மாணிக்கம் : அப்பா, ஆயா தான் நீங்க டுவல்த் எக்ஜாம்ல ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்து கோப்பையோட நின்னுட்டு இருக்குற போட்டோவை பேப்பர்ல காட்டுச்சு!
பூபதி
பெருமூச்சு விட்டு கையை உயர்த்தி இறக்குதல். படுக்கையிலிருந்து எழுந்து அமர்தல்!
கலையரசி
இருவருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தல்.
பூபதி
:
மேகாட்டுல மொத்த இடத்தையும் முடிச்சுட்டியா?
மாணிக்கம் : ஆமாப்பா! எல்லாருக்குமே அட்வான்ஸ் டோக்கன் கொடுத்துட்டேன்!
பூபதி :
(பெருமூச்சுடன்) கால காலமா ஊருக்கே சோறு போட்ட மண்ணுடா அது!
மாணிக்கம் : இன்னமும் அது சோறு போடும்ப்பா!
பூபதி : டெல்லிக்காரனுக்கு!
மாணிக்கம் : இல்லப்பா! நம்ம ஊருக்கே! நமக்கே!
பூபதி : என்ன மாணிக்கா சொல்றே? அதான் எல்லா காட்டுக்காரன் கிட்டயும் வியாபாரம் பேசி முடிச்சுட்டியே!
மாணிக்கம் ; எல்லா இடத்தையும் ஒரே டைம்ல வாங்கிக்கறதுன்னு தான் இருக்காங்க! ஒரே வேலையா முடிஞ்சுடும்னு அவங்க கணக்கு! மொத்த செட்டிலும் ஒரே நாள்ல முடிச்சுக்குவாங்க! தம்பியண்ணன் டெல்லில இருக்காரு! அவரு வர இன்னும் ரெண்டு நாள் இருக்கு… அதுக்குள்ள நாம எதாவது பண்ணனும்ப்பா!
கலையரசி : நீங்க இதை நிஜமாவே சொல்றீங்களா மாணிக்கம்!
(காட்சிகள்
கலையரசி விளக்கம் கொடுக்க, இடையிடையே பூபதி பேச, மாணிக்கமும் கருத்து
சொல்ல என்று பேச்சில்லாமல் விரைவாக நகருதல்)
மாணிக்கம் : நீங்க சொல்றபடியே பண்ணிடறேனுங்கப்பா!
பூபதி : சரி அப்ப நீ போயிட்டு வா!
மாணிக்கம்
எழுந்து அறையை விட்டு வெளிவருதல்! கலையரசி மாணிக்கம் கைப்பிடித்து பக்கத்து அறைக்குள் இழுத்துச் சென்று முத்தமிடுதல்!
மாணிக்கம் : இது எதுக்கு பிசுக்கு?
கலையரசி : இது மாணிக்கம்ற ரியல் எஸ்டேட் கல்ட்டி காணாமப் போனதுக்கு!
மாணிக்கம் : அப்ப மாணிக்கம்ங்கற விவசாயிக்கி? அதும் பிசுக்கா?
கலையரசி : அது பிசுக்கா இருக்குமா? இப்ப பாருங்க…. (அழுத்தமான முத்தம்)
மாணிக்கம்
அறையை விட்டு வெளி வருகையில் உதட்டிலிருந்து ரத்தம் வடிந்து கொண்டிருப்பது!
SC NO : 42 A
மாணிக்கம், காளி, மணி ,சுப்பு, என்று
நண்பர்கள் அமர்ந்து விவாதிப்பது!
காளி : நீ சொல்றதெல்லாம் சரி தான் பங்காளி! ஆனா இடத்துக்காரங்க கிட்ட கால்ல விழாத குறையா பேசி, பணத்தாசை காட்டி, சிலபேரை லைட்டா மிரட்டி காரியத்தை முடிச்சுட்டோம்! இனிப்போயி அவங்க கிட்ட கூட்டு விவசாயம் பண்ணலாம்! வெளிநாட்டுக்கு நாம ஏற்றுமதி பண்ணலாம்னு பேசுனம்னு வைய்யி…
மணி : ஆனாலும் இதை நாம பண்ணித்தான ஆகணும் காளி! மாணிக்கம் சொல்றதை வச்சு பார்த்தா அவங்குடுக்குற காசு ஒன்னுமேயில்லன்னு தான ஆகுது!
காளி : சரி அவங்க கிட்ட எப்படி போயி உக்காந்து சொல்லி விளக்குறது?
மாணிக்கம் : நம்மை நம்பித்தான மண்ணை விக்க வந்தாங்க! அதெல்லாம் நாம சொல்லுற விதமா சொன்னா அதையும் சரியின்னு கேப்பாங்க பங்காளி!
காளி : ஒவ்வொருத்தனும் காசு வந்ததும் என்னென்ன பண்ணலாம்னு காசை முடிக்கிறதுல கணக்கு போட்டுட்டு வீட்டுல உக்காந்திருக்கான் தெரியுமா! நம்ம ராசு பையன் சுண்டெலியாட்ட இருந்துட்டு என்ன பேச்சு பேசுறான் தெரியுமா காலையில!
மாணிக்கம் : என்னாங்கறான்?
காளி : காடு வித்து அப்பன் கையில காசு வந்துடுச்சுன்னா நேரா போயி ஒரு ஆம்னி வேன் எடுப்பானாம்! புளியம்பட்டில புளியமரத்துக்கு அடியில நிப்பாட்டி வாடகைக்கு ஓட்டுவானாம்! அப்பத்தான் பிறவிப்பயனை அடைவானாம்! எல்லாரும் பணம் பணம்னு தூங்காம கிடக்காங்க பங்காளி!
மாணிக்கம் : சரி அதுக்கும் ஒரு திட்டம் வச்சிருக்கேன்!
காளி : திட்டமா? நீ அவ்ளோ பெரிய்ய மூளைக்காரன் இல்லியே!
மாணிக்கம்
திட்டத்தை அவர்களுக்கு சொல்லுதல்!
காளி : இது சரியாச் செஞ்சம்னா எடுபடும்னு நினைக்கேன் பங்காளி! ஆமா யாரு இவ்ளோ டீட்டெய்லா உனக்கு மேப் போட்டு குடுத்தது?
மாணிக்கம் : உன்னோட அண்ணி (வழிதல்)
காளி : கேப் விழுந்தா கெடா வெட்டிடறே!
SC NO : 43
(இரவு
நேரம்) மேகாடு
மாணிக்கம்
தன் நண்பர்களுடன் மம்பட்டியுடன் காட்டில் குழி பறிப்பது!
மாணிக்கம் : காட்டுல மம்புட்டி கத்தின்னு வெச்சுட்டு வேலை செய்யுறதுன்னா சின்னத்தான வேலை இல்லியாட்ட பங்காளி !
காளி : ஆமா வேர்வை பாரு தண்ணியா ஊத்துது! நேம்பாவே இருந்து பழகிட்டமா.. திடீருன்னு உழைப்பை கொட்டுறதால பாடி கண்ணீர் விடுது!
சுப்பு : பையில இருக்குறதை இந்த குழியிலயே கொட்டிடலாம் காளி! இதோட பத்தாவது குழி வெட்டீட்டு இருக்கோம்!
காளி : ஆமா பங்காளி ! இன்னொரு குழி பட்டாளத்தான் காட்டுல வெட்டுவோம்னு சொன்னின்னா அதே குழியில என் பாடி தான் விழுகும்! ஒவ்வொரு நரம்பும் போதும்டா போதும்டான்னே கத்துது! கோயில வேற காலைல பத்து மணிக்கு தான் திறப்பாங்க!
அப்போது
புல்லட் சப்தம் தூரத்தில் கேட்பது!
சுப்பு : பட்டாளத்தான் புல்லட் சப்தம் தான் அது! இவனெங்க வெடிகாலைல
பைக்க எடுத்துட்டு போறான்?
மாணிக்கம் : சரி பையை கொண்டா மணி! (பையை வாங்கி
குழிக்குள் கொட்டுதல்)
பைக்
முக்கு திரும்புகையில் காட்டில் நான்கு பேர் இருப்பதை பட்டாளத்தானும் பின்னால் அமர்ந்து வந்த இன்னொருவனும் பார்த்து விடுவது! சாலையோரத்தில் வண்டியை நிறுத்தி விட்டு.. காட்டுக்குள் ஒடி வருதல்!
பட்டாளத்தான் : யார்றா அவனுக? திருட்டுப் பயலுகளாடா?
இன்னொருவர் : உடாதே புடி! ராத்திரில காட்டுக்குள்ள என்னடா பண்றீங்க?
மாணிக்கம்
நண்பர்கள் இருட்டினுள் ஓடுவது! அவர்கள் துரத்துவது!
காளி
அருகில் ஓடி வரும் மாணிக்கத்திடம் : இவன் நெசமாலுமே பட்டாளத்துல இருந்திருப்பான் பங்காளி ! துப்பாக்கி பிடிச்சுட்டு பாகிஸ்தான்காரனை துறத்துற மாதிரியே ஸ்பீடா வர்றான் பங்காளி! ஓடு! சிக்குனம்னா சட்னி
தான்!
மாணிக்கம் : அவனுக எங்க பங்காளி?
காளி : முன்னால புகையப் பாரு! புகைப்பறக்க ஓடுறானுக!
பட்டாளத்தான்
ஓட முடியாமல் ஓய்ந்து நிற்பது! பின் திரும்பி காட்டில் மாணிக்கம் நண்பர்கள் நின்றிருந்த இடத்திற்கு வருவது! அங்கு ஏற்கனவே கூட வந்தவர் மூடிய குழிக்கு அருகே கிடக்கும் காசுகளை எடுத்து திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருத்தல்!
பட்டாளத்தான் : என்னது?
அவர் : தங்கக்காசு மச்சான்!
பட்டாளத்தான் : கொண்டா பாக்கலாம்! (வாங்கி பார்த்தல்)
அவர் : வந்தவனுக புதையல் எடுக்க வந்திருப்பனுகளோ!
பட்டாளத்தான் : புதையலா! காசு பளப்பளன்னு புதுசா இருக்கே!
CUT SHOT
(விடிகாலை) ஊர் பரபரப்பாக இருத்தல்.
மேகாட்டுல
புதையல் கிடைச்சிருக்காமா! பட்டாளத்தான் ஒரு பையி ரொம்ப தங்கக் காசு எடுத்தாந்தானாமா!
அதனால
தான் காட்டை வெலைக்கி கேட்டிருக்காங்க!
எங்க
வீட்டுக்கார்ரு தகவல் தெரிஞ்சதீம் காத்தாலயே மம்புட்டியும் கையுமா போயிட்டாரு!
மேகாட்டில்
மம்பட்டியுடன் ஆட்கள் அலைதல்!
காட்டிற்கு
உள்ளூர் தலைவர் வேலுச்சாமி காரில் வருதல்! கூடவே இருவர்!
காட்டில்
குழி பறைத்துக் கொண்டிருக்கும் இருவரிடம்…
வேலுச்சாமி : என்னப்பா எதாச்சிம் உங்களுக்கு புதையல் கிடைச்சுதா?
அவர் : யாருங்க தலைவரா! அதான் பறைச்சுட்டு இருக்கமுங்க! அதென்ன பக்கத்து காட்டுல ராமசாமி காசு எடுத்திருக்கான்! பார்த்துட்டு தர்றேன்னதுக்கு ஒரு காசை கையில கூட தரமாட்டீங்கறான்!
வேலுச்சாமி : புதையல்னா அது அரசாங்கத்துக்கு சேரணும் தெரியுமா?
அவர் : எம்பட காட்டுல இருக்குற காசை நான் எதுக்குங்க தலைவரே அரசாங்கத்துக்கு குடுக்கோணும்? இது நல்ல நாயம்!
வேலுச்சாமி : அப்ப போலீசுக்கு தகவல் சொல்லிட வேண்டிது தான்!
அவர் : போயி மளார்னு கூட்டி வாங்க! ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சதுக்கு பெருசா என்னமோ போலீசுங்கறான்… அரசாங்கமுங்கறானே! பாத்துப்போடறேன் யாரு எம்பட காட்டுக்குள்ள காலை வச்சுடறாங்கன்னு!
வேலுச்சாமி
ராமசாமி காட்டுக்கு வருவது! ராமசாமி காசுகளை எண்ணிக் கொண்டிருப்பது!
வேலுச்சாமி ; ராமசாமி! ஒரு காசை கொண்டா பாக்கலாம்!
ராமசாமி
அவரிடம் தருதல்!
வேலுச்சாமி : இதான் புதையல் காசா? என்னப்பா லலிதா ஜூவல்லர்ஸ்னு போட்டிருக்குது?
ராமசாமி : லலிதா ஜூவல்லர்ஸுங்களா வேலுச்சாமி! நானும் என்னமோ இங்கிலிபீச்சுல எழுதியிருக்குதேன்னு பார்த்தேன்!
வேலுச்சாமி : ராமச்சாமி.. புதையல்னா பழங்காசா கிடைக்கணும்! இது யாரோ உங்களை ஏமாத்த பண்ண வேலையாட்ட இருக்கே? ஒரசிப் பாத்தா தெரிஞ்சிடும்!
ராமசாமி : ஒரசிப்பாத்துடாதீங்க! தங்கம் தேஞ்சு போயிடும்! லலிதா ஜூவல்லர்ஸ்னா அது எப்பயிருந்து பாரம்பரியம் மிக்கதுன்னு டிவில சொல்றாங்கள்ள… நாம பொறக்காத காலத்துக்கும் மிந்தியிருந்து இருக்குது! இது புதையல் தான்!
அதற்குள்
கல்லில் வேலுச்சாமி உரசிப் பார்த்து தகரம் என்று அறிவது!
வேலுச்சாமி : என்னப்பா ஒரே ஒறசுல மேல் பூச்செல்லாம் போயி வெறும் தகரம் தான் தெரியுது!
ராமசாமி : தகரமா? கொண்டாங்க பாக்கலாம்! அட ஆமாம்!
SC NO : 43 A
(இரவு)
மாணிக்கம்
கூட்டத்தார் முன் நின்று பேசுவது!
மாணிக்கம் : ஊர்க்காரங்க எல்லோரும் முதல்ல என்னை மன்னிக்கணும்!
கூட்டத்தில்
ஒருவர் : நாங்க எதுக்குப்பா உன்னை மன்னிக்கணும்! எல்லாரையும் வரச் சொன்னே! சரி ரிஜிஸ்டர் ஆபீசுக்கு போற தேதியை சொல்வீன்னு வந்து உக்காந்திருக்கோம்!
மற்றவர் : பணத்துக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்குது மாணிக்கம்! சீக்கிரம் குடுத்தீன்னா ஆவும்! எங்க கையெழுத்து போடச் சொல்றியோ அங்க போட்டு குடுத்துடறோம்! எங்களுக்கு பேசுன பணம் வந்தா சேரி!
மாணிக்கம் : நீங்க யாரும் உங்க நிலத்தை விக்க வேண்டாமுங்கறதுக்காகத் தான் உங்களை இங்க வரச்சொன்னது!
ஒருவர் : அப்ப எங்களுக்கு பணம்?
மாணிக்கம் : அதை காடே நமக்கு சம்பாதிச்சு குடுக்கும்!
மற்றவர் : இத்தனை காலமும் சம்பாதிச்சு தரும்னு நம்பித்தான அதுலயே கெடந்தோம்! அது ஆவறதில்லீன்னு நீதான வித்துடச் சொன்னே! இதென்னப்பா தூங்கி எந்திரிச்சா ஒரு நாயம் சொல்ற பழமையா?
மாணிக்கம் : ஆமாங்க! நான் தான் புத்தி கெட்டுப் போயி உங்களை எல்லாம் வித்துடச் சொன்னேன்! அதுக்காக இப்ப உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்!
ஒருவர் : நமக்கென்ன கையில காசு வாயில தோசைங்கற மாதிரியே நடந்துட்டு இருக்கேப்பா! காத்தால தங்கக் காசு கிடைக்குதுன்னு காட்டுல குழி பறிச்சோம்! அது பூச்சு தகரமாப் போச்சு! இதெல்லாம் யாரு பண்ற வேலை?
மற்றவர் : பூபதி ஐயா படிச்சுப் படிச்சு சொன்னாரு நிலத்தை விக்காதீங்கப்பான்னு! அப்ப நம்ம காதுலயே ஏறுல! பையனை நம்பினோம்! இப்ப அவனும் அதே தான் சொல்றான்!
மாணிக்கம் : உங்களுக்கு நிலத்தை வித்தா எவ்ளோ காசு கிடைக்குமோ அதே காசை நாம எல்லோருமா சேர்ந்து புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வெளிநாடுகள்ள பண்ற மாதிரி கூட்டு விவசாயம் பண்ணினோம்னா சம்பாதிச்சுடலாம்! உற்பத்தியாகுற பொருள்களை நாம வெளிநாட்டுக்கு நேரடியா ஏற்றுமதி பண்ணுறோம். நிலத்தையும் நாம விக்க வேண்டியதில்லை!
மற்றவர் : அப்படி நாம என்ன செய்யுறோம் நம்ம நிலத்துல!
மாணிக்கம் : அதை நான் பிறகு சொல்றேன்! நாம அப்படி ஒரு முயற்சி எடுத்துப் பார்க்கலாம்னு தான் உங்க கிட்ட கேட்கிறேன்! (கும்பிடுதல்) எல்லாரும் காட்டை விக்கற தப்பான காரியத்துக்கு எனக்கு ஒத்துழைப்பு குடுத்தீங்க! இன்னிக்கி காட்டை காப்பாத்திக்க எனக்கு ஒத்துழைப்பு குடுங்க! கண்டிப்பா நாம ஜெயிப்போம்!
ஆளாளுக்கு
காதில் குசு குசுத்தல்!
தம்பி
நல்லது தான் சொல்லுது போல!
ஒருவாட்டி
தான் பாப்பமே!
இத்தன
காலம் கிடந்தமாமா.. தம்பி என்னமோ கூட்டு விவசாயம்ங்குதே! அதையும் ரெண்டு வருஷம் பாப்பம்!
வெளிநாட்டுக்கு
அனுப்புதாமே தம்பி! காசு லம்ப்பா தான் வரும்!
ஒருவர் : சரி தம்பி! நீங்க பண்ணப்போற காரியத்துக்கு எந்த இடைஞ்சலும் இல்ல! நாங்க உனக்கு எல்லாருமே ஒத்துழைப்பு குடுக்குறோம்!
மாணிக்கம்
அவர் காலைத் தேடி குனிவது!
ஒருவர் : தம்பி! இதென்ன தம்பி… பழக்கம்! நாம் ஜெயிப்போம் தம்பி!
கூட்டத்திலிருந்து
பழனி ”எல்லாம் போச்சு” என்று புலம்பிக் கொண்டு செல்வது!
SC NO : 44
பழனி
தன் எக்செல் சூப்பரில் தம்பியின் ஆபீஸ் சென்று வண்டியை அவசரமாய் நிறுத்தி விட்டு ஆபீசினுள் ஓடுவது! தம்பி சேரில் அமர்ந்திருப்பது!
தம்பி : அட பழனி ஏன் இப்பிடி அவசரமா வர்றே? இன்னும் என்ன சின்னப்பையனா நீயி ஓடி ஆடறதுக்கு?
பழனி : நீங்க பாட்டுக்கு டெல்லி போறேன்னு போயிட்டீங்க! இங்க ஒரு வாரத்துல கதையே மாறிப்போச்சுங்கண்ணா!
தம்பி : கொஞ்சம் தண்ணிய மொதல்ல குடி! ஏப்பா! (அருகிலிருந்தவனிடம் தண்ணீர் கொண்டு வரச் சொல்தல். பழனி டம்ளர் தண்ணீரை குடித்தல்)
தம்பி : இனிச் சொல்லு!
பழனி : எல்லாருத்த பொழப்பும் நாசமாப் போச்சுங்கண்ணா! எம்மாப்ள மாணிக்கம் வில்லனா இருந்தவன் இப்ப கதாநாயகனா ஆயிட்டான்ணா!
தம்பி : சொல்றதை ஒழுக்கமாச் சொல்லு பழனி! வில்லன் கதாநாயகன்னுட்டு!
பழனி : எல்லாருக்கும் அட்வான்ஸ் குடுத்து வச்சிருந்தம்ல! அவனுக கிட்ட மாப்ளையே போயி காட்டை குடுக்க வேண்டாம், விவசாயமே பண்ணலாம்னு சொன்னங்காட்டி வாங்கின அட்வான்சை எல்லாரும் திருப்பி குடுத்துட்டாங்க! எழுதி குடுத்த பத்திரத்தை வாங்கிட்டு போயிட்டாங்க!
தம்பி : அப்புறம்?
பழனி : அப்புறமென்ன? நாமத்தை நாம போட்டுட்டு போவேண்டீது தான்!
தம்பி : எல்லாமே முடிஞ்சுதா?
பழனி : நம்ம பணத்தை எங்கையில அவன் குடுத்துட்டான்!
தம்பி : இத்தனை நாள் செலவு பண்ண பணம்? அவனுக சாரயம் குடிக்கவும், எலக்சன்ல நின்னதுக்கு குடுத்ததும், ஆபீஸ் போட்டதும்.. என்னை என்ன வட்டையன்னு நெனச்சுட்டானா?
பழனி : அப்படித்தான் ஆயிப்போச்சுங்கண்ணா!
தம்பி : அப்ப நம்மாளுகளுக்கு போனை போட்டு வரச் சொல்லிட வேண்டீது தான்! அவனுக மிதிக்கிற மிதியில ரசம் வந்தரோணும் பாத்துக்க!
பழனி : நீங்க என்ன வேணாலும் பண்ணுங்கண்ணா! கையத் திருகுங்க, காலத் திருகுங்க.. மாப்ளைய உசுரோட உட்டுருங்கோ!
தம்பி : தே! பாசமா மாப்ள
மேல!
பழனி : இல்லீன்னா அவங்கப்பன் என்னைய கொன்னு போடுவாப்லைங்க!
தம்பி
போனை எடுத்தல்!
தம்பி : நம்ம ஆளுகளை கூப்பிட்டு ஆபீசுக்கு வாங்கடா!
CUT SHOT
உள்ளூர்
பெட்டிக்கடை முன்பாக நான்கு பொலிரோ வண்டிகள் வந்து நிற்பது!
தம்பி : போயி அந்தப் பொட்டிக்கடையில அவனெங்க இருக்கான்னு சன்னமா விசாரி!
அவன்
கடைக்கு வந்து கடைக்காரனிடம் விசாரித்தல்!
அவன் ; இங்க மாணிக்கமுன்னு ஒருத்தரு இருப்பாப்லைல்ல! அவரை எங்க பாக்க முடியும்?
கடைக்காரன் ; தெங்கியோ மேகாட்டு பக்கம் போறதாத்தான் இப்ப இங்க உக்காந்து பேசிட்டு இருந்தாங்களே!
அவன் : அங்க போறக்கு வழி?
கடைக்காரன் : அப்பிடியே நேரா போவேண்டிது தான்.. ஊரை தாண்டினா அரை கிலோ மீட்டர்! நீங்க யாரு? இத்தனை வண்டில வந்திருக்கீங்க?
அவன்
பதில் சொல்லாமல் வண்டிக்கு வருவது!
தம்பி : எங்கியாமா?
அவன் : மேகாடாம்ணா! நேரா உடுங்க! (வண்டிகள் கிளம்புதல்)
மேகாட்டில்
மாணிக்கம் நண்பர்களோடு காட்டை நோக்கி கைநீட்டி பேசிக் கொண்டிருப்பது! அப்போது வண்டிகள் அவனருகில் சென்று நிற்பது! தம்பி டீம் அவர்களை ரவுண்டு கட்டுவது!
SC NO : 45
மாணிக்கமும், நண்பர்கள் காளி, மணி, சுப்பு அடியாட்களிடம்
அடிபடுவது!
தம்பி : அவனுகளை மரத்துல கட்டுங்கடா!
ஒரே
மரத்தில் நான்கு பேரையும் கட்டுதல்!
தம்பி
மாணிக்கத்தை பார்த்து : ஏண்டா! பொழைக்கறக்கு உனக்கு ஐடியா குடுத்தா சரிங்கண்ணா சரிங்கண்ணாண்ட்டு கடைசீல எங்க தலையில கல்லை போடறியாடா! எங்களை என்ன கேனப்பயலுகள்னு நெனச்சிட்டியா? (பக்கத்திலிருப்பவனிடம்) தடிய வெச்சுட்டு சும்மா ஏண்டா நிக்கே? போடறா ஆளுக்கொன்னு!
பூபதி
தடியை ஓங்கினவனை உதைத்துத் தள்ளி சண்டைக்கு வருதல்! சண்டையிட்டபடி மரத்தின் கட்டை அவிழ்த்தல்! மாணிக்கம் களத்தில் இறங்கி சண்டையிடுதல்!
கடைசியில்
கீழே கிடக்கும் தம்பி “தண்ணி தண்ணி” என்று கத்துதல்!
பூபதி
தம்பியிடம் : இம்போர்ட் செஞ்சு குடி!
மாணிக்கத்தின்
நண்பர்களை அழைத்துக் கொண்டு பூபதி செல்தல்!
SC NO : 46
நவீன
விவசாயி கெட்டப்பில் மாணிக்கம் பிறர் இருத்தல்! வட்டி வனிதா அங்கு வருதல்!
வனிதாவை
கண்டதும் காளி மாணிக்கத்திடம் : ஐய்யயயோ! பங்காளி திருவள்ளுவர் ஐய்யனோட பேத்தி வருது! வந்தா வேற உன்னை ஐய்யன் பாட்டை பாடச் சொல்லுமே!
மாணிக்கம் : வரட்டும் பங்காளி! சொல்லிட்டா போச்சு!
காளி : எத்தனை நாளா மனப்பாடம் பண்ணே? வாம்மா! வனிதா! பங்காளி இன்னிக்கி கரைட்டா பாடீருவான்! நீ கேட்டுப்பாரேன்!
வனிதா
கையை எங்கே பாடுங்கள் என்றவாறு அசைத்தல்!
மாணிக்கம் : ( தொண்டையை செருமிக் கொண்டு)
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
தொழுதுண்டு பின்செல் பவர்.
MOTIVATION SONG START
நவீன
விவசாயி கெட்டப்பில் மாணிக்கம் 30 ட்ராக்டர்களுடன் விவசாய நிலத்தில் நிற்பது! கூடவே கலையரசியும் இருப்பது! ட்ராக்டரில் ஏற கலியரசிக்கு கை கொடுக்கும் மாணிக்கம்! கலையரசி ட்ராக்டரில் உள்ல டச் ஸ்கிரீனில் நிலங்களின் அளவுகளை பதிவு செய்தல்!
INTER CUT
கலையரசி
விவசாயம் சம்பந்தப்பட்ட ஆங்கில புத்தகங்களை மாணிக்கத்திடம் காண்பிப்பது! விளைபொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது பற்றி INTERNET –ல் கண்பித்து மாணிக்கத்தை ஊக்கப்படுத்துவது! இருவரும் நகரும் காட்சிகளில் இருவரின் கைகள் இணைந்தே இருப்பது! பூபதி சந்தோசமாய் ஆட்களுடன் ட்ராக்டர்களை காட்டி பேசுவது! பாட்டி மரத்தடியில் செல்போன் பார்த்தபடி இருப்பது! ட்ராக்டர்களை போட்டா எடுப்பது! பாட்டி பேண்ட் சர்ட்டில் இருப்பது! கண்ணுக்கு கண்ணாடி!
பாடல்
முடிகையில் பசுமை! (மேலும்)
SC NO : 47
மாணிக்கம்
தன் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை முன் ஊராருடன் நின்றிருத்தல்! கலெட்டர் கார் தொழிற்சாலைக்குள் வருதல். பூபதி ஐயா சென்று கார் கதவை திறந்து விடுதல்! காளி மாலையணிவித்து அவரை வரவேற்றல்! பூபதியிடம் பேசியபடி கலெக்டர் ரிப்பன் வெட்டுமிடத்திற்கு வருதல்! அங்கு மாணிக்கம், கலையரசி, அவள் அம்மா, மாணிக்கம் அம்மா, தங்கை என்று வணங்கி வரவேற்பது! ரிப்பன் வெட்ட மாணிக்கம் கத்தரியை கலெக்டரிடம் தருதல்! கலெக்டர் புன்னகைத்து வெட்டுதல்!
பின்
கலெக்டர் மாணிகத்தை கட்டியணைத்து வாழ்த்து சொல்லி விட்டு விடை பெறுதல்!
CUT SHOT
அனைவரும்
மகிழ்ச்சியாக காபி, ஸ்னேக்ஸ் என்று சாப்பிட்டுக் கொண்டிருக்க மீடியா சேனல் மாணிக்கத்தை இண்டர்வியூ செய்ய ஆயத்தமாதல்!
பெண் ; நமது டிவிக்கு திரு. மாணிக்கம் அவர்கள் விவசாயத்துறையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாதித்ததைப் பற்றி இப்போது நமக்கு சொல்வார்!
பெண் : வணக்கம் மாணிக்கம் சார்!
மாணிக்கம் ; வணக்கம்!
பெண்
; பழவகைகளை பதப்படுத்தி
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் உங்க தொழிற்சாலை திறக்கப்பட்ட இன்றே எங்க சேனலுக்கு உங்களோட வெற்றியை கொண்டு போறதை மகிழ்ச்சியா நினைக்கிறோம் சார்!
மாணிக்கம்
பந்தா செய்தபடி…
பெண் : ஆறுபடையப்பா ரியல் எஸ்டேட் பிஸ்னஸ்ல இருந்த நீங்க விவசாயம் தான் நாட்டுக்கு உயிர் அப்படின்னு திரும்ப ஏதாவது முக்கிய காரணம் இருக்குமே?
காளி :
(அதை பார்த்தபடி மணியிடம்) அப்பனுக ப்ளாஸ் லைட்டால தான்!
மணி : அது ப்ளாஸ் லைட்டில்ல.. ப்ளாஸ் பேக்!
காளி : உனக்கு ஆங்கில அறிவு இருக்கு ஒத்துக்கறேன்! கோயில் நடை திறந்து ஒரு மணி நேரமிருக்குமா?
மாணிக்கம்
கூற முயலுகையில் பூபதி வணக்கம் வைத்தபடி குறுக்கே வருகிறார்!
பூபதி ; அதெல்லாம் எதுக்கும்மா! அதான் நம்ம தலைவர் அன்னிக்கே சொல்லிட்டாரே!
கடவுள்
என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி! விவசாயி!
ROLLING TITLE
-சுபம்-