வியாழன், நவம்பர் 12, 2020

கள்ளி நாவல் -ஒரு மதிப்பீடு

Kathiravan Rathinavel

பேட்ஜ் ஐகான்

 

வா.மு. கோமு

 

இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பன்  Sampathkumaar Ganesh

ஆண்ட சாதிகளை வச்சு செய்யற மாதிரி கதை இருந்தா சொல்லுன்னு கேட்க, வாமுகோமுவோட பல புத்தகங்கள் அப்படித்தான் இருக்கும்னு சொன்னேன். சொல்லவும் மனசு தானா அவரோடது ஏதோ ஒன்ன எடுத்து படின்னே சொல்லிட்டு இருந்தது. கிண்டில்ல வாங்கி வச்சுருந்து கள்ளிய எடுத்தேன். இது அவரோட முதல் நாவல்.

வட்டார வழக்கில் எழுதும் நாவல்கள்தான் முழுமையான கதை சொல்லிகளாக மாறுகின்றன.. அந்த வகையில் பார்க்கையில் கொங்கு வட்டாரம் என்றால் முதலில் இவரைத்தான் கைக்காட்ட வேண்டும். நான் ஏற்கனவே இவரது சயனம், சகுந்தலா வந்தாள், தானாவதி, சாந்தாமணியும் இன்னபிற காதல்களும் வாசித்திருக்கிறேன். தானாவதியெல்லாம் மிக முக்கியமான நாவல். பெண் கிடைக்காமல் அலையும் கொங்கு வட்டார இளைஞர்களை பற்றிய கதை அது.

சாதி ஏற்றத்தாழ்வுகளினால் என்னென்ன நடக்கும் என்பது நகர்புறவாசிகளுக்கு சுத்தமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் மூன்று விசயங்களை சொல்லலாம்

1. அவமானம்

2. உழைப்பு சுரண்டல்

3. பாலியல் சுரண்டல்

இது கொஞ்சம் கனமான சப்ஜெக்ட். இது பற்றி தெரிந்து கொள்ள அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் மன அழுத்தம் வந்துவிடும் என்ற பயமே காரணம். அப்படி அல்ல, சிரித்துக்கொண்டே கூட இவற்றை தெரிந்து கொள்ளலாம், வாமுகோமுவின் புத்தகங்கள் வழியே...

கொங்கு பகுதியில் கிராமங்களில் ஆண்ட சாதி என்பது கவுண்டர் சமூகம்தான். அவர்களுக்கு கீழே இருப்பது/இருந்தது அருந்ததியர் சமூகம். இந்த இரண்டு சமூகங்களுக்கு இடையிலான உறவு, எப்படி இருந்தது? எப்படி மாறுகிறது என்பதை அட்டகாசமாக சொல்கிறார்...

ஊர்வழக்கம் என்ற பெயரில் இருந்த சாதிய கட்டமைப்பு திருப்பூர் & சீப்காட் தொழிற்வளர்ச்சியால் எப்படி உடைகிறது என்பதும், அதை ஏற்றுக்கொள்ள ஆண்ட சாதி தடுமாறுவதையும் அழகாக காட்சி படுத்துகிறார்.

சரக்கு வாத்தியார் குடித்து விட்டு வந்து, நாசுவர்கள் முன்பு போல் வீடு வீடாக வந்து முடி வெட்ட வேண்டும் என்று பஞ்சாயத்து கூட்டும் காட்சியை சொல்லலாம்.

அதிலும் 10 நாட்கள் கதிரறுக்க வேலை வாங்கி விட்டு, கூலி கொடுக்காமல் ஏமாற்ற முத்தா கவுண்டர் போட்ட திட்டம் அவர் கழுத்து கத்தியாக வந்து நிற்கும் போது கை தட்டி விசிலடிக்கலாம்.

கைமாத்தாக வாங்கிய காசை கொடுக்கவில்லையென்றால் தன் கணவனை உன் பொண்டாட்டியிடம் அனுப்புவேன் என்று சொல்லும் கவுண்டச்சி வாயை மல்லி அடைக்கும் விதமெல்லாம் வேற லெவல்.

முழுக்க ஆண்ட பரம்பரைகளுக்கு எதிராக எழுதி இருக்கிறதா என்றால் அப்படியெல்லாம் இல்லை. முந்தைய தலைமுறைகளை மட்டும்தான் அப்படி காட்டுகிறது. அடுத்த தலைமுறை இந்த கட்டமைப்பு வேண்டாம் என்று எட்டி உதைத்துவிட்டு அவர்கள் போக்கில் இருப்பதையும் பதிவு செய்கிறது.

அதே நேரம் சாதி கொடுமையை அனுபவிக்கும் இனமும், அதே கட்டமைப்பின் மூலம் கிடைக்கும் வருமானத்தை இழக்க தயாராக இல்லை என்பதையும் பதிவு செய்கிறார்.

இதுவரை நான் சொன்னதெல்லாம் படிக்கும் போது உங்களால் உணர முடிந்தால் உங்களுக்கு சமூகநீதி பார்வை இருக்கிறது என்று அர்த்தம். அது குறித்த புரிதல் இல்லையென்றால் இது எதுவுமே கண்களில் படாது. அதுதான் கோமுவின் ஸ்பெசாலிட்டி.

யாரிடமாவது இந்த எழுத்தாளரை பற்றி கேட்டால் "அவர் பயங்கரமான செக்ஸ் ரைட்டராச்சே" என்றுதான் சொல்வார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. பார்க்கும் பார்வையில்தான் அனைத்தும் இருக்கிறது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அப்படி எழுதி இருப்பார் என்றுதான் நானும் இவரை வாசிக்க துவங்கினேன். அவரது சில கதைகள் மட்டும்தான் அப்படி தெரியெம். மற்றவை அனைத்தும் வெடி சிரிப்புடன் சாதிய கட்டமைப்பையே பதிவு செய்கின்றன.

கிராமங்களில் பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரண பாலியலே என்று சொல்லும்படிதான் இவரது கதைகள் இருக்கும். உண்மையில் கிராமங்கள் மட்டுமல்ல, நகரங்களும் அப்படித்தான். நாம்தான் கவனிப்பதில்லை.

அத்தியாயத்திற்கு அத்தியாம் வெடித்து சிரிக்க பல இடங்கள் இருக்கின்றன. அதிலும் வட்டார வழக்கில் திட்டுவதை ரசிக்காமல் இருக்க முடியாது. அதே போலத்தான் சொலவடைகளும். அதற்காகவே படிக்கலாம். ஒருபக்கம் பெருமாள். முருகன் போன்றோர் மிக சீரியசாக இலக்கியமாக பேசும் விசயத்தை மிக அசால்டாக காட்சிகளாக வைத்து விட்டு போகிறார்.

தாழ்ந்த சாதி பையன் ஒருவன் உயர்சாதி பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்து விட்டான் என நடக்கும் பஞ்சாயத்து காட்சி ஒரு உதாரணம். அதில் போகிறபோக்கில் ஆணவக்கொலையை பதிவு செய்கிறார்.

பையனுடன் போவேன் என்று பெண் சொன்னதும் பஞ்சாயத்தில் ரகளை வெடித்தது. கடைசியாக பெண்ணை வீட்டிற்கு கூட்டி சென்றார்கள். அன்று இரவு கவுண்டர் வீட்டில் ஒரு இரவு விழுந்தது. தற்கொலை என்றுதான் சொன்னார்கள்.

அவ்வளவுதான் எழுதப்பட்டிருக்கும். செத்தது அந்த பெண்தானா என்று கூட குறிப்பிட்டுருக்க மாட்டார்.

சொல்வதை விட, சொல்லாமல் விடப்படுவதில்தானே கதைசொல்லியின் திறமை இருக்கிறது.

இதை கொண்டு சென்று எழுத்தாளரிடம் கேட்டால் நான் அப்படியெல்லாம் நினைச்சு எழுதலைங்களேம்பார்.

அதே பஞ்சாயத்து காட்சியில் ஒரு வசனம் வரும். கவுண்டரின் மனைவி பேசுவது. அதை இங்கே சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன்.

புத்தகம் முழுக்க 30% பாலியல் உறவுகளை பற்றியும்

30% வாழ்வியல் பற்றியும்

40% சாதிய கட்டமைப்பு பற்றியும் பேசுகிறது.

கொங்கு மண்டலம் பற்றிய அறிமுகம் தேவை என்பவர்கள் கட்டாயம் கோமுவை வாசிக்க வேண்டும்.

சாதிய கட்டமைப்பு பற்றிய புரிதல் வேண்டும் என்பவர்களுக்கும் கோமுவைத்தான் பரிந்துரைப்பேன். பெருமாள் முருகன், ஆதவன் தீட்சான்யா, இமையம், சோ.தர்மன் என பலர் இருந்தாலும் கோமுதான் புதிதாக தெரிந்து கொள்பவர்களுக்கு வலிக்காமல் ஊசி போடுவார்.

தஞ்சை பிரகாசின் தீவிர ரசிகரான கோமுவின் எழுத்துகளில் பாலியல் இல்லையென்றால்தான் ஆச்சரியப்பட வேண்டும்.

கரமுண்டார் வீட்டை விடவா ஒரு நாவல் கள்ளர்-பள்ளர் பிரச்சனையை பேசி விடப்போகிறது? அதிலில்லாத பாலியலா?

கோமுவிற்கு, சேலம் ஏர்வாடி ஊர் ரொம்ப பிடிக்கும் போல, எட்றா வண்டிய நாவலிலும் அந்த ஊரை வைத்து எழுதியிருப்பார். இதிலும் கதிர் அறுக்க வருபவர்கள் அங்கு இருந்துதான் வருவார்கள்.

ஏன் இதை சொல்கிறேன் என்றால் ஏர்வாடி எனக்கு பக்கத்து ஊர். அங்குதான் மணல்வீடு இலக்கிய இதழ் நடத்தும் ஹரி கிருஷ்ணன் இருக்கிறார். அங்கு நடக்கும் வருடாந்தர நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற பொழுது கோமகன் வந்து சென்றதை கவனித்தேன். இருவரும் ஆழ்ந்த நண்பர்கள் என்று அவதானிக்கிறேன்.

பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம்.

வாமுகோமுவை வாசிப்பு பட்டியலில் தவறாமல் வைத்திருங்கள்.

 


Post Comment

புதன், நவம்பர் 11, 2020

ஒரு சிறார் நாவல்



எல்.பிராங்க்போம் அமெரிக்க சிறார் எழுத்தாளர். மலையாளத்தில் ஜெ.தேவிகாவால் மொழிபெயர்க்கப்பட்ட நாவலை தமிழில் யூமா வாசுகி மொழிபெயர்த்திருக்கிறார்.

 

மாமாவுடனும் அத்தையுடனும் கான்சாஸ் புல் மேட்டில் சிறுவீட்டில் வாழும் சிறுமி டோரதி. அவ்விடத்தில் அடிக்கடி புயல் காற்று வீசும். டோரதியின் தோழன் தோத்தோ எனும் நாய்க்குட்டி. புயல் நாளொன்றில் டோரதியும், தோத்தோவும் வீட்டோடு வானில் பறக்கிறார்கள். எங்கு செல்கிறோமென்ற குழப்பமும் பயமும் டோரதிக்கு இருந்தாலும் ஒரு கட்டத்தில் பயத்தை துறந்து நிம்மதியான தூக்கத்தில் ஆழ்ந்து விடுகிறாள். விழித்தெழுகையில் அந்த வீடு அழகான ஒரு பிரதேசத்தில் இறங்கியிருக்கிறது.

 

அங்கே விசித்திர மனிதர்களின் சந்திப்பும் நிகழ்கிறது. டோரதி தன் மாமாவிடமும் அத்தையிடமும் செல்ல விருப்பப்படுகிறாள். அதற்கான வழியை மரகத நாட்டில் வசிக்கும் மந்திரவாதி ஓஸை சந்தித்தால் மட்டுமே வீடு திரும்ப இயலுமென்பதை விசித்திர மனிதர்களிடம் கேட்டறிந்த டோரதி தன் பயணத்தை துவங்குகிறாள்.

 

இந்த சிறு நாவல் இங்கிருந்து ஒரு தேடலுடன் துவங்குகிறது. இடையில் தனக்கு எப்படியேனும் அறிவு வேண்டும் என இவர்களின் பயணத்தில் ஒரு வைக்கோல் மனிதன் மந்திரவாதி ஓஸை சந்திக்கச் சேர்ந்து கொள்கிறான். கூடவே ஒரு தகர மனிதனும் தனக்கு இதயம் வேண்டும் என்றும் இவர்களோடு இணைந்து கொள்கிறான்.

 

சிறார்களுக்கான கதைகளில் இப்படி வைக்கோல் மனிதன் என்றும் தகர மனிதன் என்றும் சேர்ந்து கொள்கையில் நிச்சயமாக படிக்கும் சிறார்களுக்குள் ஒரு ஆர்வத்தையும் ஆச்சர்யத்தையும் உருவாக்கிவிடும் தான். போக வைக்கோல் மனிதனுக்கு நெருப்பு என்றால் பயம். தகர மனிதனுக்கு தண்ணீரில் நனைந்தால் துருப்பிடித்து விடும் என்பதால் கையோடு ஒரு ஆயில் டின். நாவலின் போக்கில் சுவாரஸ்யங்கள் சேர்ந்து கொண்டே செல்கிறது.

 

இவர்களின் சாகசங்கள் நிறைந்த இந்தப்பயணக்கதை படிப்போருக்கு அலுப்பூட்டுவதில்லை. இறுதியில் டோரதியும், தோத்தோவும் மாமாவையும் அத்தையையும் சந்தித்தார்களா? எவ்விதம் வந்து சேர்ந்தார்கள்? என்பதை சொல்கிறது இந்த சிறார் நாவல்.

 

ஒரு மொழிபெயர்ப்பு நாவலை படித்துக் கொண்டிருக்கிறோமென்ற உணர்வே ஏற்படாமல் நேரடியாக தமிழில் எழுதப்பட்ட நாவலை வாசிப்பது போன்றே இருந்தது. தமிழில் சிறார்களுக்கென பல புத்தகங்கள் வந்திருப்பினும் இது ஜாலங்கள் நிறைந்த கற்பனை உலகிற்கே சென்று திரும்பிய திருப்தியை சிறார்களுக்கு நிச்சயம் கொடுக்கும்.

 

புக்ஸ் ஃபார் சில்ரன்

பேச :- 044-24332424,  24332924

விலை :- 90.00

 

Post Comment

திங்கள், ஆகஸ்ட் 24, 2020

வா.மு.கோமு கவிதைகள்

 




துக்கத்தின் தனிமை

000

என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன்

எனத்தான் நினைக்கிறேன்!

வெளியில் வீணாய்ச் சுற்றாதீர்கள் என்று அறிவித்திருக்கிறார்கள்.

நான் வீணாய்ச் சுற்றும் மனிதன் தான்.

ஒரு ப்ளாக்டீ குடிப்பதற்காகவே குறுநகர் நோக்கி

கிராமத்திலிருந்து எனது வாகனத்தில் தினமும்

சென்று வந்தவன் தான் நான்.

இனி நான் எப்போதும் செல்லும் மலையாளத்தான்

பேக்கரிக்கு செல்லவே முடியாது போலிருக்கிறது!

எப்போதேனும் மாடியிலிருக்கும் எனதறையிலிருந்து

இயற்கை உபாதையை நீக்கிக் கொள்ள வெளிவருகையில்

வானில் இருக்கும் நட்சத்திரக் கூட்டங்களில்

ஒருசில மின்னிக்கொண்டு கீழ்வந்து வீழ்ந்து மடிகின்றன.

சில தங்களை எவ்விதமேனும் மறைத்துக் கொள்கின்றன.

நோய்த்தொற்று எப்படிப் பரவுகிறதென இன்னமும்

யாருக்கும் தெரியவில்லை! -உயிரோடிருக்கிறேன்

என்பதை வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்று

அலைபேசியில் அடுத்தவர்களுக்கு சொல்லி மகிழ்கிறேன்.

அரசாங்கம் என் வீட்டு வாசலில் ஒரு மாயக்கோட்டை

வெள்ளை நிறத்தில் இழுத்து விட்டிருக்கிறது.

அதைத்தாண்டி விட கால்கள் துடிக்கின்றன.

சும்மாவே யாரோ என்மீது துயரங்களை திணித்து விட்டு

கிடடா இப்படியே! என்று போய்விட்டார்களோவென

அச்சமாயிருக்கிறது! -உனக்கு பசியெடுக்கிறதா? என்று

கேட்கவேணும் யாராவது என் வாசலுக்கு வருவார்களாவென

கதவைத்தாழிடாமல் விட்டு வைத்திருக்கிறேன்.

வானத்திலிருந்த இருட்டு முழுவதும் ஒருநாள் கதவை

நகர்த்திக் கொண்டு வீட்டினுள் வந்து விட்டது!

அதை நோக்கிஎனக்கு பசியாயிருக்கிறதென

சொல்லத்தான் முடியவில்லை!

000

 

 

மிருதங்கம் வாசிக்கப்படத்தான்

000

 

மீதமிருந்த கபசுரகுடிநீரை ஒரே மடக்கில்

குடித்து முடித்து டம்ளரை வைத்தானவன்.

தூரத்தில் எங்கோ ஒரு பெயரறியாப் பறவை

மிகப் பரிதாபமாக கத்திவிட்டுச் சென்றது.

மதியம் உணவுக்கு முட்டை காலி, என்றாளவள்.

பாக்கெட்டைத் தடவிப் பார்த்தவன்

நீயே நாலு முட்டையிட்டு வேக வச்சிரு!’ என்றான்.

000

 

ஆளரவமற்ற தெரு ஒன்றில் தனித்து நின்றிருந்த

விளக்குக்கம்பத்தின் கீழ் அமர்ந்திருந்தவன்

பெருத்த யோசனையால் தன் விரல்களை

கொறித்துத் துப்பிக் கொண்டிருந்தான்.

விடிய இன்னும் நேரமிருக்கிறது!

000

 

குனிந்து குனிந்து மம்பட்டியால்

சவக்குழி வெட்டிக் கொண்டிருந்தவனுக்கு

உடல் முழுதும் வியர்வை

பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது.

தனித்தே அவன் முதுகில் வைத்து

தூக்கி வந்திருந்த பிணம்

உச்சி வெய்யிலில்

சிரித்துக் கொண்டு படுத்திருந்தது.

000

 

பிணங்களை இடுகாட்டில் புதைப்பதற்கு

நான்கு பேர் சென்றால் மட்டும் போதுமானது என

அரசாங்கம் அறிவுறுத்தியிருக்கிறது.

உடல்மூடிய நீல வர்ண உடையணிந்த நால்வர்

பிணத்தை தூக்கி வருவதைப் பார்த்து

புதிய குழிமேடுகளில் அவ்வப்போது

முனகல் சப்தம் எழுகிறது!

குழிக்குள்ள பார்த்து மெதுவா தூக்கிப் போடுங்க!

நீங்க சம்பிரதாயங்கள் செய்யலனா பரவால்ல!”

000

 

-உங்க சன்னுக்கு ஃபோர்த் க்ளாஸ்க்கான

புக்ஸ்செல்லாம் வந்துடுச்சுங்க சார்.

ஸ்கூலுக்கு வந்து இந்த இயருக்கு ஃபீஸ் கட்டிட்டு

புக்ஸ் வாங்கிட்டு போங்க சார்.

 

-மேடம், பையனுக்கு

பாடஞ்சொல்லிக் குடுக்குறதை நாங்க

பார்த்துக்கணுமா?

 

-இல்ல சார் ஆன்லைன்ல நாங்க

உங்க சன்னுக்கு டீச் பண்டுவோம்.

எவ்ரி டே டூ ஹவர்ஸ்!

 

-நேர்ல நீங்க சொல்லிக் குடுத்தாவே

படிக்க மாட்டான்.. இதுல

ஆன் லைன்ல நீங்க நொட்டுனா

படிச்சிக் கிழிச்சிடுவானவன்!

000

 

வீட்டின் முன்பிருந்த சாலைக்கு

ஓடி விட்ட காற்றடைத்த பலூனை

தாவிப்பிடித்துவிட சாலைக்கு வந்த

பாப்பாவை பைக்கில் வந்த வாலிபன்

அலேக்காய்த் தூக்கி வந்து விட்டான்.

 

அவர்கள் மூவரும் கிளாஸ்களை

முட்ட வைத்து முட்ட வைத்து

குடித்துக் கொண்டிருக்க

வாயில், கையில், காலில் கட்டப்பட்டு

சற்றுத்தள்ளி படுத்திருந்த பாப்பா

இந்த அண்ணன்கள் என்ன விளையாட்டு

விளையாட தூக்கி வந்திருக்கிறார்கள்?’

என்று யோசித்துக் கிடந்தது.

000

 

போராட வேண்டியிருக்கிறது ஒவ்வொரு நாளும்.

இயற்கை அழிவுக்கு எதிராக,

விலங்கினங்களின் அழிப்புக்கெதிராக,

கச்சா எண்ணெய் விலையேற்றத்திற்காக,

விலைவாசி உயர்வுக்காக,

பாலியல் குற்றங்களுக்கெதிராக,

கொள்ளையடிக்க கிளம்பும் பள்ளிகளுக்கெதிராக,

இப்படி பல எதிராக எதிராக...

ஆனால் கோவிட் 19-க்கெதிராக

போராடுவதாகச் சொல்லி வீட்டினுள்

பிணத்திற்கொப்பாகக் கிடக்கிறேன்

வெற்றுச்சுவரைப் பார்த்தபடி!

000

 

பிரசவ அறையில் பிறந்த குழந்தையின்

தொப்புள்கொடியை பாந்தமாய்

துண்டித்தாள் மருத்துவமனை தாதி.

கோவிட் 19 தலைவிரித்தாடும்

காலத்தில் பிறந்த கண்ணே!

புதிய உலகிற்கு உனை வரவேற்கிறேன்!’

பற்கள் முளைத்திருந்த குழந்தை

தாதியைப் பார்த்து சிரித்தது!

000

 

தலையில் எழுதியிருப்பனவெல்லாம்

 

பலியானோர் எண்ணிக்கையை

புள்ளிவிபரமாய் கட்டம் கட்டி சொல்லியிருந்தார்கள்!

வீட்டுக்கு வரும் தினச்செய்தித்தாளை

நிப்பாட்டிக் கொண்டேன்.

000

 

உங்கள் வீட்டையும் உங்களையும்

கோவிட் 19-லிருந்து நிரந்திரமாய்

காத்துக் கொள்ள எங்கள் புரோடெக்ட்களை

நம்பி வாங்குங்கள்! என்றார்கள்.

கேபிள் கனெக்சனை நிறுத்தி விட்டேன்.

000

 

கபசுரகுடிநீர் குடிக்கியளா பங்காளி?

பாக்கெட் 80 ரூவா தான்..

நம்ம வீட்டுல வாரத்துல நாலு நாள்

குடும்பமே குடிக்குது! என்றபடி பங்காளி

படியேறி வந்தார்.

நாளையும் பின்னியும் வீட்டுக்குள்ள

யாரையும் விடாதே! என்று சொல்லி வைத்தேன்.

000

 

அவரவர் தலயில என்ன எழுதியிருக்கோ

அதன்படிதான் நடக்குமென்றார் அலைபேசியில்

தூரத்து உறவினரொருவர்.

நீங்க போயிட்டீங்கன்னா மாவட்டம் விட்டு

மாவட்டம் உங்க எழவெடுக்க என்னால

வரமுடியாதுங்க, இப்பவே சொல்லிடறேன்!

எதிர்முனை அணைந்திருந்தது!

000

 

நன்றி : வாசகசாலை இணைய இதழ்

Post Comment