திங்கள், ஆகஸ்ட் 24, 2020

வா.மு.கோமு கவிதைகள்

 
துக்கத்தின் தனிமை

000

என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன்

எனத்தான் நினைக்கிறேன்!

வெளியில் வீணாய்ச் சுற்றாதீர்கள் என்று அறிவித்திருக்கிறார்கள்.

நான் வீணாய்ச் சுற்றும் மனிதன் தான்.

ஒரு ப்ளாக்டீ குடிப்பதற்காகவே குறுநகர் நோக்கி

கிராமத்திலிருந்து எனது வாகனத்தில் தினமும்

சென்று வந்தவன் தான் நான்.

இனி நான் எப்போதும் செல்லும் மலையாளத்தான்

பேக்கரிக்கு செல்லவே முடியாது போலிருக்கிறது!

எப்போதேனும் மாடியிலிருக்கும் எனதறையிலிருந்து

இயற்கை உபாதையை நீக்கிக் கொள்ள வெளிவருகையில்

வானில் இருக்கும் நட்சத்திரக் கூட்டங்களில்

ஒருசில மின்னிக்கொண்டு கீழ்வந்து வீழ்ந்து மடிகின்றன.

சில தங்களை எவ்விதமேனும் மறைத்துக் கொள்கின்றன.

நோய்த்தொற்று எப்படிப் பரவுகிறதென இன்னமும்

யாருக்கும் தெரியவில்லை! -உயிரோடிருக்கிறேன்

என்பதை வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்று

அலைபேசியில் அடுத்தவர்களுக்கு சொல்லி மகிழ்கிறேன்.

அரசாங்கம் என் வீட்டு வாசலில் ஒரு மாயக்கோட்டை

வெள்ளை நிறத்தில் இழுத்து விட்டிருக்கிறது.

அதைத்தாண்டி விட கால்கள் துடிக்கின்றன.

சும்மாவே யாரோ என்மீது துயரங்களை திணித்து விட்டு

கிடடா இப்படியே! என்று போய்விட்டார்களோவென

அச்சமாயிருக்கிறது! -உனக்கு பசியெடுக்கிறதா? என்று

கேட்கவேணும் யாராவது என் வாசலுக்கு வருவார்களாவென

கதவைத்தாழிடாமல் விட்டு வைத்திருக்கிறேன்.

வானத்திலிருந்த இருட்டு முழுவதும் ஒருநாள் கதவை

நகர்த்திக் கொண்டு வீட்டினுள் வந்து விட்டது!

அதை நோக்கிஎனக்கு பசியாயிருக்கிறதென

சொல்லத்தான் முடியவில்லை!

000

 

 

மிருதங்கம் வாசிக்கப்படத்தான்

000

 

மீதமிருந்த கபசுரகுடிநீரை ஒரே மடக்கில்

குடித்து முடித்து டம்ளரை வைத்தானவன்.

தூரத்தில் எங்கோ ஒரு பெயரறியாப் பறவை

மிகப் பரிதாபமாக கத்திவிட்டுச் சென்றது.

மதியம் உணவுக்கு முட்டை காலி, என்றாளவள்.

பாக்கெட்டைத் தடவிப் பார்த்தவன்

நீயே நாலு முட்டையிட்டு வேக வச்சிரு!’ என்றான்.

000

 

ஆளரவமற்ற தெரு ஒன்றில் தனித்து நின்றிருந்த

விளக்குக்கம்பத்தின் கீழ் அமர்ந்திருந்தவன்

பெருத்த யோசனையால் தன் விரல்களை

கொறித்துத் துப்பிக் கொண்டிருந்தான்.

விடிய இன்னும் நேரமிருக்கிறது!

000

 

குனிந்து குனிந்து மம்பட்டியால்

சவக்குழி வெட்டிக் கொண்டிருந்தவனுக்கு

உடல் முழுதும் வியர்வை

பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது.

தனித்தே அவன் முதுகில் வைத்து

தூக்கி வந்திருந்த பிணம்

உச்சி வெய்யிலில்

சிரித்துக் கொண்டு படுத்திருந்தது.

000

 

பிணங்களை இடுகாட்டில் புதைப்பதற்கு

நான்கு பேர் சென்றால் மட்டும் போதுமானது என

அரசாங்கம் அறிவுறுத்தியிருக்கிறது.

உடல்மூடிய நீல வர்ண உடையணிந்த நால்வர்

பிணத்தை தூக்கி வருவதைப் பார்த்து

புதிய குழிமேடுகளில் அவ்வப்போது

முனகல் சப்தம் எழுகிறது!

குழிக்குள்ள பார்த்து மெதுவா தூக்கிப் போடுங்க!

நீங்க சம்பிரதாயங்கள் செய்யலனா பரவால்ல!”

000

 

-உங்க சன்னுக்கு ஃபோர்த் க்ளாஸ்க்கான

புக்ஸ்செல்லாம் வந்துடுச்சுங்க சார்.

ஸ்கூலுக்கு வந்து இந்த இயருக்கு ஃபீஸ் கட்டிட்டு

புக்ஸ் வாங்கிட்டு போங்க சார்.

 

-மேடம், பையனுக்கு

பாடஞ்சொல்லிக் குடுக்குறதை நாங்க

பார்த்துக்கணுமா?

 

-இல்ல சார் ஆன்லைன்ல நாங்க

உங்க சன்னுக்கு டீச் பண்டுவோம்.

எவ்ரி டே டூ ஹவர்ஸ்!

 

-நேர்ல நீங்க சொல்லிக் குடுத்தாவே

படிக்க மாட்டான்.. இதுல

ஆன் லைன்ல நீங்க நொட்டுனா

படிச்சிக் கிழிச்சிடுவானவன்!

000

 

வீட்டின் முன்பிருந்த சாலைக்கு

ஓடி விட்ட காற்றடைத்த பலூனை

தாவிப்பிடித்துவிட சாலைக்கு வந்த

பாப்பாவை பைக்கில் வந்த வாலிபன்

அலேக்காய்த் தூக்கி வந்து விட்டான்.

 

அவர்கள் மூவரும் கிளாஸ்களை

முட்ட வைத்து முட்ட வைத்து

குடித்துக் கொண்டிருக்க

வாயில், கையில், காலில் கட்டப்பட்டு

சற்றுத்தள்ளி படுத்திருந்த பாப்பா

இந்த அண்ணன்கள் என்ன விளையாட்டு

விளையாட தூக்கி வந்திருக்கிறார்கள்?’

என்று யோசித்துக் கிடந்தது.

000

 

போராட வேண்டியிருக்கிறது ஒவ்வொரு நாளும்.

இயற்கை அழிவுக்கு எதிராக,

விலங்கினங்களின் அழிப்புக்கெதிராக,

கச்சா எண்ணெய் விலையேற்றத்திற்காக,

விலைவாசி உயர்வுக்காக,

பாலியல் குற்றங்களுக்கெதிராக,

கொள்ளையடிக்க கிளம்பும் பள்ளிகளுக்கெதிராக,

இப்படி பல எதிராக எதிராக...

ஆனால் கோவிட் 19-க்கெதிராக

போராடுவதாகச் சொல்லி வீட்டினுள்

பிணத்திற்கொப்பாகக் கிடக்கிறேன்

வெற்றுச்சுவரைப் பார்த்தபடி!

000

 

பிரசவ அறையில் பிறந்த குழந்தையின்

தொப்புள்கொடியை பாந்தமாய்

துண்டித்தாள் மருத்துவமனை தாதி.

கோவிட் 19 தலைவிரித்தாடும்

காலத்தில் பிறந்த கண்ணே!

புதிய உலகிற்கு உனை வரவேற்கிறேன்!’

பற்கள் முளைத்திருந்த குழந்தை

தாதியைப் பார்த்து சிரித்தது!

000

 

தலையில் எழுதியிருப்பனவெல்லாம்

 

பலியானோர் எண்ணிக்கையை

புள்ளிவிபரமாய் கட்டம் கட்டி சொல்லியிருந்தார்கள்!

வீட்டுக்கு வரும் தினச்செய்தித்தாளை

நிப்பாட்டிக் கொண்டேன்.

000

 

உங்கள் வீட்டையும் உங்களையும்

கோவிட் 19-லிருந்து நிரந்திரமாய்

காத்துக் கொள்ள எங்கள் புரோடெக்ட்களை

நம்பி வாங்குங்கள்! என்றார்கள்.

கேபிள் கனெக்சனை நிறுத்தி விட்டேன்.

000

 

கபசுரகுடிநீர் குடிக்கியளா பங்காளி?

பாக்கெட் 80 ரூவா தான்..

நம்ம வீட்டுல வாரத்துல நாலு நாள்

குடும்பமே குடிக்குது! என்றபடி பங்காளி

படியேறி வந்தார்.

நாளையும் பின்னியும் வீட்டுக்குள்ள

யாரையும் விடாதே! என்று சொல்லி வைத்தேன்.

000

 

அவரவர் தலயில என்ன எழுதியிருக்கோ

அதன்படிதான் நடக்குமென்றார் அலைபேசியில்

தூரத்து உறவினரொருவர்.

நீங்க போயிட்டீங்கன்னா மாவட்டம் விட்டு

மாவட்டம் உங்க எழவெடுக்க என்னால

வரமுடியாதுங்க, இப்பவே சொல்லிடறேன்!

எதிர்முனை அணைந்திருந்தது!

000

 

நன்றி : வாசகசாலை இணைய இதழ்

Post Comment

செவ்வாய், ஆகஸ்ட் 18, 2020

பிடிகிட்டாப்புள்ளி

 பிடிகிட்டாப்புள்ளி

(கதையாகவும் வாசிக்கலாம்)

வா.மு.கோமு

 

பாழுங்கிணற்றினுள் தானாகவே முளைத்து வளர்ந்திருந்த கிலுவை மரத்தின் கிளை வாதுகளில் துக்கணாங்குருவிக் கூடுகள் மெலிதான காற்றுக்கு இங்குமங்கும் அசைந்தாடிக் கொண்டிருந்தன. முனியப்பதாசன் மூங்கில் கூடையை சுமந்து கொண்டு எழுமலைகளைக் கடந்து எட்டாவதுமலைவனத்துக்குள் தன் முரட்டுப்பாதங்களை வைத்திருந்தான். ரயில்கள் வராத தண்டவாளத்தை நிதானமாகக் கடந்ததொரு கரடிக் குட்டி.

 

மாலைச்சூரியன் மேற்கு வானில் நழுவிக் கொண்டிருந்த சமயத்தில் உள்ளூருக்குள் பத்துக் குழந்தைகள் ஒருசேரப் பிறந்தன. ரீங்காரித்துக் கொண்டு பறந்த இரவுப் பூச்சிகள் தெருவிளக்கினருகில் கூடி பீத்தோவனை கண்டமானிக்கி இசைக்கத் துவங்கின. பட்டிக்குள் அடைபட்டுக்கிடந்த ஆடுகளில் ஒன்று தும்மிக் கொண்டும், இன்னொன்று இருமிக் கொண்டும் கிடந்தன.

 

முனியப்ப தாசனின் மூங்கில் கூடைக்குள் இப்போது ஒரு குரங்குக் குட்டி படுத்திருந்தது. அது அவ்வப்போது எட்டிப் பார்த்து வட்ட நிலாவைக் காணோமென்றது.

 

பெண்பறவைகளெல்லாம் ஒரு பக்கமாகவும், ஆண்பறவைகள் எல்லாம் ஒரு பக்கமாகவும் அமர்ந்து  அடுத்த அம்மாவாசை பூஜைக்கு கருப்பராயன் கோவிலில் உண்டகட்டி கொத்துவதுபற்றி தீவிரமாய் கீச்சிட்டன. விறகு பொறுக்க மலங்கரட்டினுள் தனித்து வந்த யுவதியின் பின்னால் தூக்கிட்டு மரித்துப்போன மாரிச்சாமி கால்களால் நடவாமல் பறந்தபடி தொடர்ந்தான்.

 

ஊத்துக்குளி சந்தையில் சொத்தைக்கத்திரிக்காய் கிலோ நாற்பது ரூவாய். மலையுச்சிக்கு சென்றுவிட்ட முனியப்பதாசன்ஹப்பாடாவென அமர்ந்து கூடைக்குள் கிடந்த குரங்குக் குட்டியைத் தூக்கி மலையடிவாரம் நோக்கி வீசியெறிந்தான். சும்மா கிடந்த ரயில்வே தண்டவாளங்கள் இப்போது வளைந்து நெளிந்து கரடிக் குட்டியின் பின் நகரத்துவங்கிற்று.

 

உண்பதற்காக காட்டெருமைகளைத் துறத்தியோடிய சிங்கக்கூட்டம் காடெங்கிலும் புழுதியை எழுப்பிவிட்டது. செம்பூத்து ஒன்று பூனையின் குறுக்கே பறந்து போயிற்று. வாசித்துக் கொண்டிருக்கும் நாவலில் வாசித்த பக்கங்களை கிழித்து காற்றில் பறக்கவிட்டபடி படித்துக் கொண்டிருந்தவனுக்கு அழுகையழுகையாய் வந்ததால் சிரிக்கவும் முயற்சித்து கொட்டாவி விட்டபடியிருந்தான்.புழுதியடங்கியபின் கேமரா வழி பார்க்கையில் நான்கு சிங்கங்கள் ஒரு எருமையை உணவாக்கிக் கொண்டிருந்தன. சற்றுத்தள்ளி நான்கு எருமைகள் ஒரு சிங்கத்தை உணவாக்கிக் கொண்டிருந்தன. ஹய்னாக்கள் சில சிரித்துக் கொண்டே வேடிக்கை பார்த்தன.

 

உடலெங்கிலும் பச்சை குத்தின பெண்ணொருத்தி பச்சை குத்திக்கறீங்களாக்கா?’ என்று கேட்டபடி ஊர் வீதிகளில் சுற்றினாள். சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறி கழன்று கீழ்விழுகையில் அறைக்குள் யாரும் இருந்திருக்கவில்லை. பூசாரியிடம் திருநீரு வாங்கிக் கொள்ள எல்லாக் குரங்குகளும் ஒருசேரக் கையை நீட்டிக் கொண்டு நின்றிருந்தன. பூசை மணியை இந்த நேரம் வரை கயிற்றைப்பிடித்துக் கொண்டு அடித்துக் கொண்டிருந்த குரங்கு, மதில் சுவற்றுக்குத் தாவி குதிரைமீது அமர்ந்திருந்தவரின் தோளில் சென்று அமர்ந்து கொண்டது.

 

தெருவில் வெறுமனே சுற்றிக் கொண்டிருக்கும் நாய்களெல்லாம் கிழக்கு வீதியில் பெட்டைநாயிடம் சென்று குழுமியிருந்தன. மேடையில் ஆக்ரோசமாய் பேசிக்கொண்டிருந்தவர் இடையில் பேச்சை நிறுத்தி தண்ணீர் கேனை எடுத்து அழகாய் மூடி திறந்து தண்ணீர் குடித்தார். பத்துவருடம் முன்பாக ஊரைவிட்டு சென்றிருந்த சின்னச்சாமியண்ணன் ஊருக்கு திரும்பி வருகையில் தலையில்லா முண்டமாய் வந்திருந்தார். அவரை யாருக்கும் அடையாளம் தெரிந்திருக்கவில்லை.

 

முனியப்பதாசன் மலையுச்சியிலிருந்து உருண்டே அடிவாரம் வருகையில் அவனது மூங்கில் கூடை சுக்குநூறாய் சிதறியிருந்தது. ஆரப்ப அப்பாருவுக்கு பச்சை குத்திக் கொண்டிருந்தாள் உடல் முழுதும் பச்சை குத்தியிருந்த பெண்மணி. அப்பாருவின் வலது கை விரல்கள், குத்தும் வலியை தாங்கிக் கொள்வதற்காக எங்கு வைத்திருந்தார் என்பதை எழுத்தாளன் சொல்லவே மாட்டேனென்கிறான்.

 

கரடிக்குட்டியை பின் தொடர்ந்து சென்ற தண்டவாளம் வழிதவறி விழித்து பின்பாக ஒரு சாரைப்பாம்பு சென்ற தடம் பிடித்து மயானவழியில் பயணித்தது. சிங்கத்தை உண்டு முடித்திருந்த காட்டெருமைகளுக்கு கொம்புகள் ஒரு மீட்டர் அளவு பெரிதாகிவிட்டன.

 

நல்ல ருசியான உணவு வேண்டுமென்று சித்ரன் சேலம் பைபாஸ் சாலையில் எடப்பாடி நோக்கி நடந்து கொண்டிருந்தான். சர்ச்சிலிருந்து பாத்ரூம் சென்ற பாதிரியார் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு தன் கீழுடையைக் கழற்றி தோளில் போட்டுக் கொண்டு அடுத்த வேலையைப் பார்த்தார். டைனோசர்கள் மட்டுமே வாழும் நகரில் டைனோசர்கள் மட்டுமே வாழ்ந்தன. தார்ச்சாலைகள் அனைத்தும் சிவப்பு நிறத்திலிருக்கும் நகரில் வாழ்ந்திருந்த மனித குலம் நீலவர்ணத்தில் இருந்ததாய் குறிப்பேடு ஒன்று சொல்லிற்று.

 

உலகைக்காக்கவும் நேசிக்கவும் ஒருவன் வந்தால் பாலவனத்தின் வழியாகத்தானே வரவேண்டுமென பலகாலமாய் காத்திருந்தது ஒரு ஒட்டகம். பல்லிகளின் கத்தல் கேட்டு குறி சொல்லும் கிழவியொருத்தியைத் தேடி பலகாலமாய் நடந்து வந்த குடும்பம் குறி கேட்க அமர்கையில்இன்று என்ன கிழமை?’ என்று அவர்களிடம் கிழவி கேட்டாள். பேருந்து நிலையத்தில் கிடந்த பிச்சைக்காரனுக்கு யாரோ டாஸ்மார்க் சரக்கை கொடுத்துப் போய்விட்டார்கள் போலிருக்கிறது! பேருந்து நிலையம் இரண்டு மணிநேரமாக அந்த நகரை விட்டு நீங்கியிருந்தது.

 

கவிதையெழுதிக் கொண்டிருந்த யுவதிக்கும் டூபாத்ரூம் இவ்ளோ அவசரமாய் வந்துவிடுமென பொங்கியப்பன் நினைத்தே பார்த்திருந்திருக்கவில்லை. மருத்துவமனை காண்டீனில் அமர்ந்திருந்த கையுறை அணிந்திருந்த மருத்துவர் பஜ்ஜி சாப்பிட்டபடியே உடலைச் சாய்த்து என்னவோ செய்தார். பக்கத்து இருக்கைகள் காலியானதுபற்றி கேண்டீன்காரன் மட்டுமே கவலையுற்றான். புத்தி பேதலித்திருந்த நிலையில் அவள் தன் வீட்டினுள் நுழைந்த புலியைக் கொன்று விட்டு விட்டத்தைப் பார்த்து அமர்ந்திருந்தாள்.

 

கருப்பராயன் கோவிலருகில் நின்றிருந்த ஊஞ்சை மரத்தின் ஒசக்கே உச்சியில் மலைத்தேனிக் கூடொன்று அழித்தால் ஊருக்கே தேன் கொடுக்கலாம் போல பெரிதாய் தொங்கியது. ஸ்கூல்வேன் வந்து விட்டதாய் புத்தக மூட்டையை முதுகில் சுமந்தோடும் பாப்பாவின் பின்னால் அவளின் செல்ல நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் ஓடின படிக்க!

 

வத்திப்பெட்டி இருக்கா?’ கையில் பீடி ஒன்றை வைத்துக் கொண்டு கேட்டவனிடம், இல்லையென்று இவன் சொன்னதால் குத்துப்பட்டும், மிதிபட்டும் அதேயிடத்தில் செத்தானவன். இழவு விழுந்த வீட்டுப்பக்கமிருந்து ஆட்கள் பதறியடித்து ஊருக்குள் ஓடிக் கொண்டிருந்தார்கள். பிணம் பாடையிலிருந்து எழுந்தமர்ந்துஎன்னாச்சு?’ன்னு கேட்டுச்சாம். யாருமில்லாப் படகு ஒன்று நதியில் தன்பாட்டில் போய்க் கொண்டிருந்தது.

 

பொன்னாம்பூச்சி பிடித்துவர காட்டுப்பக்கம் சென்றிருந்த சிறார் கூட்டமொன்று சிறுத்தையைக் கொன்று தூக்கி வந்து கொண்டிருந்தது ஊருக்குள் வரும் பாதை வழியே! கவிதை எழுதிக் கொண்டிருந்த யுவதி திடீரென கதை எழுதத் துவங்கவும் கடவுள் மறுபக்கமாகத் திரும்பிப் படுத்துக் கொண்டார். சிலகட்டிடங்கள் மட்டும் தென் அமெரிக்காவில் சரிந்து விழுந்ததாய் பிபிசி சொல்லிற்று. பல்லுப்போன பாட்டியொன்று முறுக்குக் கடையில் வேலைபார்த்து சம்பாதித்துக் கொண்டிருந்தது.

 

சமையல் பகுதியில் காய்கறி நறுக்கும் பகுதியில் பணியிலிருந்த ராமசாமியண்ணன் டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது தப்பி உள்ளூர் வந்த ஒற்றை மனிதர். இன்னமும் சொல்வார்.. ‘எனக்கு மட்டும் பறக்குற சக்தியில்லேன்னா பணால் தான்என்று. வீதிகளில் சுற்றும் நாய்களில் சில மட்டுமே திறந்திருக்கும் வீட்டினுள்ளும் நுழைந்து மோப்பம் பிடித்து விட்டுச்  செல்கின்றன.

 

குடித்து முடித்திருந்த ஒயின் டம்ளரை டணாலென வீசி உடைத்தெரிந்து விட்டு அவள் தள்ளாடி எழுந்தாள். ‘இந்த நிமிடத்திலிருந்து என் மூன்றாவது கணவனை விவாகரத்து செய்கிறேன்!’ என்றாள். கூட்டம் கைதட்டிற்று. பூவரசு இலையில் பீப்பி சுற்றி ஊதிப்பார்த்த சிறுவன் சப்தம் வராததால் அழத்துவங்கியிருந்தான். நாயைப் போலத்தான் பூனையும்.

 

பனைமரத்தில் ஏறிக் கொண்டிருந்த குட்டி உடும்பு ஒன்று தூரத்தே தெரியும் ஊரைப்பார்த்துஒரு நாள் வருவேன்என்று சொல்லிச் சொல்லி ஏறியது.’அந்த கருமத்தெ காசுக்குங்கேடா டாஸ்மார்க் போயி வாங்கிக் குடிக்கிறதுக்கு என் மல்லைக் குடியேண்டா!’ எவளோ ஒருத்தி சாமத்தில் ஊருக்குள் தன் பிருசங்காரனை பின்னிக் கொண்டிருந்தாள்.

 

000

 

18-8-2010

செவ்வாய்


Post Comment

வெள்ளி, ஆகஸ்ட் 14, 2020

 ”ஒரு தலித்திடம் சுயமரியாதை உணர்வை சுடர்விட்டு எரிய வைக்க வேண்டும். சுயமரியாதை என்பதைத்தான் முதல் கருத்தாகவும் முன்வைக்க வேண்டும். அடுத்து வர்ணாசிரம வாசகர்களிடம் தலித் உணர்வைத் தூண்ட வேண்டும். இந்த இரண்டு குறிக்கோள்களுக்கும் ஏற்ற கருப்பொருளை தலித் எழுத்தாளர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அம்பேத்கார், புலே ஆகியோரின் சிந்தனையின் கீழ் எழுதப்படுவது தான் தலித் இலக்கியமாகும்”


பறை சாதியினர் திருமண நிகழ்ச்சியை கெடுக்கும் விதமாக மேலத்தெரு ஆக்கள் திடீரென நாவலில் ஆக்ரோசமாய் எடுத்த வுடனே குவிந்து சேர்களை, கொடை ரேடியோவை, பந்தலை உடைக்கிறார்கள்! ஹா! மேலத்தெரு வழியே தண்ணீர்க்குடம் கொண்டு தெருவழியாக போக முடியாது கீழத்தெருவாசிகளால். இப்படியான கதைக்களன் ஊடே போலீசார் வருகிறார்கள் கடமையைச் செய்ய! என்னால் ஒரு பாகம் வாசிக்க முடிந்தது. நான் நினைக்கிறேன் இப்படியான எழுத்துகள் பூமணி பிறகு நாவல் எழுதிய சமயமே வந்திருந்தால் தமிழ் இலக்கிய உலகு தூக்கிக் கொண்டாட வாய்ப்பிருந்திருக்கும். இப்போது பத்து வருடங்களுக்கும் முன்பாகவே இலக்கியத்தில் அரசியல் நுழைந்து விட்டது. சில புத்தகங்கள் சில ஏரியாவாசிகளால் மட்டுமே படிக்க முடியும் போல! ஆனால் அவர்களும் முழுமையாக படிப்பார்களா? என்கிற கேள்வியும் இருக்கிறது. 

 

ஸ்ரீதர கணேசன் ஈரோட்டில் ஒரு அமர்வில் பேசுகையில் ‘புத்தகம் எழுதியாச்சு! படிச்சா படிங்க இல்லனா விடுங்க!’ என்று பேசினார். அந்த ஒவ்வாமையால் இவரது அவுரி நாவல் கையிலிருந்தும்.. உள்ளே சென்றாலும் வாசிக்க இயலாமல் விட்டு விட்டேன். இப்போது இந்த நாவலின் முதல் பாகத்தை என்னதான் சொல்ல வர்றார்? என்று வாசித்து முடித்தேன். அடுத்த பாகத்தை நான் வாசிக்க வேண்டியதில்லை. இதுவும் சிறந்த தலித் நாவல்களுள் ஒன்றென கூறலாம். 


இப்படி எழுதுவதால் வருணாசிரம ஆக்கள் தலித் உணர்வைப் பெற்று எதாவது செய்தார்களா?  அவர்கள் வாசித்துப் பேசினார்களா? (எல்லோரும் தலித் இலக்கியத்தை மறந்து போன சூழலில் இந்தப்பதிவு மற்றவர்களை உற்சாகம் கொள்ளச் செய்க! மீண்டும் அதே தீவிரமுடம் எழுதுக! நானும், கள்ளி எழுதியிருக்கேன். எத்தனையோ வருட எங்கள் கோபத்தை ஒரு வார்த்தையில் நான் முடித்து விட்டதாக அலைபேசியில் மட்டும் சிலர் பேசினர்! மற்றபடி நான் தாவி விட்டேன்! ஒரே எழுத்தை தொடர்ந்து எழுத என்னால் தான் ஆகாதே!) 


இந்த மாதிரியான நாவல்கள் தமிழில் திட்டமிட்டே புனையப்படுகின்றன என்பதை நாவலில் வரும் தலித்திய மக்கள் நடந்து கொள்ளும் விதங்களிலிருந்து தெளிவாகவே தெரிகிறது. ஒரு கருத்தை எழுத்தில் எந்த வடிவிலேனும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சி தான் இது. சேர்ந்ததா? இல்லை சிலர் மட்டுமே கொண்டாடினார்களா? என்பதையறிய நான் மாபெரும் வாசிப்பாளனாக இருந்திருக்க வேண்டும். இந்த நாவலே என்னிடம் எப்படி யார் வாயிலாக அடுக்கில் வந்தது என்றே எனக்கு நினைவிலில்லை! நிச்சயமாக நான் பைசா கொடுத்து வாங்கவில்லை. அதனால் இந்தப் புத்தகத்தை தரமாக வெளியிட்ட கருப்புப் பிரதிகள் வெளியீட்டுக்கு வாழ்த்துக்களை சொல்லி விடுகிறேன்.


விலை -250. 

Post Comment